144 நாடுகளைக் கணக்கில் கொண்டு, World Economic Forum 2017 இல் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பாலினச்சமத்துவத்தில் முதலிடம் வகிக்கிறது ‘ஐஸ்லேண்ட்’. இது 2017 ஆம் ஆண்டு நிலவரம் மட்டுமல்ல. தொடர்ந்து 9 ஆண்டுகளாக ஐஸ்லேண்டே முதலிடம் வகிக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக, பெண்கள் மனிதர்களாக வாழ்வதற்கு மிகச் சிறந்த இடமென்ற பெருமை ஐஸ்லேண்ட் நாட்டிற்குத் தான் உள்ளது!

பல்வேறு போராட்டங்கள் மற்றும் சட்டங்கள் மூலம் தான் அந்நாட்டில் இப்படிப்பட்ட நிலை சாத்தியப்பட்டுள்ளது. இன்னும், ஐஸ்லேண்ட் திரையுலகு போன்ற சில துறைகளில் ஆண் பெண் சமநிலை உருவாகவில்லை. எனினும், 87.8ரூ சமத்து வத்தை அந்நாடு அடைந்துள்ளது என்கிறது அந்த அறிக்கை. 144 நாடுகளில் 108 வது இடத்தில் உள்ள இந்தியா போன்ற நாடுகள் ஐஸ்லேண்டிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாய் உள்ளன.

பாலினச் சமத்துவம் பற்றிய வகுப்புகள்; பணி யிடங்களில் பெண்களின் நலனுக்கென சட்டங்கள்; ஊடகங்களில் பெண்களைப் பாலியல் பண்டங் களாகச் சித்தரிக்கத் தடை; பாலினப் பாகுபாடுகளை விதைக்கும் விளம்பரங்களுக்குத் தடை; ‘ஸ்ட்ரிப் கிளப்’ எனப்படும் வக்கிரமான கேளிக்கைக்குத் தடை என பல நடவடிக்கைகள் மூலம் பெண்களை மனிதர்களாக்கியுள்ளது ஐஸ்லேண்ட்!

பெண்களின் உரிமைகளுக்கு ஆதரவு தரும் வகையிலும், பாலினப் பாகுபாடுகளுக்குத் தண்டனையை வழங்கும் வகையிலும், ஐஸ்லாந்தில் உள்ள சில முக்கியமான சட்டங்களைப் பற்றிக் காண்போம்.

மகளிர் சமத்துவத்தைப் பாதுகாக்கும் சட்டம்

ஆண்- பெண் சமநிலை மற்றும் சம உரிமைகளுக்கென உள்ள சட்டம் ஐஸ்லேண்டின் பாலினச் சமத்துவத்தின் ஓர் முக்கிய அம்சமாகும். 2000 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இச்சட்ட மானது, 2008 ஆம் ஆண்டில் சீரமைக்கப்பட்டது. அரசாங்க மும், வணிகங்களும் பின்பற்ற வேண்டிய பாலியல் சமத்துவம் குறித்த தகவலை உள்ளடக்கியது இந்தச் சட்டம். பாலினப் பாகுபாடுகள் நடக்கும் ஒன்பது இடங்கள் இச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. பாலினப் பாகுபாடுகளில், நேரடியான மற்றும் மறைமுகமான பாகுபாடுகளெனப் பிரித்து அடையாளம் காண்கிறது இச்சட்டம். பாடப் புத்தகங்கள் முதல் பணியிடங்கள் வரை பாகுபாடுகள் இல்லாமல் இருக்கும் வகையில் இச்சட்டத்தில் 35 பிரிவுகள் உள்ளன.

