ஜாதி வகுப்பு வித்தியாசத்தைக் காட்டும் பட்டங்களையும் சமய வித்தியாசத்தைக் காட்டும் குறிகளையும் விட்டுவிட வேண்டும் என்று செய்த தீர்மானம் நாட்டின் ஒற்றுமைக்கு மிகுதியும் அத்தியாவசியமானது என்பதைப் பற்றி முன் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

periyar ambedhar 600இத்தீர்மானத்தில் பொறாமை கொண்ட சில விஷமக்காரர்கள் வகுப்புப் பட்டம் நீக்க வேண்டும் என்கின்றவர்கள் வகுப்பு மகாநாடுகளில் கலந்து கொள்ளலாமா என்கின்ற ஒரு பிரசினையை கிளப்பி விட்டிருக்கின்றார்கள். இதற்கு நாம் சொல்லும் சமாதானம் என்னவென்றால் ஒவ்வொரு வகுப்பாரும் தங்கள் தங்கள் வகுப்பு மகாநாடுகள் கூட்டி அவற்றில் இவ்விதத் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றி அவற்றை முதலில் தங்கள் தங்கள் வகுப்புகள் என்பவைகளுக்குள் அமுலுக்குக் கொண்டு வருவதன் மூலம் வகுப்பு வித்தியாசங்களை ஒழியுங்கள் என்றுதான் கேட்கின்றோம். அதற்காகத்தான் வகுப்பு மகாநாடுகள் கூட்டுங்கள் என்கின்றோமே ஒழிய வேறில்லை. உதாரணமாக ஒரு வாணிய வைசிய மகாநாட்டில் நாம் பேசும் போது அவர்களுடைய பூணூலை எடுத்து விடும்படியும் தங்களை வைசியர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றே கேட்டுக் கொண்டோம், அது போலவே நாடார் க்ஷத்திரிய வகுப்பார் கூட்டத்தில் பேசும் போதும் தங்களை க்ஷத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டாம் என்றும் பூணூலை எடுத்து விடும்படியும் பேசினோம்.

அதுபோலவே நாயுடுமார்கள் மகாநாட்டில் பேசும்போதும் தங்களை க்ஷத்திரியர்கள் என்று சொல்லிக் கொள்வதை விட்டுவிடும்படியே கேட்டுக் கொண்டோம். இம்மாதிரி சிறிதாவது விட்டுவிடவும் செய்தோம். ஆதலால் வகுப்புப் பிரிவுகள் எத்தனை உண்டோ அத்தனை வகுப்பும் மகாநாடுகள் கூட்டி வித்தியாசங்களை ஒழிக்க தீர்மானங்கள் செய்து கொள்ளாவிட்டால் எப்படி இந்தக் கொள்கைகள் ஒவ்வொரு வகுப்புக்குள்ளும் போய்ப் புகுந்து வகுப்பு நோயைத் தீர்க்க முடியும் என்பது நமக்கு விளங்காது. மற்றும் இப்போது ஆதிதிராவிட மகாநாடுகள் கூடுவதால் எவ்வளவு தூரம் அச் சமூகத்திற்கு உணர்ச்சி வந்து அவைகள் முன்னேற இடமேற் பட்டிருக் கின்றது என்பதை கவனித்தால் வகுப்பு மகாநாட்டின் அவசியம் விளங்கும். ஒரு பெரும் சமூகம் ஒற்றுமையையும் சீர்திருத்தமும் பெற வேண்டுமானால் அதிலுள்ள பிரிவுகளான ஒவ்வொரு சிறு சமூகமும் தங்களுக்குள் முதலில் ஒற்றுமையையும் சீர்திருத்தத்தையும் பெற்றாக வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த உண்மை உலகத்திலுள்ள எந்த யோக்கியனுக்கும் விளங்கியே தீரும்.

உதாரணமாக தென்னாட்டில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு கூட்டப் படாமல் இருந்திருக்குமானால் பார்ப்பனர்களின் கொடுமை நாடு அறிந்து, அதிலிருந்து விடுதலையடைய மார்க்கம் ஏற்பட்டிருக்க முடிந்தே இருக்காது என்று சொல்லுவோம். அன்றியும் வகுப்பு மகாநாடுகள் அடிக்கடி கூடுவதால் தாங்கள் மற்ற வகுப்பார்களால் அடையும் துன்பமும் அதிலிருந்து விடுபட்டு மற்ற வகுப்பார்களும் தாங்களும் ஒற்றுமையாயிருக்க மார்க்கமும் அவசி யமும் தானாகவே ஏற்பட்டுவிடும். எனவே வகுப்பு வித்தியாசங்களால் வயிறு வளர்க்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் சுயநலச் சோம்பேரிகளைத் தவிர பொதுநலத்தில் கருத்துள்ள மற்ற யாவருக்கும் வகுப்பு வித்தியாசங் களை ஒழித்து ஒற்றுமைப்பட வகுப்பு மகாநாடுகள் கூட்டப்படுவது எந்த விதத்திலும் ஆபத்தாய் தோன்றாது.

