இதற்கு முந்திய கோட்பாடுகள், தத்துவங்கள், பகுத்தறிவு, தர்க்கம், பெருங்கதையாடல், மதம், வேதம், கடவுள், மார்சியம் அனைத்தையும் எதிர்க்கக் கூடிய ஒரு கோட்பாடு தான் பின்னை நவீனத்துவம்.(ஆ.பூமிச்செல்வம்.344) மேலும் இத்தத்துவம் தன்னை ஒரு கலகக்குரலாகவும் அறிவிக்கின்றது. எதிர்ப்பு பட்டியலில் மார்க்சியம் இருப்பதையும் சிந்திக்க வேண்டும். எல்லா கோட்பாட்டிற்கும் தத்துவ அடித்தளம் உண்டு. அறிவியல் தத்துவத்தின் பரிபூரணமாக மார்க்சியம் அறியப்பட்டிருக்கும்போது மார்க்சியத்தையும் எதிர்க்கின்ற இக்கோட்பாட்டை அறிவியல் தத்துவமாக ஏற்றுக்கொள்ள சாத்தியமுண்டா. அல்லது பின்நவீனத்துவம் என்பது அறிவெதிர் தத்துவமா? இக்கேள்விக்கான விடயங்களே இக்கட்டுரை.
பின் நவீனத்துவத்தின் தந்தை லியோதார்த் - எதையும் முடிந்த முடிவாக அருதியிட முடியாது என்கிறார். இயக்கத்தின் நான்கு தன்மைகளை உணர்தல் என்ற அறிவியல் தத்துவ விதியானது ஒன்றின் முடிவு மற்றதன் தொடக்கமாகும் என்பதை விளக்குகின்றது. குறிப்பாக அளவு பண்பு மாற்றங்களின் அடிப்படையில் விளக்குகிறது. பனியின் முடிவு நீரின் தொடக்கமாகிறது, நீர் வெப்பமயமாதலின் முடிவு நீராவியின் தொடக்கமாகிறது. மேலும் மனித குரங்கு படிமலர்ச்சி வழியில் மனிதராக மாறியது எனில் படிமலர்ச்சியின் ஒரு முடிவு மனித இனத்தின் தொடக்கமாகிறது. எது முடிவு எது தொடக்கம் என்பதை அருதியிட முடியும் என்கிறது அறிவியல் தத்துவம். எதையும் முடிந்த முடிவாக அருதியிட முடியாது என்ற லியோதார்த்தின் கோட்பாடு அறிவியல் தத்துவத்திற்கு உகந்தது அல்ல.
பிரச்சினைகளை அடியாழம்வரை ஆராய அவசியமில்லை என்கிறது லியோதார்த்தின் கோட்பாடு. அப்படி என்றால் பிரச்சனைகளை ஒரு நிகழ்வாக மட்டும் கடந்து செல்ல வேண்டும் என்று பொருள். நடைமுறையையும் தத்துவத்தையும் உணர்தல் என்ற அறிவியல் தத்துவமானது பிரச்சனைகளை அகநிலையிலும் புறநினையிலும் ஆராய்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்கிறது. அறிவியல் மொழியாகிய தமிழின் திருக்குறளோ நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல்“ என்கிறது. பிரச்சினைகளை அடியாழம்வரை ஆராய அவசியமில்லை என்ற லியோதார்த்தின் கோட்பாடு அறிவியல் தத்துவத்தின் முரணாகும்.
நீட்சேவின் பின்நவீனக் கோட்பாடு கலையைப் புறவுலகத் தொடர்பற்றதாக வரையறுக்கின்றது. (ஆ.பூமிச்செல்வம்.47) புறவுலகத் தொடர்பு அற்றதுதான் கலை என்பதை அறிவியல் தத்துவம் மறுக்கின்றது. கலை என்பது மனிதர்களது புலனறிவுடன் பேசுவது அல்ல. மாறாக, மனிதர்களது ஆழ்மனக் கருங்குழியோடு உரையாடுவது. அவர்களது கற்பனைகளிலும் எண்ணங்களிலும் கருத்துக்களை விதைப்பது. அறிவியல் என்பது புலனறிவுடன் உரையாடுவது. ஒவ்வொரு துறை சார்ந்த உண்மைகளை அந்தந்த துறைசார்ந்த மொழிகளில் மனிதர்களது புலனறிவுக்கு பண்பட்ட வடிவில் துள்ளியமாக விளக்குவது.
அறிவியல் தத்துவ விளக்கப்படி கலைஞர் என்பவர் ஒரு சமூகத்தின் பிரதிநிதி. எண்ணங்களுக்கும் கற்பனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் முடிவுகளுக்கும் அடிப்படை பொருளாக அக்கலைஞரின் மூளை இயங்கிக் கொண்டிருக்கிறது. அவரது இயற்கையான புறவுலகத் தொடர்புகளே அவரது அகநிலை மூளையில் எண்ணங்களாகவும் கற்பனைகளாகவும் சிந்தனைகளாகவும் முடிவுகளாகவும் கட்டமைகின்றன. ஒரு கலைஞரது அகநிலைப்பாடு என்பது சமூகளாவிய உறவிலிருந்து தவிர்க்க முடியாதது. மேலும் அக்கலைஞரது அகநிலைப்பாட்டிலிருந்து உருப்பெற்று வெளிப்படும் கலையை புறநிலையில் கவனித்துணரும் மனித உறவுகள் இல்லையெனில் கலைக்கான எந்தச் சமூகத்தேவைகளும் சாத்தியமற்றதாக அமையும். புறவுலகத் தொடர்பற்ற கலை என்ற நீட்சேவின் பின்நவீனத்துவக் கோட்பாடு அறிவியல் தத்துவத்திற்கு எதிரானதாகும்.
எந்தக் கலையானாலும் சமூகத் தேக்கத்தையோ அல்லது சமூக மேன்மையையோ உந்துவதாக வினையாற்றுகிறது. அதனால்தான் அறிவியல் தத்துவத்தின் சமூக மேன்மையைக் கடைபிடிக்கின்ற சமூகவிஞ்ஞானிகள் இலக்கியம் கலை அறிவியல் யாவும் சமூக மேன்மைக்கே என்கிறார்கள்.
அறிவியல் என்பது புறநிலை இருத்தலை பற்றி ஆராய்வது. தத்துவம் என்பது உள் இருத்தலை பற்றி ஆராய்வது. அதாவது அகநிலை குறித்து ஆராய்வது. இது தத்துவம் குறித்த இருத்தலியத்தின் பார்வையாகும். (ஆ.பூமிச்செல்வம்.54)
இருத்தலியத்தின் இப்பார்வை தத்துவம் குறித்த தலைகீழ் பார்வையாகவும் அறிவியல் தத்துவத்திற்கு முரண்பட்டதாகவும் உள்ளது.
