தலித்தியத்தை முன் வைத்துத் தமிழில் கவிதைகளும் ஹைக்கூக்களும் கட்டுரைகளும் எழுதப் பட்டு வருகின்றன, சிறுகதைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழில் எண்ணற்ற சிறுகதையாளர்கள் உள்ளனர். சிலரே தலித்தியத்தை மையமாக்கி எழுதி வருகின்றனர். இக் கட்டுரையின் வாயிலாக தலித்தியம் பேசும் சில சிறுகதைகள் முன் வைக்கப் படுகிறது. தலித்தியத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணத்தில் எழுதப் படுகிறது.

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவது, சுத்தப் படுத்துவது மகா கொடுமை. 'மலரினும் மெல்லிது'தொகுப்பில் மலத் தொட்டி சுத்தப் படுத்துபவர்கள் குறித்து 'கழிவு' என்னும் சிறுகதையை எழுதியுள்ளார் விழி. பா. இதய வேந்தன். அவர்களின் வறுமையைத் துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளார். மலத் தொட்டியைச் சுத்தம் செய்து விட்டு வீட்டுக் காரனிடம் கூலியைக் கூட்டிக் கேட்கும் பேரம் போதான உரையாடல் உள்ளத்தையே உறையச் செய்கிறது.

"நூறு சேத்துக் குடுக்கலாம். பெரிய தொட்டி. வொடம்பு தாங்கல"

"தே பாரு. எழுநூறு கேட்ட. பேசனது நானாறுதான். **

"ஒரு அம்பதாச்சும்"

"அதெல்லாம் முடியாது, மொதல்ல வாய் சுத்தம் வேணும்"

இவ்வுரையாடலே சிறுகதையை உச்சம் பெறச் செய்கிறது. தலித்துகளின் நிலையைச் சுட்டிக் காட்டுகிறது. வாய் சுத்தம் வேண்டும் என்பவர்களே அழுக்கானவர்கள் என்கிறார். தலித்துகள் சுத்தமானவர்கள் என்று குறிப்பிடுகிறார்.

கலை என்பது பொதுவானது. பரத நாட்டியம் மேல் தட்டு மக்களுக்கே உரியது என காலம் காலமாகக் கற்பிக்கப் பட்டு வரும் ஒரு தவறhன கற்பிதமாகும். வனிதா என்னும் தாழ்த்தப் பட்ட பெண் பரத நாட்டியம் கற்க விரும்புகிறாள். கற்றுக் கொடுக்க ஏற்றுக் கொண்டாலும்'தாழ்த்தப் பட்டவள்'என்னும் ஒரே காரணத்திற்காக வெளியில் நின்று கற்பிப்பது இன்னும்'தீண்டாமை'த் தொடர்வதையே உறுதிப் படுத்துகிறது. இச் செயலை எதிர்த்து வனிதா வெளியேறுவது தீண்டாமைக்கு எதிரான அடி. 'ஆட்டம்'என்னும் இச்சிறுகதை மு்லம் ஓர் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ளார் இதய வேந்தன். தொகுப்பு 'மலரினும் மெல்லிது'.

'உயிரிழை' என்னும் தொகுப்பில் இதய வேந்தன் எழுதிய'நிறம்'கதையும் தலித் குறித்தானதே, சிறுகதையில் கலா என்பவர்"நான் சிறைக் கொடுமையை விட அதிகமா அனுபவிக்கிறேன்"என்று ஜெயாவிடம் சொன்ன போது அந்த கொடுமையை எந்த வார்த்தையாலும் எழுத முடியாது என்றே தோன்றுகிறது. "உனக்குன்னு நெறய கடமையிருக்கு. லட்சியமிருக்குது. உன்ன நீ உயர்த்திப் பார்த்தா மற்றது எல்லாம் கீழாத்தான் தெரியும். ரெண்டாயிரம் வருசத்து மதிப்பீடுகளை நீ ரெண்டு வருசத்துல மாத்திட முடியாது. உன் அறிவுதான் உனக்கு பெருமை சேர்க்கிறது. எழுந்து வா"என்ற ஜெயாவின் வார்த்தைகள் கலாவிற்கு மட்டுமல்ல அடிமைப் பட்ட . தாழ்த்தப் பட்ட அனைவருக்குமாக உள்ளது. நம்பிக்கையும் ஏற்படுத்துகிறாஅர். நிறத்தை விட அறிவே முக்கியம் என்கிறார்.