நிறுவனங்களின் வாரியங்களில் குறைந்தது 40% பெண்கள் இருக்க வேண்டும்

மேற்கண்ட சட்டத்திலுள்ள 15 ஆம் பிரிவானது, அரசாங்க சபைகளிலும், நிறுவனங்க ளின் வாரியங்களிலும் குறைந்தது 40 சதவீதம் பெண்களாவது இருக்க வேண்டும் என்கிறது. அதைக் கண்டிப்பான முறையில் பின்பற்றவும் செய்கின்றனர். மேலும், 25 ஊழியர்களுக்கு மேல் பணி புரியும் நிறுவனங்களில் முறையான பாலியல் சமத்துவ நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இவற்றை மூன்று ஆண்டுகட்கு ஒரு முறை அரசாங்கம் கண் காணிக்கிறது.

பணியில் சம ஊதியம்

சில துறைகளில் பெண்கள் ஆண்களை விட குறைவான ஊதியமே பெற்று வந்தனர். அதற்காக பெண்கள் நூதனப் போராட்டம் நடத்தினர். அதனையொட்டி, ஆண் - பெண் ஊதியப் பாகு பாட்டை சட்டவிரோதமாக்க நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது ஐஸ்லேண்ட். 25 பணியாளர்களுக்கு மேல் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் இரு பாலருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும் என்று சட்டமும் இயற்றப் பட்டது. இதன் மூலம், சம ஊதியச் சட்டத்தைக் கொண்டு வந்த முதல் நாடு என்ற பெருமை ஐஸ்லாந்திற்குக் கிடைத்தது.               

உலகிலேயே மிகச் சிறந்த Parental leave திட்டம்

ஐஸ்லாந்தில் உலகின் மிகச் சிறந்த மகப்பேறு - தந்தைமை விடுப்புக் கொள்கை உள்ளது. இவ்விடுப்பை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக அதிகரித்து 2006 ஆம் ஆண்டு சட்டத் திருத்தம் செய்தனர். சுயதொழில் செய்பவர்கள் உட்பட அனைத்து பெற்றோர்களும் இந்த விடுப்பை குழந்தை பிறப்பின் போதும், குழந்தையைத் தத்தெடுக்கும் போதும் பயன்படுத்திக் கொள்ளலாம். விடுப்பு காலத்தில் 80ரூ சம்பளம் கொடுக்கப்படும். தாய், தந்தை இருவரின் கவனிப்பும் குழந்தைக்குக் கிடைக்கும் வண்ணம் தாயும் தந்தையும் இவ்விடுப் பைப் பிரித்துக் கொள்வர்.

அதாவது, இவ்விடுப்பானது 3 மாதங்கள் தாய்க்கும், 3 மாதங்கள் தந்தைக்கும், 3 மாதங்கள் இருவருக்கும் எனப் பிரித்து அளிக்கப்படுகிறது.

பள்ளியிலிருந்து கல்லூரி வரை பாலினச்சமத்துவ வகுப்புகள்

பெற்றோர்கள் இருவரின் சமமான கவனிப் புடன் வளர்க்கப்படும் குழந்தைகளுக்குப் பள்ளியில் சேரும் முதல் எல்லா வகுப்புகளிலும் பாலினச் சமத்துவப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதனை நாம் முதலில் பார்த்த “ஆண்- பெண் சமநிலை மற்றும் சம உரிமைகள்” சட்டத்தின் 23 ஆம் பிரிவு வலியுறுத்துகிறது.

இலவசமாக வழங்கப்படும் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியிலும், விளையாட்டிலும் பாலினச் சமத்துவத்தைப் பின்பற்றுகிறது ஐஸ்லேண்ட். பாலினப் பாகுபாடுகளை ஒரு புத்தகத்திலும் காண இயலாது.

லிவிங் டுகெதருக்கு அங்கீகாரம்

18 வயது நிரம்பிய ஆண் - பெண் அல்லது இரு பெண்கள் (lesbian) அல்லது இரு ஆண்கள் (gay), திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழுதல் என்னும் லிவிங் டுகெதர் முறையில் இணைந்து வாழலாம். லிவிங் டுகெதர் இணையர் தங்கள் இணைவைப் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்து கொள்பவர்களுக்குச் சில சட்டப்பூர்வமான சலுகை கள் உண்டு. சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் திருமணம் செய்து கொள்ள நினைத் தால் திருமணத்தையும் பதிவு செய்து கொள்ளலாம். அதன் பின் அனைத்து சலுகைகளும் அவர்களுக்கு உண்டு.

