"எவரையும் சித்திரவதை செய்யக் கூடாது, மனிதத் தன்மையற்று கொடூரமாக அல்லது கேவலமாக நடத்துவதோ, தண்டனைக்கு உள்ளாக்குவதோ கூடாது" என அகில உலக மனித உரிமை பிரகடனம் விதி 5 கூறுகிறது.

ஒருவர் மற்றொருவரின் மீது வேண்டுமென்றே, உடல் ரீதியான அல்லது மன ரீதியான வலியையோ அல்லது சங்கடத்தையோ ஏற்படுத்துவதும் மற்றும் முன்னரே திட்டமிட்டு குரூரமான, மனிதத் தன்மையற்ற இழிவான முறையில் நடத்துவதும் அல்லது சட்டமுறையற்று தண்டிப்பதுமே சித்திரவதையாகும்.

சித்திரவதை என்பது இன்றோ, நேற்றோ உருவானது அல்ல. மாறாக 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்ற பழமொழிக்கேற்ப வலிமை வாய்ந்தவன், பலம் குன்றியவர்களை ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய காலத்திலேயே துவங்கி விட்டது.

பண்டைய தமிழ் சமூகத்தில் ஒரு பிரிவினரிடையே பிரபல்யமான சொலவடைகளில் ஒன்றான 'தோலை உரிச்சி தொங்க விட்டுறுவேன்" என்பது, அப்போது ஆதிக்கம் செலுத்தி வந்த ஒரு குழு, தன் கட்டுப்பாட்டின் கீழ் வாழ்ந்த பட்டியலின மக்களை தண்டனைக்குள்ளாக்குவதற்காக பயன்படுத்திய குரூர வழிமுறைகளில் ஒன்றே ஆகும். தண்டனை வழங்கப்பட வேண்டிய நபரது உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து அதற்கு மேல், உப்பில் நன்கு ஊற வைத்த மாட்டுத் தோலை நன்கு இறுக்கமாக போர்த்திவிட்டு, நாள் முழுக்க அந்த நபரை வெயிலில் நிற்க வைத்து, மாலை வெயில் தாழ்ந்த பிறகு அவரின் மேலே போர்த்தப்பட்ட மாட்டுத் தோலை உரிக்கும் போது, அந்த நபரின் உடலின் மேலுள்ள தோலும் சேர்ந்து கிழிந்து வரும். இப்படியான நினைத்துப் பார்த்தாலே திகில் அடையச் செய்கிற, குரூரமான பல்வேறு தண்டனை வடிவங்கள் அமலில் இருந்திருக்கிறது.

அது நாகரீகம் அடையாத சமூகம். தற்போது அப்படியேதும் இல்லை என தவறாக எண்ணுவோர் நம்மில் பலர். ஆனால் எதார்த்தத்தில் அப்படியில்லை. நாகரீக சமூகமாக சொல்லப்படும் இன்றைய சூழலில் தான் அரசுகளின் மற்றும் ஆதிக்கக் குழுக்களின் கடுமையான அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டம், சொட்டதட்டி ஊராட்சித் தலைவரான ராஜூ என்பவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலேயே கடந்த 2003 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றச் சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கச் சாதியினரால் கடுமையாக தாக்கப்பட்டார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டி.பறையன்குளம் கிராமத்தில் கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவரான மனோன்மணி என்பவர் தனது கணவரோடு மகிழுந்தில் சென்று கொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்கச் சாதி வெறியர்களால், 'ஒரு பட்டியல் இன பெண்மணி தேசியக் கொடியை ஏற்றுவதா! அது நமக்கு அவமானம் இல்லையா!' என்ற நோக்கில் அவர்களை வழிமறித்து, தாக்கி, அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். உடனடியாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தபோது அங்கேயிருந்த காவல் துறையினர் புகாரைக் கூட வாங்க மறுத்திருக்கிறார்கள்.

இப்படியாக சித்திரவதையின் வடிவங்கள் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே வருகின்றன. இலங்கையில் 32 விதமான சித்திரவதை வடிவங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், தமிழகத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில், காவல் துறையினர் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடி மற்றும் காட்டில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு எதிராக 56 வகையான சித்திரவதை வடிவங்களில் கொடுமைகளைப் புரிந்தார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

1984-ல் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரில் விஷ வாயு தாக்கி சுமார் 20,000 குடிமக்கள் கொல்லப்பட்டும், இலட்சக்கணக்கானோர் உடல் மற்றும் மனரீதியாக ஊனமாக்கப்பட்ட கொடூரமான நிகழ்வுக்கு பிறகும், 26 ஆண்டுகள் கழிந்து தற்போதுதான் அந்த வழக்கில் தீர்ப்பிடப்படுகிறது. அதிலும் குற்றவாளிகளுக்கு இரண்டு வருடங்கள் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு, அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர்களுக்கு பிணையும் வழங்கப்படுகிறது. இன்றளவும் பாதிப்புக்குள்ளிருந்தும் மீளாத உள்நாட்டு மக்களுக்கு இழப்பீட்டுத் தொகைகளைக் கூட பெற்றுத் தரவில்லை ஆளும் அரசுகள். 