அறிவியல் தத்துவத்தின் விதிகளாகிய இயங்குதலுக்கான அடிப்படை முரண்பாடுகள், பொருளையும் கருத்தையும் உணர்தல், பொதுத்தன்மையும் தனித்தன்மையையும் உணர்தல், நடைமுறையையும் தத்துவத்தையும் உணர்தல் போன்ற விதிகள் பின்நவீனத்துவத்தின் விளக்கங்களை மறுக்கின்றன.
அறிவியல் புறநிலை இருத்தலை மட்டுமல்ல மாறாக அகநிலை இருத்தலை ஆராய்வதாகவும் செயலாற்றுகின்றது. அகம் என்பது புறநிலை எதார்த்தங்களாகிய பருப்பொருள்களின் இயக்க உறவுகள் குறித்த மனித மூளைகளின் பிரதிபலிப்புகள், எண்ணங்கள், கற்பனைகள், சிந்தனைகள் ஆகியனவாகும். மேலும் ஒவ்வொரு பருப்பொருட்களின் உள்ளார்ந்த இயக்கங்களை அறிவதாகவும் அமையும்.
அனுவிற்குள் எலக்ட்ரான் புரோட்டான் நியூட்ரான் போன்ற முரண்பாடுகளை அறிவதும் அறிவியலின் செயல்பாடுதான். உடலில் ஏற்படும் காயங்களை பரிசோதித்து மருந்திடுவது மட்டுமல்ல, அகமாகிய உள்ளதின் பிரச்சனைகளைப் பரிசோதித்து உளவியல் மருந்திட்டு குணமாக்குவதும் அறிவியல்தான்.
தத்துவம் என்பது உள் இருத்தலை பற்றி ஆராய்வது மட்டுமல்ல வெளி இருத்தலையும் அதன் இருத்தலுக்கான இயங்கியலையும் ஆராய்வதும் தத்துவம்தான். ஏனெனில் தத்துவம் என்பதே உயர் மட்ட அறிவியலாகும்.
இலக்கியம், வரலாறு, அரசியல், சமூகவியல், மானிடவியல், மொழியியல், இயற்பியல், வேதியியல், உயிரியல், மருந்தியல், உளவியல், நரம்பியல், கணிதவியல், கணிணியியல், பொறியியல் இன்னும் என்னென்ன இயல் துறைகள் இருக்கின்றனவோ அத்துறைகளுக்கான உயர்மட்ட அறிவியல் கல்வியான ஆராய்ச்சிக்கு துறைசார்ந்த பெயரில் ஏன் நிபுணர் பட்டங்களைப் பல்கலைக்கழகங்கள் வழங்குவதில்லை. பல்கலைக்கழகங்கள் ஏன் தத்துவத்தில் நிபுணர் என்பதாகப் பட்டமளிக்கின்றது. அதாவது,
MASTER OF LITERATURE … MASTER OF ENGINEER என்று வழங்காமல்
M.Phil –MASTER OF PHILOSOPHY என்று ஏன் பட்டமளிக்கின்றது.
DOCTOR OF LITERATURE … DOCTOR OF ENGINEER என்று வழங்காமல்
Ph.D -DOCTOR OF PHILOSOPHY என்று ஏன் பட்டமளிக்கின்றது.
என்ன பிரச்சனையெனில் துறைசார்ந்த பெயரில் வழங்கப்படும் பட்டம் உயர் மட்ட அறிவியலாக அர்த்தப்படாது. ஏனெனில் தத்துவம் என்பதுதான் உயர் மட்ட அறிவியலாகும். எல்லாத் துறைகளுக்கும் பொதுவான அறிவியல் விதிகளை அடிப்படையாகக் கற்றறிந்து ஒரு குறிப்பிட்ட துறையின் பிரச்சனையை ஆராய்ந்து ஒரு கருத்தை நிரூபித்துள்ளார் என்பதே அப்பட்டத்திற்கான பொருளாகும்.
எல்லாத்துறைகளுக்கும் பொதுவான விதியென்பது தத்துவத்தில் எப்படி விளக்கம் பெறுகின்றது. இயற்கை, மனிதன், சமூகம், சிந்தனை என்ற நான்கின் முழுதளாவிய நிலைகளாக விளக்கம் பெறுகின்றது. இந்த நான்கிற்குள் எல்லாத் துறைகளும் அடங்கும். எல்லாத் துறைகளுக்கும் பொதுவாக தத்துவம் அமைகின்றது. எந்தத் துறை சார்ந்த அறிவியலுக்கும் தத்துவமே அடிப்படையாகத் திகழ்கின்றது.
தத்துவம் என்பது அஞ்ஞானங்களுக்கு அஞ்ஞானமாகவும் விஞ்ஞானங்களுக்கு விஞ்ஞானமாகவும் திகழ்கின்றது. அஞ்ஞானத் தத்துவம் என்பது ஆன்மீகமாகவும் விஞ்ஞானத் தத்துவம் என்பது அறிவியலாகவும் திகழ்கின்றன. ஆன்மீகத் தத்துவம் என்பது அறிவெதிர் தத்துவமாகவும் பெயர்பெறுகின்றது. அறிவெதிர் தத்துவம் என்பது இயங்காவியல் கருத்து முதல் வாதமாகவும், அறிவியல் தத்துவம் என்பது இயங்கியல் பொருள் முதல் வாதமாகவும் விளக்கம் பெறுகின்றது. உலகளாவியத் தத்துவங்கள் அனைத்தும் இந்த இரண்டு வகைகளில் அடங்கிவிடுகின்றன. அறிவியல் தத்துவம் ஐந்து அடிப்படை விதிகளாக விளக்கம் பெறுகின்றது.
“1.இயங்குதலின் நான்கு தன்மைகளை உணர்தல்
விதி -1.1 முரண்பாடுகளே இயங்குதலை நிகழ்த்துகின்றன.
விதி-1.1.1 முதன்மை முரண்பாடும் x முதன்மையற்ற முரண்பாடும்
விதி-1.1.2 உள் முரண்பாடும் x வெளி முரண்பாடும்
விதி-1.1.3 நட்பு முரண்பாடும் x பகை முரண்பாடும்
1.2 முரண்பாட்டின் மோதல்களுக்குள் நிகழ்கின்ற அளவு மாற்றமும், பண்பு மாற்றமுமே இயங்குதலை நகர்த்துகின்றன.
1.3 பழைய நிலையை அழித்துக்கொண்டு புதிய நிலைக்கு மாறுதலும், புதிய நிலையை அழித்துக்கொண்டு வேறொரு நிலைக்கு ஓடுதலும் இயங்குதலின் இலக்காதல்.
