நாகரத்தினம் கிருஷ்ணாவின் “பொழிவது சுகம்” – நூலை முன்வைத்து

 நாகரத்தினம் கிருஷ்ணாவை இந்த ஆண்டு ஏப்ரலில் நண்பர் பிரெஞ்சுப் பேராசிரியர் நாயக்கர் மூலமாகச் சந்தித்துப் பழகுகிற வாய்ப்பு கிடைத்தது; பிரான்சில் வாழும் அவர் அடிக்கடித் தனது சொந்த மண்ணுக்கு வந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்; ஆனால் இந்தத் தடவைதான் அவரோடு உரையாடுகிற அனுபவம் கிட்டியது. மனிதர்களுக்கிடையேயான உறவுகளைக் கூடச் சந்தர்ப்பங்கள்தான் நிர்ணயிக்கின்றன போலும். அவரது எழுத்துக்கள் சிலவற்றைக் காலச்சுவடு போன்ற சிறுபத்திரிக்கையில் வாசித்திருக்கிறேன். ஆனால் புத்தகமாக எதையும் வாசித்ததில்லை. அந்த வாய்ப்பும் இப்பொழுது கிடைத்தது. செஞ்சி நாயக்கர் வரலாற்றைக் களமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ என்ற நாவலை, செஞ்சியிலே வெளியிட்டு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதன்பொருட்டு நாவலை வாசிக்க வாசிக்க அவருடைய எழுத்துக்குள்ளேயே வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு எடுத்துரைப்புப் பாணியில் எழுதியுள்ளார். அந்நாவலைக் குறித்து ஒரு மதிப்புரையும் எழுதியுள்ளேன். இப்பொழுது இங்கே நான் சொல்ல வந்தது அவருடைய மற்றொரு நூலான “மொழிவது சுகம் (சிந்தனை மின்னல்கள்)” என்பது குறித்தாகும். 24 கட்டுரைகளின் தொகுப்பாக அமையும் இந்நூலுக்குச் சிந்தனை மின்னல்கள் என்று தமிழில் அடைமொழி கொடுத்துள்ளார்; ஆங்கிலத்தில் ‘சுதந்திரச் சிந்தனைகள்’ என்று பொருள்படும் Free thoughts என்று அடைமொழி தந்துள்ளார். உண்மையில் இரண்டுமே பொருந்தும் படியாக இந்நூலிலுள்ள செய்திகள் மின்னல் போன்று பன்முகப்பட்ட திசைியல் ஒளி பாய்ச்சுபவைகளாகவும், யாருக்கும் அஞ்சாத சுதந்திரமான எண்ணவோட்டங்களாகவும் அமைந்துள்ளளன. கூடவே, மொழியின் நுட்பங்களை உணர்ந்து அதை வேலை வாங்கும் ஓர் ஆளுமைமிக்க எழுத்தாளராக ஆழமாகப் பதிவாகிக் கொண்டே போகிறார்;

 கால் நூற்றாண்டிற்கும் மேலாக ஐரோப்பியச் சூழலில் வாழ்ந்தாலும், தமிழ் மண்ணையும் அதன் வாழ்வையும் குறித்துப் பெரிதும் அக்கறையோடு சிந்திப்பவராகவும், அதனால் பாரம் சுமப்பவராகவும் தன் எழுத்தின் மூலம் வெளிப்படுகிறார்; எந்தப் பொருள் குறித்து எழுதினாலும் தமிழ்ப் பின்னணி, ஐரோப்பிய பின்னணி என்ற இரண்டு களத்திலும் நின்று கொண்டு அலசுவதால் அவர் எழுத்துப் பளிச்செனத் தன்னைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளுகிறது.