'ஏஞ்சலின் மூன்று நண்பர்கள்'என்னும் தொகுப்பும் விழி. பா. இதய வேந்தனுடையதாகும். பிணத்தை புதைத்து, எரித்து பிணத்தோடு வாழும் வெட்டியான் பற்றிய கதை. வெட்டியான் வாழ்வு எவ்வளவு மோசமானது என விவரித்துள்ளார். "இரண்டாயிரம் ஆண்டுகளாய் வஞ்சிக்கப் பட்டவர்கள் நாங்கள். எங்களின் கற்பு சூரையாடப்பட்டது. சாதியின் பெயரால் ஒதுக்கி வைக்கப் பட்டோம். களங்கப் பட்டோம். கஷ்டப் படடோம். எங்கள் குரல் யாருக்குமே கேட்க வில்லை. யாரும் கண்டு கொள்ள வில்லை" என வெட்டியான் மகள் பேசுவதானது ஒட்டு மொத்த தலித்தின் குரலாக வெளிப் பட்டுள்ளது.

தாழ்த்தப் பட்டவர்களை ஏமாற்றுவதிலும் சுரண்டுவதிலும் பலரும் முனைப்போடே உள்ளனர், அதில் அரசியல் வாதியின் பங்கு பெரிது. அவ்வாறான அரசியல் வாதிகளுக்கு எதிரான ஒரு கதை'ஒத்த அடி'. எழுதியவர் அன்பாதவன். தொகுப்பு'தீச் சிற்பம்'. தாழ்த்தப் பட்டவர்கள் சார்பாக தாழ்த்தப் பட்ட ஓர் இளைஞன் போராடும் கதை. தாழ்த்தப் பட்ட இளைஞர்கள் எப்படி செயல் பட வேண்டும் என்றும் உணர்த்துகிறது. "தொடர்ந்து ஒலித்த ஒத்த அடி காற்றில் கலந்து தொடர் அதிர்வுகளைப் பரப்பிக் கொண்டிருந்தது" என்னும் இறுதி வரி தலித்தியரின் உரிமைக் குரலாயுள்ளது. தலித்தின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்கிறது.

வங்கியில் பணி புரியும் ஒரு தலித் பெண்ணை திருமணம் செய்ய முன் வருகிறான் ஒரு பிராமண இளைஞன். இந்த கலப்பு மாப்பிள்ளை அழைப்போடு முடிக்கப் பட்டு வி்டுகிறது. தடைப் பெற்றதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று சாதி. இரண்டு வரதட்சனை. எத்தகைய பதவியிலிருந்தாலும் சாதி ஒரு தடையாகவே உள்ளது என்கிறhர்'தீச் சிற்பம்'கதை மு்லம் அன்பாதவன். சாதிப் பார்க்கும் சின்ன புத்தி சமு்கத்திடையே தொடர்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெருமாள் முருகனின்'விசுவாசம்'வித்தியாசமானது . கவுண்டர் வீட்டு உப்பைத் தின்ற'விசுவாசத்'துக்காக தலித்தை ஒரு கல் எட்டி உதைத்தது என்கிறார். கற்பனை எனினும் நிஜத்தின் குரூரத்தையே காட்டியுள்ளார். கிணற்றில் வேட்டு வைத்த போது மேட்டில் விழுந்த கல்லை ரங்கன் எடுத்து வந்து கவுண்டர் வீட்டு முன் இறக்கி வைத்து அதில் உட்கார்ந்து செருப்புத் தைக்கிறான். கவுண்டச்சி ரங்கனுக்கு சோறு ஊற்றும் போது ரங்கனின் முகத்தில் நீத் தண்ணித் திவலைகள் பட அதைத் துடைத்து கல்லையும் துடைக்கிறான். இந்த ஒரே காரணத்திற்காக கவுண்டர் செருப்பைச் சரியாக தைக்க வில்லை என்பதற்காக ரங்கனை அறையும் போது கல்லும் உதைக்கிறது. கல்லுக்குக் கூட தலித்துகள் என்றால் கேவலமாகி விட்டது என்கிறார் . தலித்துகள் நிலை எந்தளவிற்கு தாழ்ந்துள்ளது என்றும் உணர்த்தியுள்ளார். தொகுப்பு'திருச்செங்கோடு'.