1.4 இயங்குதல் தன் இலக்கை அடைதல் என்பது முன்பிருந்த நிலைக்கு திரும்பாமல் அந்நிலையைவிட உயர்ந்த நிலைக்கு மாறுதல் மட்டுமே.
2.பொருளையும் கருத்தையும் உணர்தல்
3.வரலாற்றை உணர்தல்
4.பொதுத்தன்மையையும் தனித்தன்மையையும் உணர்தல்
5.நடைமுறையையும் தத்துவத்தையும் உணர்தல்” (புதியவன்.2014).
இத்தகைய அறிவியல் தத்துவமானது அறிவிற்கு ஆட்படுத்தும் எந்தவொன்றும் புறநிலை எதார்த்தத்தில் இயக்கங்களாகவும், அகநிலை முரண்பாட்டின் வளர்ச்சிகளாகவும், மாற்றங்களின் இடைநிலைகளாகவும் இருக்கின்றன என்ற தத்துவார்த்த உண்மையைப் புரிந்துகொள்வதற்கு வழியுறுத்துகின்றது. மேலும் புறநிலை உண்மையாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள தத்துவார்த்தக் கருத்தியலை அல்லது சிந்தனையை புறநிலை உண்மைகளாகத் திகழ்கின்ற பருப்பொருள்களின் வழியாக நடைமுறையில் நிரூபிக்க வேண்டும் என்று வழியுறுத்துகின்றது.
சசூரின் விளக்கப்படி சொல் என்பது பொருளைக் குறிப்பதே அல்ல, மாறாக குறி-குறிப்பான்-குறிப்பீடு என்பதாக விளக்கம் பெறுகிறது. உதாரணத்திற்கு மரம் என்ற சொல் ஒரு ஓசை வழியான குறியாகவும், குறிப்பான் என்பது மரம் என்ற சொல்லால் மனதில் உதயமாகும் பிம்பமாகவும், குறிப்பீடு என்பது அந்தச் சூழலில் புறநிலையிலுள்ள ஒரு மரத்தைக் குறிப்பதாகவும் அமைகிறது. குறிப்பிடப்படும் சொல் என்பது ஒரு பொருளாக இல்லை. அது துல்லியமற்றதாக இருக்கிறது.
சசூரின் இந்த மொழியியல் கோட்பாட்டின் வழியாக மொழி அபத்தத் தன்மை கொண்டது. அது அடிப்படையில் எந்தவொரு சிந்தனையையும் ஏந்திவரவில்லை, வெளிப்படுத்தவுமில்லை. மாறாக அது சிந்தனையைத் தடை செய்தல், கட்டுப்படுத்தல் போன்ற செயல்பாடுகளைத்தான் மேற்கொள்கிறது. மொழியின் வழியாக அறிவு பெறுதல், உண்மையை அறிதல் என்பதெல்லாம் வெறும் கற்பிதமே என்கிறது பின்நவீனத்துவம்.(ஆ.பூமிச்செல்வம்.89)
அறிவியல் மொழியாகிய தமிழில் தொல்காப்பியர் சொல் குறித்து விளக்குகிறார். எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே என்பது நூற்பா(தொல்.பெயரியல்.641). புறநிலை எதார்த்தமாகிய பருப்பொருள்கள் குறித்த மனிர்களின் கருத்துருவாக்கத்தின் சமூகத்தேவையே மொழியின் சொல்லாகின்றது. அறிவியல் தத்துவத்தின் அடிப்படையிலான தொல்காப்பியரின் சொல் குறித்த விளக்கமானது எல்லா கருத்தும் பொருள் குறித்தனவே என்பதாகவும் விடியும்.
சசூரின் விளக்கப்படி குறிப்பிடப்படும் மரம் என்ற ஓசை அவரவர் மனதில் வெவ்வேறு மரங்களைப் பிம்பப்படுத்தலாம். வெவ்வேறு சூழல்களின் புறநிலையில் வெவ்வேறு மரங்கள் குறிப்பீடாகலாம். ஆனால், தனித்தன்மைகளால் விளக்கம் பெறும் எல்லா மரங்களும் பொதுத்தன்மைகளால் விளக்கம் பெறுகின்ற மரம் என்ற பருப்பொருளில் அடங்ககிவிடும். சமூகத் தேவையின் அடிப்படையில் மரம் என்ற ஒரு சொல் குறி-குறிப்பான்-குறிப்பீடு என்ற மூன்று நிலையிலும் புறநிலையிலுள்ள பருப்பொருளையே குறிக்கின்றது. மொழியின் வழியாக அறிவு பெறுதல், உண்மையை அறிதல் என்பதெல்லாம் வெறும் கற்பிதமே என்பதாக பின்னை நவீனத்துவம் மறுக்கிறதெனில் தனித்தன்மையையும் பொதுத்தன்மையையும் உணர்தல் என்ற அறிவியல் தத்துவ விதியை மறுப்பதாகப் பொருள்.
லியோதார்த் மொழியை வெறும் விளையாட்டு என்கிறார். (ஆ.பூமிச்செல்வம்.93) அறிவியல் தத்துவ விளக்கப்படி மொழி என்பது வெறும் விளையாட்டல்ல. மொழியானது சமூகத்தில் விளையாற்றுகின்ற கருவியாகவும் சமூகத்தை முழுதளாவிய நிலையில் வெளிப்படுத்துகின்ற பண்பாட்டு உணர்வு மண்டலமாகவும் திகழ்கின்றது.
ஒரு படைப்பை உருவாக்கியவுடன் படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் இடைப்பட்ட உறவு அறுந்துவிட வேண்டும் என்பது ரோலன் பார்டரின் சிந்தனை. இதைதான் ஆசிரியர் இறந்து விடுகிறார் என்பதாக பின்நவீனத்துவம் விளக்குகிறது. அந்த பிரதியின் படைப்பாளராக வாசகர்களே அவதரிப்பார்கள். பிரதியைப் வாசிக்கும் ஒவ்வொரு வாசகரும் அப்பிரதியை தனக்கான பிரதியாகப் படைக்கத் தொடங்குகிறார்கள். இந்தக் கோட்பாட்டில் ஆசிரியரின் உழைப்பு அங்கீகாரம் பெறாமல் புறக்கணிக்கப்படுகின்றது. ஆசிரியரை புறக்கணிப்பது அவரது உழைப்பை அங்கீகரிக்காமல் அவமதிப்பதற்கு ஒப்பாகும். இவ்வணுகுமுறை இலக்கிய வரலாறு மற்றும் இலக்கிய அறிவியலின் அறிவியல் தத்துவ அனுகுமுறைக்கு எதிரானதாகும்.