 ‘பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம்’ எனச் சொல்லும் எழுத்தாளர் மரிதியய் (Marie NDiay) என்பாரை அறிமுகப்படுத்த முயலும் கிருஷ்ணா, தமிழ்நாட்டில் நிகழும் வாரிசு அரசியலை, வாரிசு சினிமா உலகத்தை எல்லாம் முதலில் கேலி செய்கிறார்; நல்லவேளை எழுத்தாளர் உலகத்தில் அந்த வாரிசுத்தொல்லை இல்லை என அமைதி அடைகிறார்; இதற்கும் காரணம் எழுத்தாளனை அடையாளப்படுத்தப் பயன்படுகின்ற “தரித்திர சூழல்தான்” என்கிறார்; இங்கேயும் “பெட்டி பெட்டியாய்ப் பணத்திற்கும் வானளாவிய அதிகாரத்திற்கும் வாய்ப்பிருக்குமென்றால்” வாரிசுகள் உற்பத்தி ஆகிவிடுவார்கள் என்று கேலிமொழியைக் கையாளும்போது வாசிப்பதும் மொழிவது போலவே சுகம் பெறுகிறது. தொடர்ந்து அங்கே எவ்வாறு தர்க்கப்பூர்வமாகத் தேர்வுக் குழுவினர் பரிசுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று அவர் விளக்கிக் கொண்டே போகும்போது, இங்கே எப்படிப் பரிசு என்பது தரம் சார்ந்து இல்லாமல், ‘வேண்டியவர்’ என்ற தளத்தில் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற நம் இலக்கிய உலகின் இழிநிலையைச் சுட்டிக்காட்டி விடுகிறார். இன்னொரு முக்கியமான தகவலையும் தருகிறார். 2007 – ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு அதிபராக நிக்கோலாஸ் சர்க்கோசி அறிவிக்கப்பட்டவுடன், “அந்த ஆண் ஒரு மிருகம், இனவாதி, அவரது ஆட்சியின்கீழ் பிரான்சில் வசிக்க எனக்கு விருப்பமில்லை” என்று வெளியேறி கடந்த மூன்று ஆண்டுகளாகப் பெர்லினில் வாழ்ந்து வருகிறாராம் அந்த 43 வயது பெண் எழுத்தாளர்; ஆனாலும், பிரெஞ்சு இலக்கிய உலகம் அவருக்குத்தான் 2009-இல் கொன்க்கூர் இலக்கியப் பரிசை அளித்து மரியாதை செய்கிறது. நம் தாய்ப்பூமியில் இது நிகழுமா?

அங்கேயும் வலது, இடது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் அரசியல்வாதிகள் பரிசுக்குரியவர் பிரான்சு தேசத்தின் பெருமையைப் போற்றவில்லை; பிரான்சு நாட்டு அதிபரையும் நாட்டையும் சிறுமைப்படுத்திப் பேசி இருக்கிறார் என்று விமர்சித்துள்ளனர்; ஆனால் தேர்வு செய்த படைப்பாளிகள் அவர் என்ன எழுதியிருக்கிறாரெனப் பார்த்துதான் பரிசளிக்கிறோமே தவிர என்ன பேசினார் எனப் பார்த்துப் பரிசளிக்கவில்லை. தவிர சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழியப் பேசுகிறோம், ஓர் எழுத்தாளரை இப்படிப் பேசக்கூடாது, அப்படிப் பேசக்கூடாதென்று தெரிவிப்பதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? சுதந்திரமான நாட்டில்துானே இருக்கிறோம்?” என்றும் அரசாங்கத்தைப் பாரத்துக் கேட்டிருக்கிறார்கள். ‘நாமார்க்கும் குடியல்லேம்’ என்று இந்தக் கடடுரைக்குத் தலைப்புக் கொடுத்துள்ளார். கூடவே அதிபருக்கு விசுவாசமாக இருந்த இடதுசாரி அமைச்சரை ”ஐம்பது பைசாவிற்குக் கால் மடக்கிக் கையேந்துகிறது எங்கள் ஊர் யானை’ என்று கவிஞர் சுயம்புலிங்கத்தின் வரியை எடுத்துப் போட்டு விமர்சிக்கும்போது இவருக்குள்ளும் வினைபுரியும் சுதந்திரயுணர்வைப் புரிந்துகொள்ள முடிகிறது.

 பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட நிகழ்வோடு சாதிவெறி காரணமாக உத்தபுரத்தில் எழுந்த சுவரை இணைத்தொரு கட்டுரை. ஹிட்லராவது தனது இனத்தை நேசித்தான்; ஆனால் ஸ்டாலின் தன் நிழலைக்கூட நம்பியவனல்ல என்கிறார்; 1945 ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடியும் தருவாயில் ஜெர்மன் விழ்ந்து சோவியத் யூனியன் படைகள் பெர்லின் நகரத்திற்குள் நுழைந்தபோது இரண்டு மில்லியன் (20லட்சம்) பெண்கள் வன்புணர்ச்சிக்கு ஆளானார்கள் என்ற தகவலைத் தந்துவிட்டு, நாஜிப்படைகளைவிட இம்மியளவும் தரத்தில் ‘செம்படைகள்’ குறைந்ததல்ல என்கிறார். போரினால் ஜெர்மன் கிடைத்தது; இரண்டு ஏகாதிபத்தியங்களும் அதைக்கூறு போட்டுக் கொண்டன. ஆனால் சோவியத்தின் கீழ் இருந்த கிழக்கு ஜெர்மனியிலிருந்து மேற்கத்தியரின் அரவணைப்பில் இருந்து மேற்கு ஜெர்மனியிக்கு மக்கள் புலம்பெயரத் தொடங்கினர் (2-7 மில்லியன் மக்கள்) இதைத் தடுப்பதற்காகத்தான் 1961 – இல் பெர்லினை இரண்டு துண்டாக்கும் சுவர் எழுப்பப்பட்டது. 165 கி.மீ நீளம் 302 காவல் அரண், மின்சாரம் பாய்ச்சப்பட்ட வேலி, தானியங்கி துப்பாக்கிப் பொருத்தப்பட்ட காவல் தூண்கள், குறி பாரத்துச் சுடுவதில் வல்ல காவலர் – இப்படிக் கட்டப்பட்ட சுவர் 1989 – ஆண்டு நவம்பர் மாதம் 9-ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதே ஆண்டில்தான் தமிழ்நாட்டின் உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக உயர்சாதியினர் சுவர் எழுப்புகிறார்கள். இதேபோல் இஸ்ரேல் பாலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்ரமித்ததோடு மட்டுமல்லாமல் 2005 – ஆம் ஆண்டில் இருந்து சுவரும் எழுப்பிக் கொண்டிருக்கிறது. காலத்தின் முன்னால் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டது போல இவைகளும் இடிக்கப்படும். இலங்கைத் தமிழினினமோ பாலஸ்தீனமோ உத்தபுரமோ ஒடுங்கிவிடாது என்கிறார். இதோடு நின்றுவிடாமல், அப்போதும் எங்கோ வேறு இடத்தில் வேறொரு சுவர் எழுந்துகொண்டுதான் இருக்கும் என்று கிருஷ்ணா எழுதும்போது மனிதவாழ்வு குறித்த அவரது புரிதல் ஆழமாகப் பரவுகிறது.

 பெற்றோர் தொடங்கி ஆசிரியர், சமூகமென அனைவரும் வளரும் குழந்தைகள் போல் நிகழ்த்திக் காட்டுமு் வன்முறைதான், பின்னால் அவர்கள் மழலையர் பள்ளிகளில் கடித்துக் கொள்வதற்கும், தொடக்கப் பள்ளிகளில் கட்டிப்புரண்டு சண்டையிடுவதற்கும், நடுநிலைப் பள்ளிகளில் ரவுடிகள் போல் நடந்து கொள்வதற்கும் பருவ வயதில் பெண்களைச் சீண்டுவதற்குப் பாலியல் வன்கொடுமை செய்வதற்கும் காரணமாக அமைகிறது என்று கூறுகிற பிரான்சு நாடடுக் குழந்தை நல மருத்துவர் ‘எட்விஜ் ஆந்த்தியே’ என்பார் கூற்றை எடுத்துக்காட்டி ‘அடித்து வளர்க்காத பிள்ளை உருப்படாது’ என்கிற நம்முடைய அணுகுமுறையைக் குப்பைத் தொட்டியில் தலைகுப்புறத் தூக்கிப் போட்டுப் புதைத்தொழிக்கக் சொல்லுகிறார். இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை குறித்து ‘ஊடகங்கள்’ இந்தத் திசையில் திரும்பினால் ஆக்கப்பூர்வமாக இருக்கும்.

 இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த ஹத்தியில் நடந்த நிலநடுக்கம் 15 லட்சம் மக்களை அனாதை ஆக்கியது 70000 மக்களுக்கும் மேல் இறந்த தேதி ஒன்று என்றது”. உயிரற்ற உடல்களின் மௌத்தினைச் சகித்துக் கொள்ள எனக்குப் போதாது. முடிவின்றி அவை நிகழ்த்தும் கதையாடல் ஒன்றை அச்சுறுத்துவன (31 – 32)./புர்க்காவும் முகமும் என்ற கட்டுரையில் முகத்தின் மொழியைக் குறித்துப் பேசுகிறார்/. மகன் தந்தைக்காற்றும் உதவி என்ற கட்டுரையில் 1960 –இல் கார் விபத்தில் இறந்துபோன புகழ்பெற்ற எழுத்தாளர் அல்பெர்கமுய் – யின் உடலை ஒரு தேவாலயத்திற்கு மாற்றுவது என்ற பிரெஞ் சு அதிபரின் யோசனையை அ.சமுய்-வின் மகன் உறுதியாக நின்று மறுத்துவிட்டார் என்கிற தகவலைத் தரும் கிருஷ்ணா, அதையும் ஆளும் வர்க்கத்தினை விமர்சிப்பதற்குக் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்/.