பெருமாள் முருகனின்'ஆளுக் காரன்' கதையும் தலித்துகள் குறித்தானதே . பண்ணையில் பணம் வாங்கிக் கொண்டு வேலைச் செய்கிறான். ஆனால் அடி தாள முடியாமல் வேளியேறி விடுகிறான் . தறி பட்டறையில் வேலைச் செய்து கடனை அடைத்து விட எண்ணுகிறான் . ஆனால் அதற்குள் பண்ணையாரிடம் சிக்கக் கூடாது என்று பயப்படுவதே கதையின் சாராம்சம் . வாசிப்பவரை இரங்கச் செய்து விடுகிறது.

தலித்தியர்கள் கோவிலுக்குள் செல்ல ஆதிக்கச் சாதியினர் அனுமதிப்பதில்லை. கோவில் கட்டும் போது மட்டும் தலித்த்யரின் உதவித் தேவைப் படுகிறது. தாழ்த்தப் பட்ட மக்கள் கோவிலுக்குள் 'பறை'யுடன் செல்ல முயற்சிக்கின்றனர். மேல் சாதி முணுமுணுக்கிறது. இக் கதையின் பெயர்'வர்ணம்'. தலித்தியம் பேசுகிறது. சமத்துவம் பெற முயற்சிக்கிறது. எழுதியவர் இரா. இராம மூர்த்தி. தொகுப்பு'கனவு துளிர்த்த கதை'. தலித்துகள் தடையைத் தகர்கக வேண்டும் என்கிறது. புதிய அத்தியாயம் ஏற்படுத்தியுள்ளார்.

இரா. இராம மூர்த்தி எழுதிய மற்றொரு சிறுகதை'சேதி'. ஊரிலுள்ள மேல் சாதியினர் எவராவது இறந்து விட்டால் அவரின் உறவினர்களுக்கும் மற்றவர்களுக்கும் தகவல் சொல்ல தலித்துகளைப் பயன் படுத்துவர். தற்போது பேசிகளின் வசதி பெருகி விட்டதால் இவ்வழக்கம் அருகி விட்டது. எவராவது இழவிற்கு வர வில்லை என்றால் தகவல் தந்தவரை சந்தேகப் பட்டு பேசுவதும் வேலை வாங்கும் சமூகம் உடம்பு சரியில்லை என்று உதவி கேட்டு தராததாலும் கோபப் பட்டு சேதி சொல்பவன் எவரிடமும் சொல்லாமல் ஊரை விட்டே போய் விடுகிறான். ஆதிக்கச் சாதியினருக்கு இது அவமானம். ஆண்டைகளையே அண்டி பிழைக்காமல் ஒவ்வொரு தலித்தும் விடுபட வேண்டும் என்கிறது.

ஊரில் திருவிழா நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு கூத்து நடத்தப் படுகிறது. கூத்தில் 'கட்டியங்காரன்' ஆக நடித்த ஒரு கூத்துக் கலைஞனை பாராட்டி தன்னால் முடிந்த ஒரு'முறுக்கு மாலை'யை அணிவித்துச் சிறப்பிக்கிறான். கதையின் தலைப்பும்'முறுக்கு மாலை'யே. ஒரு தலித் கூத்துக் கலைஞனைப் பாராட்டியது பொறுக்காமல் தலித்தைத் தாக்குகின்றனர். ஒரு தலித் ஒரு கலைஞனைப் பாராட்டுவது தவறா? தலித் தலித்தாகவே இருக்க வேண்டும் என்பதையே சமூகம் விரும்புகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. தொகுப்பு'புதிய உறவு'. ஆசிரியர் மணிநாத்.

