அகில இந்திய ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி அவர்களது கைதைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கை:

அகில இந்திய ஹுரியத் மாநாடு கட்சியின் தலைவர் சையத் அலி ஷா கிலானி அவர்கள் நேற்று மத்திய காவல்துறையினரால் ஜம்முவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரங்களை இது வரை காவல்துறை வெளியிடவில்லை. 80 வயதை கடந்த மூத்த தலைவரான அவரின் இருப்பிடம் அறியாமல் காஷ்மீர மக்கள் பெரிதும் கவலை கொண்டுள்ளனர்.

கடந்த பல ஆண்டு காலமாக காஷ்மீர மக்களின் தன்னுரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் சையத் அலி ஷா கிலானி, ஒரு மிகச் சிறந்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஆவார். கடந்த ஏப்ரல் 15 அன்று தில்லி தமிடிந மாணவர்கள் ஒன்றியம் நடத்திய 'பேசப்படாத இனப்படுகொலை: இலங்கையின் போர்க் குற்றங்கள்' என்ற தலைப்பிலான மாநாட்டில் அவருடன் கலந்து கொண்டேன். அந்த மாநாட்டில் அவர் ஈழ மக்களுக்கு தனது உறுதியான ஆதரவினையும், இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு தனது வலிமையான கண்டனத்தையும் பதிவு செய்ததை நினைவு கூர்கிறோம்.

இப்படி மூத்தத் தலைவர் ஒருவரை கைது செய்வதும் அவரது இருப்பிடத்தை அறிய தராமல் இருப்பதும் இலங்கையை முன் மாதிரியாகக் கொண்டு செயல்படும் நடவடிக்கையாகவே இருக்கிறது. இந்தியாவும் இலங்கையின் வழியில் தனது போர்க்குற்ற நடவடிக்கைகளை தொடர்வதாகவே தோன்றுகிறது.

தன்னலமற்று தனது மக்களின் விடுதலைக்காகப் போராடி வரும் அம்மூத்த தலைவரைச் சட்டத்திற்குப் புறம்பாக தடுத்து வைத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறோம்.

01.05.2010

கொளத்தூர் மணி

Pin It