கற்காலம், சங்ககாலம், பொற்காலம் என்று எத்தனையோ காலங்களைக் கடந்துவந்து தற்போது நாம் பட்டிமன்றக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிகச் சிறந்த விவாத வடிவங்களில் குறிப்பிடத் தக்கதும் உலக, இந்திய அளவில் வேறு எந்த மொழியிலும் இல்லாததுமான பட்டிமன்றம் என்னும் வடிவம் மிக நீண்ட மரபுடைய, தமிழுக்குத் தனிச் சிறப்புச் சேர்க்கும் ஒன்றாகும்.

pappaiyaதமிழ்நாட்டில் தற்போது பட்டிமன்றங்கள் மிகப் பரவலாக மக்களைச் சென்றடைகின்றன. பட்டிமன்றம் நடத்துவோரும், அவற்றில் பங்கு பெறுவோரும், அதற்கான பார்வையாளர்களும் வேகமாகப் பெருகி வருகிறார்கள். அநேகமாகத் திருமணங்கள், பூப்புநீராட்டு விழாக்கள் போன்ற இன்னும் சில சடங்குகளைத் தவிர்த்து ஏனைய பல விழாக்களில் பட்டிமன்றம் வைப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இதன் விளைவாகப் பட்டிமன்றம் கேட்காத தமிழர்களே தமிழகத்தில் இல்லை என்னும் நிலை உருவாகியிருக்கிறது.

பட்டிமன்றங்கள் மக்களுக்குத் தேவையா? தேவையில்லையா? என்று பட்டிமன்றம் நடத்துவது நமது நோக்கமல்ல. அந்த விவாத வடிவத்தின் மீது எந்தக் குறையும் இல்லை என்பதுதான் உண்மை. இருந்தும் தமிழகத்தில் நிகழும் இன்றைய பட்டிமன்றங்களின் போக்கு ஆரோக்கியமாக இருக்கிறதா என்னும் கேள்விக்கு, இல்லை என்கிற பதிலைத்தான் வேதனையோடு வேகமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகத்தின் வெவ்வேறு வட்டாரத் தமிழைப் பிரபலமாக்கியிருப்பதுதான் தற்காலப் பட்டிமன்றங்களின் சாதனையாக இருக்கிறது.

தமது வட்டாரத்தின் தமிழை அடுத்த வட்டாரத்து மக்களைச் சிரிக்க வைப்பதற்கான ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தவிர வேறு எந்தச் சாதனையையும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள் பட்டிமன்றப் பேச்சாளர்கள். எந்தக் கொள்கையுமற்ற நிலையில் சர்வசாதாரணமாக அணி மாறிக்கொள்வது, முன்கூட்டியே ஒத்திகை பார்ப்பது, எதையாவது சொல்லிப் பார்வையாளர்களைச் சிரிக்க வைத்தே தீரவேண்டிய நிலையில் இருப்பது போன்ற இன்னும் சில அவலங்கள் இன்றைய பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு நேர்ந்திருக்கிறது. பட்டிமன்றம் என்பது ஒரு நகைச்சுவை நாடகம் என்கிற மனோபாவம் மக்களிடையே மிக உறுதியாக வளர்க்கப்பட்டிருக்கிறது. அப்படி வளர்ந்த பெருமை பட்டிமன்றப் பேச்சாளர்களையே சாரும்.

திருக்குறள் வாயில் நுழையவில்லை என்று பிரபலமான பட்டிமன்ற நடுவர் ஒருவர் தொலைக்காட்சிப் பட்டிமன்றம் ஒன்றில் கிண்டலடித்த கொடுமையும் இங்கே நடந்தது. சங்க இலக்கியங்களின் கதாபாத்திரங்களைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி அவற்றை எழுதியவரே எண்ணிப் பார்க்காத வகையில் வாதாடுவது ஒருபுறம், சினிமாப் பாடல்களைப் பிடித்துத் தொங்கியபடி அவற்றை மையமாக வைத்து வாதாடுவது இன்னொருபுறம் என்று பட்டிமன்றங்கள் களைகட்டிக் ‘கல்லா’ கட்டுகின்றன.