தலித்தியத்தை மையப் படுத்தி மணி நாத் எழுதிய மற்றொரு சிறுகதை'தழும்புகள்'. படிக்க விரும்பும் தலித் சிறுவனை பண்ணைக்கு பணம் வாங்கிக் கொண்டு அப்பன் சேர்த்து விடுகிறான். விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கிறான். ஒரு நாள் இரவு ஆலையில் கரும்பைச் சொருகும் போது இடது கை மாட்ட முழங்கை வரை எடுக்கும் படியாகி விடுகிறது. பெற்றிருந்த பணமே நஷ்ட ஈடாகிறது. படிப்பு மறுக்கப் படுவது கூடாது என்கிறார். கொத்தடிமை ஒழிய வில்லை என்கிறது. தலித்துகள் நிலையைக் காட்டியுள்ளது.

'வர்ணம்'சிறுகதை வித்தியாசமானது. ஒரு பிராமணர் வழக்குரைஞராக இருக்கும் போது தாழ்த்தப் பட்டவர்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கிறார். சமமாகப் பாவிக்கிறார். வழக்குரைஞர் பின்னர் மரணமடைந்து விடுகிறார். இறுதிச் சடங்குச் செய்ய தலித்துகள் அனுமதி கோருகின்றனர். மகனும் 'மகன்கள்'ஆக சடங்குச் செய்ய அனுமதிக்கிறான். வர்ணங்களை வெளுக்கச் செய்கிறது. புதிய சிந்தனை மூலம் மேல் சாதியினரிடத்து மண்டிக் கிடக்கும் அழுக்குகளைப் போக்கச் செய்கிறது. 'ஆளுமை'த் தொகுப்பின் மூலம் ஒரு சமத்துவத்துக்ககு வழி வகுத்துள்ளார் ஜன நேசன்.

'வாஞ்சை'த் தொகுப்பில் ஜன நேசன் எழுதிய'தொடக்கம்'என்னும் சிறுகதை நல்ல தொடக்கமாக உள்ளது. தாழ்த்தப் பட்ட தலித்தை உயர்ந்தவனாகவும் உயர்ந்த சாதியானை தாழ்ந்தவனாகவும் படைத்து ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். "வேறுபாடு பாராமல் பழகுவது நமது கடமை"என்று அ{சிரியர் கூற்றாகவே எழுதி அறிவுரைத்துள்ளார். தலித்துகளை நம்மவர்களாக ஏற்க வேண்டும் என்று நேரிடையாகவே கோரியுள்ளது.

'ஒப்பப்பர்' கதையும் தாழ்த்தப் பட்டவர்கள் குறித்தே எழுதியுள்ளார் மேற்கண்டத் தொகுப்பில் ஜன நேசன். தாழ்த்தப் பட்டவர்களுக்குள்'பிரிவினை'இருந்தாலும் ஒற்றுமையாக இருந்தால் உயர் சாதியும் அதிகார வர்க்கமும் தக்ர்த்து விடும் என்று உணர்த்தியுள்ளார். ஒற்றுமை இருந்தால் உயர்வு நிச்சயம் என்கிறார். மேலும் கந்து வட்டிக் காரர்களின் அநியாயச் செயலையும் விவரிக்கிறது.

