பெரியார் சொன்னதையெல்லாம் பத்திரமாக ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கிற அவசியமில்லை. அது பெரியார் கொள்கைக்கே மாறானது.

பெரியாரை மறுவாசிப்பு செய்யக்கூடாது என்பதோ, திறனாய்வு செய்யக்கூடாது என்பதோ நம் நிலைப்பாடு அல்ல. பார்க்கப் போனால் மறுவாசிப்பும், திறனாய்வும் மற்றவர்களுக்கு தேவைப்படுவது போலவே பெரியாருக்கும் தேவைப்படுகிறது. அதுதான் பெரியார்கள் கொள்கைகளை உயிரோட்டமுள்ளதாக வைத்திருக்கும்.

ஆனால் மறுவாசிப்பு, திறனாய்வு என்கிற பெயரில் பெரியாரைக் கொச்சைப்படுத்துபவர்களை நாம் நிராகரிக்கிறோம். இப்படி கொச்சைப்படுத்துபவர்களில் சிலர் உள்நோக்கத்தோடு அதனை செய்கிறார்கள்.

சாதியத்தை நியாயப்படுத்துவதற்காக,

சாதி ஒழிப்பின் தேவையை மறுப்பதற்காக,

சமூகநீதியை எதிர்ப்பதற்காக,

தலித் மக்களுக்கு எதிரான இழிவுகளை நியாயப்படுத்துவதற்காக,

சாதி வெறியை தூக்கிப் பிடிப்பதற்காக பெரியாரைக் கொச்சைப்படுத்துபவர்களை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இவர்கள் 'தமிழ்த்தேசியம்' என்கிற போர்வைக்குள் ஒளிந்து கொண்டு செய்கிறார்கள். தமிழ்ச்சாதியைப் பற்றி பேசுகிறார்கள். உண்மையில் தமிழ்த்தேசியம் என்பது சாதியத்திற்கு மாறானது. ஏனென்றால் 'நாம் தமிழர்' என்கிற மனநிலைதான், அந்த ஒர்மைதான் தமிழ்த்தேசியத்தின் பண்பாட்டு அடித்தளமே ஆகும்.

நாம் தமிழர் என்கிற தமிழ்த்தேசியத்தை மறுக்கிற சாதியத்தை உயர்த்திப் பிடித்துக்கொண்டு, தமிழ்ச்சாதிகள் என்கிற முறையில் பேசிக்கொண்டு தமிழ்த்தேசியத்தைக் காப்பாற்ற முடியாது. இது நண்பர்கள் போல் நடிப்பவர்களின் நாடகம். இது தமிழ்த்தேசியத்திற்கு எதிராக, தமிழ்த்தேசியம் என்கிற பெயரில் வேறொரு கருத்தியியலை நிறுத்துகிற ஒரு முயற்சி.

செங்கொடிக்கு எதிராய் செங்கொடி ஏற்றி வருபவர்கள் பற்றி மாவோ சொல்லியிருக்கிறார். பெரியாரைக் கொச்சைப்படுத்துகிறவர்களைத் "தமிழ்த் தேசியத்திற்கு எதிராக தமிழைத் தூக்கி வருகிறவர்கள்" என்றுதான் சொல்ல வேண்டும்.

நாம் அப்படி பார்க்கவில்லை. இன்றளவும் பெரியாரைத் தமிழ்த்தேசியத்தின் தந்தையாக மதிக்கிறோம். தமிழ்த்தேசியம் விடுதலைப் பெறுகிற வரைக்கும், தமிழ்நாடு சாதி ஒழிந்த ஒரு நாடாகிற வரைக்கும் தமிழ்த்தேசியத்தின் தந்தையாக பெரியாரைப் போற்றுவோம்.

- தோழர் தியாகு

எழுத்து வடிவம்: குருநாதன் சிவராமன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்க உறுப்பினர்
 

 

Pin It