வாசகர்களின் வாசிப்பு அனுபவங்களையும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் படைப்புச் செயலாக பின்நவீனத்துவம் மதிக்கின்றது. இது வாசகர்களையும் அவர்களது கருத்தியல் திறனையும் படைப்பு வெளியையும் உயர்த்துகின்ற புரட்சிகர சிந்தனைபோல நளினம் செய்வதல்லாமல் வேறொன்றுமில்லை.
மொழி பேசுகிறது மனிதன் அல்ல என்ற உருது பழமொழி போல பிரதிதான் பேசகிறது. திறனாய்வாளர் என்ற முறையில் நாம் வாசிப்பில் ஈடுபடும்போது பிரதியிலிருந்து வெளியே வந்து புதிதாக எந்தக் கண்ணோட்டத்தையும் ஒப்புக்கொள்ளக் கூடாது. விமர்சனம் உள்ளிட்ட எல்லாப் படைப்புகளுமே கற்பனையானவை எதுவுமே உண்மையின் இடத்தைப் பிடிக்க முடியாது. (கோபிசந்த் நாரங்க்.158) மேற்கண்ட சிந்தனை ரோலன் பார்தரின் ஆசிரியர் இறந்துவிட்டார் என்ற இலக்கிய அணுகுமுறையைப் பற்றிக்கொண்டு மொழியப்படும் பின்நவீனத்துவத்தின் குரலாகும்.
ஆசிரியரை மரணிக்கச் சொல்லும் பின்நவீனத்துவம் உண்மையில் படைப்பாளரையும் வாசகர்களையும் பிரதியையும் கருத்தாளுமையையும் சமூகளாவிய இலக்கியத் தேவைகளையும் உண்மைக்கு எதிரானவைகளாகச் சித்தரித்து நிர்மூலமாக்குகின்ற சமூகத் தேக்க வரலாற்றுக் கடமையை நிகழ்த்திவருகிறது.
நான் என்பது மற்றவர்களால் தீர்மானிக்கப்படுகிறது. இது பின்நவீனத்துவம் போற்றுகின்ற லக்கானின் சிந்தனை. நாங்கள் என்ற பொதுத்தன்மையில்தான் நான் என்ற தனித்தன்மை அடங்குகிறது என்ற அறிவியல் தத்துவத்தின் கண்ணோட்டம் வெளிப்படுவதாகத் தோன்றும். ஆனால் இந்தத் தத்துவம் இந்து மதத்தை போல் ஒரு குழப்பமானது. இந்து மதம் தன்னை வரையறுத்து விளக்கும்போது யாரெல்லாம் இஸ்லாமியர்கள் இல்லையோ, யாரெல்லாம் கிறிஸ்தவர்கள் இல்லையோ, யாரெல்லாம் சீக்கியர்கள் இல்லையோ அவர்களெல்லாம் இந்துக்கள் என்று விளக்குவதைப்போல குழப்பமான தத்துவத்தை லக்கான் மொழிகிறார்.
எது காக்கா என்று வரையறுத்து விளக்கச் சொன்னால் எந்தப் பறவை வெள்ளையாக இல்லையோ, மஞ்சளாக இல்லையோ, சிவப்பாக இல்லையோ என்று வண்ணங்களை அடுக்கிவிட்டு அடுக்கப்படாத கருப்பு வண்ணப்பறவையே காக்கா என்று விளக்குவது சரியாகுமா? பறப்பதெல்லாம் பறவையென்றால் வௌவால் பறவையா? பல் இருப்பதெல்லாம் விலங்கென்றால் வௌவால் விலங்கினமா? கருப்பாக இருக்கும் பறவைகளெல்லாம் காக்கைகளே என்று விளக்குவது எத்தகைய அறிவீனமோ அதற்கு இணையானது லக்கானின் தத்துவம்.
அறிவியல் தத்துவம் எந்தப் பொருளின் இயக்கமும் புறநிலையால் தீர்மானிக்கப்படுவதில்லை. அகமுரண்பாடுகளே தீர்மானிக்கின்றன. புறநிலையாகிய மற்றமை அப்பொருளின் மீதான உந்துதலாக அமையுமே அல்லாமல் தீர்மானிக்கின்ற சக்தியாக அமைவதில்லை என்பது அறிவியல் தத்துவ விளக்கமாகும். லக்கானின் கோட்பாடு அறிவியல் தத்துவத்திற்கு முரணாகும்.
மையம் விளிம்பு என்பது பின்நவீனத்துவத்தின் கவர்ச்சிகரமானக் கோட்பாடு.(ஆ.பூமிச்செல்வம்.103) மையம் என்பது அதிகாரத்தின் குறியீடாக விளக்கப்படுகிறது. விளிம்பு என்பது அதிகாரத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட அனைத்துமாகும். விளிம்பு நிலையால் மையம் கட்டுடைக்கப்பட வேண்டும் என்பது பின்நவீனத்துவத்தின் புரட்சிகர சிந்தனையாகும். ஆனால், விளிம்பு நிலையால் கட்டுடைக்கப்படும் மையம் மீண்டும் விளிம்பு நிலைக்கான மையமாகக் கட்டமைக்கப்பட வேண்டுமா என்பதற்கு விளக்கங்களோ விடையோ இல்லை. மேலும், இது விளிம்பு நிலையை சமநிலையில் வைத்துப் பார்க்கிறது. முதலாளித்துவம் மையம் எனில் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களும், சொத்தாதிக்கம் பெற்ற நிலப்பிரப்புத்துவமும் விளிம்பு எனில் விளிம்பில் உள்ள இரண்டு வர்க்கமும் விளிம்பு என்ற சமநிலையில் அடங்குகின்றன. அப்படி சமப்படுத்துவதை கலகக் குரலாகவோ, புரட்சிக் குரலாகவோ மதிப்பிட முடியுமா?
அறிவியல் தத்துவத்தின் சமூகவிஞ்ஞான விளக்கப்படி சமூக எதார்த்தங்கள் மையம் – விளிம்பு என்ற கிடைமட்டமாக இல்லை. மாறாக, சாதி சனாதனம் போன்ற அடுக்குநிலைகளாகவும், மேடு பள்ளங்கள் நிறைந்த ஏற்றத்தாழ்வுகளாகவும் இருக்கின்றன. எனவே, மையம் – விளிம்பு கோட்பாடே அறிவியல் தத்துவத்திற்கு முரணானதாகும்.
