பூர்ணா கவிதைகள் எளியவை; யதார்த்தமானவை. மொழி நயங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. ஆனாலும் வாசகர் மனத்தை ஈர்த்து தன் கருத்தில் நிற்க வைக்கிறார். கவிதையின் கடைசி வரியில் ஒரு சொடுக்கு அல்லது ஓர் அழுத்தம் கொடுக்கிறார். அப்போது கவித்துவம் மலர்கிறது.

உண்மையின் வெப்பம் படிந்து சமூக அவலங்கள் கவனம் பெறுகின்றன. உரைநடை போல் தொடங்கிக் கவிதையாய் முடியும் உத்தியைக் கல்யாண்ஜியும் பின்பற்றியுள்ளார்.

நகரும் மேகம்
சிறைச்சாலைக் கம்பிகளுக்கிடையே
நகரும் மேகம் எனக்கு
மற்றவர்களுக்கு
அம்மேகம்
எங்கிருந்து நகருமோ?

மொழியின் கனம் இக்கவிதையிலிருந்து விலகி நிற்கிறது. தன்னிலை விளக்கம் மிகவும் கச்சிதமாக இருக்கிறது.

தூங்கும் நியாயங்கள் என்ற கவிதை... சிறைக்கைதியைப் பார்க்க வருகிறது ஒரு குடும்பம். மனைவியின் கண்ணீர்த் துளிகள் , தந்தையின் சைகை மொழியும் பெரும் ஆறுதல்... கவிதையின் கடைசிப் பத்தி ' நறுக் ' கென்று இருக்கிறது.

நான் பேசத்தொடங்கிய தருணம்
அனுமதி நேரம் மரித்துப் போனது
புறப்படுகையில்
மகன் டாட்டா காட்டினான்
மனைவியின் தோளில்
மகன் தூங்கிக்கொண்டிருந்தான்
என்னுடைய நியாயங்கள் போல...

கடைசி வரி ஒரு சோகக் கதையைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டது. மிக எளிய சொற்கள் வாசகன் மனத்தைக் கனக்கச் செய்கின்றன.

' பூப்புக் குற்றம் ' சிறிய கவிதை. பூக்கடையில் தொங்கும் பூமாலைதான் இக்கவிதையின் கருப்பொருள்.

கட்டித் தொங்கிய பூமாலை
மாலை வந்ததும்
தீர்ப்பளிக்கப்படுக் குற்றவாளியாய்த்
தூக்கில் தொங்குவதாகவே நினைத்து
வாடி , வதங்கிக் கொண்டிருந்தது

மொட்டு பூவாகிப் பயனேதும் இல்லாமல் வீணானது. வியாபாரி நிலை நஷ்டத்தில் - கஷ்டத்தில் .... பிறர் கஷ்டத்தை தன் கஷ்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கிறார்.

' முளைவிடும் சொற்கள் ' -பிள்ளைப் பாசத்தை வித்தியாசமாகச் சொல்கிறது. இக்கவிதையின் பெரும்பகுதி குழந்தையின் மேன்மையைப் பற்றிப் பேசுகிறது.

குழந்தைக்கு முத்தம் கொடுப்பதைக் காட்டிலும்
குழந்தை முத்தம் கொடுப்துதான் சிறப்பு

என்ற வரிகளில் ஆரோக்கியம் சுட்டப்படுகிறது.

பிறந்தகம் சென்ற மனைவியுடன்
குழந்தை ஊருக்குச் சென்று
மூன்று நாட்களாகிவிட்டது
குழந்தை உதிர்த்துச் சென்ற சொற்கள்
வீடு முழுவதும் முளைவிடுகின்றன

என்று அழகாக முத்தாய்ப்பு வைக்கிறார் பூர்ணா.

' பொய்க் குதிரை ' என்ற கவிதை ... அய்யனார் குதிரையைப் பார்த்து பயந்த குழந்தையிடம் அது ஒன்றும் செய்யாது பொய்க்குதிரை தொட்டுப் பார் என்று பல வகையில் மெய்ப்பித்த தந்தை அய்யனாரும் ஒன்றும் செய்யாது என்பதையும் சொல்லியிருக்கலாம். நேரடியாக இல்லாமல் மறைமுகமாக நாத்திகக் கருத்தை பதிவு செய்துள்ளார் கவிஞர். வேறு கோணத்தில் பார்த்தால், எதற்கும் பயப்படக் கூடாதென்று குழந்தைக்குச் சொல்வதாகவும் பொருள் கொள்ளலாம். ஒரு தகவல் கடைசி வரியாக அமைய , அதுவே வாசகன் மனத்தை கொள்ளை கொள்கிறது.

சனிக்கிழமை மாலையே
அந்தக் கோழியைப் பிடித்து
பஞ்சாரத்தில் அடைத்தனர்
ஞாயிறு காலை
இரை போடச் சென்ற குழந்தையிடம்
அறுக்கப் போற கோழிக்கு
எதுக்கு என்றனர் -
பசிக்கும் என்றது குழந்தை

சொற்சிக்கனம் கவனிக்கப்பட வேண்டும். எல்லா சொற்களும் அவசியமானவை. இக்கவிதையில் குழந்தையையும் பெரியவர்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் , குழந்தை உயிரபிமானத்தில் விஸ்வரூபம் காட்டுகிறது. இதுதான் இக்கவிதையின் ஆதார சுருதி ! ' சொல் பறவையான போது' என்ற அழகான தலைப்பில் ஒரு கவிதை.

காதலின் விம்மல் ஓசையை நாம் கேட்க முடிகிறது இக்கவிதையில்.

பிரிவென்பது இனி சந்திக்க முடியாமை
மட்டுமல்ல
சந்திப்பிலும் பேச முடியாமையும்தான்
...........................
பேசிக் கொள்ளாமலே நகரும் நேரம்
எத்தனை துயரமானது
மௌனத்தாலே எல்லாவற்றையும்
சொல்ல இயலுமா என்ன?

மௌனத்தில் மூழ்கும் போது சொல் பறவையாகிவிடுகிறது.

பெண் முன்னேற்றம் பற்றி ஓரிடத்தில் பதிவாகியுள்ளது.

அழகுப்பதுமை அறிவுப்பதுமையாகி
வெகுகாலம் ஆயிற்று
நகருக்குள்ளும் பெண் தன் குடும்பத்தைத்
தூக்கிச் சுமந்துகொண்டே வலம் வருகிறாள்

என்கிறார் பூர்ணா.

' வைக்கோல் கன்று ' என்றொரு கவிதை. பிழைப்பிற்காக , பலர் குடும்பத்தைப் பிரிந்து செல்கிறார்கள். போன இடத்தில் குழந்தைகள் கண்ணில் பட்டால் , பிள்ளைகளைப் பிரிந்திருக்கும் சோகம் சொல்லி மாளாது.

வைக்கோல் கன்றின் நிலை
வெவ்வேறு வடிவில்
மனித வாழ்வில் உருப்பெற்றிருக்கிறது

குடும்பத்தைப் பிரிதல் மிகவும் கஷ்டம்தான். நிறைவாக, கவிஞர் பூர்ணா கவிதைகள் எளிய இனிய கவிதைகள். படித்து மகிழலாம்.

- ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Pin It