கீற்றில் தேட...

thilan 350திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் வசிப்பவர் புலவர் துரை.தில்லான். தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத் தேர்வுச் செயலாளராகவும், அந்த அமைப்பின் மாத இதழான ‘நமது தமிழாசிரியர்’ இதழின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியவர்.

தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் உருவாக்கிய 9 வகுப்பு, 10 ஆம் வகுப்புகளுக்குரிய தமிழ்ப்பாடத்திட்டக்குழுவிலும் பணியாற்றியவர். இலக்கணத்தடம் - எழுத்து, இலக்கணத்தடம் - சொல்லதிகாரம் என்ற இரண்டு இலக்கணஉரை நூல்களை எழுதியவர். தொடர்ந்து ‘இலக்கணத்தடம்’ என்ற தலைப்பிலேயே இலக்கணஉரை நூல்களை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். வள்ளலார் குறித்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதிவருகிறார்.

அவை நூலாக வெளிவர உள்ளது.  பல தமிழாசிரியர்களை உருவாக்கியவர். தமிழ் பயிற்றுவிக்கும் தமிழாசிரியர்களுக்காக நடைபெறும் இலக்கணம் தொடர்பான பயிலரங்குகளில் வகுப்புகளை நடத்திவருபவர்.

தமிழ்நாட்டில் குலதெய்வங்களின் அடிப்படையில்தான் திருமண உறவுகள் செயல்படுத்தப் படுகின்றன என்று ஒரு கருத்து உள்ளது. அது உண்மையா? அதைப்பற்றி விளக்குங்கள்.

தமிழ்நாட்டில் பெரும்பாலும் எல்லாக் குலதெய்வங்களுக்கும் சிவன், பார்வதி, திருமால் இவர்களோடு தொடர்பு உள்ள புராணக்கதைகள் உள்ளன. அந்தக் கதைகளின்படி சிவன், பார்வதி, திருமால் இவர்களின் அவதாரங்களும், இவர்களின் மறுபிறப்புகளும், இவர்களின் காவல்தெய்வங்களும் தான் தமிழர்கள் அனைவருக்கும் குலதெய்வங்களாக உள்ளன. இந்தக் கதைகள் உண்மையா? கற்பனையா? பார்ப்பனர்கள் திணித்ததா? நாமே விரும்பி ஏற்றதா? என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை. ஆனால் இந்தக் கதைகளின் அடிப்படையில் தான் குலதெய்வங்கள் உள்ளன.

அந்தக் குலதெய்வங்களை அடிப்படையாக வைத்துத்தான் தமிழர்கள் திருமணங்களில் மாமன், மச்சான், பங்காளி முறைகளை அடையாளம் காண்கிறார்கள். திருமணங்களைச் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் மக்களும், கன்னடம் பேசும் மக்களும்கூட இந்த அடிப்படையில் தான் திருமண உறவுகளை மேற்கொள்கின்றனர்.  

சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மூன்று பெரிய தெய்வங்களில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை சிவவழிபாடும், திருமால்வழிபாடும் உண்டு. குலதெய்வம் என்று இருப்பதெல்லாம் அந்தந்தக் குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து ஏதாவது ஒரு வீரத்தினாலோ அல்லது விபத்தினாலோ  முடிவு எய்தவர்கள். அவர்களைத்தான் குலதெய்வம் என்று வைப்பது வழக்கம்.

எங்களுடைய மாமன், மைத்துனர் வகையில் இருப்பவர்களெல்லாம் காமாட்சி அம்மன் என்ற பெயரிலே வைத்துக் கொண்டார்கள். இதில் எல்லாம் பார்வதி தான் அவதாரம் என்றாலும் ஒவ்வொரு குடும்பமும் அவர்களுக்கு மரபுப்படி உறவைக் காட்டுவது போல அமைந்துள்ளது. எங்கள் கிராமத்தில் காமாட்சி அம்மன் கும்பிடுபவர் எங்களுக்கு மாமன் முறைப்பட்ட வகை. அண்மைக்காலத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.

