தமுஎகச கலை இலக்கிய பரிசுகளுக்கான நடுவர் குழுக்கள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டில் வெளியான கவிதை, சிறுகதை, நாவல், தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வு, மொழிபெயர்ப்பு, விளிம்புநிலை மக்களுக்கான படைப்பு ஆகியவை சார்ந்த புத்தகங்களும், ஆவணப் படங்களும, குறும்படங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நடுவர் குழுக்களால் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் வருமாறு:

கவிதை நூல்: ‘உம்மா- கருவண்டாய் பறந்து போகிறாள்,’ கவிஞர்: எச்.ஜி. ரசூல்.

சிறுகதை நூல்: ‘தேய்பிறை இரவுகளின் கதைகள்,’ நூலாசிரியர்: ஜாஹீர் ராஜா.

நாவல்: ‘கசகரணம்,’ நாவலாசிரியர்: விமல் குழந்தைவேலு.

தமிழ் வளர்ச்சி ஆய்வு: ‘ஆதி இசையின் அதிர்வுகள்,’ நூலாசிரியர்: நா. மம்மது.

மொழிபெயர்ப்பு நூல்: ‘ஃபிடல் - சே புரட்சிகரமான நட்பு,’ மொழிபெயர்ப்பாளர்: ச. சுப்பாராவ்.

விளிம்புநிலை மக்களுக்கான படைப்பு: ‘சிவபாலனின் இடப்பெயர்ச்சி குறிப்புகள்,’ எழுத்தாளர்: அழகிய பெரியவன்.

ஆவணப்படம்: ‘எனக்கு இல்லையா கல்வி,’ இயக்குநர்: பாரதி கிருஷ்ணகுமார்.

குறும்படம்: ‘சித்ரா,’ இயக்குநர்: விக்னேஸ்வரன்.

இதைத்தவிர நாட்டுப்புறக் கலைஞர்களை சிறப்பிப்பதற்கான விருது குறித்தும் பரிசளிக்கப்பட்டது. அதில், பாப்பம்பாடி ஜமா குழுவின் பெரிய மேளக் கலைஞர் முனுசாமி இந்த ஆண்டின் விருதுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011ஆம் ஆண்டில் வெளியான சிறந்த தமிழ் திரைப்படங்களுக்கான விருதுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. ‘வாகை சூட வா,’ ‘அழகர் சாமியின் குதிரை’ ஆகிய படங்கள் பரிசு பெறுகின்றன. புதிய முயற்சிக்கான சிறப்புப் பரிசுக்கு உரியவையாக ‘நர்த்தகி,’ ‘வெங்காயம்’ ஆகிய படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தமுஎகச கலை இலக்கிய விருதுகள் வழங்கும் விழா ஜூன் 17 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. சங்கத்தின் வடசென்னை மாவட்டக் குழு விழா ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

Pin It