நக்கீரனின் 'தமிழ் ஒரு சூழலியல் மொழி' நூலைச் சமீபத்தில் வாசித்து முடித்திருந்தேன். அதில் தமிழ் ஒரு சூழலியல் மொழி என்று நிறுவ நக்கீரன் துணை கொள்வது தொல்காப்பியத்தின் பொருளதிகாரமே. முதல் பொருளாக நிலத்தையும் காலத்தையும் குறிப்பிடும் தொல்காப்பியர், முதல் பொருளானது உரிப்பொருளுடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் கருவிகளே கருப்பொருள்கள் என்று அய்யப்ப பணிக்கரின் கருதுகோள்களை மேற்கோளிட்டு விளக்கிச் சென்றிருப்பார். அதன் நீட்சியாக யதேச்சையாக வாசிக்க நேர்ந்தது கருத்துப் பட்டறை வெளியீடான பா.ச. அரிபாபு தொகுத்த 'திணை மரபும் நவீனமும்' என்ற நூல்.
நவீன இலக்கியங்களுக்குத் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத் திணைக்கோட்பாட்டினைப் பொருத்திப் பார்த்து ஆய்வு மேற்கொள்ளும் முயற்சியின் நுழைமுக நூல் இது. திணை விவரம் துலக்கமாகத் தெரிவதான ஐந்து புதினங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, அந்த நூல்களின் ஆசிரியர்களிடம் விரிவான செவ்விகளைப் (நேர்காணல்களைப்) பெற்றுத் தொகுத்துள்ளார் தொகுப்பாசிரியர்.
குறிஞ்சித்திணைக்குரிய ச. பாலமுருகனின் 'சோளகர் தொட்டி', முல்லைத்திணைக்குரிய சு. தமிழ்ச்செல்வியின் 'கீதாரி', மருதத்திணைக்குரிய சோலை சுந்தரபெருமாளின் 'செந்நெல்', நெய்தலுக்குரிய ஜோ டி குரூஸின் 'ஆழி சூழ் உலகு', பாலைக்குரிய எஸ். ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி' ஆகியவை எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நாவல்கள்.
ஒவ்வொரு நாவலாசிரியரும் வெளிப்படுத்தும் கருத்துகள் மிக முக்கியமானவை. வெறும் திணை சார்ந்த உரையாடல்களாக மட்டுமின்றி, எழுதும் சூழல், அரசியல் முதலிய பல்வேறு துறைகளை உரையாடல்கள் தொட்டுச் செல்வது சாலச் சிறப்பு.
இந்நூலில் அய்யப்ப பணிக்கரின் 'தொல்காப்பியத்தின் சமகால முக்கியத்துவம்' என்ற கட்டுரையும், சிற்பி பாலசுப்பிரமணியத்தின் 'நிலவியலும் இலக்கியமும்' என்ற கட்டுரையும் பின்னிணைப்பாகச் சேர்த்திருப்பது மேற்கண்ட படைப்பாளிகளின் நேர்காணலையும் அவர்தம் படைப்புகளையும் திணைக்கோட்பாட்டுடன் புரிந்து கொள்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
அய்யப்ப பணிக்கரின் கட்டுரையில் குறிப்பிடுவது போல, தொல்காப்பியத் திணைக்கோட்பாட்டின் சமகாலப் பயன்பாடானது அப்படியே அதனை எடுத்தாள்வதல்ல - திணை மயக்கம், திணைப் பிணக்கம், திணை முயக்கம் என்று முதல் பொருளான நிலம் மற்றும் காலத்தைக் கவனத்தில் கொண்டு சமகால இலக்கியங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். மட்டுமின்றி, புலம்பெயர் சூழலில் 'திணைப் பெருக்கம்' என்ற கோட்பாடும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதற்கான இலகுத்தன்மையுடனே தொல்காப்பியத்தின் திணைக்கோட்பாடு உள்ளது என்பதையும் இந்நூல் புரிதலுக்குள்ளாக்குகிறது.
திணைக்கோட்பாட்டின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் சுற்றுச்சூழல் சார்ந்த இலக்கியக் கருத்தாக்கம் உருவாகியிருந்தது தமிழரின் சூழலியல் சார்ந்த அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதையும், அதன் தொடர்ச்சியாக அக்கோட்பாட்டினை விரிவுபடுத்திப் பொருத்தப்பாட்டுடன் தற்கால இலக்கிய வகைமையான நாவலுக்குள் அது எவ்வாறு தலைப்படுகிறது என்பதையும் இத்தொகுப்பின் வழி புரிந்து கொள்ளலாம்.
'திணை மரபும் நவீனமும்', பா.ச. அரிபாபு - கருத்துப் பட்டறை, 2, முதல் தளம், நாகா வளாகம், நான்காவது நிறுத்தம், திருநகர், மதுரை - 625 006 - விலை ரூ.100.00 - தொடர்புக்கு: 9842265884 மின்னஞ்சல்:
- அன்புச்செல்வன்