எங்களுடைய குலதெய்வம் என்பது தில்லாளம்மன், தில்லையம்மன். தில்லையம்மன் என்பது தில்லையில் இருக்கக்கூடிய அம்மன். சிவபெருமானுடைய மனைவி என்பதனால் தில்லை அம்மன் என்று பெயர் வந்தது. தில்லாளம்மன் என்பது அதனுடைய மறுபெயர்தான். தில்லையம்மன், தில்லாளம்மன், பார்வதி, பகவதியம்மன், காமாட்சி அம்மன் எல்லாம் பார்வதியைக் குறிக்கக்கூடிய பெயர்கள் தான். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கதைகள்.

தில்லையம்மன் என்பது சிவனை அடைவதற்காக பிறவி எடுத்து அந்த பெண்ணும் நடனத்தில் சிவனைப் போல சிறந்து விளங்கி காதலால் இருவரும் திருமணம் முடித்தக் கொண்டவராவார். அங்காள பரமேஸ்வரி தீக்குண்டத்திலிருந்து எழுந்தவள். அவளும் பார்வதிதான். பார்வதியின் அடுத்த பிறவி அங்காள பரமேஸ்வரி. ஆனாலும் அவர்கள் தனி. வீரபுத்திரன், அரியபுத்திரன், அங்காளம்மன், அங்கம்மாள் என்ற பெயரோடு அங்கு ஒரு கோவில் இருந்தது. காமாட்சி அம்மனும் பார்வதியின் அவதாரம்தான். அதேபோல பகவதிஅம்மன் என்பவள் சிவபெருமானை விட்டு அகழாதபடி சிவனுடைய உடலிலேயே பாகம் பெற்றவளனதால் பாகவதி, பகவதி என்ற பெயரோடு இருக்கிறது.

பிறக்கும் குழந்தைகளுக்குக் குலதெய்வத்தின் அடிப்படையில்தான் பெயர் வைக்கிறார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது. அது உண்மையா?

சிதம்பரத்தினுடைய இன்னொரு பெயர் தில்லைவனம். தில்லைவனத்தில் இருக்கக்கூடிய தெய்வம் தில்லான். தில்லான் என்றால் நடனம், நடராசன் என்று பொருள். நடராசன் என்ற பொருளிலும், தில்லைவனத்தில் இருக்கும் காரணத்தினாலும் தில்லையான் என்ற பெயர் மருவி தில்லான்  என்று வந்தது.

சிதம்பரத்திலுள்ள சிவபெருமானைக் குலதெய்வமாகக் கருதியதனால் எங்கள் கிராமத்திலுள்ள 250 வீடுகளில் எங்களுடைய பங்காளியாக இருக்கும் 175 குடும்பங்களுக்கு மேல் ஒவ்வொரு குடும்பத்திலும் மூத்த ஆணுக்கு “தில்லான்” என்றும், மூத்த பெண்ணுக்குத் “தில்லையம்மாள்” என்றும் பெயர் வைக்க வேண்டும் என்று ஒரு மரபாக வந்துள்ளது.

அந்த மரபுப்படி எனக்கு என் குடும்பத்தில் மூத்தவனாக இருப்பதால் “தில்லான்” என்று பெயர் வந்தது. வடஇந்தியாவை பொருத்தவரையிலும், தென்இந்தியாவை பொருத்தவரையிலும் வேறு இடங்களில் இல்லையென்றாலும் அருப்புக்கோட்டை பக்கத்தில் உள்ள திருச்சுழியில் ஒரு கோவிலில் தட்சிணதில்லான் என்ற பெயரில் ஒரு தெய்வம் உண்டு. சிவபெருமான் தெற்கு முகமாக பார்த்திருப்பது தட்சிணாமூர்த்தி என்பார்கள். அந்தத் தட்சிணாமூர்த்தியுடைய சிலைக்குக் கீழ் தட்சிணத்தில்லான் என்ற பெயர் இருப்பது ஒன்றுதான் ஆதாரம் கிடைக்கின்றது. வரலாறு கிடைக்கின்றது. மற்றபடி இந்தப் பெயர் மரபுப்படி வந்ததே தவிர நானாக விரும்பி வைத்த பெயர் அன்று.

