நூலின் பெயர்: சித்தாமூர் வரலாறு – நூலாசிரியர்: டாக்டர்.ஏ.ஏகாம்பனாதன்

      இந்தியாவின் பழமையான நாகரிகங்களில் மிக முக்கியமானதும் பழமையானதுமான நாகரிகம் சமணர்களின் நாகரிகம். கி.பி ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பாக இந்தியாவின் பெரும்பான்மை மதமும்  சமண மதமே. சமீபத்தில் மதுரைக்கு அருகிலுள்ள பள்ளிச்சந்தை திடலில் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்ட 2500 வருடத்திற்கு முந்தைய பழமையான நாகரிகங்கள் கூட சமணர்கள் வாழ்ந்த நாகரிகங்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. 

     சென்ற நூற்றாண்டுக்கு முன்பு வரை சமணர்களின் பாரம்பரிய வரலாற்றை எடுத்து சொல்வதற்கான ஆர்வம் பல ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்திடவில்லை. தங்களது சொந்த வரலாறு முழுமையாக தெரியாத சமூகமாகவே சமணர்கள்(ஜெய்னர்கள்) வாழ்ந்து வந்தனர். அந்த காலக்கட்டத்தில்  சமணர்களின் வரலாற்றை பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இலக்கியங்கள் அடிப்படையிலும், கல்வெட்டுகள் அடிப்படையிலும் முதன்முதலில் ஆதாரப்பூர்வமாக நூலாக எழுதி தொகுத்து வெளியிட்டவர், ஆசிரியர் ஏகாம்பனாதன். 1985ல் இந்நூல் ஜினகஞ்சி மடத்தினரால் வெளியிடப்பட்டது.

     சமணர்களின் கோவில்கள், மடங்கள், கலாச்சாரங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்ட போதும்  சித்தாமூர்  மடம்  மட்டும் இன்றும்  ஜெயினர்களின்  மடமாக  இன்றளவும்  இயங்கி வருகிறது.  இந்தியாவின் பழமையான வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டியவர்கள் கண்டிப்பாக இந்நூலை கடந்து வந்தாக வேண்டும்.

     பல்வேறு முக்கிய தகவல்களை கொண்ட ஆவணப்படுத்தப்பட வேண்டிய  நூலாய் இந்நூல் விளங்குகிறது. குறிப்பாக சமண மதம் பரவுதலில் தொடங்கி அதனை அழிக்க சைவ, வைணவ மதங்கள் மேற்கொண்ட நடைமுறைகள், முகலாயர்கள் காலத்திலும் ஆங்கிலேயரின் காலத்திலும் சமண மதம் என்ன நிலையில் இருந்தது என்பதை நடுநிலையுடன் ஆதாரத்துடன் ஆசிரியர் விளக்குகிறார்.

     கல்வெட்டுகள் அடிப்படையில் சமண மதம் கி.பி ஏழாம் நூற்றாண்டில் பரவ தொடங்கியுள்ளது என எடுத்துகொண்டாலும் இலக்கியங்கள் அடிப்படையில் ஆராயும் போது கி.பி 4ம் நூற்றாண்டிலேயே சமண மதம் பரவியதை அறிய முடிகிறது (பக்-2). சமண மதம் பெருமளவில் பரவியதை அடுத்து பரவுதலை தடுக்க வைனவ மதத்தவர்கள் சமணத்திற்கு எதிராக சமயவாதங்களை மேற்கொண்டு வைணவ மதத்தை புதுப்பித்தனர். அதன் பிறகு சமணத்தை அழிக்க சமண அறிஞர்களை அழித்தனர். மடங்களை அழித்தனர்.

       அன்றைய நடைமுறையில் நான்கு வேதங்களையும் கற்றறிந்த பார்ப்பனர்களுக்கு சதுர்வேதிமங்கலம் எனும் ஊரை தானமாக வழங்கும் பழக்கம் இருந்துள்ளதையும் மேலும் இவ்வூரில் உள்ளவர்கள் யாரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என்பதையும் ஆதாரங்களுடன் ஆசிரியர் குறிப்பிடுகிறார். அன்றைய நடைமுறையில் பிராமணர்களின் ஆதிக்கமே முழுமையாக இருந்துள்ளதை இதன் முலமாக எளிதாக உணர முடிகிறது. இப்புத்தகத்திலிருந்து “சதுர்வேதிமங்கலம் என்பது நான்கு வேதங்களையும் கற்றறிந்த பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்படும் ஊராகும்.(பக்- 19) சதுர்வேதிமங்கலம் எனும் பெயரிடப்பட்டு, வரி செலுத்தப்பட வேண்டாத சர்வமானிய ஊராக திகழ்ந்திருக்கின்றது. அதாவது நான்கு வேதங்களையும் கற்றறிந்த (சதுர்வேதி) பிராமணர்களுக்கு எந்த வித வரியும் செலுத்தப்படவேண்டாத தானமாக இவ்வூர் அளிக்கப் பெற்றிருக்கின்றது என்பது புலனாகும். (பக்-72)”

