தமிழகத்தில் வசிக்கும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்களின் உயிர்நாடியான ஆறு கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 24 சென்னையில் போராட்டம் நடைபெறவிருக்கிறது. 1. வன உரிமைச்சட்டம் - 2006ஐ அமல்படுத்தி ஆதிவாசி மக்களின் அனுபவ நிலங்களுக்கு நிலப்பட்டாவும், குடியிருப்புகளுக்கு மனைப்பட்டாவும் வழங்க வேண்டும்.2. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பழங்குடியினர்க்குரிய காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 3.பழங்குடியினர் அனைவருக்கும் தாமதமின்றி இனச்சான்றிதழ் வழங்க வேண்டும். குறிப்பாக, மலைவேடன், குறுமன்ஸ், மலைக் குறவன், கொண்டாரெட்டி, காட்டு நாயக்கன் ஆகிய இன மக்களுக்கு சான்றிதழ் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். 4. ஈரோடு மாவட்ட மலையாளி, நரிக்குறவர், குறுமன்ஸ் இனத்தின் உட்பிரிவினர், குறவன் இனத்தின் உட்பிரிவினர் ஆகியோரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். அதோடு, புலையன் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான ஆய்வினை விரைந்து முடித்திட வேண்டும். 5. பழங்குடியினர்க்கான உண்டு - உறைவிட பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். 6. வாச்சாத்தி மக்களுக்கு வன்கொடுமை தடுப்புச்சட்டப்படி நஷ்டஈடு வழங்கிட வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தும் ஆதிவாசி மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு அவசியமானது என்பதும், இவை அனைத்துமே தமிழக அரசால் நிறைவேற்றப்பட சாத்தியமான கோரிக்கைகள்தான் என்பதை அனைவரும் ஏற்பர். இதில் முதன்மையான கோரிக்கையாக விளங்கும் வன உரிமைச்சட்டம் சம்பந்தமாகவே இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது. மலைகளிலும், மலை அடிவாரப் பகுதிகளிலும் வசிக்கும் ஆதிவாசி மக்கள் வனத்தின் மீதான தங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்கும், பாதுகாத்துக் கொள்வதற்கும் எண்ணிலடங்கா போராட்டங்களை நடத்தியுள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியின்போது கடுமையான அடக்குமுறைக்கும், குண்டாந்தடி தாக்குதல்களுக்கும், வனத்துறை மற்றும் காவல்துறையினருடன் நடைபெற்ற மோதல்களில் உயிரிழப்புகளுக்கும் ஆளாகியுள்ளனர். இந்தியாவின் பல மாநிலங்களில் பிரிட்டிஷாரின் ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்துள்ளனர். ஜமீன்தார், ஜாகீர்தார்களின் அடாவடித்தனங்களையும், அநியாய கொள்ளைகளையும் எதிர்த்து தங்களுக்கு வாழ்வளிக்கும் வனத்தை பாதுகாத்துக் கொண்டுள்ளனர். வனம் அரசுக்கு சொந்தமென்ற பிரிட்டிஷ் ஆட்சியின் கொள்கையை சுதந்திர இந்தியாவிலும் அப்படியே தொடர்ந்ததின் விளைவாக இத்தகைய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

வனவிலங்குகளையும் - பல்லுயிர்களையும் (மனிதர்களை தவிர) பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வனவிலங்கு சரணாலயங்களையும், தேசிய பூங்காக்களையும் அமைத்து ஒரு புலியை பாதுகாக்க ஓராயிரம் மக்களை வெளியேற்றும் அரக்கத்தனமான நடவடிக்கையில் இந்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டனர். வனத்துக்கும், ஆதிவாசி மக்களுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவை சில ஆயிரம் ரூபாய்களை கொடுத்து சட்டம் எனும் ஆயுதத்தால் கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். தான் பிறந்து, வளர்ந்த, வாழ்ந்த இடத்தை விட்டு, வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாய் விரட்டப்படுவது எவ்வளவு கொடூரமானது. வனமே உலகம் என்று வாழ்ந்த மக்களுக்கு வேறு போக்கிடம் இல்லாத நிலையில் வனத்துறையினருக்கு அடங்கி நடப்பது, அனுசரித்து நடந்து கொள்வது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதைப் பயன்படுத்தி மலைவாழ் மக்களின் சொத்துக்களை அபகரிப்பது, பெண்களை வன்புணர்ச்சிக்குள்ளாக்குவது, எதிர்த்தால் பொய்வழக்கு போடுவது, அடித்து உதைத்து மிரட்டுவது போன்ற சட்டவிரோத காரியங்களில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர். இந்தக் கொடுமைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் வனம் மக்களுக்கு சொந்தம் என்பதை சட்டப்பூர்வமாக்க வேண்டுமென்ற வலுவான கோரிக்கை நாடு தழுவிய அளவில் எழுப்பப்பட்டது. இந்திய அரசியல் வரலாற்றில் அரிய நிகழ்வாக, இடதுசாரிகளின் ஆதரவுடன்தான் காங்கிரஸ் ஆட்சியமைக்க முடியும் என்ற வாய்ப்பை பயன்படுத்தி ஆதிவாசி மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் “ஆதிவாசிகள் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் இதர சமூகத்தினருக்கு காடுகளின் மீது உரிமைகள் வழங்கும் சட்டம்” இந்திய நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