தாழ்த்தப் பட்ட ஒருவனைத் தன் வீட்டுப் பெண் திருமணம் செய்து கொள்ள விரும்புவதை ஒரு குடும்பமே எதிர்க்கிறது. ஆனால் தாழ்த்தப் பட்ட பெண்ணிடம் உறவாடும் போது அக் குடும்பத்தைச சேர்ந்த ஆதிக்கச் சாதியினர் தீண்டாமைப் பார்ப்பதில்லையே என குற்றம் சாட்டி அப் பெண் துணிச்சலுடன் வெளியேறுகிறாள்.  கவனத்தை ஈர்க்கும் இக் கதையின் தலைப்பு 'இவளும் மற்றும்'. கதையுடன் நின்று விடாமல் மீறலுக்கும் வழி வகுக்கிறார் ஆசிரியர் புதுகைச் சஞ்சீவி. தொகுப்பு'வண்ணத்துப் பூச்சிகளும் கண்ணாடி அறைகளும்'. ஆதிக்கச் சாதியினரின் அசிஞ்க மனத்தை உரித்துக் காட்டியுள்ளார்.

முத்தையன் சாம்பன் ஒரு கள் குடியன். கள் பிரியன். குடிக்கக் கேட்கிறான். கிடைக்க வில்லை. எவரும் கொடுக்க வில்லை. இருளில் ஊரடங்கிய நேரத்தில் கள்ளின் மணம் இழுக்க துணிந்து மரமேறுகிறான். கள் குடிக்கிறான். கீழிருந்து ஒரு குரல் கேட்கிறது. இறங்கிப் பார்க்கிறான். எவருமில்லை. ஆனால் விடிந்த பொழுது கால்கள் கட்டப் பட்டுள்ளன என'மீறல்'என்னும் கதை முடிகிறது. எழுதியவர் சிவகுமார் முத்தையா. தொகுப்பு'சிறகு சிறுகதை கொத்து 2007'. தாழ்த்தப் பட்டவர்கள் நிலைப் பற்றியதாக உள்ளது. மீற முயன்றாலும் ஏதோவொரு சக்தித் தடுத்துக் கொண்டே உள்ளது என விளக்கியுள்ளார்.

'அழுவாச்சி வருதுங் சாமி'என்னும் சிறுகதையை ஒரு தலித்தின் குரலாகவே பதிவு செய்துள்ளார் வா. மு. கோமு. இழவு செய்தி சொல்லும் ஒரு தலித் பண்ணையாரின் அம்மா இறந்த செய்தியை பல ஊருக்குச் சென்று தகவல் சொல்லி திரும்பி ஊருக்கு வரும் வேளைத் தன் வீட்டில் பண்ணையார் மீன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். வருத்துத் தருபவள் தலித்தின் மனைவி. "அடங்கோத்தாளோக்க. அங்க ஆயா செத்துக் கெடக்கா. . . இவனுக்கு மீனு கேக்குதா வாயி"என்னும் இறுதி வரி ஓர் அதிர்வை ஏற்படுத்துகிறது. இழப்பின் சோகம் இல்லாதிருக்கும் மேட்டுக் குடியினரை விமரிசனம் செய்கிறது. ஒரு தலித்தின் உள்ளுணர்வைப் பிரதிப் பலித்துள்ளது.

'நீங்க பண்றது அட்டுழியமுங்க சாமி'யையம் வா. மு. கோமு எழுதியதே. தலித்தியரின் காலங் காலமான பழி வாங்கும் உணர்வாகவே வெளிப் பட்டுள்ளது. மூன்று தலைமுறையும் ஒவ்வொரு விதத்தில் கோபத்தை வெளிப் படுத்தியுள்ளது. ஒரு தலித்தாக இருந்து மேட்டுக் குடியினரின் பெண்ணை மறுப்பதும் கோபமேயாகும். தாழ்த்தப் பட்டவர்களின் மீது வன்முறை நிகழ்த்தப் படுவதையும் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. ஆதிக்கச் சாதியனரின் அட்டுழியத்தை, அநியாயத்தை அம்பலப் படுத்தியுள்ளார்.

