மனிதனின் பரிணாம வளர்ச்சியில் மொழியின் உருவாக்கம் பெரும் முதன்மைத்துவம் வாய்ந்தது. மரபனுக்களில் (டி.என்.ஏ) மட்டுமே சேமித்து வைக்கப்பட்டிருந்த வாழ்வதற்கான அறிவு, மொழியின் மூலமும் எழுத்தின் மூலமும் புதியதொரு வடிவம் பெற்றது. மனித சமூகத்தின் வளர்ச்சியில் எழுத்தின் பங்கும், மொழியின் பங்கும் மகத்தானது. கால மாற்றத்தில் 'எழுதுகோலின் முனை வாள்முனையை விட கூர்மையானது' என்ற நிலை ஏற்பட்டது. மனித சமூகத்தின் அறிவு வளர்ச்சியைப் பெரும் பாய்ச்சல்களில்  கொண்டு சென்றன இலக்கிய மற்றும் விஞ்ஞான நூற்கள். ஆனால் காலப்போக்கில் பல்வேறு மொழிகள் தோன்றியும் அழிந்தும் போயின. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்  வழுவள கால வகையின நானே' என்ற நன்னூல் கூற்றுக்கேற்ப,   எவ்வளவு பழமை மிக்க செறிவு கொண்ட மொழியாயினும், காலத்துக்கேற்றவாறு தம்மை தகவமைத்துக் கொள்ளாமல் இருப்பவை அழிந்து போயின, போகின்றன. மொழியுடன் சேர்ந்து அதனூடாக வளர்க்கப்பட்ட மரபார்ந்த அறிவும், கலாச்சாரமும், வரலாறும் அழிந்து போகின்றன.
 
'எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு'.

என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க பல்வேறு மாற்றங்களை செரித்து ஆயிரமாண்டுகளாக மக்களின் மொழியாக மக்களுடன் பீடு நடை போட்டு வரும் தமிழ் மொழி, கணினி எனும் உலகை ஆளும் அசுர இயந்திரத்திற்குள்ளும் தன்னைப் பொருத்தி கொள்வதன் மூலமே இனி வரும் தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்க முடியும்.

'மறைவாக பழங்கதைகள் நமக்குள்ளே சொல்வதிலோர் மகிமையில்லை
திறமான புலமை எனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்' என்று பாரதி கூறியது போல,

தமிழ் மொழியின் வளத்தையும், செழுமையையும் இணையத்தில் ஏற்றி அதன் வளர்ச்சிக்கு அளப்பரியப் பங்கை ஆற்றியிருக்கிறார் திரு. ஆண்டோ பீட்டர். இதற்கு மகுடஞ் சேர்த்தாற் போல அவர் மொழியின் வளர்ச்சிக்கு பாடுபட்டதோடு சேர்த்து தமிழ் மக்கள் மீதும் பற்று கொண்டவராக இருந்தார்.  தகவல் தொழில்நுட்பத் துறையைச் சார்ந்தவர்கள் என்ற முறையில் இத்தகையதோர் ஆளுமை ஆற்றிய பணிகளுக்காக  இந்த நினைவுக் கூட்டத்தின் மூலமாக நன்றி செலுத்துகிறோம்.அவரது பணிகளை நினைவுகூறவும்  போற்றவும் விவாதிக்கவும் விழைகிறோம். இந்நிகழ்வில் கலந்து கொண்டு திரு. ஆண்டோ பீட்டர் அவர்களது நினைவுகளையும் பணிகளையும் பகிர்ந்து கொள்ள தங்களை அழைக்கிறோம்.

நினைவுக் கூட்டம்

02 செப்டம்பர், ஞாயிற்றுக் கிழமை | மாலை 5 மணி | லாரன்சு சுந்தரம் அரங்கு, இலயோலா கல்லூரி, நுங்கம்பாக்கம்.

Save Tamils Movement | 98844 68039 | www.save-tamils.org

Pin It