திருப்பூர் குணாவின் "பின்நவீனத்துவம் கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி" நூல் விமர்சனம்

தமிழ்நாட்டில் புரட்சிகர இயக்கங்களுக்கு என்ன ஆயிற்று? என்பதை திருப்பூர் குணாவின் பின்நவீனத்துவம் கம்யூனிச எதிர்ப்பின் முற்போக்கு முகமூடி என்ற நூல் படம் பிடித்து காட்டுகிறது.

guna book 400இன்றைக்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு செலுத்துகிற தலித் அடையாள அரசியல், பா.ம.க மாதிரியான சாதியாதிக்க அடையாள அரசியல், தமிழ்ச்சாதி அடையாள அரசியல்...ஈழம் என்கிற பேரில் நடைபெறும் பிழைப்புவாத அரசியல் ஆகியவற்றை இனம் காணவும், அவற்றை முறியடிக்கவும் உண்மையில் இந்த நூல் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு கையேடாக பயன்படும்.

நாம் சாதிய சிக்கலைப் புரிந்து கொள்ளவில்லையெனவும், அதனால்தான் தலித்துகளை திரட்ட முடியவில்லையெனவும் ஆனந்த் டெல்டும்டேக்களும், உள்ளூர் என்.ஜி.ஓ-க்களும் கூச்சலிடுகின்றனர். கீழத்தஞ்சை வரலாறு முதல் தருமபுரி வரையென தமிழ்நாட்டில் சாதியொழிப்புப் பணியை செயலில் காட்டியது கம்யூனிஸ்டுகள்தான் என்ற வரலாறு உயிரோடு இருக்கும்போதே எப்படி இது முடிகிறது?

தமிழ்த்தேச சிக்கலை புரிந்து கொள்ளவில்லையென தமிழினவாதிகளில் ஒரு பகுதியினர் கூப்பாடு போடுகின்றனர். வெற்று வாய்ச்சவாடாலில் அரசியல் பிழைப்பு நடத்தும் இப்போக்கு அண்ணாவால் தொடங்கப்பட்டது. இன்றைய இனவாதிகள் திராவிட எதிர்ப்பு பேசினாலும் இவர்களின் பிறப்புக்கு காரணம் அண்ணாதான். இவர்களின் புதிய வாரிசாக இப்போது மணியரசன் களமிறங்கியிருக்கிறார். இந்தியாவை தேசிய இனங்களின் சிறைக்கூடம் என வரையறுத்த நக்சல்பாரியின் தொடர்ச்சியாக தேசிய விடுதலையையும், ஆயுதப்போராட்டத்தையும் நடைமுறையில் இணைத்த தோழர் தமிழரசனின் மேடைகளிலேயே இவர்கள் அப்பட்டமான பொய்களை அள்ளி விடுகின்றனர்.

இவைகளையெல்லாம் எவ்வாறு எதிர்கொள்வதென நாம் விழிப்பிதுங்கி கிடக்கையில்தான் ஆளும்வர்க்கத்தை நடுநடுங்க வைத்த கம்யூனிஸ்ட் இயக்கங்கள் இன்று பலவீனப்பட்டு கிடப்பதற்குப் பின்னால் அரசின் கைக்கூலிகளின் பின்நவீனத்துவ அரசியல் இருக்கிறதென்பதை ஆணித்தரமாக நிறுவுகிறார் ஆசிரியர்.

தமிழ்நாட்டில் மேலெழுந்து வந்த நக்சல்பாரி இயக்கங்களை சீர்குலைத்து அழிக்கும் பணியில் அ.மார்க்ஸ், ரவிக்குமார், ராஜ்கவுதமன், கல்யாணி... வகையறாக்களின் பங்களிப்பு குறித்தும்... ஏகாதிபத்திய எதிர்ப்பு வேறு - சாதி எதிர்ப்பு வேறென தலித் இயக்கங்களை உருவாக்கியது குறித்தும்... சாதிவெறி கட்சியான பா.ம.க- வை ஊட்டி வளர்த்தது குறித்தும்... N.G.O- அரசாதரவு செயல்பாடு, அதற்கு ஃபோர்டு பவுண்டேஷன் முதல் உலக முதலாளிகள் வரையிலானோர் நிதி வழங்கல் குறித்தும் அத்தனை அசிங்கங்களையும் தோலுரிக்கிறது இந்நூல்.

மாற்றை குறித்தும், மாற்றத்தை குறித்தும் பேசுவதே வன்முறையென்று பேசுகிறவர்கள் பின்நவீனத்துவவாதிகள். இவர்களுக்குப் பின்னால் இன்றும் சில புரட்சிகர இயக்கங்களென சொல்லிக்கொள்கிறவர்கள் வால்பிடித்துத் திரிவது வேடிக்கைதான். அமைப்பென்பதே அதிகாரம்தான் என உளறி அரசையும், அதன்மூலம் அதிகாரம் செலுத்துகின்ற ஆளும்வர்க்கத்தையும் திரையிட்டு காத்துக் கொண்டிருப்பவர்கள் பின்நவீனத்துவவாதிகள். அரசு பயங்கர ஆயுதங்களோடு மக்களையும், மக்களுக்கான போராளிகளையும் வேட்டையாடிய போது புரட்சியாளர்கள் ஆயுதம் தூக்குவதால்தான் அரசு அடக்குமுறை செய்ய வேண்டியுள்ளதென குதர்க்கம் பேசி அரச அடக்குமுறைக்கு நியாயம் கற்பித்தவர்கள் பின்நவீனத்துவவாதிகள்.

