கீற்றில் தேட...

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே மாபெரும் எழுத்தாளர் என்றும் கூறுகிறார்....

mirdad bookஸ்தம்பிக்கத்தான் வேண்டி இருக்கிறது.. நான் நானாகும் மிகச் சிறந்த தருணத்தை இப்புத்தகம் மிக நுண்ணிய பொழுதுகளில் தருவது...... கிடைக்கப் பெற்ற எதுவும் கிடைத்த பின் எதுவாகும் என்றொரு மாபெரும் கேள்வியோடு நான் அற்ற எதிர் நிலைக்குள் யார் அற்ற என் நிலையைத் தேடத் துவங்குவதற்கு நீட்டித்துக் கொள்கிறது.  தன் அற்புத பக்கங்களின் அடுத்தடுத்த வரிகளின் ஊடாக நம்மை வியக்க வைக்கும் மாய தத்துவங்களின் நிதர்சனத்தை கடந்து விடும் முன்.. நிதானம்... இழக்காமல் இருப்பது அவசியம்..அத்தனை மூர்க்கமாக உங்களைத் தாக்கும்.. உண்மையின் வலிமை... மிகப் பெரிய சூட்சும அவிழ்த்தல்... அது அப்படித்தான்... தயாராகியே படியுங்கள்....  ஏக்கம் கொண்டவர்களே வெற்றி பெறுவார்கள் என்று பூதாகரமாகவே விரிகிறது மிர்தாதின் பக்கங்கள்.  பக்கங்களில் இருக்கும் சாரத்தின் விளிம்பை....."மிகைல் நெய்மி"யின் பாரபட்சமற்ற பெருங் காற்று வனாந்தரத்தின் வாக்கிய அமைப்போடு.......'மிர்தாத்' என்னருகே இருக்கிறார்.  நோவாவின்....சொல் பிடித்த அதற்கும் முந்தைய பெரு மழையின் யோசனையென புன்னகைத்துக் கொண்டே இருக்கிறார்...அது நம் மர்மங்களின் முகமூடி திறக்கும் அற்புத ஞானத்தின் திறவு... ஒளியின் சாராம்சம்.. நம்மை வந்தடைய செய்யும் மிகச் சிறந்த ஒப்பனை கலைதலின் வழி.

படிக்கும் ஒவ்வொரு முறையும் சிறு நடுக்கம் பெரு இயக்கமாய் மாறிடும் மாயத்தின் சக்கரத்தை நான் உணர்கிறேன்... .. நீங்களும் உணரலாம்.. யார் கூறும் யாவும்.. அது கூறும் தீர்வும்...எண்ணற்ற முயக்கங்களின் விடுபடுதல் என்றே தோன்றுகிறது......இதயத்தின் ரத்த சகதிக்குள்.... ஒட்டியும் ஒட்டாமலும்..உறவைக் கடந்த நிலைக்குள் நிர்வாண ஊர்தல்...வாடையின் பிசுபிசுப்புக்குள் சிவப்பின் சில்லிடல்களை மீண்டும் மீண்டும் உள் வாங்க முடியும்.  பனியும் வெயிலும் மழையும் காடும்... தத்தளிக்கும் பலிபீடமாக உரு செய்தல் உணர் செய்தல்.  உணருதலின் சுகம் உயிர்ப்பித்தலின்  வலை.. எல்லாமும்.. சொல்லும்.. கேள்விகளை கேள்விகளாகாவே விட்டு விட்டு..... விடுதலை பற்றிய பதிலாக மிர்தாத் தெளித்து தெளிந்து செல்வது அலாதி..... அது.. அதிகாலை கோலத்தின் மயிலிறகு ஞாபகமென சிறு பிள்ளை பார்வைக்கு ஒப்பானது. வேண்டுதலின் உட்கட்ட சிலிர்ப்புகளின் கூடார காட்சி. பொழிவது எதுவும்.... சுகமே.... அனுவச் சாரலின் நீட்சிக்குள்.. அடுத்த பக்கம் புரட்டும்....

இலை நுனியின் கனவுக் கருக்குள் சருகின் நிறத்தின் சூட்சுமம் மெல்ல வினவும் மாலை மயக்கத்தின்...மௌன தவிப்புகளை இணுங்கிய காற்றுக்கு யார் விளக்குவது....அடுத்தடுத்த திறவுகளின் கட்டுப்பாட்டு சாரளத்தின் கசிவுகளாக கீற்றாய் நுழையும் ஒளியின் தத்துவத்தில்....தூரத்து சப்தம் பெரு வெடிப்பை நினைவூட்டும்.. அது காலத்தின் இறுமாப்பை மெல்ல அவிழ்க்கும் சதி செய்து பின் காலமே அது பொய்யடா.. என்று கத்தி கூச்சலிடும்... மெய்ம் மறந்த சோலைக்குள் யார் நிற்கும் தருணத்தையும் எதாவதொரு பக்கம் தந்து விட்டு மடியும் நாளில்... கண்களில்.. ஒளி பெற்று காதலை நெஞ்சம் சுரக்கும். காதலின் ஆதிக்கத்தின் பரப்பெங்கும்... அன்பின் சுவடுகளே...