 ஒளியும் நிழலும் என்ற கட்டுரை எழுத்துலகில் நடக்கும் பல மோசடிகளில் ஒன்றான கோங்குரைட்டர் பற்றிய கட்டுரை புகழ்பெற்ற அலெக்ஸாந்தரு துய்மாவிற்கு இருந்த கோங்கு ரைட்டர் ஒகுய்ஸ்த் மக்கே பற்றிய கட்டுரையில் பல தகவல்களைச் சுவைபச் சொல்லிவிட்டு இறுதியாக இப்படி எழுதுகிறார்!. இன்றைக்கு எழுத்து, பணி அல்ல; பிறவற்றைப் போல ஒரு தொழில்….. (ப. 55)/ மனுநீதிச் சோழனை முன்னிறுத்தி, மரணதண்டனை குறித்த ஒரு விசாரணையை நடத்துகிறார். வருடத்திற்கு 7000 பேர் மரணதண்டனைக்குள்ளாகின்றனர். இதில் சீன அரசு மடடும் தன் பங்கிற்கு 1000 பேரைக் கொல்லுகிறதாம்; அடுத்த வரிசையில் அமெரிக்காவும் ஈரானுமாம். அமெரிக்காவில் மட்டும் குற்றவாளியெனக் கருதி மரணத்தண்டனை வழங்கப்பட்டவர்களில் 7% மறுவிசாரணையில் குற்றமற்றவர்களெனத் தெரிய வந்திருக்கிறதாம். மீதமுள்ள 93% -லும் 20% னரே மரணதண்டனைக்குள்ளான குற்றவிதிகளுக்குப் பொருந்துகிறார்களாம் – இப்பொழுது புரிகிறதா மரண தண்டனை நீதியின் பொருட்டா? அல்ல அரசு அதிகாரத்தின் பொருட்டா?

 அந்தமான் நிக்கோபார் தீவில் வாழ்ந்த போவா(Poa) இன மூதாட்டி (85-வயது) இறந்து போனாள்; அவளோடு இந்தியாத் துணைக்கண்டத்தில் பேசப்பட்டு வந்து ‘போ’ மொழியும் இறந்துபோய்விட்டது. இப்படி எத்தனை மொழிகள் இன்றைக்கு அழிந்து கொண்டிருக்கின்றன. யுனெஸ்கோ அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 1635 மொழிகளில் 196 மொழிகள் வெகுவிரைவில் அழிந்துபோகும்; இதில் தமிழும் ஒரு மொழியாகிவிடக்கூடாது என்று ஆதங்கப்படுகிறார் ” நமது வாழ்க்கை மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் வணிகத் தந்திரங்களாலானது என்றான பிறகு, மொழியில் தமிழராக நீடிப்பது எத்தனை தலைமுறைக்கு சாத்தியம்” என்றொரு அடிப்படையான, மிக முக்கியமான கேள்வியைத் தமிழர்கள் முன்வைக்கிறார்.

 நமக்குள் இருக்குளம் இன்னொருவனாகிய ஏமாற்றுப் பேர்வழி குறித்து ஒரு கட்டுரை பல அரிய மேனாட்த் தகவல்களுடன் (66 – 72) அமைந்துள்ளது,

 நம்மிலுள்ள அந்த ஒன்றரை பேருக்கு நன்றி’ என்ற கட்டுரை” எஜமான மனங்களைக் காட்டிலும் சேவக மனங்கள், ஆபத்தானவை” என்பதையும் நம்மில் பலரும் அதிகாரத்திற்கு வளைந்து போகிறவர்கள்தாம்; மேலும், அதிகார ஆதரவு உண்டெனில் எவரையும் கொலை செய்யவும் – தயாராக இருக்கிறவர்கள்தாம் என்பதையும் உளவியல் சோதரென அடிப்பயைடி்ல் விளக்கிவிட்டு, இதையும் மீறி சிலபேர் மானுட அறத்தைக் காப்பாற்ற ஒவ்வொரு காலகட்டதிலேயும் முன் வருகின்றனர். காந்தியடிகள் போல; தினன்மென் சதுக்கத்தில் டாங்கியை வழிமறித்த கணத்தில் விஷ்வரூபமெடுத்த அந்த முகமற்ற மனிதர்களைப் போல.