தலித்தியர் எவ்வாறு மேட்டுக் குடியினரால் வஞ்சிக்கப் படுகின்றனர். பாதிக்கப் படுகின்றனர் என விளக்கிய கதை'கூட்டப் பனை சாவக் கட்டு'. மணியக் காரன் என்னும் மேட்டுக் குடியானுக்கு தலித்தினத்திலிருந்து ஓர் அடியாள் தேவைப் படுகிறது. அடியாள் எனினும் ஒத்து வராத போது கருணையின்றி கொலைச் செய்து விடுகிறhன், பின்னர் காவல் துறையோடு கை கோர்த்து தப்பித்து விடுகிறான். "காவடி மணியக் காரணைப் பார்த்து காறித் துப்பினான்"என்பது தலித்தியரின் கோபமேயாகும். இதுவும் வா. மு. கோமு
எழுதியதே. இம் மூன்றும் இடம் பெற்ற தொகுப்பு'அழுவாச்சி வருதுங் சாமி'.

'மாரி' என்னும் தலித் ஊருக்குள் செருப்பைப் போட்டுச் சென்றதற்காக'சின்னப் புள்ள'என்னும் மேட்டுக் குடியினன் மரத்தில் கட்டி புளிய மிளாரால் அடிக்க இறந்து விடுகிறான். மாரியின் மகனே'முசக்கு'. இதுவே கதையின தலைப்பு. ஒரு முறை சின்னப் புள்ளையின் மகன் ஆற்றில் அடித்துச் செல்ல பழையதை மறந்து காப்பாற்றி விட்டு மற்றவர் பார்க்கும் முன் விலகிச் செல்கிறான். பழி தன் மீது விழுந்து விடுமோ என அஞ்சுகிறான், முசக்குவின் பாத்திரம் உயிரோட்டமாக உள்ளது. தலித்துகள் மனித நேயம் மிக்கவர்கள் என்றும் மற்றவர் மனித நேயமற்றவர்கள் என்றும் உணர்த்துகிறது. மேட்டுக் குடியினர் மீதான விமரிசனமாக உள்ளது. புவன கிரி செயபாலன் எழுதிய இக்கதை இடம் பெற்ற தொகுப்பு'போதி மரம்'.

சமுதாயத்தில் ஒரு மனிதன் தாழ்த்தப் பட்டவன் என்னும் முறையிலும் ஒடுக்கப் பட்டவன் என்னும் நிலையிலும் பொருளாதாரத்தால் பின தங்கியவன் என்னும் அடிப் படையிலும் எவ்வாறு புறக்கணிக்கப் படுகிறான். புண் படுத்தப் படுகிறான் என காட்டிய கதை'வெற்று இருக்கை'. கதையை இயல்பாக நகர்த்திச் சென்று முடிவில் பூடகமாக புரிதல் ஏற்படுத்தியுள்ளார் ஆசிரியர் க. ரமேஷ் . 'சமத்துவ புரம் விலக்கு' என்னும் பேருந்து நிறுத்தம் பெயர் கேட்டவுடன் பேருந்தில் இருப்பவர்களின் பார்வைகள் வியப்பையும் ஏளனத்தையும் அருவருப்பையும் வெளிப் படுத்துவதாக எழுதித் தலித்துகளுக்கு ஆதரவு கோரியுள்ளார்,  'சுவடுகள் 2'என்பது தொகுப்பின் பெயர்.

ஒரு கோவிலை மையமாக வைத்து இரண்டு சாதிக்குள் நடந்த போராட்டத்தைக் கூறிய கதை'வடுக்கள்'. ஒன்று ஆதிக்க சாதி. இரண்டு தாழ்த்தப் பட்ட சாதி. மோதலுக்குக் காதலும் ஒரு காரணம். இருவருக்கும் பொதுவாக இருந்த கோவிலுக்குள் பராமரிப்புச் செய்ததைக் காரணம் காட்டி மேல் சாதியினர் கீழ்ச் சாதியினரைத் தடுக்கிறன்றனர், தாழ்த்தப் பட்டோர் உரிமைக் காக்க போராடுகின்றனர். கலவரம் மூள்கிறது. கீழ்ச் சாதியனை மணந்த மேல் சாதி பெண்ணைக் குறி வைத்துத் தாக்குகின்றனர். காவல் துறை துப்பாக்கித் தூக்க கூட்டம் கலைவதாக கதை முடிகிறது. இரண்டு சாதியினருக்கும் பொதுவானது எனினும் மேல் சாதியினர் திட்டமிட்டே தாழ்த்தப் பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வில்லை. தலித்தியரும் உரிமைக் கோருவதான இக் கதையை எழுதியவர் இலா. வின்செண்ட் . தொகுப்பு'மீண்டெழுதல்'.