பின்நவீனத்துவத்தின் அடித்தளமே கோழைத்தனமானது. வளர்ந்து வந்த முதலாளித்துவத்தின் கொடூரம்.. முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாதல், அதன் வெறியாட்டத்தில் நிச்சயமற்ற வாழ்க்கை, உலகப்போர்கள், நாஜிக்களின் யூத அழிப்பு ஆகிய கொடூரங்களை கண்டு பயந்து; வாழ்வின் மீது விரக்தியடைந்து நடுக்கத்தில் நீட்சே, காம்யூ... போன்றவர்களிடமிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக பிடுங்கி கோர்த்த உளறல்கள்தான் பூக்கோ, தெரிதா, லியோதாத், லெக்கான்... போன்ற முட்டாள்களின் பின்நவீனத்துவம்.

மக்களின் விடுதலைக்கான மாற்று அரசியலை தடுத்து கெடுத்த துரோக வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். அத்தோடு இப்பணி முடிவடைந்து விடவில்லையென்பதையும் அவரே ஒப்புக் கொள்கிறார். "...இந்த அரசியல் எங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது? இதனால் பலனடைகிறவர்கள் யார்? என்பதையெல்லாம் கண்டறியச் செய்யப்பட்ட சிறிய முயற்சிதான் இக்கட்டுரைகள். இப்பணியில் இந்நூல் முதலும் அல்ல. முடிவும் அல்ல..." என்று கூறுகிறார்.

ஆம், பின்நவீனத்துவவாதிகளை (பின்நவீனத்துவவாதிகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட அரசியலையும்தான்) அரசியல் தளத்தில் ஒழிப்பதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. கூடவே அரசியலோடு இரண்டற கலந்துள்ள இலக்கியத்தளத்தில் இருந்தும் இவர்களை அகற்றியாக வேண்டுமல்லவா?

1960-களின் நடுப்பகுதியிலேயே எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் அவர்கள் பின்நவீனத்துவதை இலக்கியத்தளத்திலிருந்து துரத்துகிறப் பணியை தொடங்கி வைத்தார். தான் எழுதிய ஒரு சிறுகதைக்கான முன்னுரையில் இப்படி எழுதுகிறார் - " பின்நவீனத்துவம் என்று ஒரு இலக்கிய போக்கு உருவாகியிருக்கிறதாமே, அதன் உத்திகளில் ஒன்று இதுவரை சொல்லப்படாத விஷயங்கள் பற்றி பேசுவதாமே. அப்படியான ஒன்றை நான் எழுதலாம் என்று பார்த்தால் தீட்டு (பீ) முதல் எல்லாவற்றையும் குறித்து அனைவரும் எழுதிவிட்டார்கள். பர்ர்ர் (குசு) குறித்துதான் இதுவரை யாரும் எழுதவில்லை என்று நினைக்கிறேன். ஆகவே நானும் ஒரு முடிவு செய்து இந்த சிறுகதையை (பர்ர்ர்) எழுதினேன்." என்று பின்நவீனத்துவத்தை கேலி செய்கிறார்.

இந்த கேலி தொடர்ந்திருக்க வேண்டும். பின்நவீனத்துவ இலக்கியம் ஒழிக்கப்பட்டிருக்க வேண்டும். இன்று இடதுசாரி எழுத்தாளர்கள் என சொல்லிக் கொள்கிறவர்களிலிருந்து வலதுசாரி ஜெயமோகன்..சாரு நிவேதிதா.. போன்ற இலக்கிய குப்பைகள்.. வரைக்கும் இதைத்தான் எழுதி குவிக்கிறார்கள்.

இந்த வகையான குப்பைகளை எப்படி திறமையாக எழுதுவது என்று எழுத்தாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கே விடியல் பதிப்பகம் பனான் மாதிரியான ஒரிஜினல் குப்பைகளை மொழிப்பெயர்த்ததாம். வாசகனுக்குப் புரியாத இந்த வகை இலக்கியங்களை படிக்கவைத்து அரைகிறுக்கர்களாக ஆக்குவதற்கும், படிக்காதவர்களை தாழ்வு மபான்மைக்குள்ளாக்குவதற்கும் புரட்சிகர (!) பதிப்பகங்கள் தேவைப்பட்டிருக்கிறது போல.

அதுசரி, கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பின்நவீனத்துவ நோட்ஸ் வாத்திகளான அ.மார்க்ஸ் கூட்டம் திருப்பூர் குணாவின் நூல் குறித்து வாய்த்திறக்காமல் இருப்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. ஆனால் கைத்தட்டி வரவேற்க வேண்டிய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மவுனமாகவிருப்பது புரியலையே!

- பாவெல் சக்தி

Pin It