வன உரிமைச் சட்டம் -2006 என்று சுருக்கமாக அழைக்கப்படும் இச்சட்டத்திற்கான விதிகளை உருவாக்கவும், பிறகு நடைமுறைப்படுத்திடவும் தொடர் போராட்டங்களை நாடாளுமன்றத்திற்குள்ளேயும் - வெளியேயும் இடதுசாரிகள் நடத்தினர். இதன் விளைவாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இச்சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தை முற்றிலும் அமல்படுத்தாத ஒரே மாநிலம் தமிழ்நாடு. நியாயமா? பலநூறு ஆண்டுகாலப் போராட்டத்தின் பலன் ஆதிவாசி மக்களுக்கு கிடைக்காமல் தடுப்பது தர்மமா? என்ற கேள்வி தமிழக வனங்களில் எதிரொலித்து கொண்டிருக்கிறது என்பதை ஆளுகிறவர்கள் உணர வேண்டும். நாடு முழுவதும் 50 லட்சம் குடும்பங்களுக்கு மேல் இச்சட்டத்தை பயன்படுத்தி நிலப்பட்டாவும், மனைப்பட்டாவும் பெற்றிருக்கிறார்கள். திரிபுரா மாநிலத்தில் இச்சட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 95 சதமான மக்களுக்கு சட்டத்தின்படியான பலன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சட்டம் தமிழ்நாட்டில் மட்டும் அமலாகவில்லையே என்று ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ கவலைப்படவில்லை. மாறாக, அனுபவ நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்றுவது, ஆடு, மாடுகளை மேய்க்க தடைவிதிப்பது அல்லது தண்டம் வசூலிப்பது, வன சிறு மகசூல்களை சேகரித்தால் பறித்துக் கொள்வது போன்ற பல்வேறு அத்துமீறல்களில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய அடாவடித்தனங்களுக்கு எதிராக போராட்டங்கள் தொடர்கின்றன.

ஏன் சட்டத்தை அமலாக்கவில்லை என்று கேட்டால், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், சட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆட்சியாளர்கள் பதில் சொல்கின்றனர். ஆனால், வழக்கு நிலுவையில் இருக்கிறதே தவிர, தடைவிதிக்கப்படவில்லை என்பதை அழுத்தமாகக் குறிப்பிட விரும்புகிறோம். 2008 பிப்ரவரி மாதம் தடைவிதித்த உயர்நீதிமன்றம், 2008 ஏப்ரல் மாதம் தடை உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவை வெளியிட்டது ஆட்சியாளர்கள் அறியாததல்ல. அந்த உத்தரவில், பட்டா வழங்குவதற்கும், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுகிறபோது மரங்களை வெட்ட வேண்டியிருந்தால் அதற்கும் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று செயல்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு அதற்கான எந்த முயற்சியும் எடுக்காததோடு, வழக்கை விரைந்து முடிப்பதற்கு எள் முனையளவு கூட முயற்சிக்கவில்லை. அரசின் இந்த அணுகுமுறை, ஆதிவாசி மக்களுக்கு பயனளிக்கும் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. எனவேதான், ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கிற்கு முடிவுகட்ட, ‘கவ்வியதை விடலாகாது’ என்ற உறுதியோடு ஏப்ரல் 24 தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவது என்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் முடிவெடுத்து, தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏப்ரல் 24ல் துவங்கும் முற்றுகைப் போராட்டம் எத்தனை நாட்கள் தொடரும் என்பது ஆட்சியாளர்கள் கையில்தான் இருக்கிறது. போராட்டத்தில் முன் வைக்கப்பட்டிருக்கிற கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதைப் பொறுத்து போராட்டம் முடிவுக்கு வரும். அதிகாரிகளோடு அன்றாடம் அல்லல்படுவதை விட அனைத்துக்கும் முடிவு கட்டுகிற வகையில் இறுதிக்கட்டப் போராட்டம் என்ற உணர்வோடு ஆயிரமாயிரமாய் அணிதிரள ஆதிவாசி மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இந்த மகத்தான இயக்கத்தில் பங்கேற்க, வழிகாட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் பிருந்தா காரத் வர இருக்கிறார். அவரது வருகை போராட்டத்தை வலுப்படுத்துவதுடன், போராடும் மக்களுக்கு உத்வேகத்தையும் ஏற்படுத்தும். இந்த மாபெரும் போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கம், குறுமன்ஸ் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம், தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம், கொண்டாரெட்டி பழங்குடி இன மக்கள் நலச்சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில் பழங்குடி மக்களும், இளைஞர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

உயர்ந்த மலைச் சிகரங்களில் பசுமை சூழ்ந்த, வளம் கொழிக்கும் பகுதியில் வாழ்ந்தாலும் வாழ்க்கையோ அதல பாதாளத்தில் கிடக்கிறது. அதிலிருந்து மீள ஆதிவாசிகள் தங்கள் கரங்களை வலுவாக உயர்த்தும் நாள் ஏப்ரல் 24. தமிழகத்தில் ஆதிவாசி மக்களின் புதிய எழுச்சிக்கு கட்டியம் கூறும் வகையில் ஏப்ரல் 24 முற்றுகை போராட்டம் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது ஆதிவாசி சமூகத்திற்கு மட்டுமல்லாமல், இதர உழைப்பாளி மக்களின் போராட்டங்களும் உக்கிரமாக நடைபெற அது வழிவகுக்கும்.

(கட்டுரையாளர், மாநிலத் தலைவர்,தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்.)

Pin It