Viduthalai Sudar

1948 மாசி 4 தமிழீழத் தமிழர்களின் வரலாற்றில் மறக்கமுடியாத கரிநாளாகும். ஆங்கிலேயர்களின் ஆதிக்க பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத்தீவு தமிழர்களின் மீது இனவழிப்பை கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத்தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாள்.

1948 முதல் ஆட்சிப்பீடம் ஏறிய சிங்கள பௌத்த அரசுகளினால் பல இலட்சக்கணக்கான தமிழர்கள் உரிமைகளையும், உடமைகளையும் இழந்து தமது சொந்த நிலத்திலயே அகதிகளாக வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். தற்போது இலங்கைத்தீவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருப்பினும் புதிதாக ஆட்சியில் இருப்பவர்கள் தமிழர்களுக்கு எவ்விதமான தீர்வையோ, நீதியையோ என்றுமே பெற்றுத் தரப்போவதில்லை. மாறாக அவர்களும் கடந்த அரசுகளைப்போல் மகாவம்சத்தையே பின்பற்றுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

தமிழர்களின் சுதந்திரத்தையும், உரிமைகளையும் பறித்துவிட்டு சிங்கள தேசம் தனது 67வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு உள்நாட்டிலும், புலம்பெயர்தேசங்களிலும் தயாராகிக்கொண்டிருக்கின்றது. இவ்வேளையில் தமிழீழத் தமிழர்களாகிய நாங்கள் சிங்கள தேசத்தின் சுதந்திரதினத்தை புறக்கணித்து தமிழின அழிப்பிற்கு நீதியை பெற்று கொடுப்பது எமது கடமையாகவும் காலத்தின் கட்டாயமாகவும் திகழ்கின்றது.

இவ் கரிநாளில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவா நோக்கிய மக்கள் போரரட்டம் 'விடுதலைச் சுடர்' ஆரம்பிக்கப்படவுள்ளது 04 மாசி 2015 அன்று மாலை 04:00 மணிக்கு பிரித்தானியாவில் Downing Street முன்பாக ஆரம்பிக்கும் விடுதலைச் சுடர் பயணம் ஈழத்தமிழர்களின் தாயகம், தேசியம், சுயநிர்ணயயுரிமையை பிரதிபலித்து பிரான்ஸ், பெல்யியம், நெதர்லாந்து, யேர்மனி போன்ற நாடுகளினூடாக பல நாட்கள் பயணித்து 16.03.2015 அன்று ஜெனிவா ஐ,நா முன்றலை சென்றடையவுள்ளது.

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி நடைபெறும் இவ் விடுதலைச் சுடர் பயணத்தில் தமிழர்களாகிய நாம் 16.03.2015 ஜெனிவா ஐ,நா முன்றல் மாபெரும் மக்கள் அலையாக தோற்றம் அளித்தால் மட்டுமே எமது உரிமையை வென்றெடுக்க முடியும். ஆகையால் அனைத்து தமிழ் உறவுகளையும் 16.03.2015 அன்று ஜெனிவா ஐ,நா முன்றலில் அணிதிரளுமாறு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு உரிமையுடன் அழைக்கின்றது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

- தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

Pin It