நாள் :01.09.2012, சனிக்கிழமை, மாலை 5 மணி.
இடம் : பி.எட். அரங்கு, இலயோலா கல்லூரி, சென்னை

உரை:

தோழர் விடுதலை ராஜேந்திரன், திராவிடர் விடுதலைக் கழகம்

தோழர் தடா ரஹீம், இந்திய முஸ்லிம் லீக்

தோழர் உமர் கயான், இனப்படுகொலைக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கம்

தோழர் ப.பா.மோகன், வழக்கறிஞர்

தோழர் செய்யது

தோழர் பரிமளா, சேவ் தமிழ்ஸ் இயக்கம்

ஒரு குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 166 பேர் கைது செய்யப்பட்டார்கள். விசாரணை கைதிகளாகவே இவர்கள் எல்லோரும் 9 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்கள். இந்த வழக்கில் கைதான எல்லோருக்கும் பிணை மறுக்கப்பட்டது. இதில் உச்ச நீதி மன்றமும் உயர் நீதி மன்றமும் ஒரே விதமாகவே நடந்து கொண்டன. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் கழித்த ஆயுள் தண்டனை கைதிகளுக்கு ஆண்டிற்கு ஒரு மாதம் பரோலில் சென்று குடும்பத்தோடு இருக்க சட்டம் அனுமதிக்கின்றது.ஆனால் இந்த வழக்கில் கைதானவர்களுக்கு இது கூட மறுக்கப்பட்டது. சிகிச்சை பெற வேண்டிய தண்டனை சிறைவாசிகளோ விசாரணை சிறைவாசிகளோ சிறையில் உள்ள நிலையில் பிணை பெற்றுச் செல்ல உரிமை இருக்கின்றது. ஆனால் அந்த உரிமை இவர்களுக்கு மட்டும் பறிக்கப்பட்டது. 4 ஆண்டுகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் 60 வயது பெரியவர் தஸ்தகீர் பிணை கிடைக்காமல் சிறையிலேயே இறந்துபோனார்.

இரண்டு சிறு நீரகமும் பாதிக்கப்பட்ட அபு தாகீர், மன சிதைவுக்குள்ளான ஹைதர்அலி என்று பிணை மறுக்கப்பட்டவர்கள் பட்டியல் பெரிது. அடுத்ததெருவில் இறந்து கிடக்கும் உறவைக் கூட பார்க்க அனுமதி கிடைக்காமல் சிறையில் தவித்தவர்கள் பலர். பல ஆண்டுகள் பிணை மறுக்கப்பட்டவர்களாய், விசாரணை கைதிகளாய் சிறையில் இருக்கும் இவர்களுக்கும் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் என்று உறவுகள் உண்டு; அவர்களும் சேர்ந்துதான் வஞ்சிக்கப்பட்டு வருகின்றார்கள்; இவை எங்கோ குஜராத்திலோ பம்பாயிலோ நடக்க வில்லை.மக்களுக்கு இடையே ஜனநாயக உணர்வை மேம்படுத்த இறுதி வரை பாடுபட்ட பெரியார் மண்ணில் தான் நடந்து கொண்டிருக்கின்றது. ஆம் தமிழ்நாட்டில் தான். 1998 இல் நடந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கு தான் அது. பாதிக்கப்பட்ட சிறைவாசிகள் இஸ்லாமியர்கள்!

இன்றளவில் அரசியல் காரணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்காக தமிழக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளின் எண்ணிக்கை இஸ்லாமியர் அல்லாத ஏனைய அரசியல் கைதிகளின் எண்ணிக்கையை விட அதிகம். பொய்யாகப் போடப்பட்ட பல்வேறு வழக்குகளில் சிறைபடுத்தப்பட்டு பிணை மறுக்கப்பட்ட நிலையில் விசாரணை கைதிகளாகவே நீண்ட காலம் சிறையில் வைக்கப்பட்டு பிறகு நிரபராதிகள் என்று விடுதலை ஆனவர்கள் 71 பேர். இதில் ‘நீண்ட காலம்’ என்பது நான்கு ஐந்து மாதங்கள் அல்ல; நான்கிலிருந்து ஒன்பது ஆண்டுகள்!. கோவை குண்டு வெடிப்பு வழக்கின் தீர்ப்பில் நீதிபதியின் குறிப்பு பின்வருமாறு.