கருப் பொருளுக்குள் கண்டடைந்த எதுவும்....அதுவாக ஆகி விடுகிறது....அதுவென்பது இதுவாகவும் இருக்கும்.. என்பது மிர்தாதின் சூட்சுமம்... நான் அப்படி என்றால் நீங்களும் அப்படியே. படியுங்கள்.. படிக்க படிக்க இப்புத்தகம் இன்னும் தன்னை முழுதாக மாற்றி அமைத்துக் கொள்ளும் மாய தத்துவத்தை எப்பக்கத்திலும் வைத்திருக்கிறார் நெய்மி. மிகப் பெரிய அச்சத்தின் போர்வையை இப்புத்தகம் விலக்கிக் கொண்டே வருவதில்.... கடைசிப் புள்ளிக்குள் நீங்களே நிறைந்து சுழலுவதைக் காண முடியும்... காணுதலின் சுகத்தை கண்ட பின்தான் முழுமையாகும் காட்சிகள்... அது, அகம் நிறைத்த சூழ்ச்சிகள். 

"அன்பிற்கான திறவுகோல் புரிதல்" என்கிறார்.. புரிய புரிய தான் புரிதலின் நீட்சி அன்பின் சுவடை.. பிரதிபலிக்கும்.. தேக  மார்க்கத்தின் மாறுபட்ட கனவுக்குள் யாவையும் நிவர்த்தி செய்யும்.... கோட்பாடுகளை அன்பே செய்யும்.... அன்பே நெய்யும்... அன்பே கொய்யும்.... அன்பே..... நீயும்.

எல்லா பொருளும் மனிதனுடன் இணைக்கப் பட்டிருக்கின்றன... அப்படியே எல்லா மனிதனும் ஒரு பொருளுடன் இணைக்கப் பட்டிருக்கிறான்.. "பிரபஞ்சமே ஒற்றை உடல்" என்கிறது மிர்தாத் புத்தகம். அது வினைக்கும் எதிர் வினைக்கும் இடையில் நிற்கிறது... சரி என்று நீங்கள் நம்புவதை தவறென்று சுலபமாக சொல்லி விடுகிறது.. நிழல் தேடுவதை நிஜம் ஆக்கி விடுகிறது...இங்கு மகிழ்ச்சிக்கும் துன்பத்துக்கும் ஒரே அர்த்தம்தான்.. அது பொருள் மாற்றி மனிதம் மாற்றி உங்களை சிந்திக்க தூண்டுகிறது.. உங்களை உங்களில்தான் நீங்கள் கண்டடைய முடியும். எந்த கடவுளிடமும் அல்ல என்று மலை உச்சியின் வீழ்ச்சியைப் போல.. அழுத்தம் தாளாமல் வெடித்து சொல்கிறது. வெடித்து சிதறுகையில்தான்... எதிர்வினைகளுக்கு முந்தைய வினைகள் பற்றிய சிந்தனை பிறக்கிறது.... மரணத்தின் வாழ்வுதனை ஜனனத்தின் வாயிலாகவே நிரூபணம் செய்யப் படுகிறது. பிறப்புக்கு முந்தைய மரணத்துக்கு பிந்தைய ஞாபகத்தின் சூத்திரத்தை நீங்கள் உணர உணர ஒரு மாபெரும் மறதிக்குள் சென்று விடும்... முழுமையடைதலை இப்புத்தகம் பேசுகிறது.

"மாபெரும் வீட்டு ஏக்கம் மூடுபனி போன்றது" என்கிறது மிர்தாத் புத்தகம்... அது மனதின் மூடல்களை பற்றி சிந்திக்கிறது... மனதின் ஆழம் பற்றி தோண்டுகிறது.... அது... மனதின் நிறம் பற்றி செயலாற்றுகிறது.. மனதின் வழிகளும்.... வலிகளும் பற்றி உரையாடுகிறது...மிகப் பெரிய நம்பிக்கையை அது உங்களுக்குள் ஊற்றுகிறது.. உங்கள் அழுகையின் ஒவ்வாமையை உங்களிடமிருந்து வெளியேற்றுகிறது...