அறிவு என்பது உண்மையைத் தேடும் முயற்சியல்ல. ஏற்கனவே வரையறுத்துக் கட்டமைக்கப்பட்ட விதிகளை அறிவதுதான் இதுவரையுள்ள அறிவு. மனிதன் இதுவரை அறிந்த எதுவுமே அறிவல்ல. எல்லாம் பகுத்தறிவின் விதிகளைப் பற்றிய அறிதல்தானே தவிர மற்றதை அறிந்ததல்ல என்பது பின்நவீனத்துவத்தின் கூற்று. இந்த அறிதல் முறையைத் தெரிந்தவன் அதனைத் தெரிந்துகொள்ளாதவனைக் காட்டிலும் அதிகாரம் மிக்கவனாக மாறுகிறான். அறிந்தவர் அறியாதவரை அடிமைப்படுத்துகிறார். எனவே பின்நவீனத்துவம் பகுத்தறிவை ஒரு பயங்கரவாதம் என்பதாகவும், முழுமையான அறிவு எப்போதும் சாத்தியமில்லாதது என்பதாகவும் விளக்குகின்றது. (ஆ.பூமிச்செல்வம்.86-88)
எல்லா அறிவும் அதிகாரம். அறிவு என்பது பகுத்தறிவு என்பதாக அடையாளம் பெற்றுவிட்டால் மற்றவர்கள் அறிவற்றவர்களாக இழிவுபடுத்தப்படுவார்கள். எனவே, மனிதர்கள் அறிவற்றவர்களாக இகழப்படுவதற்கு அறிவு காரணமாகிறது. அறிவு என்பதே அதிகாரமாக திகழ்கிறது என்பதால் அறிவு புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று என்கிறது.
இது நடைமுறைக்கு உதவாத மடத்தனமானக் கோட்பாடு. அறிவு அதிகாரத்துடன் எப்போது இணைகிறது என்றால் அது அரசுடன் எப்போது இணைகிறதோ அப்போது அதிகாரம் ஆகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அதிகாரமற்ற சாமானியர்களுக்கும் அறிவு அறியாமை இரண்டும் பரஸ்பரமாக இருக்கிறது என்பதே எதார்த்தம். அறிவு என்பதை அதிகார மையமாக வரையறுத்து அறிவை புறக்கணிப்பது விளிம்பு நிலையின் கடமையாக இக்கோட்பாடு வாதிடுகிறது.
அறியாமையின் சார்பாக நின்று எல்லா அறிவையும் கட்டுடைக்க வேண்டும் என்கிறது பின்நவீனத்துவம். இந்த கட்டுடைப்பை தெரிதா மொழிகிறார். அறிவியல் மொழியை தன் அடையாளமாகக் கொண்டுள்ள தமிழ்ச்சமூகம் அள்ள அள்ள குறையாத செல்வம் அறிவுச்செல்வமே என்கிறது. தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு என்கிறது திருக்குறள்.(குறள்.396)
முன்னோரை வழிமொழிகின்ற தொல்காப்பியரும், மனத்துக்கண் மாசற்ற திருவள்ளுவரும், சமூகநீதியைப் பெற்றுத்தந்த பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், சாதி ஒழிப்பையும் சமத்துவத்தையும் சட்டமாக்கித்தந்த அண்ணல் அம்பேத்கரும், அடைவதற்கு ஓர் பொன்னுலகைக் காட்சிபடுத்துகின்ற மாமேதை மார்க்சும் சான்றோர்களாகக் கொண்டாடப்படும் மனிதகுல வரலாற்றில் இத்தகைய கட்டுடைத்தல் எத்தகைய விளைவைத் தரும். சனாதன வானரங்கள் வாலை முறுக்கிக்கொண்டு பள்ளிவாசல் முதல் பல்கலைக்கழகங்கள்வரை கட்டுடைப்பில் ஈடுபடுவதற்கும், இரத்தவெறி கலவரங்களில் மக்களைக் கொன்றொழிப்பதற்கும் வழிவகுக்கும்.
சமூக தேவையே அறிவை தீர்மானிக்கிறது என்ற எதார்த்தத்தைப் பின்நவீனத்துவம் மறுக்கிறது. அறிவியல் தத்துவத்தின் வழியிலான பகுத்தறிவின் வளர்ச்சியே சமூகத் தேவையாகவும் இருக்கிறது. ஆனால், பின்நவீனத்துவமோ பகுத்தறிவையே மறுக்கிறதெனில் அறிவியல் தத்துவத்தை எப்படி ஏற்கும்.
தத்துவவாதி எதையும் உருவாக்குவதில்லை. பிரதிபலிக்கவே செய்கிறான். தத்துவமானது வரலாற்றுப் பூர்வமாக உருவாக்கப்பட்ட ஒன்று, அது சிந்திப்பதை தடுக்கிறது என்று கூறி அனைத்துத் தத்துவங்களையும் நிராகரிப்பதற்கான கருத்துநிலையைப் பின்னை நவீனத்துவத்திற்குத் தந்தவர்கள் கில்லஸ் டெலியூஸ் மற்றும் ஃபெலிக்ஸ் கட்டாரி என்ற இரட்டையர்கள் (ஆ.பூமிச்செல்வம்.73)
அறிவியல் தத்துவத்தின் தந்தை காரல் மார்சோ தத்துவம் வெரும் வியாக்கியானத்திற்கு அல்ல, உலகை மாற்றுவதற்கு என்கிறார். சமூகவிஞ்ஞான வரலாற்றில் லெனின் நிரூபித்தும் காட்டினார். ஆனால், இந்த இரண்டுங்கெட்ட இரட்டையர்கள் தத்துவம் சிந்திப்பதை தடுக்கிறது என்பதை ஒரு தத்துவமாகவும் சொல்கிறார்கள். தத்துவவாதிகளாக திகழ வேண்டும் என்றால் சிந்திப்பதை நிறுத்துங்கள் என்கிறது இவர்களது பின்நவீனத்துவம்.
அனைத்தையும் சந்தேகிப்பதற்கும், உலகை விளங்கிக்கொள்வதற்கும் மேலும் அதனை மாற்றுவதற்கும் தத்துவம் அடிப்படை என்று முழங்குகிறது அறிவியல் தத்துவம். அறிவியல் தத்துவத்தின் நிழலில் அமரும் தகுதியைக்கூட பின்நவீனத்துவம் எட்டுவதற்கில்லை என்பதற்கு இரட்டையர்களின் சிந்தனைகளே சான்று.