குலதெய்வத்தோட பெயரை வீட்டில் இருக்கிற முதல் பையனுக்கோ அல்லது பெண்ணுக்கோ வைக்கிற பழக்கம் குறிப்பிட்ட ஒரு ஜாதியில் மட்டும் இருக்கிறதா? தமிழ் நாட்டில் இருக்கிற அனைத்து ஜாதியிலும் இருக்கிறதா?

எல்லா ஜாதிகளிலும், எல்லாக் குலதெய்வங்களிலும் இந்த மரபு உண்டு. அய்யன் என்றும், காத்தான் என்றும் காமாட்சி என்றும் பெயரை அந்தந்தக் குலப்பிரிவுக்குஏற்ப,  பெயர் வைப்பது உண்டு. வைணவ மதத்துக்காரர்களின் பெரியதெய்வமாக அந்த சிவனைப் போல திருமாலும் இருந்தாலும் - அழகப்பன் என்றும், அழகன் என்றும் வைக்கிறார்கள்.

அழகன், அழகப்பன் என்பது பாடுபடும் இனத்திற்கு அதாவது பள்ளர்கள் வைக்கிறார்கள், வன்னியர்கள் வைக்கிறார்கள். அந்த அளவுதான். மேலிடத்தில் அழகர்சாமி என்று வைப்பார்கள். செட்டியார்கள் அழகர்சாமி என்று வைக்கிறார்கள். நீலமேகம், நீலகண்டன் என்று சொல்லி முன்னேறிய இனத்தவர்கள் வைத்துக் கொண்டார்கள். எல்லாம் ஒருவனே. பல, பல பெயர்கள்.

இராமன் என்றாலே தாழ்த்தப்பட்டவன், ராமசாமி என்றாலே மேல்ஜாதி. ராமசாமி என்றபெயரை தாழ்த்தப்பட்டவர்னு சொல்றவங்க யாரும் வைத்துக் கொள்வதில்லை. மேல் ஜாதிக்காரர்கள் இராமன் என்று வைத்துக் கொள்வதில்லை. குப்புசாமி, குப்பன் என பெயர் வேறுபாடு உள்ளது. தாழ்த்தப்பட்டவர் கந்தசாமி என்று வைத்துக் கொண்டாலும் மேல்ஜாதிக் காரர்கள் என்று சொல்லப்படுவர்கள் கந்தன் என்றுதான் கூப்பிடுவார்கள். கந்தன் என்று சொல்வார்களே தவிர கந்தசாமி எனச் சொல்ல மாட்டர்கள். ஆனால் கந்தனும், கந்தசாமியும் பாலசுப்பிரமணியனும் முருகனும் எல்லாமே காக்கும் கடவுள்கள்தான். சிறுதெய்வங்கள்தான். குலத்துக்கு தகுந்தபடி எழுத்தை மாற்றுகிறார்கள். இப்போது இந்த முறையில் சில மாற்றங்கள் வந்துள்ளன.

எங்கள் குடும்பத்தில் மூத்தவனுக்கு ‘தில்லான்’ என்றிருந்தால், இரண்டாவது பையனுக்கு ‘பச்சை’ என்றும் பச்சையப்பன் அது பச்சையப்ப முதலியார் தொடங்கி கி.த. பச்சையப்பன் வரை இரண்டாவது பையனாகத்தான் இருக்கும். அந்தப் பச்சையப்பன் என்பது சிவனையும், பச்சையம்மாள் என்பது பார்வதியையும் குறிக்கும். ஆனால் அந்தப் பழக்கம் மறைந்து வருகிறது.