“நான் பட்டிமன்றங்களில் பங்கேற்று பத்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இனிமேலும் பட்டிமன்றங்களில் பங்கேற்ப தில்லை என்று அதுகுறித்த எச்சரிக்கை உணர்வோடு தெளிவாக இருக்கிறேன். பட்டிமன்றத் தலைப்புகளில் ‘ஆணா - பெண்ணா’ என்று என்றைக்குத் தொடங்கினார்களோ அன்றைக்கே அது சீரழிந்துவிட்டது. வழக்கறிஞர் தொழிலைப் போல எந்த அணியிலும் வாதப் பயிற்சி பெற்றவராக இருக்கும் பட்டிமன்றப் பேச்சாளர்கள் மீது மக்களுக்கு மரியாதை ஏற்படாது. பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு படிப்பும் உழைப்புமே அடிப்படையாக இருக்க வேண்டும். அது இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை. பட்டிமன்றம் என்னும் மக்களுக்கான மாபெரும் அறிவாயுதம் குன்றக்குடி அடிகளாரின் காலத்துக்குப் பிறகு மக்களுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றே நான் கருதுகிறேன்” என்று தெளிவாகச் சொல்கிறார் சொற்பொழிவாளரும் வழக்கறிஞருமான அருள்மொழி.

‘கற்பில் சிறந்தவள் கண்ணகியா, மாதவியா, கோப்பெருந் தேவியா?’ என்ற தலைப்பில் கோவையில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில், கோப்பெருந்தேவி தான் கற்பில் சிறந்தவள், ஏனெனில் அவள் பெயரில் மட்டும் ஏழு எழுத்து என்று ஒரு பேச்சாளர் வாதாடிய சோகமும், அதற்கும் மக்கள் கைதட்டித் தொலைத் தார்கள் என்கிற சோகமும் பட்டிமன்ற வரலாற்றில் பதிந்திருக் கின்றன. கற்பில் சிறந்தவள்... என்று தொடங்கும் பட்டிமன்றங் களைத் தடை செய்ய வேண்டிய அளவுக்குப் பட்டிமன்றங்களில் கற்பு பற்றி விவாதிக்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட தலைப்பு பட்டிமன்ற உலகில் தவிர்க்க முடியாத ஒரு நோயைப் போலக் காணப்படுகிறது.

“வெகுஜன ரசனைக்குத் தீனி போடுகிற சாக்கில் பட்டிமன்றங்கள் தரம் தாழ்ந்துவிட்டன. தொலைக்காட்சிகள் பரப்பி வரும் நோய்களில் இது முக்கியமானது. எனவே பட்டிமன்றம் என்றாலே நான் வேறு அலைவரிசைக்குப் போய்விடுவேன். அபத்தமான நகைச்சுவைகளுக்கு என்னால் சிரிக்க முடியாது” என்கிறார் இணைய இதழ் ஒன்றில் பணியாற்றும் பத்திரிகையாளர் உஷா மதிவாணன்.

பட்டிமன்றங்கள் பொதுமக்களின் நல்லாதரவைப் பெற்று வளர்வது போன்ற ஒரு தோற்றம் காட்டினாலும் உண்மை நிலவரம் வேறாக இருக்கிறது. பெரும்பகுதியினர் விவாதங்களைச் சகிக்க முடியாமல் நெளிந்து கொண்டிருப்பது கண்கூடான ஒன்று.

“இன்றைய நிலையில் பட்டிமன்றத்தைக் கோமாளிகளும், வியாபாரிகளும் கையிலெடுத்திருக்கிறார்கள். குன்றக்குடி அடிகளார் வாழ்ந்த காலம் பட்டிமன்ற உலகின் பொற்காலமாக இருந்தது” என்கிறார் எழுத்தாளரும் கவிஞருமான இளவேனில்.

நகைச்சுவையே நோக்கமென்று பட்டிமன்றங்கள் பாதை மாறியது தொலைக்காட்சிகளின் வருகைக்குப் பிறகுதான் என்றாலும், எந்தத் தொலைக்காட்சியும் பட்டிமன்றம் என்ற பெயரில் நகைச்சுவைக் கூத்தடிக்க யாரையும் வற்புறுத்தியதில்லை. ஆனால் நகைச்சுவையாகப் பேசினால்தான் நாம் தொழிலில் நிலைத்திருக்க முடியும் என்கிற கவலை, பட்டிமன்றப் பேச்சாளர்களில் பலருக்கு இருக்கிறது.