 புன்முறுவல் செய்ய 17 தசைகளில் ஒத்துழைப்பு தேவை என்ற அறிவியல் உண்மைகூறி, திருமுகத்து அழகுறு சிறுகதையை விதந்தோதுகிறார். பிரெஞ்சுக் காலனித்துவத்தின் கொடூர முகத்தைப் பல மேற்கத்தியர் நீதுி என்ற கட்டுரையும் பிரான்சு சாட்டின் பண்பாட்டு அரசியல் என்ற கட்டுரையிலும் நுட்பமாக அலசிவிடுகிறார். “அரசியல் வரலாறு என்பதே ஆதிக்க வரலாறுதான் காலனிய வரலாறுதான் தடியெடுத்த சிறுகூட்டத்தின் வரலாறுதான்” என்றெல்லாம் பேசும் கிருஷ்ணா, பிரெஞ்சு கலை இலக்கிய உலகமும் இன்றைக்கு ஆங்கிலத்தோடு ஒப்பிடுமபோது எவ்வளவு பின்தங்கி விட்டது என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

 முயற்சி திருவினையாக்கும் என்ற கட்டுரையில் நீதி, தண்டனை, சிறை, ஆதிக்க அரசு குறித்தெல்லாம் பிரான்சு நாட்டுப் பின்னணியில் விளக்கமாக எடுத்துரைத்துவிட்டு, சமுதாயத்தின் நலம், நீதி போன்ற சொற்களைத் தந்திரமாகக் கையாளு அணியோர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் மனதை உலுக்குகின்றன” என்று வருத்தப்படுகிறார்.

 மிலென் குந்தெராவையும் குண்ட்டெர் கிரானையும் எழுத்தும் அரசியலும் என்ற பொருளில் அறிமுகப்படுத்திவிட்டுத் தமிழர்களின் எழுத்தாளர்கள் எவ்வாறு பரிசுக்கும் பொருளுக்கும் புகழுக்குமாகத் தம்மை விற்றுக் கொள்ளுகிறவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்லிக் காட்டுகிறார்.

 இறப்பும் அனுதாபமும் என்ற கட்டுரையில் டயானா கார் விபத்தில் இறந்தபோது ஐரோப்பிய வெள்ளை இன அரசுகள் அனுதாபச் செய்திகளை எப்படி வெளியிட்டன அதேநேரத்தில் மைக்கேல் ஜாக்ஸன் என்ற பெரும் இசைக்கலைஞன் இறந்தபோது அவைகள் எப்படி நடந்து கொண்டன என்பதை ஒப்பிட்டுக் காட்டி இறப்பில்கூட நிறவெறி ஐரோப்பியாவில் வெளிப்படுகிறது; அதுபோலவே இந்தியாவில் ஆந்திரமுதல்வர் விபத்தில் இறந்தபோது போட்டிப்போட்டுக் கொண்டு எட்டுத் திசைகளிலும் இருந்தும் அனுதாபச் செய்திகள் பறந்தன. இலங்கைத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டபோது அனுதாபச் செய்திகளில் ஒன்றுபடாத தமிழ்நாட்டுத் தலைவர்கள்கூட ஆந்திரமுதல்வர் இறந்துபோது ஒன்றுபோல் அனுதாபச் செய்திகளை அனுப்பித் தங்கள் இருப்பை உறுதிபடுத்திக் கொண்டனர். தமிழர்கள் தமிழர்களுக்காக ஒன்றுபடுவார்களா? எனக் கேட்கிறார். ஒரு கட்டுரையில் ஆஸ்திரேலியாவில் இந்தியர்களுக்கு எதிரான நிறவெறி நிகழ்கிறது என்பது இருக்கட்டும். இந்தியாவிற்குள் நிலவும் நிறவெறியை என்ன சொல்வது எனக் கேட்கிறார். நமது ஊடகங்களும் விளம்பரங்களும் சிவப்புத் தோலைத்தானே அழகு அழகென முன்னிறுத்துகின்றன. இந்த அடிமைத்தனத்திற்கும் பெயரென்ன?

