ஹிரோசிமா நகரில் அணு குண்டு விழுந்தபோது ’சடாகொ சசாகி’ (http://en.wikipedia.org/wiki/Sadako_Sasaki ) என்கிற அந்த இரண்டு வயது சிறுமி சன்னலின் வழியே வெளியே வீசப்பட்டாள். அவளது அம்மா அவள் இறந்து விட்டாள் என்றே எண்ணினாள். ஆனால் அவள் அப்போது சாகவில்லை. அணு குண்டு வெடித்து 10 ஆண்டுகள் கழித்து அவளது உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டபோது அவளுக்கு ரத்தப் புற்று நோய் வந்திருப்பது தெரிந்தது.

12 வயதாகி இருந்த அவளுக்கு சிறுவயதில் அவளது ஊரில் கேள்விப்பட்ட ஒரு நம்பிக்கை நினைவுக்கு வந்தது. காகிதத்தில் சப்பானிய நாரை பறவை வடிவம் போல ஆயிரம் வடிவத்தை செய்தால் எந்த வரம் வேண்டுமானாலும் கிடைக்கும் என்கிற நம்பிக்கையை நினைத்து அவ்வாறே செய்யத் துவங்கினாள். அவள் மருத்துவமனையில் இருந்த போதெல்லாம் அந்த காகிதப்பறவையை செய்தாள். காகிதம் போதவில்லை. அவளது மருந்து சீட்டு உட்பட பக்கத்து நோயாளிகளிடம் இருந்தெல்லாம் காகிதம் வாங்கி பறவையை செய்தாள். அவள் 644வது பறவையை செய்து முடித்தபோது அவளது கால் நிறம் மாறி வீங்கியது. ஏதேனும் சாப்பிடு என்று அவளது குடும்பத்தினர் சொன்னதற்காக சாதமும்- தேனீரும் அருந்தினாள். அருந்திய பின் “ மிகவும் நல்லாயிருக்கு” என்று சொன்னாள். அதுவே அவள் பேசிய கடைசி வார்த்தை.

அணு குண்டு வெடித்து 10 ஆண்டுகள் கழித்து அதன் கதிர்வீச்சினால் புற்றுநோய் கண்டு அந்தக் குழந்தை இறந்து போனாள். அவளது அம்மாவிற்கு அக்குழந்தையின் நோயினை ‘அணு குண்டு நோய்’ என்றே அழைத்தாள். அணுக் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ‘சப்பானிய நாரை’ காகித பொம்மைகள் செய்து முடிக்க நேரம் போதுவதே இல்லை. ரசியாவின் செர்னோபிலில் இருந்த 9 லட்சத்து ஐம்பதினாயிரம் நபர்களும் ஆயிரம் நாரை பொம்மைகளை செய்யமுடியாமலேயே கதிர்வீச்சு நோயினால் இறந்து போனார்கள். கதிர்வீச்சினால் இறந்து போகும் ஒவ்வொருவருக்கும் ’சடாகொ சசாகி’ சொர்க்கத்தில் தனது கைகளினால் காகித நாரைகளை செய்து தருகிறாள்.

பல்லாயிரம் வருடங்கள் ஆனாலும் வெடித்த அணு குண்டிலிருந்தும், அணு உலையிலிருந்தும் கதிர்வீச்சு வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். அணுவின் ஆற்றலை பாதுகாப்பாக உபயோகிக்க முடியாது என ஜப்பானியர்களும், ஜெர்மானியர்களும் அறிந்து கொண்டு அணு ஆயுதங்களையும், உலைகளையும் மூடினார்கள்.

அடிபட்டு தெரிந்து கொள்ள நாம் ஆடு மாடுகள் அல்ல. ’சடாகொ சசாகி’ நமக்கு வாழ்வின் அர்த்தத்தை, அணு கதிர்வீச்சின் அர்த்தமின்மையை உணர்த்தினாள். அவளுக்காகவும், எதிர்காலத்தில் வசிக்க இருக்கும் குழந்தைகளுக்காகவும் நாம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஒன்று கூடுவோம். குடும்பத்தோடும், குழந்தைகளோடும் கலந்து கொள்வோம்.

நம் குழந்தைகளே நமது எதிர்காலம்.. வாழ்நாளில் ஒரு மணி நேரத்தை நமது உலகிற்காகவும், இயற்கைக்காகவும் செலவிடுவோம்.. வாருங்கள்.

06-ஆக-2012, திங்கள்,  வள்ளுவர் கோட்டம் வாயில் 

மாலை 4 மணி முதல்.

மே பதினேழு இயக்கம்.  9444146806

Pin It