'கூ' என்னும் கதையையும் இலா. வின்செண்டே எழுதியுள்ளார். தண்ணீர்ப் பிரச்சனையுடன் தலித்தியத்தையும் பேசியுள்ளார். ஆதித் திராவிடருக்கும் அடுத்த சாதியனருக்கும் பொதுவாக ஒரு தண்ணீர்க் குழாய்ப் போடப் படுகிறது. அடுத்த சாதியனர் பிடித்த பிறகே அடுத்த சாதியினர் பிடிக்க வேண்டும் என ஆதிக்கச் சாதியினர் அடம் பிடிக்கின்றனர். இடையில் அனுமதிப்பது இல்லை. காரணம் தீண்டாமையே. அறிந்த ஆதித் திராவிடர் இளைஞன் ஆளுக்கொரு குடமாக பிடிக்கலாம் என ஆலோசனை வழங்குகிறான். மறுப்பதால் விவகாரம் முற்றுகிறது. வார்டு கவுன்சிலர் தலையிட்டு"ஒரு'கூ'போட்டு அந்தண்டெயும் இந்தண்டெயும் தனித்தனியா பிரசிறலாம். பிரச்சனையே வராது"என்று சமாதானப் படுத்த அதற்கு ஆதித் திராவிடர் வகுப்பைச் சேர்ந்த கருமலை என்பவர்"நல்ல யோசனைதான். ஓட்டுப் போடறப்ப மட்டும் எல்லா சாதிக் காரனையும் ஒரே பொட்டில போடச் சொல்றீங்க, தண்ணீர்ன வந்தா'கூ'போட்டு சாதி சாதியா பிரிச்சிரணுமா ? நல்லாருக்குதெய்யா நாயம் ?"என கோபத்தில் பேசுகிறான். நியாயத்தைக் கூறுகிறான். சமாதானப் படுத்துவாக மீண்டும் பிரித்தே வைக்கப் படுகின்றனர். தீண்டாமை ஒரு தொடர் கதையாகவே உள்ளது என சிறுகதை உணர்த்துகிறது.

"ஆயிரம் தலைகள் கொண்ட ஆதி ஷேசனைப் போல் சீறிப் பாய்ந்து நஞ்சைக் கக்கியது துர்நாற்றம். அது துணிகளுக்குள் ஊடுருவி நின்றவர்களின் மூச்சுக் குழல்கள் அரித்தது, எல்லோரும் ஓரடிப் பின் வாங்கினார்கள். சீரங்கனுக்கு மயக்கம் வருவது போலிருந்தது . "மலக் குழியைச் சுத்தப் படுத்துவர்களின் நிலையைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் இலா. வின்செண்ட. மலக் குழியைச் சுத்தப் படுத்தும் போது மகள் பார்த்து விட முதலில் மகளுடன் படிக்கும் தோழிகள் பரிகாசம் செய்ய தந்தையைக் காண மறுக்கிறாள். தந்தையோ மகளைக் காண விரும்புகிறார். வருந்துகிறார். மலம் அள்ளுதலும் ஒரு தொழில என உணர்ந்த மகள் மற்றவர்க்கும்'யென் அப்பா கலெக்டர்டி'என்கிறார். மலம் அள்ளுதலை வைத்து மலத் தொட்டியைச் சுத்தப் படுத்துதல் வைத்து ஒரு மனிதனைத் தரக் குறைவாக எண்ணக் கூடாது என உணர்த்தியுள்ளார். மேலும் மலம் அள்ளுதல் எத்தகைய கொடியது என்றும் கூறியுள்ளார். 'சாளரம்'இதழில் வெளியாகி உள்ளது இக் கதை.

