may17_620

                டிசம்பர் 25. இசுரவேல் தேசிய இனப்பேராளி இயேசு பிறந்த நாளாக கருதப்பட்டு உலகின் பெரும்பான்மையான மக்கள் கொண்டாடப்படும் நாள். அந்த நாளில் (25.12.2011) மெரீனா கடற்கரையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இந்தியா உடைந்து தனித்தமிழ்நாடு அடையப்போவது உறுதி என்று சூளுரை எடுத்துக்கொண்டனர். அந்த வகையில் வரும் ஆண்டுகளில் டிசம்பர் 25 தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக தமிழர்கள் அனைவரும் நினைவுகூரவேண்டும். ஏனெனில் பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக இளைஞர்கள் எழுச்சி பெற்று ஒரே அணியில் நின்றிருந்தது என்பது தமிழ்கூறும் நல்லுகத்திற்கு உவப்பான செய்தி.

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் தலைமையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொதுவாக விழா நாயகர்களாக பேச்சாளர்கள் மட்டும்தான் இருப்பார்கள். ஆனால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் கதாநாயகர்களாக இருந்தார்கள். ஏனென்றால் ‘இந்தியா உடையும்’ என்று பங்கேற்பாளர்களின் அடிமனதில் இருந்து எழும்பிய ஆவேசமான முழக்கங்களுக்கு ஒரு வடிவம் கொடுக்கும்முகமாகவே பேச்சாளர்களின் உரை அமைந்தது.

may17_622

மலையாளிகள் தமிழர்களை அடிக்கிறார்கள் என்ற கோபத்தின் எதிரொலியாக பதிலுக்கு ஆங்காங்கே மலையாளிகளின் கடைகளை தமிழர்கள் உடைத்தார்கள் என்றாலும், அதுவே தீர்வாகாது, வரவேற்கத்தகுந்ததும் ஆகாது. நாய் கடிக்கிறது என்பதற்காக பதிலுக்கு நாம் கடிக்க முடியாது. அதிகார மையத்தில் உள்ள மலையாளிகளும், மலையாளிகள் ஆட்டுவிக்கும் பொம்மையாக இருக்கும் இந்திய அரசும்தான் தமிழர்களின் எதிரிகளே தவிர அப்பாவி மலையாளிகள் அல்ல.. இதை உரக்கச் சொல்லும் நிகழ்வாக கடற்கரை ஒன்றுகூடல் அமைந்தது. இந்தியா உடையும் என்று பங்கேற்பாளர்கள் தொலைநோக்குப் பார்வையுடன் முழக்கம் எழுப்பினார்கள். இந்தியா ஏன் உடைய வேண்டும் என்கிற அரசியலை பேச்சாளர்கள் சிறப்பாக விரித்துரைத்தார்கள்.

may17_450இந்திய சிறைக்கூடம் உடைய வேண்டும் என்பது ஏதோ நேற்று ஒரு நொடியில் கிளம்பிய முழக்கமல்ல.. பூமிக்கடியில் கொதித்துக் கொண்டிருக்கும் நெருப்புக் குழம்பாக தமிழக இளைஞர்களின் அடிமனதில் நீண்டகாலமாக அது இருந்து கொண்டிருந்தது. அந்த நெருப்பு வெடித்துக் கிளம்புவதற்கான அடித்தளத்தை நேற்று மே 17 இயக்கம் அமைத்துக் கொடுத்தது.

தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் வைகோ அவர்களே தமிழகத்தின் வருங்கால முதல்வராக வேண்டும் என்று கவிஞர் தாமரை கூறியபோது, கடற்கரையில் கூடியிருந்த இளைஞர் பட்டாளம் வின்ணதிர ஆர்ப்பரித்து ஆமோதித்தது. இந்தியா என்கிற அமைப்பு முழுவதும் மலையாளிகள் கைப்பிடிக்குள் அடங்கியிருக்கிறது என்கிற அரசியலை மே 17 திருமுருகன், இயக்குநர் தங்கர்பச்சன், மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமது போன்றோர்கள் பார்வையாளர்களுக்கு வகுப்பு எடுத்தனர் என்றே சொல்லலாம்.

பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர் என அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களின் வழியில் தமிழ்த் தேசியம் வடிவமைக்கப்படவேண்டும் என்கிற கருத்தினை கவிஞர் அறிவுமதி, வேல்முருகன் போன்றோர் வலியுறுத்தினர். மேலும், ‘திருமாவளவன், வைகோ போன்றோர்கள் இணைந்து தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்’ என்கிற ஆவலை கவிஞர் அறிவுமதி வெளிப்படுத்தினர். ‘அன்றாட வாழ்க்கைக்காக தேநீர்க் கடை நடத்தி, குடும்பத்தை ஓட்டிவரும் மலையாளிகள் நமக்கு எதிரிகள் அல்ல… அவர்களை விட்டுவிடுவோம்… கேரளாவுக்கு பொருளாதாரத் தடை ஏற்படுத்தினால் தானாக கேரள அரசியல்வாதிகளும், மலையாளிகளும் வழிக்கு வந்துவிடுவார்கள்’ என்று வைகோ பேசியது பக்குவப்பட்ட பேச்சாக இருந்தது.

இந்நிகழ்வு தமிழ்த்தேசியம் என்கிற பேரில் திராவிடத்தை கண்மூடித்தனமாக விமர்சிக்கும் கூட்டம் அல்ல என்கிற உண்மையை பார்வையாளர்களின் சட்டையில் இருந்த பெரியார் நமக்கு உணர்த்தினார். கூட்டத்தில் பேசிய தலைவர்கள், ‘இனிமேல் தமிழர்களிடம் சாதி இல்லை. தமிழ்ச்சாதியாய் ஒன்றுபட்டு நிற்கிறோம்’ என்றார்கள். அக்கருத்தை உண்மை என்று நிறுவும் வகையில் பல இளைஞர்கள் அம்பேத்கர் படம் பொறித்த சட்டையை அணிந்திருந்தனர்.

may17_621

பேரணியின் தொடக்கத்தில் ‘அணையை உடைத்தால் இந்தியா உடையும்’ என்பது முழக்கமாக இருந்தது. ஒன்றுகூடல் முடியும்போது, ‘அணை உடையாது; இந்தியா உடையும்’ என்பது முழக்கமாக இருந்தது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சென்னையில் இருந்தபோது, ‘இந்தியா உடையும்’ என்ற ஆவேச முழக்கத்தை இந்திய அரசுக்கு விடுக்கப்பட்ட அறைகூவலாகவே பார்க்க முடிகிறது.

ஏழு வருடங்களுக்குப் பிறகு சென்னை மெரீனா கடற்கரையில் மீண்டும் சுனாமி வந்திருக்கிறது. இந்த சுனாமி இந்திய தேசிய அரசியலை அடித்து தரைமட்டமாக்கப்போகிறது என்பது வரலாறு எழுதப்போகிற உண்மை.

- ஜீவசகாப்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It