தமிழில் பின்நவீனத்துவம், பின்னை நவீனத்துவம், பின் புதுமையியம், பிந்தைய நவீனத்துவம், புதுப்புது நவீனத்துவம், உத்தர நவீனத்துவம், நவ நவீனத்துவம் என்றெல்லாம் மொழிபெயர்ப்புக்கு உள்ளாகிய பதமாக இது விளிக்கப்படுகின்றது. அறிவியல் மொழியாகியத் தமிழ்ச் சூழலில் சில விற்பன்னர்கள் போயும்போயும் பின்நவீனத்துவ மேலை தத்துவத்தால் ஈர்க்கப்பட்டு தமிழ்ச்சூழலில் பேசு பொருளாக்கியுள்ளார்கள். அந்தத் தத்துவம் இந்தத் தத்துவம் என்று இத்தனைவிதமான பெயர்வைத்த இவர்கள் பைத்தியக்காரத் தத்துவம் என்று பெயர் வைக்காதது ஆச்சரியந்தான்.
ஒரு குழந்தையை ஒரு தாய்தான் பெற முடியும். ஒரு தாய் வயிற்றில் பிறந்தால்தான் அது குழந்தையாக பிறந்திருக்க முடியும். ஆனால், பின்நவீனத்துவம் பிறந்து வளர்ந்த கதையைக் கேட்டால் புராணக் கதைகளுக்கே தலை சுற்றும். தத்துவஞானிகளாகச் சொல்லிக்கொள்ளப்படுபவர்கள் பல தாய்மார்களாக ஒன்றுசேர்ந்து தனித்தனியாகப் பெற்றெடுத்த வெவ்வேறு உறுப்புகளை வெட்டியும் ஒட்டியும் தாலாட்டி, பாலூட்டி, சீராட்டி வளர்த்த பிள்ளையொன்றைக் கற்பனை செய்ய முடிகிறதா? முடிகிறதெனில் அந்தக் குழந்தைதான் பின்நவீனத்துவம். தாய்மார்கள் பல எனினும் ஒரே தந்தைதான். இலாபவெறி முதலாளித்துவத்தின் கள்ளப்பிள்ளை என்றாலும் பின்நவீனத்துவத்திற்குப் பொருந்தும்.
அறிதல் என்பதை சாத்தியமற்றது. அறிதலாக கருதுபவை எல்லாம் மாயை என்கிறார் ஜார்ஜ் பர்சி. ஆதிசங்கராச்சாரி கூறும் மாயையும் ஜார்ஜ் பர்சியின் மாயையும் வேறுவேறல்ல. இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான். அறிதலாக கருதுபவை முழுமையல்ல வெறும் மாயை என்பது பருப்பொருளை மறுக்கும் அறிவெதிர் தத்துவம் அல்லது ஆன்மீகத் தத்துவமாகும்.
பருப்பொருள் என்பது தனித்துவங்களின் முழுமையாகவும் முழுமையின் தனித்துவங்களாகவும் புறநிலையில் இயங்குகின்றன. பருப்பொருள் பற்றிய உண்மைகளை இயங்கியல் பொருள் முதல்வாதமாகிய அறிவியல் தத்துவத்தின் அடிப்படையில் முழுமையாக அறிந்துகொள்ள முடியும் என்பதை மனிதகுலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சிகள் காலந்தோறும் நிரூபித்து வந்துள்ளன. ஆனால் ஜார்ஜ் பர்சியின் தத்துவமோ பருப்பொருளின் உண்மைத் தன்மையை மறுக்கின்ற மாயாவாதமாகத் திகழ்கிறது. முழுமைக்குள் தனித்துவம் அடங்குகிறது என்பதை மறுக்கின்ற அறிவெதிர் தத்துவமாகத் திகழ்கிறது. அதாவது முழுமையை மறுக்கும் பைத்தியக்காரத்தனமாகப் பின்நவீனத்துவம் அர்த்தப்படுகின்றது.
பின்நவீனத்துவம் ஒரு பைத்தியக்காரத் தத்துவம் என்பதற்கு டாடாயிஸ்ட் ஓவியர் ஒரு நல்ல சான்று. டாடாயிஸ்டான ஓவியர் ஹான்ஸ் ஆர்ப் ஓர் முறையான ஓவியத்தை வரைகிறார். பின்பு பல துணுக்குகளாகக் கிழித்து எறிகிறார். பின்பு தரையில் சிதறி கிடந்த ஓவியத்துணுக்குகளை சிதறிக்கிடந்த அதே முறையில் பலகை ஒன்றில் பசை தடவி ஒட்டுகிறார். முதலில் வரையப்பட்டது திட்டமிடப்பட்ட ஓவியம். இப்போது ஒட்டப்பட்டதில் கிடைத்த ஓவியமோ திட்டமிடப்படாத புதிய ஓவியம். இது சந்தர்ப்பவசமானது. உண்மை என்பதும் சந்தர்ப்பவசமானதுதான். திட்டமிடுதல் என்பது பொய்யானது. இதுதான் டாடா என்று விளக்குகிறார். (ஆ.பூமிச்செல்வம்.52)
சந்தர்ப்பவசம் என்பது திட்டமிடப்படாத தான்தோன்றித்தனத்தின் வெளிப்பாடாகும். மனித குலத்தின் செயலூக்கம் மட்டுமே இயற்கையின் அம்சங்களில் திட்டமிட்ட நிகழ்வுகளை அரங்கேற்றுகின்றன. செயலூக்கம் அல்லாத இயல்பூக்கங்கள் அனைத்தும் இயற்கையின் திட்டமிடப்படாத நிகழ்வுகளே. திட்டமிடப்படாத நிகழ்வுகளுக்கு இடையில் திட்டமிட்டு வாழப் பழகுதலே முறைப்படுத்தப்படும் வாழ்க்கை முறைக்கு அடிப்படையாகும். முறைபடுத்தப்படும் நல்லதொரு வாழ்வியலைப் அடைய மனிதகுலம் திட்டமிட்டு பயணிக்க வேண்டும் என்பதுதான் வாழ்க்கை குறித்த அறிவியல் தத்துவத்தின் கண்ணோட்டமாகும். அத்தகைய பயணம் புறநிலை உண்மையாகச் சாத்தியப்படும் என்பதை வரலாற்று நிலையிலிருந்து விளக்குகின்றது அறிவியல் தத்துவம்.
பின்நவீனத்துவமோ டாடாயிசத்தைப் பற்றிக்கொண்டு திட்டமிட்ட வாழ்வை பொய் என்பதாக அறிவிக்கின்றது. முறைபடுத்தப்படுவதை உதாசினம் செய்கின்றது. சந்தர்ப்பவசமான தான்தோன்றித்தனத்தையே உண்மை என்பதாகச் சித்தரிக்கின்றது. இத்தகைய பின்நவீனத்துவ தத்துவத்தை அறிவியல் தத்துவம் என்று நம்பினால் விளைவு என்னவாகும்? டாடாயிசத்தைப் பற்றிக்கொண்டுள்ள பின்நவீனத்துவம் சமானிய மனிதரின் அறிவிற்கும் மனிதகுலத்தின் சமூக மேன்மைக்கும் டாட்டா காட்டிவிட்டு அறியாமை இருட்டில் தள்ளிவிடும்.
