கல்விப் புலங்களில் தமிழியல் ஆய்வுகள் என்று அறியப்பட்ட ஆய்வுப் புலம் கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஆற்றியிருக்கும் பங்கு குறிப்பிடத்தகுந்தது. பழந்தமிழ் இலக்கியப் பிரதிகளின் ஆய்வுகளில் தொடங்கி, தமிழ் நிலப்பரப்பின் வரலாற்று ஆய்வுகளாக விரிந்து பிற நாட்டு ஆய்வாளர்களின் கவனத்தைத் தமிழ் சமூகத்தின் பால் ஈர்த்த சாதனை தமிழியல் ஆய்வுப் புலத்திற்கு உரியது.

எனினும், கடந்த சில தசாப்தங்களில் தமிழ் சமூகத்தின் பல புலங்களிலும் பரவியிருக்கும் தேக்கம் தமிழியல் ஆய்வுகளையும் பீடித்திருப்பது நிதர்சனம். பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகளில் துவங்கி, வரலாற்றுப் புலத்திற்கு விரிந்த தமிழியல் ஆய்வுகள், சமூகவியல், அரசியல், பொருளியல், மானுடவியல் எனப் பிற துறைகளுக்கு விரிந்து படர்ந்திருக்க வேண்டும். மாறாக, மீண்டும், பழந்தமிழ் இலக்கிய ஆய்வுகளுக்குள்ளாக முடங்கிவிட்டிருப்பது அவலம்.

கல்விப் புல ஆய்வுகள் - குறிப்பாகத் தமிழியல் ஆய்வுகள் - ஆய்வாளர்களின் சிறிய வட்டத்திற்கு வெளியே பரவலாக்கம் பெறுவது நிகழாமல் போனதும், ஆங்கிலத்தில் தமிழ்ச் சமூகம் குறித்து செய்யப்பட்ட ஆய்வுகளுக்கும் தமிழில் செய்யப்படும் ஆய்வுகளுக்கும் இடையே நிலவும் பெருத்த இடைவெளியும் இதற்கான முக்கிய காரணங்கள் என்று கருதலாம்.

இத்தேக்கத்தில் இருந்து விடுபடுதலும், தமிழியல் ஆய்வுப் புலம் கல்விப் பரப்பிலும் சமூகப் பரப்பிலும் விரிவாக்கம் பெறுதலும் தமிழ்ச் சமூக நலனுக்குப் பயன் பயப்பதாக இருக்கும்.

இந்நோக்கில் கவனம் கொண்டு, கல்விப் புலம் சார்ந்து ஆய்வுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட நண்பர்களும், கல்விப் புலத்திற்கு அப்பாற்பட்டு இயங்கும் நண்பர்களும் இணைந்து "புதிய தமிழ் ஆய்வுகள்" எனும் முயற்சியைத் துவங்கியுள்ளோம்.

எமது ஆரம்பகட்ட எளிய முயற்சியாக, தமிழ் ஆய்வுப் பரப்பிலும், சமூக - அரசியல் பரப்பிலும் தீவிரமாக இயங்கிவரும் ஆய்வாளர்கள், கருத்தாளர்களைக் கொண்டு மாதம் ஒரு ஆய்வுரையை அரங்க நிகழ்வாக ஒருங்கிணைக்க உள்ளோம். இவ்வுரைகள் எமது வலைத்தளத்திலும் வெளியிடப்படும்.

எமது ஆற்றலுக்குட்பட்டு பிற வழிகளிலும் எமது பணிகள் விரிவடையலாம்.

எமது முதல் அரங்க நிகழ்வு வரும் சனிக்கிழமை 25.07.2015 அன்று மாலை 5.30 மணியளவில் பனுவல் அரங்கில் நடைபெற உள்ளது.

"புதிய தமிழ் ஆய்வுகள்" - அறிமுகம்: வளர்மதி

ஆய்வுரை: திரு. விடுதலை இராசேந்திரன்

பொருள்: தமிழ் சமூகத்தில் நவீன வகைப்பட்ட வெகுமக்கள் அரசியல் இயக்கத்தின் உருவாக்கத்தில் தந்தை பெரியாரின் பங்களிப்பு

Pin It