ஸ்ட்ரிப் கிளப்களும், செக்ஸிற்காகப் பணம் செலுத்துவதும் சட்ட விரோதமானது

கோல்ப்ரன் என்பவர் “பெண்களை விற்கப்படும் பண்டமாகச் சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறி ஸ்ட்ரிப் கிளப்களை எதிர்த்தார். ஏனெனில், அவை பெண்களைப் பாலியல் பண்டமாகவும், காட்சிப் பொருளாகவும் காட்டுகின்றன. ‘ஸ்ட்ரிப் கிளப்’ என்னும் கேளிக்கை யை, 2009 - ஆம் ஆண்டில் பெண்ணிய நோக்கில் தடை செய்த முதல் நாடு ஐஸ்லேண்ட். பணியாளர் களை (பெண்கள்) நிர்வாணப்படுத்தி எந்தத் தொழிலும் இலாபம் சம்பாதிக்கத் தேவையில்லை என அறிவுறுத்தும் அச்சட்டம் முழு ஆதரவுடன் ஐஸ்லேண்ட் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

2007 ஆம் ஆண்டு வரை விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் தான் தண்டிக்கப்பட்டனர். அவர்கட்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை வழக்கப் பட்டது. ஆனால், 2009 ஆம் ஆண்டு, ஐஸ்லாந்திய நாடாளுமன்றத்தில், செக்ஸிற்காகப் பணம் செலுத்துபவனே தண்டிக்கப்பட வேண்டியவன் என்று ஆலோசித்து சட்டத் திருத்தமும் செய்தனர். இருப்பினும், விபச்சாரத்தைப் போல பெண்கள் குழுக்களாக பாலியல் தொழிலில் ஈடுபட்டால் அவர்களுக்குத் தண்டனை உண்டு.

மேலும், விளம்பரங்களில் பெண்களையோ ஆண்களையோ காட்சிப் பொருளாக்குவதும் அந்நாட்டில் சட்டப்படிக் குற்றமாகும்.

பாலினச் சமத்துவத்திற்கென தனி அமைச்சரவை

பாலினச் சமத்துவத்தில் தன்னிறைவு பெறுவதற்கென ஒரு தனி அமைச்சரவை ஐஸ்லாந்தில் உண்டு. சமத்துவத்தின் முன்னேற்றப் பாதையைக் கண்காணிக்க சம உரிமை கவுன்சில், புகார் ஆணையம் மற்றும் பாலினச் சமத்துவ மையம் போன்ற அமைப்புகள் உள்ளன. அமைச்சரவை யோடு இணைந்து இவ்வமைப்புகள் பாலினச் சமத்துவத்திற்கென ஏற்படுத்தப்பட்ட சட்டங்கள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண் காணிக்கும். பாலினச் சமத்துவத்திற்குச் சட்டப் பூர்வமாக, கலாச்சார ரீதியாக மற்றும் உளவியல் ரீதியாக வழி வகுக்க வேண்டும் என்பதே இந்த அமைச்சரவை மற்றும் அமைப்புகளின் நோக்க மாகும்.

இவ்வாறு பல சட்டங்கள் மற்றும் நடை முறைகள் மூலம் பாலினச் சமத்துவத்தை அடைந்துள்ளது ஐஸ்லேண்ட். எனவே மன ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சட்டங்களிலும் மாற்றங்கள் வந்தால் மட்டுமே இந்தியா போன்ற நாடுகளில் பாலினச் சமத்துவம் சாத்தியப்படும்.

https://www.globalcitizen.org

http://www.mcc.is/english/iceland/laws-and-regulations-/

https://www.weforum.org

 

Pin It