ஜாதி பேதத்தை ஆதரிக்கின்ற மதம், வேதம், சாஸ்திரம், புராணம் ஆகியவைகளைப் பின்பற்றக் கூடாது என்பது.

இந்தத் தீர்மானத்தை எந்தவிதமான தீர்மானத்தைக் கொண்டும் யாரும் எதிர்க்க முடியாதானாலும் சமயத்தின் பேராலும் வேத சாஸ்திர புராணத்தின் பேராலும் தங்களது நித்திய வயிறு வளர்ப்பு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்களுக்கும் இத் தீர்மானம் ஒருக்காலும் திருப்தியை அளிக்காது என்பதோடு அவர்களது சூக்ஷி விஷமப் பிரசாரம் இரகசியமாய் நடந்துதான் தீரும்.

இத்தீர்மானத்தின் கருத்துப்படி பார்த்தால் முக்கியமாக இந்து மதக் கொள்கைகளையும் அவற்றின் ஆதாரங்களையும் பின்பற்றக் கூடாது என்பதாகக் காணப்படுகின்றது என்றுதான் ஒவ்வொருவருக்கும் தோன்றும். ஏனெனில் உலகத்திலுள்ள எல்லா முக்கிய மதங்களைவிட இந்து மதம் என்பதிலும் அதன் ஆதாரங்கள் என்பதான வேத சாஸ்திர புராணங்களில் தான் ஜாதி வகுப்பு பிரிவும் பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு என்பதையும் அதிகமாக வலியுறுத்தப்படுகின்றது. ஆதலால் இத்தீர்மானம் மிகுதியும் இவற்றை குறை கொள்வதாக நினைப்பதில் அதிசயமில்லை. ஆனால் நம்மைப் பொறுத்தவரை உண்மையில் இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும், இருப்பதாக கருதிக் கொண்டிருப்பதும் அதன் ஆதாரங்கள் என்று சொல்லப்படுவதும் ஒரு சிலருடைய சுயநலத்தாலும் நமது மக்களு டைய அறியாமையினாலும் வழங்கி வரும் ஒரு வெறும் மயக்க உணர்ச்சியே தவிர வேறில்லை என்றும், அம்மயக்க உணர்ச்சி ஒழியவே இந்துமதமும் அதன் ஆதாரங்களும் ஒழிய வேண்டுமென்கின்றோமே ஒழிய வேறில்லை.

உதாரணமாக இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்று சொல்லி வந்திருக்கும் புஸ்தகங்களுக்கும் விஷயங்களுக்கும் இதுவரை யாரும் பதில் சொன்னவர்களே கிடையாது. ஞான சூரியன் புஸ்தகத்தில் காணப்படுவது போல ஒரு நாட்டின் இழி மக்களுக்கு அந்நாட்டு பாஷையில் சொல்லப்பட்ட ஒரு இழிவான பெயரே இந்து என்பது.

அப்பெயர் பெரும்பாலும் மகமதியர்களால் தங்கள் மதஸ்தர்கள் அல்லது தங்கள் நாட்டவர்கள் அல்லாத இந்தியா நாட்டவர்களுக்கு அளிக்கப் பட்டது. எப்படி ஐரோப்பியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடுகிறார்களோ அதுபோலவே மகமதியர்கள் நம்மைச் சுதேசிகள் என்று கூப்பிடுவதற்கு பதிலாக இந்தியன் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லுவது போல இந்தி, அரபி, உருது முதலிய பாஷைகளில் இந்து என்று சொல்லி அழைத்தார்கள். இந்த நிலையில் இந்திய மக்கள் எல்லோரையும் குறிப்பிட வேறு பெயர் சமயத்தின் பேரிலோ நாட்டின் பேரிலோ ஜாதியின் பேரிலோ ஒரு குறிப்பும் இல்லாதிருந்ததால் இந்து என்கின்ற பெயரே எல்லோரையும் சேர்ப்பதற்கு ஒரு பொதுப் பெயராகவும் ஏற்பட்டதோடு ஆரியர்கள் கொள்கைகளுக்கே இந்து சமயம் என்னும் பெயர் தரப்பட்டு அது இந்தியர்கள் எல்லோர்கள் தலையிலுமே சுமத்தப்பட்டுவிட்டது.

