இன்றைய தேதியில் தமிழகம் எதிர்நோக்கியிருக்கும் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்று கட்டுமானங்களுக்கான ஆற்று மணல் பிரச்சனை. “வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப் பார்” எனப் பழமொழி நடைமுறையில் உண்டு. நவீனத் தொழில் வளர்ச்சி, வங்கிகளில் பரவலாகக் கிடைக்கும் வீட்டுக் கடன்கள் மற்றும் நகரங்கள் முதல் கிராமங்கள் வரை பரந்து விரிந்திருக்கும் மனைப்பிரிவுகள் போன்ற காரணிகளால் நடுத்தர மக்களின் கனவான வீடு என்பது சுலபமாக இருந்தது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கட்டுமானங்களுக்காக ஆற்றுமணல் பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. கேரளாவில் ஆற்றுமணல் அள்ளுவதைத் தடைசெய்து வைத்திருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அரசின் துணையோடு அள்ளப்படுகிற ஆற்றுமணல் தமிழகத்தின் தேவையைத் தாண்டி கர்நாடகம், கேரளம் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் கடத்தப்படுகிறது.

கட்டுமானங்களில் மணலின் பங்கு

கட்டுமானங்களில் பயன்படுத்தப்படும் மணல் என்பது தொழில் நுட்பரீதியில் பார்த்தால் FINE AGGREGATE என்றும், ஜல்லிக்கற்களை CORSE AGGREGATE என்றும் சொல்வார்கள். கடந்த தலைமுறை வரையிலும் ஓடைகளில் கிடக்கும் மணலைப் பயன்படுத்தியே  நடைபெற்ற கட்டுமான வேலைகள், இப்போது தேவை அதிகரித்து உள்ளதால் ஆற்றுமணல் பயன்படுத்தி நடைபெறுகிறது..

நவீனத் தொழில் நட்பத்தில்  CORSE AGGREGATE என்று சொல்லப்படுகிற ஜல்லிக்கற்களை பொடி செய்து FINE AGGREGATE ஆக மாற்றலாம். அது M.SAND – MANUFATRUCING SAND எனச் சொல்லப்படுகிறது.

தமிழக கட்டுமானங்களில் மணல் விற்பனை குளறுபடிகள்

கரூர் காவிரி ஆற்றுப் படுகைகளில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணல் அள்ளப்படுகிறது. அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்படி அள்ளப்பட்ட மணலின் விற்பனை வருவாய் அரசுக்கு முழுதும் கிடைக்காமல் அரசியல்வாதிகளிடமே செல்கிறது.

நீண்ட நாட்களாக ஆற்றுமணல் அள்ளப்படும் பிரச்சனைகள் பேசப்பட்டாலும் அவ்வப் போது நடைபெறும் போராட்டங்களால், சிறிதளவில் தடைபட்டு மீண்டும் விற்பனை ஜோராக நடைபெற்று வரும். இதுதான் தமிழகத்தில் வழக்கம்.  தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் போதெல்லாம் மணல் அள்ளும் குழுவும் மாற்றப்படும். அச்சமயங்களில் 10 முதல் 15 நாட்கள் வரை வெளியிடங்களில் பதுக்கி வைத்து இருக்கிற மணல் அதிக விலைக்கு விற்கப்படும். அது போலவே ஜூன் 2 ம் வாரங்களில் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் இதே போல கள்ள மார்க்கெட் மணல் விற்பனை ஜோராக நடைபெறும்..

லாரிகளில் அதிக அளவு பாரம் ஏற்றிச் சொல்லும் பிரச்சனை காரணமாக 350 கன.அடியிலிருந்து 250 கனஅடியாக அளவு மாற்றப்பட்டதிலிருந்து கனஅடி 30 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த மணல் 40 ரூபாய் ஆக மாறியது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அதிமுக அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, பழைய நடைமுறை தொடர்ந்ததில் மணல் விற்பனை தடையில்லாமல் அப்படியே நடைபெற்றது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி மற்றும் மணல் அள்ளும் பொதுப் பணித்துறை காண்டிராக்டர் சேகர் ரெட்டியின் கைதுக்கு பின் மணல் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 250 கன அடி மணல் 10,000 ரூபாய்க்கு வழக்கமாக விற்று வந்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் 18,000 ரூபாய் ஆக அதிகரித்தது. தற்போது அதே 250 கன அடி மணல் ரூபாய் 40,000 வரை விற்கிறது…

ஏன் இயற்கையாகக் கிடைக்கும் பொருளுக்கு இவ்வளவு தட்டுப்பாடு என்றால், பொதுப்பணித் துறை ஒப்பந்தகாரர்கள் அள்ளி விற்று வந்த மணல், தற்போது அரசால் நேரடியாக விற்கப்படுகிறது. ஒப்பந்தப் பணியாளர்கள் அதிகாலை 5 மணிக்கே அள்ளுவதைத் தொடங்கி விடுவார்கள். ஆனால் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கே மணல் அள்ளுவதைத் தொடங்குகிறார்கள். ஒப்பந்தக்காரார்களால் 15 முதல் 18 மணி நேரம் வரை பணி நடந்து, நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் விற்று வந்த மணல் லோடுகள் அரசு ஊழியர்களால் நாள் ஒன்றுக்கு 100 க்கும் குறைவாக ஆக்கப்பட்டுள்ளது.