பின்நவீனத்துவம் தன்னை ஓர் அதிகார எதிர்ப்புக் கோட்பாடாக முகம்காட்டியுள்ளது. (ஆ.பூமிச்செல்வம்.12) இக்கூற்றை அறிவியல் தத்துவத்திலிருந்து முரண்படுகின்ற நிலைபாடுகளுடன் அவதானித்தால் பின்நவீனத்துவத்தின் அதிகார எதிர்ப்பு வெறும் முகமூடி என்பதாகவே பிடிபடுகின்றது.
அறிவியல் தத்துவத்திற்கு எதிராக அறிவியல் தத்துவத்தையே முடிச்சிடுகின்ற அயோக்கியத்தனத்தின் முகம் என்பது நிரூபணமாகின்றது.
அதிகாரத்தை எதிர்க்கின்ற பெருந்திரளான ஒடுக்கப்படும் மக்களிடமிருந்து அதிகாரத்தைக் காக்கின்ற ஒரு ஒப்பனைக்காரனின் நாடக முகமாகவே திகழ்கிறது.
இந்த நாடக முகத்தை நிஜம்போல சித்தரிப்பதற்காகவே சில பின்நவீனத்துவ பாதுகாவலர்கள் அரும்பாடு படுகிறார்கள். உதாரணத்திற்கு ஒருபாடு. “பின்னை நவீனத்துவத்தின் ஒட்டுமொத்தச் செயல்பாடுகளைக் கண்ணுறுமிடத்து அதிகாரக் கருத்தியல்களுக்கு மறுப்பினையும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஆதரவையும் நல்குவதாகக் காணக்கிடைக்கிறது” (ஆ.பூமிச்செல்வம்.344-345) இப்படியாகப் பலபாடுகள்.
மானுட சமூகத்தின் அசைவியக்கத்தை அநுமானிப்பதற்கும், அவர்தம் வாழ்வியலை அவதானிப்பதற்கும், இதுவரையிலான வாழ்வியலை மீளாய்வு செய்வதற்கும், மானுட அகத்தினுள் ஊடாடும் கருத்துநிலைகளை நகலெடுப்பதற்கும் அதிகாரமற்ற அதிநவீன சிந்தனைமுறையாக நடப்பு காலத்தில் பின்நவீனத்துவத்தை அடையாளம் காண முடிகின்றது. (ஆ.பூமிச்செல்வம்.7) இதன் அடையாளங்களை அறிவியல் தத்துவத்துடன் முரண்படுகின்ற தடயங்களுடன் மதிப்பீடு செய்தால் இயற்கை, மனிதன், சமூகம், அறம் அனைத்திற்கும் சவக்குழியாகத் திகழ்கின்ற இலாபவெறி முதலாளித்துவத்திற்கு அரணாகத் திகழும் தத்துவ அடையாளமாகவே பின்நவீனத்துவம் திகழ்கிறது என்பதை உணரலாம்.
அறிவியல் தத்துவத்தின் சமூகவிஞ்ஞான இலக்காகிய சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் சமூக மேன்மை அதிகாரத்திடமிருந்து சமூகத் தேக்க அவமானமாகிய முதலாளித்துவ அதிகாரத்தைப் பாதுகாக்க அவதரித்த சூத்திரதாரியின் வன்மக் குரலாகவே பின்நவீனத்துவத்தை அடையாளங் காண முடிகின்றது.
“பிரபஞ்ச அளவில் நிலவுகின்ற அனைத்து விதமான அதிகாரக் கருத்தியல்களுக்கும் எதிராக புறப்பட்டுள்ள பின்னைநவீனத்துவமானது, தமிழக புனைகதைப் படைப்பிலக்கியச் சூழலில் நுழைந்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நவீனத் தமிழ்ப்புனைகதைகள் உருவ, உள்ளடக்க உத்திகளில் பலவித மாற்றங்களைப் பெற்றுள்ளன. இவ்வித மாற்றங்கள் புனைகதை படைப்புச் சூழலையும் இவற்றால் பேசப்படும் உயிர்களையும் முன்னெடுத்துச் செல்லும் என்பவை ஆய்வின் வழி தெளிவுபடுகின்றன. எனவே இவ்வாய்வு பாதையில் கொண்ட இது குறித்த கருதுகோள்களானவை மெய்மைத்தன்மை உடையவனாக ஆகின்றன” (ஆ.பூமிச்செல்வம்.349)
பின்நவீனத்துவம் குறித்த அறிமுக நூலில் நிறைவாகச் சொல்லப்பட்டுள்ள இந்தப் பத்தியில் எதாவது புரியும்படி உள்ளதா?
படித்த எனக்கே புரியவில்லை என்பதல்ல செய்தி. பின்நவீனத்துவ தத்துவ இலக்கின்படி சமூகத்தேவையிலிருந்து சிந்திக்கும் எத்தகைய சிந்தனையாளர்களையும் மண்டையைக் குழப்பி சிந்திக்க முடியாதபடி நிர்மூலமாக்குகின்ற வரலாற்றுக் கடமையை பின்நவீனத்துவ தத்துவம் எப்படி செய்யும் என்பதற்கான அற்புத உதாரணமாக இந்த நிறைவுரை பகுதியைப் புரிந்துகொள்ள முடிகின்றது.
முன்னுரையில் எந்தப் பிரச்சினையையும் வரையறுத்துக்கொண்டு அதில் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான எந்தக் கருதுகோளையும் ஆசிரியர் முன் வைக்கவில்லை. ஆனால், சம்பந்தமே இல்லாமல் முடிவுரைப்பகுதியில் கருதுகோள் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்.
ஆய்வே இல்லாத ஒரு நூலை ஆய்வுவழி என்று குழப்புவதும், எந்தக் கருதுகோளும் இல்லாத ஒரு நூலில் கருதுகோள்கள் மெய்மைத் தன்மை உடையனவாக ஆகின்றன என்று தமக்குத்தாமே சான்றிதழ் வழங்கிக்கொள்வதும், புனைகதை படைப்புச் சூழலையும் இவற்றால் பேசப்படும் உயிர்களையும் முன்னெடுத்துச் செல்லும் என்ற வாக்கிய அமைப்பில் சிலாகித்து எட்டிப்பார்த்தால் முன்னே இருட்டாகத் தெரிவது மனிதகுலத்திற்கான சவக்குழி மட்டுமே என்பதும் அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்தால் தெளிந்த நீரோடையாக அறிய முடிகின்றது.