      முகம்மதியர்கள் ஆட்சியில் சமண மடங்களுக்கு வழங்கப்பட்டு வந்த 100 வராகன் மானியங்கள் 40 வராகனாக அன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரியாமலேயே குறைக்கப்பட்டது. அத்தனை மோசடிகளுக்கும் பின்னால் இருந்தவர்கள் பிராமணர்கள். ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் மானியங்களை குறைக்கும் அளவுக்கான அதிகாரத்தை பார்ப்பனர்கள் பெற்றிருந்தார்கள். இப்புத்தகத்திலிருந்து “முகம்மதியராட்சியில் சித்தாமூர் மடத்திற்கு வழங்கப்பட்டு வந்த 100 வராகன் மானியங்கள் நவாப்புகளாட்சியில் 40 வராகன் அளவிற்கு குறைக்கப்பட்டது. (பக் 21). முகம்மதியர் ஆட்சிக்கு உதவியாக இருந்த பிராமணர்களால், ஆட்சி செய்தவர்களுக்கு தெரியாமலயே சித்தாமூர் மடத்திற்கு கொடுக்கப்பட்டு வந்த 100 வராகன் மானியங்களை 40 வராகன் அளவிற்கு குறைக்கப்படலாயிற்று (பக் 86).   இன்று நமக்கு கிடைக்கும் பழங்கால சின்னங்கள் அனைத்துமே கி.பி ஏழாம் நுற்றாண்டுக்கு முற்பட்டவை அதற்கு முந்திய காலத்திய சிலைகள் எதுவும் கிடைக்கவில்லை.(பக்-36) காரணம்,  அதற்கு முந்தியவை முழுவதும் அழிக்கப்பட்டிருக்கிறது. உடைக்கப்பட்டிருக்கிறது. 

    சமணர்களின்  கோவில்களை அழித்து அங்கிருந்த சிலைகளை வைத்து வைணவ மதக்கடவுள்களின் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு நாயக்க மன்னர்கள் முழுக்க முழுக்க உதவியாக இருந்துள்ளனர் என்பதனையும் பல கோவில்களின் சிலைகளை மையப்படுத்தி தெளிவான ஆதாரங்களை கொண்டு ஆசிரியர் நிருபித்துள்ளார்.

    ஒட்டுமொத்த வரலாறுகளை அழித்ததில் முன்னின்றவர்கள் பார்ப்பனர்கள் என்பதும் அந்த பழியை சாதுரியமாக அடுத்தவர்களின் மேல் போட்டதனையும் இந்த நூலின் மூலம் அறியலாம்.    
    
புத்தகத்தில் உள்ள சிறு குறைகள்:

      பெரும்பாலும் சராசரி புத்தக பிரியர்கள் படிப்பதற்கு இலகுவான எழுத்து நடையும் புரிந்து கொள்ள ஏதுவான வார்த்தைகளும் இருந்தால் தான் புத்தகத்தை முழுதும் படித்து முடிப்பார்கள். ஆனால் இப்புத்தகத்தை பொறுத்த வரையில் ஆசிரியர் கொஞ்சம் கடினத்தை கையாள்கிறார் (எழுதிய காலம் 1980கள் என்பதால் இருக்கலாம்).

      இப்புத்தகத்தை பாதியில் நிறுத்துபவர்கள் வரலாற்றையே தவறாக புரிந்து விடும் அபாயம் உள்ளது. உதாரணமாக, பக்.21ல் முகம்மதியர்கள் சமணர்களுக்கு எதிராக இருந்தனர் என்று  கூறி விட்டு பக்.86ல் பிராமணர்களே ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் செய்தனர் எனும்  உண்மையை கூறுகிறார். இதை போல இன்னும் சில இடங்களிலும் தொடர்கிறது.

மதிப்புரை:

   வரலாற்றை முற்றிலும் மாற்றி எழுதப்பட வேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. பல சமண கோவில்கள் இன்று பார்ப்பனர்களால் இந்து கோவில்களாக மாற்றப்பட்டுள்ளது. பல நூறு  சமண கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளது. இத்தனையும் செய்தவர்களுக்கு வரலாற்றில் தானமாக ஊர்களும் வரி செலுத்த வேண்டாத சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது.

    காலங்காலமாக அவர்கள் செய்த கொடுமைகளுக்கு அடுத்தவர் பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இன்று இந்துத்துவ பாசிச அமைப்பினரால் கோவில்கள் இடிக்கப்பட்டதாக கூறும் கோவில்கள் பெரும்பாலும் அவர்களாலேயே இடிக்கப்பட்டது என்பதை இந்த நூல் ஆவணமாக எடுத்து சொல்கிறது.

   இந்நூலை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். தவறான வரலாற்றை திருத்தி எழுதும் பொறுப்பு நம்மை விட யாருக்கு அதிகம் இருக்கிறது?... எழுதுவோம்.

- அபூ சித்திக்

Pin It