மாதம் 20 முதல் 25 முறை மணல் விற்று வந்த ஒருவரால் இப்போது 1 முதல் அதிகபட்சம் 5 முறையே மணல் விற்க முடிகிறது. அதனால் தான் இந்த விலையேற்றம். கட்டுமானங்கள் அதிகம் நடக்கும் மேற்கு மாவட்டங்கள் தொடங்கி, தமிழகம் முழுதும் கட்டுமான பணிகள் ஸ்தம்பித்து வீட்டது. இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகிறார்கள். விவசாயத்துக்கு அடுத்த படியாகக் கட்டுமானத் துறையிலேயே அதிகத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்போது தினமும் அள்ளப்படும் மணலில் உள்ளூர் லாரிகளுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் தினமும் கரூர் சுற்றுவட்டார லாரிகளுக்கே முன்னுரிமை தருவதால் அவர்கள் தினமும் மணல் விற்று, ஆயிரக் கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். என் நண்பர் ஒருவர் சொன்னார், புது வீடு 75 சதவிகிதம் முடிந்து விட்டது. செப்டம்பர் மாதம் திருமணம் 50,000 ரூபாய்க்கு மணல் விற்றாலும் வாங்கித்தானே ஆக வேண்டும். இது போன்ற சூழல்களைப் பயன்படுத்தி கொள்ளை அடித்து வருகிறார்கள் சிலர்.

நம் அண்டை மாநிலமான கேரளாவில் ஆற்று மணல் அள்ள அனுமதியில்லை. பிறகு எப்படி அங்கு கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது என்று பார்ப்போமானால் எம்.சேண்ட் ( M.SAND – MANUFATRUCING SAND) அதாவது செயற்கை மணல் கொண்டு அதிக அளவில் நடைபெறுகிறது. சரி நாமும் அதே போல பயன்படுத்தி கட்டிடங்களைக் கட்டலாம் என்றால் சரிதான்.

ஆனால் அதிலும் ஒரு புதிய பிரச்சணை இங்கு மணல் லோடு 10,000 ரூபாய் விற்றபோது எம்.சேண்ட் விலை 8,000 விலை வைத்தியாசம் குறைவு. அதனால் யாரும் அதிகமாக பயன்படுத்தவில்லை. ஆனால் இப்போது மணல் தட்டுப்பாட்டைக் கணக்கில் எடுத்துக் கொண்டு எம்.சேண்ட் விலை 16,000 முதல் 18,000 வரை அதிகப்படுத்தி விட்டார்கள்.

எதையும் கண்டுகொள்ளாத அரசு, வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளை அடிக்கும் வியாபாரிகள் இவர்களுக்கு மத்தில் சிக்கித் தவிக்கிறார்கள் கட்டுமானத் தினக்கூலித் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்க மக்களும்.

இதற்கு என்னதான் தீர்வு

தமிழகத்தில் உள்ள கட்டுமான துறை வல்லுநர்கள், வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள், பயிற்சி பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஆற்று மணல் வேண்டாம் என் உறுதியாகக் கூற வேண்டும்.

இங்குள்ள விவசாய சங்கங்கள், இயற்கை ஆர்வலர்கள், என அனைவரு இப்பிரச்சனையின் தன்மை புரிந்து மக்களிடம் ஆற்றுமணலைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யப் பிரச்சார இயக்கம் தொடங்க வேண்டும்.

விற்கப்படும் எம்.சேண்ட் தரம் மற்றும் விலையை அரசு முறைப்படுத்த வேண்டும். அது மட்டுமல்லாது கட்டிடங்களுக்கு பயன்படுத்தப்படும் அனைத்து கனிம வளங்களின் பயன்பாடுகளை அரசு நெறிப்படுத்த வேண்டும்.

மதுவகைகளை நுகரும் மக்களிடம் அதுபற்றிய விழிப்புணர்வு, அதைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் அதன் தரம் ஆகியவை பற்றிப் பேசாமல் டாஸ்மாக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் போன்றே அவ்வப்போது ஆற்றுமணலுக்கு எதிராகப் போராடுவது, மணல் குவாரிகளை மூடுவது, எந்த வகையிலும் பயன் தராது.

கனிமவளங்கள் அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் சொத்து. ஆற்று மணலை அள்ளி காங்கிரீட் கூடுகளாக மாற்றி அடுத்த தலைமுறைக்கு ஆரோக்கியமற்ற சூழலைத்தந்து என்ன பயன்? அதற்காக வளர்ச்சியையும் தடுக்கமுடியாது. கனிமவள உபயோகங்களை நெறிப்படுத்த வேண்டும்.

நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன் மணல் அள்ளி வரும் லாரிகளின் உள்ளே இந்திய தேசிய கொடி கம்பீரமாக மாட்டியிருக்கும். எது தேசப்பற்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்…..

 

Pin It