”குற்றம் சாட்டப்பட்ட 166 பேர்களுக்கும் தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆக்கப்பூர்வமாக எதிர்கொண்டு எதிர்வாதம்புரிய வாய்ப்பளிக்க ஏதுவாக அந்நீதிமன்ற விசாரணையின் போது பிணை வழங்கப்படவில்லை. இது அவர்களை தம் தரப்பு வாதங்களுக்கு போதுமான ஆதாரங்களைத் திரட்டி சட்ட வலு உள்ளவர்களாக ஆக்கிக் கொள்வதைத் தடுத்து விட்டது”

நீதித் துறையிலிருந்தே எழும் இந்த மெல்லிய குரல் சட்டத்தின் பெயராலேயே இழைக்கப்பட்ட அநீதிக்கு சான்று. கோவை குண்டு வெடிப்புக்கு அடிப்படை காரணமாய் இருந்தது, கோவையில் 1997 ஆம் ஆண்டு19 இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டதும் இஸ்லாமியர்களின் பல கோடி சொத்துக்கள் சூறையாடப்பட்டதும் தான்.ஆனால் இதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கூட விசாரணை சிறைவாசியாக இருந்து விசாரணையைச் சந்திக்கவில்லை. அது மட்டுமல்ல ஒருவர் கூட தண்டிக்கப் படாமல் விடுதலையும் செய்யப்பட்டனர். இது தான் ’சட்டத்தின் முன் அனைவரும் சமம்’என்றும் 'மதச்சார்பற்ற நாடென்றும்' சொல்லிக் கொண்டிருக்கும் இந்திய நாட்டில் மதச் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் நீதி.

பாரபட்சம் இத்தோடுநிற்கவில்லை; ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 இல் 8 ஆண்டுகளைச் சிறையில் கழித்த நீண்ட நாள் சிறை வாசிகள் தமிழக அரசால் முன் விடுதலை செய்யப்படுகின்றனர். ஆனால் அந்த பட்டியலிலும் இஸ்லாமியப் பெயர்கள் இடம் பிடிப்பது மிக மிக கடினம். மதுரை லீலாவதி கொலை வழக்கிலும் த.கிருட்டிணன் கொலை வழக்கிலும் தண்டனைப் பெற்றவர்கள் முன் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களின் முன் விடுதலை கோரிக்கை ‘இவர் மதக் கலவரத்தில் ஈடுபட்டு தண்டனை பெற்றவர் என்பதால் முன் விடுதலைக்கு பரிந்துரை செய்யப்படவில்லை’ என்று நிராகரிக்கப்படுகின்றது. இப்படியாக 8 , 9 , 13 என்று ஆண்டுக் கணக்கில் சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் அண்ணா பிறந்த நாளில் முன் விடுதலை என்ற உரிமை மறுக்கப்படுகின்றது.

இதில் காவல் துறை,நீதித் துறை உள்ளிட்ட அத்தனை அரச இயந்திரங்களும் இந்திய அரசின் இந்துத்துவ முகத்தை வெளிக்காட்டியுள்ளன. இந்துத்துவ முகத்தின் சிறுபான்மையினருக்கு எதிரான கோரத் தாண்டவங்களில் ஒன்று தான் இஸ்லாமியர்களின் இந்த நீண்ட நாள் சிறை வாசம். ஈழம் , சிங்களம் என்று அண்டை தேசங்களின் இறையாண்மையை மிதிக்கும் இந்தியாவின் விரிவாதிக்க முகத்திற்கும், இடிந்தகரை மக்களை ஏகாதிபத்தியத்திற்கு இரையாக்கும் இந்தியாவின் பெருமுதலாளிய முகத்திற்கும், சாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனிய முகத்திற்கும் சற்றும் சளைத்தல்ல இந்த இந்துத்துவ முகம். இந்த முகம் ‘பிருத்வி’, ‘அக்னி’ ஏவுகணைகளின் பெயர்கள் தொடங்கி எல்லாவற்றிலும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. எங்கு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தாலும் அரசு/காவல்துறையின் சார்பில் தரப்படும் ஏதோ ஒரு இஸ்லாமிய அமைப்பின் பெயரையோ, இஸ்லாமியரின் பெயரையோ எந்த வித சுயதணிக்கையும் இன்றி குறிப்பிட்டு, ’பயங்கரவாதசெயல்’ என்றாலே இஸ்லாமியர்கள்தான் காரணம் என்று பொதுக்கருத்தை உருவாக்கி இந்திய ஊடகங்கள் இந்துத்துவ முகத்திற்கு சேவை செய்கின்றன.