திருமால் என்றால் அழகன், அழகப்பன் என்ற பெயர் வந்தது. அந்த பெயர்களில் ஊர்கள் உண்டு, அழகம்மாள் என்று பெண் பெயர் வைப்பது உண்டு. அது எல்லாம் திருமாலை அடிப்படையாக வைத்தது. ஆனாலும் ஒவ்வொரு ஜாதியிலும் இந்தப் பெயர் உண்டு. குலப்படி இது வந்து தெய்வ வழிபாடுகளிலிருந்தே அப்படியே வந்து இப்போது மரபாகவே மாறிவிட்டது.

சிவன், விஷ்ணு, பிரம்மா என மூன்றும் பெருதெய்வங்கள். இவர்களுடைய அடுத்த பிறவிகள் சிறு தெய்வமாக வருகிறார்களா?

ஆமாம். அடுத்த அடுத்த பிறவியாக வந்தபோதல்லாம் சிவபெருமான் இடையராக, உழவனாக, உழைப்பாளியாக பிறந்து வருவார். ஒவ்வொரு குலத்துக்கும் கேட்டால்  அவர்களுகென்று ஒரு மூலம், பிடித்துக்கொண்டே போனால் அங்கு ஒரு முனிவர் வருவார். அந்த முனிவர் யாருனா தேவலோகத்தில் இருந்த தேவர்கள் தவறு செய்து, சிவபெருமானால் தண்டிக்கப்பட்டு இங்க வந்து பிறக்கிறாங்க.

திண்டுக்கல் மாவட்டத்தில் இந்துவாக இருந்து, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய மக்கள் அதிகமாக வாழ்கிறார்கள். அவர்கள் பெண் கொடுத்து பெண் எடுப்பது அந்தந்த இந்துக் குலசாமியை வைத்துத்தானா?

கிறிஸ்த்துவரா இருந்தாலும் மாரம்பாடி, வெள்ளோடு, சிலுக்குவார்பட்டி, பெருமாள் கோவில்பட்டி, கரிசல்பட்டி ஆகிய சுற்றுப் பகுதியில் இருக்கக்கூடியவர்கள் போய், பெண் வீடு, மாப்பிள்ளை வீடு, பார்த்து மரபுப்படி பார்ப்பவர்கள் எந்தச் சாமி கும்பிடுறவங்கன்னு கேக்குறாங்க.

கருப்புசாமியா, காமாட்சி அம்மனா என்று கேட்பார்கள். மாரம்பாடியில இருக்கக்கூடியவர்கள் நாங்க மாமுண்டியான் சாமி கும்பிடுறவங்க என்பார்கள். மாமுண்டி என்பது திருமாலுடைய ஒரு அவதாரம். அதைச் சொல்லி பெண் கட்டுவாங்க. ஆனால் அதை வணங்குவது இல்லை. அந்த வரலாறும் தெரியாது.

அதேபோல காங்கேயம் குடும்பம்னு சொல்றாங்க. சிலுக்குவார்பட்டியில மைக்கேல் பாளையம்னு ஒன்று உள்ளது. அந்த ஊர்க்காரங்க ஆனையடியான் பேரைச் சொல்லிக்கிட்டுப் பெண் கேட்கிறார்கள், கட்டுகிறார்கள். அப்படி ஒவ்வொருத்தருக்கும் இங்கு நேரடியாக முறையோடு இருப்பது காமாட்சி அம்மன், கருப்பசாமி தான்.

சங்க இலக்கியத்துல நடுகல் வழிபாடுன்னு சொல்றாங்க, அந்த நடுகல் வழிபாட்டுக்கும், குல தெய்வ வழிபாட்டுக்கும் என்ன ஒற்றுமை? என்ன வேற்றுமை?

நடுகல் வழிபாடு என்பதற்கு குலவேறுபாடு இல்லை. மற்ற சிறுதெய்வ வழிபாட்டுக்கு செட்டிச்சி அம்மனைத் தில்லாளம்மன் கும்பிடுபவர்கள் கும்பிடமாட்டாங்க. வீரு மல்லம்மாளை இந்த செளடம்மன் கும்பிடுறவங்க கும்பிடமாட்டாங்க.