 
தமிழகத்தில் கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு மட்டும், 28 பேர் மோதல் சாவுகள் என்ற பெயரில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் காவல் நிலைய மரணங்களும், காவல்நிலைய சித்திரவதைகளும் மிகுந்து வருகின்றன. இவ்வாறு பல சட்டப்புறம்பான நிகழ்வுகள் நடைபெறுவதாலேயே 1872ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் இயற்றப்பட்ட சாட்சிய சட்டம் காவல்துறையிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்றுக் கொள்ளத்தக்க சாட்சியாக அங்கீகரிக்க மறுத்துள்ளது.

சித்திரவதை செய்தல், மோசமாக நடத்துதல், வேறு வகையில் கொடுமையாக, மனிதத்தன்மை இல்லாமல் இழிவுபடுத்தும் விதத்தில் நடத்துதல் அல்லது தண்டித்தல் போன்றவைகளை உள்ளடக்கி 'சித்திரவதைக்கு எதிரான உடன்படிக்கை' ஒன்றை ஐ.நா.சபை 1984-ல் உருவாக்கியது. இந்த உடன்படிக்கையில் இந்தியா உட்பட உலகில் 119 நாடுகள் கையெழுத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நீதிமன்றங்களில் குடும்ப வன்முறை, காவல்துறை வன்முறை, பெண்களுக்கெதிரான வன்முறை, வகுப்பறை வன்முறை போன்ற சித்திரவதைகள் தொடர்பான வழக்குகளே பெருமளவில் தாக்கல் செய்யப்படுகின்றன. குடும்ப அமைப்பில் தொடரும் சித்திரவதைகளின் காரணமாக நீதிமன்றங்களில் அதிகம் பதிவாகும் வழக்குகளில், விவாகரத்து வழக்குகள்தான் முன்னிலையில் இருந்து வருகிறது. இதற்கு ஒரு படி மேலே போய் இரண்டே வாரத்தில் விவாகரத்து வழக்குகள் முடிக்கப்படும் வகையில் புதிய சட்டத் திருத்தம் பாராளுமன்றத்தால் அமல்படுத்தப்படவுள்ளது.

மனித உரிமை பாதுகாப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் மட்டுமின்றி எந்த சட்டத்திலும் 'சித்திரவதை" என்பது குறித்து தெளிவாக ஏதும் கூறப்படவில்லை. எனினும், இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான உரிமையில், சித்திரவதை இல்லாமல் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமை அனைவருக்கும் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது என உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் சுட்டிக்காட்டியுள்ளது.

சித்திரவதையானது ஒரு மனிதனின் மீதும், அவனது கண்ணியம் மற்றும் வாழ்க்கையின் மீதும் நடத்தப்படும் மிகக் கொடூரமான மீறல் என 1993-ல் வியன்னாவில் நடைபெற்ற ஐ.நா.சபை மனித உரிமை மாநாடு வரையறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சித்திரவதையை ஒரு கொடிய குற்றமாக சர்வதேச சட்டங்கள் கருதுகின்றன.

துன்புறுத்துவதின் மூலம் சில மன திருத்தங்களை கொண்டு வர முடியும் என்ற அடிப்படை ஆதாரமற்ற நம்பிக்கை, சமூகத்தில் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. படிக்கவில்லை என்றால் இடுப்புக்கு கீழே உரிச்சிடுங்க என்று ஆசிரியரிடம் சொல்லி தன் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து விட்டுச் சென்ற நிலை மாறி, அடித்தல், வதைத்தல் என்பதினால் கல்வியையோ சுதந்திரமான சிந்தனையையோ எவருக்கும் புகட்டிவிட முடியாது என்பதை உணர்ந்து, இன்று வகுப்பறை வன்முறை என்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுவதுடன், பல்வேறு ஆசிரியர்கள் சட்டப்படி தண்டனைக்குள்ளாக்கப்படும் நிகழ்வு தொடர்கிறது.

கொத்தடிமை முறை ஒழிப்பு, குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு, குடும்ப வன்முறை தடுப்பு போன்ற பல்வேறு இழிவான நிகழ்வுகளுக்கு எதிராக சட்டம் இயற்றி தீவிரமாக கண்காணிக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சூழலில், சித்திரவதையில்லாத சமூகம் உருவாக்கப்பட இப்புவியில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பங்கு உள்ளது.

காலத்தின் அவசியம் கருதி இந்திய அரசு ஐ.நா.சபையின் சித்திரவதைக்கெதிரான உடன்படிக்கையை உறுதியேற்பு செய்வதுடன், சித்திரவதையை தண்டனைக்குரிய தனி குற்றமாக வரையறுப்பதும் அத்தியாவசியமாகும்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It