"இப்படித்தான் நோவாவுக்கு உபதேசித்தேன்.....அப்படியே உங்களுக்கும் உபதேசிக்கிறேன்..." என்கிறார் மிர்தாத்...அது எவ்வளவு உண்மை என்று மீண்டும் ஒரு முறை இப்புத்தகத்தை படிக்கையில் உணர்கிறேன்... உணர்வின் சாலச் சிறந்த உன்மத்தத்தை நம்மை சுற்றி ஒரு நெருப்பாய் எரியவிடும் மிகைல் நெய்மியை மிரட்சியுடன்தான் உள் வாங்குகிறேன்... தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை வெகு நுட்பமாக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்... இப் புத்தகத்தை படிப்பது எவ்வுலகில் எனக்கு அளிக்கப் பட்ட மிகப் பெரிய வாய்ப்பாகவே நம்புகிறேன்..ஒவ்வொரு முறை படிக்கையிலும்.. நிறைந்து வழியும் அன்பின் ரசத்தை நான் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கவே விரும்புகிறேன். அதன் நீட்சியின் பெரும்பங்காகவே.. விழித்திருத்தலில் உழைத்து பிழைத்துக் கிடக்கும் இக் கட்டுரையின் தோரணங்கள்...அதன் காரணங்கள்.

"பிரபஞ்ச பெருவெளியும் அதில் உள்ள எல்லாமும் ஒரே ஒரு கரு.. காலம் அதை மூடியிருக்கும் ஓடு.. அதுதான் தாய்க்கரு" என்கிறார் மிர்தாத்.... தலை சுற்றி விழுந்து விடுவது மேல் என்று நம்பும் அளவுக்கு எனது பூமி சுற்றுவதை நான் உணர்கிறேன்... அது இந்த பிரபஞ்சத்தின் வாசல் தொட்டு தொட்டு விளையாடும் அதி வேக நுட்பக் கலையை அத்தனை இலகுவாக செய்வதில்.. நான் என்ற ஒற்றை தர்க்கம் சற்று வெளியேறி... ஒளியாகிட விரும்பும்.... தூரத்து நிமித்தங்களுக்குள் யாவும் சேர்ந்து விடுவதை மறுக்க விரும்பவில்லை.....மறுத்தாலும்... வெதும்புவதில்லை... இல்லைக்குள் இருக்கும் இருப்பதை இருக்கும் என்றே நம்பிட வழி செய்யும்.. இல்லாமையின் சூன்யத்தின் அருகாமையை தூரத்து நட்சத்திரம் ஒன்று புரிய செய்யும் பொருள் படும் மினுங்கலை உயிர் கொண்டு உணர்த்துவதாகவே கோட்பாடு செய்கிறது மிர்தாத்.

"உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று எனக்கு அனுமதிக்கப்பட்ட புத்தகத்தின் பகுதி இத்தோடு முடிகிறது...மிச்சத்திற்கான காலம் இன்னும் வரவில்லை...." என்று முடிக்கும் 'மிகைல் நெய்மி' ஒரு தொடக்கமாகவேதான் எனக்கு தோன்றுகிறார்... கலீல் ஜிப்ரானின் நெருங்கிய தோழரான இந்த லெபனான் நாட்டு எழுத்தாளர் எழுதிய முதல் புத்தகம் இது..சிக்கல் நிறைந்த மொழி நடையில் எழுதப்பட்ட இந்நூலை தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கும் அறிய நிகழ்வை நமது "அய்யா புவியரசு" செய்திருக்கிறார்.... அவர்தான் செய்திருக்க முடியும் என்று முழுதாக நம்புகிறேன்....உங்களுக்கு பசிக்கிறதென்றால் இப்புத்தகத்தை படித்தே தீர்வீர்கள்.... பசி கொண்டவன்... வாழக் கடவன்.. என்பது நியதி.. அதுதான் மிர்தாத் புத்தகம்......

"இந்தக் கனிகள் வேண்டுமென்ற பசி யாருக்கெல்லாம் உண்டோ அவர்களெல்லாரும் தமது கூடைகளை ஏந்தி வாருங்கள்" என்கிறார் மிர்தாத்...அதை புவியரசின் மொழியின் மூலம் இன்னும் நெருக்கமாய் கண்டடைகிறோம்... அது விதிக்கப் பட்டவை...

"இதைப் படிக்காமல்....படித்து முடிக்காமல் விட்டு விடாதீர்கள்..... அவ்வாறு செய்தால்....  அது உங்களை நீங்களே அவமதித்துக் கொண்டதாக ஆகிவிடும்" என்று கூறும் புவியரசின் தேடலில் இது மிகச் சிறந்தது என்று கூறும் நாம் இதோ இன்னொரு முறையும் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம்....

நெய்மியின்... சிந்தனை நம் மொழிக்குள்..நடமாடுகிறது........அது பெருங்காட்டு தீவிரத்தின் மிகப் பெரிய வாசலை நமக்கு திறந்து விடுகிறது.

மிர்தாத்தின் புத்தகம் 

மூலம் :மிகைல் நெய்மி

தமிழில் :புவியரசு

கண்ணதாசன் பதிப்பகம்

விலை : ரூ.170/

- கவிஜி