ஆனால், சில இடங்களில் மூங்கிலணைக் காமாட்சி அம்மன் கோவில் (திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது) போன்ற இடங்களில் பல ஜாதிகள், பல குலங்கள் ஒரே தெய்வத்தைக் கும்பிடுகின்றனர். இந்தக் கோவிலில் உள்ள காமாட்சி அம்மனை கன்னடம் பேசும் செட்டியார்களும், தெலுங்கு பேசம் நாயக்கர்களும், தமிழ்பேசும் தேவர்களும், வன்னியர்களும் குலதெய்வமாகக் கும்பிடுகின்றனர்.

எல்லா ஜாதிகளிலும் இருக்கும் சிவ வழிபாட்டுக்காரர்களும், பார்வதி வழிபாட்டுக்காரர்களும் ஒருவருக்கொருவர் மாமன், மச்சான் முறையைக் கடைபிடிக்கிறார்கள். அந்தப் புராணக் கதைகளின் அடிப்படையில் காமாட்சி அம்மனைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள நாயக்கர், தேவாங்கச் செட்டியார், தேவர், வன்னியர் எல்லோரும் ஒரே தெய்வத்தை வணங்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் நடுகல் எல்லோருமே வணங்குவார்கள். நடுகல் என்பது எல்லோருக்கும் பொதுவானது. நடுகல் என்பது வரலாற்றை அடிப்படையாக வைத்தது. இந்தக் குல தெய்வ வழிபாடு என்பதற்கு எந்த வரலாற்றுச் சான்றுகளும் இல்லை.

சிறுதெய்வ வழிபாடு என்றால், சிறுதெய்வத்திலேயே மறுபிறவி எடுத்து வந்த பெரியதெய்வம் என ஒவ்வொரு வகை. இடைப்பட்ட வாழ்க்கையில் போனவர்கள் ஒருவகை. மரபு மாறிச் சிறியவர்கள், பெரியவர்கள், சாதியால், பொருளாதாரத்தால் அல்லது குடும்பத்தால் மாறுபட்டதோடு வந்து சிதைந்து போன வாழ்க்கை உடையவர்களை மறக்காமல் கும்பிடுகிறார்கள். அது ஒருவகை,

வீரக்கல், நடுகல் வழிபாடு இருக்குதே இது இப்பொழுது பெரியாரை எப்படி வணங்குகிறோமோ, அதுபோலவே பிறந்தநாள், நினைவு நாள் என நினைப்பதுபோல நடுகல்லுக்கும். பொங்கல், பூ இதெல்லாம் வேண்டிக்கிறது இல்லை. இராணுவ வீரர்கள் இறந்த நாளை நினைவு நாள்னு வைத்து வணக்கம் செய்வதுதான் நடுகல் வழிபாடு.

இந்தக் குலதெய்வ வழிபாட்டுமுறை எந்தக் காலத்தில் உருவாகியது?

குலதெய்வ வழிபாட்டு முறை உருவாகிய காலத்தைக் குறித்துச் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் முருகனையே வெறியாட்டயறுதல் ஒன்று வைத்திருக்கிறார்கள். வெறியாட்டயறுதல் போர்களத்தில் போய் புண்பட்டு வீட்டில் வந்து படுத்து இருக்கும்போது பேய்கள் வந்து தொடாமல்  இருக்க வேப்பில்லை வைத்து அடித்தற்கு சான்று இருக்கு. இங்கு அதுவும் ஒரு வழிபாடுதான்.

ஆனால் அப்படி வழிபாடு செய்ததைத் தமிழில் சொல்லி வணங்குகிறார்கள். அதற்கு முன்பு சிலப்பதிகாரத்துல சதுக்கபூதம் என்று வைத்து பொய் பேசினால், உழல் செய்தால் நடுவின்றி மன்றில் போய் சாட்சி சொன்னால் அவர்களை அடித்து தின்றுவிடும் என்று வைத்துக் கொண்டார்கள்.