அறிவியல் தத்துவத்தின் கண்ணோட்டம் இருக்கட்டும், பின்நவீனத்துவ கண்ணோட்டத்திலேயே இதை புரிந்துகொள்ளலாம்.
“உண்மையில் பின்நவீனத்துவம் என்பதுதான் என்ன?
அ. அது நவீனத்துவத்தின் தொடர்ச்சி
ஆ. இல்லை, அது நவீனத்துவ நிராகரிப்பு
இ. இல்லை, இல்லை அது நவீனத்துவத்தின் நீட்சி
ஈ. அதுதான் இல்லை, அது நவீனத்துவத்தின் பின் நிகழ்வு
உ. இல்லவே இல்லை, அது நவீனத்துவத்தின் மறுபிறப்பு
ஊ. அதுவும் இல்லை, அது நவீனத்துவத்தின் அடுத்தக் கட்டம்
எ. எதுவுமே இல்லை. அது நவீனத்துவத்தின் இறப்பு
என்றெல்லாம் பின் நவீனத்துவம் பற்றிப் பேசுபவர்கள் பலவிதமாக விளக்கம் தருகிறார்கள். மேற்சொன்ன எல்லாவற்றையுமே சரி அல்லது தவறு என்று வரையறுத்துச் சொல்ல முற்படுவது பின் நவீனத்துவத்தை ஒரு சட்டகத்தில் வைத்துப் பூட்டுவது என்றே கொள்ள வேண்டும் என்பதாக விளக்கம் தருகிறார் எம்.ஜி.சுரேஷ். (ஆ.பூமிச்செல்வம்.28)
விளக்கத்தைப் படித்ததும் தலை கரகரவென்று சுற்றுகிறதா? இப்படித்தான் அறிவியல் விளக்கம்போல பம்மாத்து செய்து நம் அறிவைச் சவக்குழியில் தள்ளிவிடும் தந்திரத் தத்துவம் பின்நவீனத்துவம்.
வரையறை செய்வதே ஒரு சிறையெனில் பின்நவீனத்துவம் என்ற பெயரால் வரையறுக்கப்படுவதே தேவையில்லையே. பெயரில் சிறைபடுவது சிறையாகாதா? அதற்கே தெரியும். தனக்கு வசதியான பெயரை வரையறுத்துக் கொள்ளாவிட்டால் தத்துவம் என்ற அங்கீகாரம் கிட்டாமல் பித்தேறிய பைத்தியங்களின் புலம்பல் என்று மக்களால் நிராகரிக்கப்படுவோம் என்பதை நன்கு அறியும். ஏனெனில், அது மக்களின் அறிவுத்தாகத்தை நிர்மூலமாக்க வந்த சதிகாரத் தத்துவம்.
பின்னவீனத்துவம் என்பது சமூக மேன்மைக்கு சாத்தியமான அறிவியல் தத்துவம் அல்ல. விளிம்பின் போர்வையில் முழுமையை மறைக்கும் பைத்தியக்காரத் தத்துவம். கலகக் குரல் எள்ற முகமூடி அணிந்துவரும் களவாணித் தத்துவம். அறிவியல் தத்துவத்திற்கு எதிராக அறிவியல் தத்துவத்தையே மோதவிட்டு வேடிக்கை பார்க்க விரும்புபவர்களின் கள்ளாட்டைத்தனம்.
நிறைவாக சொல்வதெனில், மார்க்சியம் என்ற அறிவியல் தத்துவத்திற்கு எதிரான தத்துவ வெளிப்பாடாக வரலாற்றில் தோன்றி, இலாபவெறி முதலாளித்துவத்தின் ஆதரவு குரலாகக் தன்னை அம்பலப்படுத்திக் கொள்ளாமல் முதலாளித்துவத்தை எதிர்க்கும் தத்துவம் போல நடித்து மார்க்சிய அறிவியலை நிர்மூலமாக்க முயல்கின்ற நச்சு தத்துவமாகவே பின்நவீனத்துவம் விளங்குகிறது. தோற்றுப் போய்க் கொண்டிருக்கும் முதலாளித்துவம் தனது கள்ளாட்டையை அழுகுணித்தனமாக ஆடுகிறது. அழுகுணித்தனத்தின் குரலாகவே வரலாற்றில் பின்நவீனத்துவத்தை அறிய முடிகின்றது. இதனைக் கலகக்குரலாக சித்தரிப்பதெல்லாம் பாம்பை பட்டாடையாகச் சித்தரிப்பதற்குச் சமம்.
சமூகத் தேக்கத்திற்கு ஆதரவான பின்நவீனத்துவம் ஓர் அறிவியல் தத்துவம் அல்ல, அபாயத் தத்துவமே.
துணை செய்தவை
- பின்னை நவீனத்துவம். ஆ.பூமிச்செல்வம்.2014.அகரம் வெளியீடு.
- அமைப்புமையவாதம் பின்அமைப்பியல் மற்றும் கீழைக் காவியஇயல். கோபிசந்த் நாரங்க். 2005. சாகித்திய அகாதெமி.
- இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் - தேவிபிரசாத் சட்டோ பாத்யாய
- தொல்காப்பியம் தெளிவுரை. அறிஞர் ச.வே.சுப்பிரமணியன்.2019(2000).மணிவாசகர் பதிப்பகம். சென்னை.
- திருக்குறள் https://www.thirukkural.net/ta/kural/adhigaram-040.html
- மாணவர்களது அவையின் முரண்பாடுகளும் கவனிப்பாரது பொறுப்புணர்வும். புதியவன். செப்.2012. காக்கைச் சிறகினிலே.
- மார்க்சியமும் மொழியியலும். வி.ஐ.லெனின், ஜோ.ஸ்டாலின். புதுமைப்பதிப்பகம்.2017.புதுமை பதிப்பகம்.
- சிவத்தம்பி,கா. 2010. நவீனத்துவம்-தமிழ்-பின்நவீனத்துவம். சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
- புதியவன். 2014. நீங்களும் சமூகவிஞ்ஞானி ஆகலாம். கோயம்புத்தூர்: முகம் பதிப்பகம். தமிழில் இலக்கிய வரலாறு.கார்த்திகேசு சிவத்தம்பி.ஜுன் 2000 (1988).சென்னை. நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
- இலக்கிய அறிவியல். புதியவன்.https://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5444:2019-10-24-12-39-00&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82
- சிவக்குமார்,கே.2016. தமிழகப் பழங்குடிகள் பற்றிய தமிழ்ப் புதினங்கள்: இனவரைவியல் நோக்கு. முனைவர் பட்ட ஆய்வேடு. புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி.
- முனைவர் கே.சிவக்குமார், SSM கலை மற்றும் அறிவியல்கல்லூரி, திண்டுக்கல்