இந்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டுவர இருக்கும் வேளாண் விரோத கருப்புச் சட்டங்களைக் கண்டித்து தஞ்சையில் பல்வேறு உழவர் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாடு நேற்று(18.04.2010) நடைபெற்றது. இதில் பல்வேறு உழவர் அமைப்புத் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

விதைச் சட்டம், உயிரித்தொழில் நுட்ப ஆணையச் சட்டம், வெளிநாட்டு நிறுவனங்கள் வேளாண் பண்ணைகள் அமைக்க அனுமதிக்கும் சட்டம் ஆகியவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்டுள்ளன. மான்சான்டோ, சின்ஜென்டா, டுஃபான்ட் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், கருத்துரிமையைப் பறிக்கும் வகையிலும் இச்சட்டங்கள் அமைந்துள்ளன. மேலும், கிராமப்புறங்களில் வெளிநாட்டுக் கம்பெனிகளின் பண்ணைகள் அமைப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.

உழவர்களின் வேளாண் தொழிலையும், தமிழர்களின் தாயகத்தையும் பறிக்கிற சூதான இந்தச் சட்டங்களை எதிர்த்து உழவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் 25.03.2010 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் இம்மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது. அதன்படி, தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் இம்மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு கோ.நம்மாழ்வார் தலைமை தாங்கினார். “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த அறிவாளர்களும், உழவர்களும் திரள வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

மனித நேய மக்கள் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு ஜெ.கலந்தர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞசை மாவட்டச் செயலாளர் திரு பழ.இராசேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாண்மை உழவர் இயக்கத்தி்ன் செயலாளர் திரு பாமயன் வரவேற்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தம் கண்டன உரையை நிகழ்த்தினர்.

கிரீன் பீஸ் அமைப்பின் வெளியீடான் ஆங்கில நூல், தமிழில் “மரபீனீ சூதாட்டம்” என்ற பெயரில் மொழிப் பெயர்க்கப்பட்டு மாநாட்டு அரங்கில் வெளியிடப்பட்டது. இயற்கை வேளாண் தொடர்பான நூல்களும், இந்திய அரசின் கருப்புச் சட்டங்களை விளக்கும் நூல்களும் பெருமளவில் விற்பனையாயின. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.பெ.மணியரசன் தம் கண்டன உரையின் போது, “இந்த சட்டங்கள் அமெரிக்க காலனியாக இந்தியத் துணைக் கண்டத்தை மாற்றுகிற முயற்சி” என்றும் “பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவின் இந்திய வைசிராயாக செயல்படுகிறார்” என்றும் பேசினார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் முனைவர் வீ.சுரேஷ், “கம்பெனிகளுக்கு எதிராக பேசுவதையே தடுக்கும் வாய்ப்புட்டுச் சட்டங்களாக விதைச்சட்டமும் உயிரித் தொழில்நுட்பச் சட்டமும் இருப்பதால் இதனை கருப்புச் சட்டம் எனக் கண்டிக்கிறோம்“ என்றார். தொடர்ந்து, இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் திரு.சி.மகேந்திரன், மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு மு.தமிமுன் அன்சாரி, தாளாண்மை உழவர் இயக்க மையக்குழு உறுப்பினர் திரு ச.ரா.சுந்தரராமன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு க.சம்பந்தம், தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு சோம.இராஜமாணிக்கம், பெட்காட் தலைவர் திரு. ஜெயராமன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு அரங்க. குணசேகரன், கா.சா. கள அலுவலர் திரு கல்யாணராமன், கேரளாவின் தணல் அமைப்பைச் சேர்ந்த உஷா மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநாட்டுப் பேச்சாளர்கள் இந்திய அரசின் கருப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நிறைவில், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன், இந்திய அரசின் கருப்புச் சட்டங்களை விளக்கிப் பேசினார். “பொதுவுடைமை இயக்கங்களும் திராவிட இயக்கமும் அடித்தட்டு மக்களின் மேன்மைக்கு பங்களிப்பை செய்திருக்கின்றனர் என்ற போதிலும் “வேளாண்மை இழிவானது - தமிழரின் மரபு அறிவுத் தொழில்நுட்பம் கீழானது - கிராமம் என்பது பிற்போக்கின் மையம்” என்று கருத்துகள் பரவச் செய்தார்கள். இன்னொரு பக்கம் வேளாண்மை நெருக்கடிளில் இருக்கின்றது. இவை இரண்டின் விளைவாக நிலத்தை இழப்பதற்கு உழவர்களே முன்வரும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தம் பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அரசின் இந்தக் கருப்புச் சட்டங்கள் வரைவு நிலையிலேயே திரும்பப் பெறப்பட வேண்டும், உழவர்களுக்கு நேரடி வருவாய் வழங்கக்கூடிய வருவாய் ஆணையம் நியமிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் உயிரிப் பட்டய வாரியம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. தமிழக உழவர் முன்னணியின் பொதுச் செயலாளர் திரு தெ.காசிநாதன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார். திரு கோ.திருநாவுக்கரசு, திரு கு.பழனிவேல் ஆகியோர் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்திருந்தனர்.

-கோ.சரவணன்

Pin It