எங்கள் ஊரிலும் மன்றூர் என்று ஒரு இடம் உண்டு. காளியம்மன் கோவிலுக்கு முன்னால் அந்த அந்த இடத்தில் சாமி கும்பிடும்போது அந்தக்கல்லை வைத்துக் கும்பிடுகிறார்கள். அந்தச் சாமி கும்பிடுவதன் நோக்கம் நடுநிலை தவறமாட்டேன், யோக்கியம் தவறமாட்டேன், ஊழல் செய்யமாட்டேன் பிறர் உயிரைக் கொல்லமாட்டேன், கொலை, கொள்ளை திருடு செய்ய மாட்டேன் என்று சொல்லி உறுதிமொழி எடுப்பதறகான ஒரு இடம் மன்று. அதை இப்போது ‘மண்டு’ ன்னு சொல்லி அந்தச் சாமியை மண்டுனு சொல்லி வைத்தார்கள்.

அது இந்திர விழா நடந்த சாயல் இங்கே தெரிகிறது. ஆயிரம் வருடத்திற்கு முன்னால் இந்த வழிபாடு உண்டு. இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு இல்லை. மனிதனுக்கு பயம் இருந்தது. சாமியை வணங்கினான். தமிழில் வணங்கினான் அந்த மரபு ஞான சம்பந்தர் முதல் இன்றைக்கு வரைக்கும் இருந்ததுதான். ஆனால் இந்தமுறை அதிகமான காலம் என்பது நாயக்கர் காலம்தான்.

குலதெய்வங்களான தில்லையம்மன், கருப்பசாமி, கருப்பணசாமி மற்றும் சிறு தெய்வ வழிபாடு சங்க இலக்கியங்களில் இருந்ததா? அதற்கு எதாவது ஆதாரம் இருக்கிறதா?

இதே சாமிகள் அப்போ இல்லை. அப்ப இருந்தெதல்லாம் போர்களத்துல இறந்தவனை தெய்வமாக வைத்துக் கும்பிட்டார்கள். அவ்வளவுதான், அதன் பிறகு புராணங்கள் வந்து தமிழ் நாட்டுல அதிக செல்வாக்கு பெற்ற காலத்தில், பரமசிவனுடைய அவதாரம் போல, திருமாலுடைய அவதாரம் போல, பிரம்மா வழியாக படைக்கப்பட்ட முனிவர்கள் போல புராணக்கதைகள் வந்தன.

அதற்குப் பின்னாடிதான் சிறுதெய்வ வழிபாடு. அக்கினியில் தோன்றியவர்கள் வன்னியர்கள்… எப்படிப் பிறந்தாங்கன்னா அக்னி குண்டத்துல இருந்து முனிவர் தோன்றி வந்தார்கள் என்பது வன்னிய புராணம். சாதிக்குச் சாதி புராணம். அப்படி வந்த போது சிறுதெய்வ வழிபாடு பெருகியது. சங்க காலத்திற்குப் பின்னால். அதற்கு முன்னால் இருந்த சிறு தெய்வ வழிபாடு என்பது வீரர்களுக்கு செய்ததுதான். இந்த அவாண்டசாவு இன்னும் மற்றதெல்லாம் இருக்கிறதே, தொட்டிச்சி அம்மன் அது இதுன்னு இந்த பெயர்களைப் பார்த்தாலே தெரியும். வீரு மல்லம்மாள், வீரு நாகம்மாள், செளண்டம்மாள், தொட்டிச்சி அம்மாள் என்ற பெயர்களைப் பார்த்தாலே பிற்காலத்துதான்.

ஏனென்றால் அதற்கு முன்னால் முருகனையே சிறுதெய்வம்னுதான் சொன்னாங்க. முருகன் வழிபாடு உண்டு. எப்ப மனிதனுக்கு மனதில் அச்சம் தோன்றியதோ, காடுகளில் வாழ்ந்த போது விலங்குகள் கிட்ட இருந்து தப்பிக்க வேண்டும் என நினைத்தானோ, இடிக்கு பயந்தானோ, மழைக்கு பயந்தானோ, புயலுக்கு பயந்தானோ அப்பொழுதே முருகனை வணங்குகிறான். புராணம் வந்த பிறகுதான் கல்விக்காக இருப்பது சுவாமிமலை முருகன், திருமணத்துக்காக இருப்பது திருப்பரங்குன்றம் முருகன், தாழ்த்தப்பட்ட பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டார் என்பதைக் காட்டுவதற்குத் திருத்தணி முருகன் எனப் பிரித்துக் கதைகளை உருவாக்கினார்கள்.