உதாரணமாக இந்து மதம் என்கின்ற வார்த்தை உச்சரிப்பு கூட சுமார் ஒரு 400, 500 வருஷங்க ளுக்கு முன்னால் இருந்ததாக எண்ணுவதற்கு ஒரு ஆதாரத்தையும் காணோம். சைவம் என்கின்ற பெயரும் சிவன் என்றால் அன்பு என்கிற வியாக்கியானமும் கூட ஆரியக் கொள்கைகளை சிறப்பாகவே ஆபாசங்களையும் வேள்வி கொடுமைகளையும் முறையே வெளியாக்கியும் அழிக்கவும் வந்த புத்த இயக்கத்தை எதிர்த்து அவரது கொள்கையை ஒழிக்கவே சைவம் என்பதாக ஒன்று கற்பிக்கப்பட்டதே தவிர மற்றப்படி அச்சைவம் என்பதற்கும் அதன் கொள்கைகளும் அதில் காணப்படும் பல்வேறு கடவுள்களுக்கும் தமிழ்நாட்டிற்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எவ்விதச் சம்மந்தமும் இருப்பதாகவோ இதுவரையெவ்வித ஆதாரமும் வெளிப்படுத்தப்படவில்லை.

நாளாக நாளாக சைவ ஆரியக் கொள்கை கொண்ட சமயம் தமிழ் மக்களுக்குப் பொருத்தமில்லாமல் போவதை அறிந்த சில தமிழர்கள் ஆரியர் சைவ சமயம் என்பது வேறு தமிழர் சைவ சமயம் என்பது வேறு என்று பிரித்து ஆரியக் கொள்கைகளை கண்டித்து ஒதுக்கி அதற்கு பதிலாகத் தமிழ் மக்களுக்கு பொருத்தமானது என்பதாக சிலவற்றை தாங்களே நினைத்து, வேறு சில கொள்கைகளையும் வியாக்கியானங் களையும் புகுத்தித் தமிழ்ச் சிவன், தமிழ்வேதம், தமிழ்க் கடவுள் என்பதாக வெள்ளரிக்காய்க்கு பூண் போடுவது போல் இழுத்துப் பிடித்துக் கொண்டு வருகின்றார்கள். அன்றியும் சைவ சமயத்திற்கு ஜாதி மத வகுப்பு பேதங்கள் கிடையாது என்று சொல்லி சமரசத்தைப் பற்றி பேசுவதிலும் குறைவில்லை. ஆனால் உட்புகுந்து பார்த்தால் சமயாச்சாரிகள் எல்லோருக்கும் ஜாதி உண்டு,

இது மாத்திரமல்ல. சைவக் கடவுள்கள் எடுத்த மனித ரூபங்கள் எல்லாவற் றிற்கும் ஜாதி உண்டு. இதுமாத்திரமல்ல. சைவ புராணங்கள் எல்லாவற்றிலும் அவற்றை செய்தவர்கள், செய்யப்பட்டவர்கள் உள்பட ஜாதி உண்டு. எனவே சைவ சமயம் ஜாதிகள் ஏற்பட்டதற்கு பின்பு உண்டானதென்றும் அதுவும் ஜாதி மத பேதங்களை ஒழிக்கப் புறப்பட்ட பவுத்த சமண கொள்கைகளுக்குப்பின் உண்டானதென்றும் சொல்லித் தீர வேண்டியிருக்கின்றது. அது போலவே வைணவ சமய மென்பதும். அது போலவே ஆரியக் கொள்கைகள் நாட்டில் பெரும்பாலோரால் வெறுக்கப் பட்ட காலத்தில் அதனுடைய அடிப்படைகளை மாத்திரம் நிறுத்திக் கொண்டு சற்று திருத்தப்பட்ட கொள்கைகளை வைத்து வெளியாக்கப்பட்ட சமயமாகும். ஆனாலும் அதுவும் வார்த்தை அளவில் சில நல்ல கருத்துக்கள் சொல்லப் பட்டாலும் வைணவப் புராணங்களும் கடவுள்களும் ஆச்சாரியார்களும் ஆழ்வார் களும் சகலமும் ஜாதி வித்தியாசம் கற்பிக்கக் கூடியதாகவே தான் இருந்து வருகின்றது.

இச்சமயத்தைச் சேர்ந்த சில பெரியார்கள் என்பவர்கள் மாத்திரம் ஜாதி வித்தியாசமில்லை என்று சொன்னதாகக் காணப்பட்டாலும் அதற்கும் பல நிபந்தனைகள் சொல்லப்பட்டிருப்பதையும் காணாமல் இருக்க முடியாது. எனவே ஜாதி வித்தியாசம் இயற்கை என்பதும் அதை ஒழிப்பதற்கு நிபந்தனைகள் வேண்டியிருப்பதால் அவ்விரு சமயங்களும் சமரசம் செயற்கை என்றும் விளங்குகின்றது.

(குடி அரசு - தலையங்கம் - 03.03.1929)

Pin It