“திருச்சியில் நடந்த பட்டிமன்றம் ஒன்றில் ஒரு பேச்சாளர், “கண்ணகி மசால் தோசை போன்றவள்” என்று சொல்ல உடனே எதிர்அணியைச் சார்ந்த ஒருவர் எழுந்து, “அப்படியானால் எங்கள் மாதவி நெய் ரோஸ்ட் போன்றவள்” என்று சொன்னார். பட்டிமன்ற அரங்கைவிட்டு அன்றைக்கு வெளியேறிய நான் அதற்குப் பிறகு எந்தப் பட்டிமன்ற அரங்கிலும் நுழையவில்லை. அறிவுக்கும், சிந்தனைக்கும் விரோதமாக அரங்கேறும் இன்றைய பட்டிமன்றங்கள் முழுக்க முழுக்க மேம்போக்கானவை. நான் எனது அரங்கில் பட்டிமன்றத்தை அனுமதிப்பதில்லை” என்று தீர்க்கமாகச் சொல்கிறார் திருச்சி திருவரங்கத்தில் இயங்கிவரும் செண்பகத் தமிழ் அரங்கு நிறுவுநர் க. இராசவேலு செண்பகவல்லி. மறைந்த தனது துணைவியார் செண்பகவல்லியின் நினைவாகச் ‘செண்பகத் தமிழ்அரங்கு’ என்னும் பெயரில் ஓர் அரங்கம் நிறுவி, இலக்கிய நிகழ்ச்சிகளைப் பிற அமைப்புகள் இலவசமாக நடத்திக்கொள்ளக் களம் தந்திருக்கிறார் இவர்.

சங்க இலக்கியக் கதாபாத்திரங்கள், திரைப்படங்கள்,  ‘ஆணா - பெண்ணா’ அல்லது ‘தாயா - தாரமா’ என்கிற இந்த நான்கு தலைப்புகளுக்கு அப்பால் இன்னும் பட்டிமன்ற விவாதங்கள் விரிவடையவில்லை. பட்டிமன்றங்களும் பட்டிமன்றப் பேச்சாளர்களும் பெருகிய அளவுக்குப் பட்டிமன்றத் தலைப்புகள் பெருகவில்லை. வாழ்க்கையின் புதிய சிக்கல்களைத் தலைப்பு களாக்கி அதைப்பற்றி வாதிடும் அக்கறையும், ஆர்வமும் கொண்டவர்களாகப் பட்டிமன்ற அமைப்பாளர்களைப் பார்க்க முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நல்ல தலைப்புகள் (வாத விவாதங்கள் மோசமாகத்தான் இருக்கும்) தென்பட்டாலும் அது போதுமானதாக இல்லை என்பதே உண்மையாகும்.

“வெளிநாட்டு விமான நிலையம் ஒன்றில் எதிர்பாராதவிதமாகப் பிரபலமான பட்டிமன்றப் பேச்சாளர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்னை வணங்கி, ஐயா உங்கள் காலத்தில் நீங்கள் பாடிய பாடல்களைப் பற்றிப் பேசிப் பேசித்தான் இன்றைக்கு நான் நாலு காசு சம்பாதிக்கிறேன் என்று சொன்னார். நானும் அவரை, மேற்கொண்டும் பேசிப் பேசிக் காசு சம்பாதிக்குமாறு வாழ்த்திவிட்டு வந்தேன்” என்று சிரித்துக்கொண்டே ஒரு நேர்காணலில் நம்மிடம் சொன்னார் பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராசன்.

இன்றைய பட்டிமன்றங்களைப் பற்றிய உண்மை நிலவரம் இதுதான். ‘பட்டிமன்றங்களின் போக்கு மாறவேண்டுமா? வேண்டாமா?’ என்கிற தலைப்பில் ஒரு பட்டிமன்றம் நடத்தி, பத்தாண்டுக் காலத்துக்குப் பட்டிமன்றங்களே நடத்த வேண்டாம் என்று தீர்ப்பு பெறுவது இன்றைய தமிழ்நாட்டின் தேவையாக இருக்கிறது.

- ஜெயபாஸ்கரன்

Pin It