பார்ப்பனர்களின் கோத்திரத்திற்கும், இந்தக் குலங்களுக்கும் எதாவது தொடர்பு உண்டா?

பலகுடும்பங்கள் இணைந்தது குலம். பல குலங்கள் இணைந்தது கோத்திரம். தமிழர்களிடையே அப்படி கோத்திரம் என்ற பெயரில் எந்த நடைமுறையும் இல்லை. நாம் குலதெய்வம் பார்த்துத் திருமண முறையை முடிவு செய்வது போல, பார்ப்பன இனத்தில் கோத்திரம் பார்த்து மாமன், மச்சான், பங்காளி முறைகளை முடிவு செய்கிறார்கள். குலம், கோத்திரம் என்று சொற்கள் வேறு வேறாக இருந்தாலும் இரண்டின் தன்மையும் ஒன்றுதான்.

இப்போது எல்லாச் சாதியும் ஒரு முனிவரைப் பிடித்துக் கொண்டார்கள். அப்படி எல்லாம் முனிவர்கள் இருந்ததற்கு வரலாற்றுச் சான்றுகள் இல்லை. அது அகத்திய முனிவர் வரைக்கும் கூட. அகத்திய முனிவர் கோத்திரம் இந்த அகத்திய முனிவர் இல்லை. இந்த தமிழ் அறத்தை எழுதிவைத்தாரே இவருக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை.

கோத்திரங்கள் என்று வைப்பதற்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் இல்லையா?

இல்லை, பிருகு முனிவர் கோத்திரம், அத்தி முனிவர் கோத்திரம், அகத்திய முனிவர் கோத்திரம், கெளசிக முனிவர் கோத்திரம் எல்லாம் இருக்கும். ஆனால் கோத்திரத்திற்கும் தமிழனுக்கும் சம்பந்தம் இல்லை. புறநானுறு, அகநானுறுக்கும் பிற்பட்டதுல எங்கையாவது சேர்ந்திருக்கும். அதற்கு முன்பு இல்லை. புராணம் வந்துவிட்டால்தான். வரலாற்றில் இல்லை. கல்வெட்டில் இல்லை. கல்வெட்டு தோன்றியதே அதற்குப் பின்புதான்.

சங்க இலக்கிய காலத்துக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் சங்ககாலம்னு சொல்றான். அது முதல் சங்க காலம்னு ஒன்று இருக்கிறது பாருங்கள் அதுவரை கோத்திரம் கிடையாது. முனிவர் வரலாறு எல்லாம் பிரம்மா, பிரம்மாவுக்கு அடுத்தபடியாகப் படைக்கப்பட்ட முனிவர்கள், முனிவருடைய மகன்கள். எல்லா முனிவர்களின் மகன்களும் தவறான வழியில் பிறந்தவர்கள். எல்லா முனிவர்களும் அப்படித்தான். அதனால்தான் அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை. வன்னியர்கள்கூட இப்போது, நாங்களெல்லாம் சம்பு முனிவர் வழி வந்தவர்கள் என்று ஒரு புராணக்கதையைக் கூறிக்கொள்கிறார்கள். இவையெல்லாம் கற்பனையே.

சங்ககாலத்தில் இந்தக் கோத்திரம் இல்லை. அது உறுதி. பின்னால் வந்தது. இராஜராஜ சோழன் காலத்தில் பார்ப்பனர்கள் இங்கு அதிகமாக வந்ததற்குப் பின்னால், தமிழர்களிடையேயும் கோத்திரங்கள் வந்தன. தெலுங்கர்கள் இங்கு வந்து கலந்தார்கள். அதன் பிறகு இந்தக் கோத்திர முறைகள் பரவலாகிவிட்டன.