உலக அளவில் நடக்கும் பிள்ளை கடத்தில் பற்றியும் ஒரு கட்டுரை. தொண்டு நிறுவனம் என்ற பேரில் நடக்கும் மோசடி குறித்தெல்லாம் புள்ளிவிவரத்தோடு பேசுகிறார்; உலகமயமாதல், என்ற பொருளாதாரச் சூழலில் தாம் செழிக்கலாம் என்று கருதிய ஐரோப்பியாவும் அமெரிக்காவும் எப்படி இடர்ப்பாடுக்குள் சிக்கிக் கொண்டன என்பதையும் இச்சூழலைச் சீன எவ்வாறு வெற்றிக்கரமாகக் கையாண்டு இன்றைக்கு மிகப்பெரிய வல்லரசாக வளர்ந்து நிற்கிறது என்பதையும் ‘ஆறாவது கதவு’ என்ற கதையில் நுணுக்கமாக எடுத்துரைக்கிறார். எல்லாக் கட்டுரைகளிலுமே அதிகாரத்திற்கும் ஆதிக்கத்ிற்கும் ஆக்கிரமிப்பிற்கும் எதிரான ‘குரல் பதிவாகிக் கொண்டே போவதால் அவரது அலைவரிசையும் நம் அலைவரிசையும் ஒரே நேர்கோடடில் வந்துவிடுகிறது அதானல் சுகமான வாசிப்பு வாய்த்துவிடுகிறது. மிகச் சிறப்பாக அலிகாரை எடுத்து வெளியிட்டுள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும். கிருஷ்ணா எழுத்து பல்வேறு பத்திரிக்கைத் தகவல்களின் அடிப்படையின் மேல் நடந்தாலும், வாசிப்பதற்கு இதமான எழுத்தாக அது மாறுவதற்குக் காரணம் அவர் கையாளும் மொழியும் கேலி கலந்த முறையும் கூடவே அடிப்படையில் அழமாக இயங்கும் அறச்சீற்றமும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

 முட்டாள்களைக் குறித்துப் பேசும் ஒரு கட்டுரை அவரது கல்லூரிக் கால நிகழ்வை ஒன்றைப் பதிவு செய்கிறது. அடுக்குமொழியானால் கழக உறுப்பினர்களை எந்த அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்பதை விளக்குகிறது அந்த நிகழ்வு. கல்லூரி விழாவிற்குப் பேச வந்த கழக சட்டமன்ற உறுப்பினர் ‘அடுக்குமொழி மோகத்தால்’ சற்றுமுன்னர் சிற்றுண்டியும் சிறுநீரும் அருந்தினோம். என்று பேசினாராம். பேச்சினூடே, நான் என்ன சொல் வருகின்றேன் என்றால்…என்று அவர் பேசும்போது எதிர்க்கட்சிக்கு காங்கிரஸ் மாணவர்கள், சற்றுமுன்னர் சிற்றுண்டியும் சிறுநீரும் அருந்தினீர்கள் என்று எதிர்ப்பாட்டுப்பாட , விழா மோதலில் முடிதந்தாம். மொழிபெயர்ப்பைக் குறித்தும் கிருஷ்ணா சில நுட்பமான பார்வைகளைப் பதிவு செய்துள்ளார். ஒரு படைப்பேயே ‘மொழிபெயர்ப்பாளனைத் தவிர்த்து வேறொருவர் அத்தனை ஆழமாகப் படிப்பதில்லை’ என்று தொடங்கும் அந்தக் கட்டுரை, மொழிபெயர்ப்பாளன் என்பவன் எதைச் சொல்லவேண்டுமோ அதைத் தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமற்ற ஓர் எழுத்தாளன் என்ற ஜார்ஸ் ஆர்த்தர் கோல்ட்ஸ்மித் கூற்றை எடுத்துக்காட்டி விளக்குகிறது. ஒரு மாநில மொழியாலான படைப்பு நிகழ்கிறது என்பதை மிக நுட்பமாக விளக்குகிறார்…“நல்ல வாசகனை மொழிபெயர்ப்பாளன் வாசிப்பின் முடிவில் தனது உணர்வுகளுக்குச் செவிச் சாய்க்காது பொதுமதிப்பீட்டிற்கு உட்பட்டு மொழிபெயர்ப்புக்கான நூலைத் தேர்வு செய்கிறான்” என்கிறார்.

நாகரத்தினம் கிருஷ்ணா, ‘மொழிவது சுகம், (சிந்தனை மின்னல்கள்)’ அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை.11, 2012. விலை. ரூ.90/- பக். 152

- பேரா.க.பஞ்சாங்கம், புதுச்சேரி.

Pin It