’இஸ்லாமியர் எதிர்ப்பு’ என்பது உலகெங்கும் நிகழும் பொது நிகழ்ச்சிப் போக்காக இருக்கின்றது. அண்மையில் அமெரிக்காவில் சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்துவாராவில் இருந்த சீக்கியர்களை அமெரிக்கர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுகொன்றார். இந்த தாக்குதலுக்கு காரணம்,கொலையாளிக்கு தாடி வைத்த சீக்கியர்கள் எல்லாம் இஸ்லாமியர்கள் என்ற தவறான கருத்து இருந்ததாக கூறப்பட்டது. அமெரிக்க விமான நிலையங்களில் இஸ்லாமியப் பெயரைக்கொண்டவர்கள், தாடியோடு தொப்பி அணிந்த ஆண்கள், பர்தா அணிந்த பெண்கள் எல்லோரும் அதி தீவிரசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். ’பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்ற கருத்தியலை உருவாக்கி இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலின் ஊடாக ஏகாதிபத்திய நாடுகள் தன் நலனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கின்றன. ’இஸ்லாமிய எதிர்ப்பு’ என்ற புள்ளியில் ஏகாதிபத்திய மேற்குலகமும் இந்துத்துவ இந்தியாவும் ஒன்றுபடுகின்றன என்பது உற்று கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.

அனைத்துலக பொதுநிகழ்ச்சிப் போக்கு, இந்திய அரசின் இந்துத்துவ முகம் என்ற பகுப்பாய்வுகளுக்கு பின்னால் மறைக்க முடியாத உண்மை ஒன்று இருக்கின்றது. அது ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்து பெரும்பான்மைவாதம். இதில் தான் இந்திய அரசின் இந்துத்துவத்திற்கான அடித்தளம் இருக்கின்றது.இந்து மதப் பண்பாடு நீக்கமற நிரம்பி இருக்கும் நாட்டில் இஸ்லாமியர்களின் மதப் பழக்கவழக்கங்கள் தனித்துதான் தெரியும். ஆனால், இதை புரிந்து கொள்ளாது, இஸ்லாமியர்களை ஏதோ வெளியிலிருந்து வந்தவர்களாகப் பார்க்கும் சமூகத்தின் உணர்வு மட்டம் பெரும் சிக்கலாக இருக்கின்றது. இதை இந்துத்துவ சக்திகள் தங்கள் நலனுக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். அரசியல் அரங்கில் ‘இந்துத்துவத்திற்கு எதிரான' கருத்தியல் கருக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டிலும் கூட இந்துப்பெரும்பான்மைவாதம் இல்லாமல் இல்லை. எனவே, இதற்கெதிரான ஒரு போராட்டத்தை நடத்துவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட எல்லோருக்கும் இருக்கும் பொதுக் கடமையாகும்.

இந்த ஆண்டு வரவிருக்கும் அண்ணா பிறந்த நாளிலாவது நீண்ட நாள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய அரசியல் கைதிகளுக்கு விடியல் பிறக்குமா? என்பது இஸ்லாமிய சமூகத்தின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இதை ஒட்டியே கடந்த மார்ச்சிலிருந்து ’இஸ்லாமியர்கள் உள்ளிட்ட நீண்ட நாள் அரசியல் சிறை கைதிகளின் முன்விடுதலை கோரி’ தமிழகம் தழுவிய அளவில் அரசியல் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த கோரிக்கை இஸ்லாமிய சமூகத்தின் கோரிக்கையாக மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள பரந்துபட்ட ஜனநாயக ஆற்றல்களின் கோரிக்கை என்பதை செயல்பூர்வமாக காட்ட வேண்டும். தேசிய, புரட்சிகர, முற்போக்கு என்று எந்த அரசியல் நீரோட்டத்தைச் சேர்ந்தவர்களாயினும் ஆதரித்து நிற்க வேண்டிய ஜனநாயக கோரிக்கை இது.

உலகெங்கும் உள்ள ஒடுக்குமுறையாளர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்ள தெளிவாக திட்டமிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஒடுக்கப்படுபவர்களோ சாதி, மத அடிப்படையில் தங்களிடையே ஜனநாயகத்தை மறுத்து, பிளவுபட்டு நிற்கின்றனர். மக்களிடம் இருக்கும் இந்த முரண்பாடுகளை ஒடுக்குமுறையாளர்கள் தங்களின் நலனுக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஒடுக்குபவர்கள் இணைந்து நிற்கின்றார்கள். ஒடுக்கப்படுபவர்களாகிய நாம் தனித்து நிற்காமல் இணைந்து போராடினால் தான் வெற்றியை நமதாக்க முடியும்!

Save Tamils Movement

www.save-tamils.org தொடர்புக்கு: 9840713315, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It