சாயல்'என்னும் தொகுப்பை வெளியிட்ட கு. கணேசன்'தொலைந்தவள்'என்னும் கதையைத் தாழ்த்தப்பட்ட வர்களுக்காக எழுதி குரல் கொடுத்துள்ளார். சமூகத்தில் தீண்டாமையைக் கடைப் பிடிக்கும் பண்ணையார் தாழ்த்தப் பட்ட பெண்ணைத் தீண்டும் போது கடைப் பிடிப்பதில்லை என குற்றம் சாட்டியுள்ளார், இச்சூழலை நன்கு விவரித்துள்ளார். பண்ணையார்களின் உண்மை நிலையை உரித்துக் காட்டியுள்ளது. தாழ்த்தப் பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதுடன் பெண்ணியமும் பேசியுள்ளது.

தான் படிக்கா விடினும் தன் மகனை படிக்க வைக்க விரும்புகிறான் கருப்பன். மகனைப் பள்ளியில் சேர்க்க திட்டமிடுகிறான். பள்ளியில் சேர்க்கக் கிளம்புகிறான். அப்போது பண்ணாயர் வந்து மழை பெய்ததால் கிணற்றில் கீழிருக்கும் மோட்டாரை மேலே எடுத்து வைக்கக் கூப்பிடுகிறார். தயங்குகிறான். அதற்கு பண்ணையார்"டே அவன் படிச்சு கலெக்டராவா போறான். எவ்வளவு படிச்சாலும் உன்ன மாதிரி தான்"என்கிறான். தாழ்த்தப் பட்டவர்கள் படிக்க நினைத்தாலும் பண்ணைகள் படிக்க விடுவதில்லை என்கிறது'படிப்பு'என்னும் சிறு கதை. எழுதியவர் பொன். குமார். தொகுப்பு'முத்திரைக் கதைகள் முப்பது'.

செங்காளிக்கு கிடா வெட்டி விருந்தைத் தயார் செய்கின்றனர் ஆதிக்கச் சாதியினர் ஒரு பிரிவினர். வெளியில் பசியுடன் காத்திருக்கின்றனர் தாழ்த்தப் பட்டவர்கள். உள்ளே விருந்து தொடங்கும் போது வெளியில் ஒரு சிறுவன் பசியால் மரணிக்கிறான். கலவரம் ஏற்படுகிறது. மேல் சாதியினரில் ஒருவன் மனம் தாளாமல் 'செங்காளி'யைக் காறி உமிழ்கிறான். ஏற்றத் தாழ்வைக் கண்டு காணாமல் இருக்கும் செங்காளி தேவையா என்கிறான். மக்களில் உயரந்தவர். தாழ்ந்தவர் இல்லை என்கிறது. சாமியும் இல்லை என்கிறது. தலித்தியம் பேசியதுடன் சாமியும் இல்லை என்கிறார்'ஊடாடும் வாழ்வு'தொகுப்பில்'செங்காளி'க் கதையில் கவியோவியத் தமிழன்.

பண்ணாயருக்கும் தலித்தியருக்கும் இடையில் எப்போதுமே பிரச்சனை இருந்து கொண்டு இருந்தாலும் தொடர்ந்து தூண்டி விட்டுக் கொண்டே இருப்பவர்கள் உண்டு. அவர்களைப் பிரிவினை மனிதர்கள் என சாடியுள்ளார் ஆங்கரை பைரவி. பண்ணையார் பண்ணையில் வேலைச் செய்யும் கருப்புச் சாமியிடம்'மகனை படிக்க வைக்காதே. பண்ணைக்கு அனுப்பு'என்கிறான். மகன் அப்பனைப் போல் அடிமையாக இருக்க மறுத்ததை அறிந்த ஒருவன் பண்iணாயரிடம் கூறி விடுகிறான். பண்ணையார் காவல் துறையை ஏவி விட வழக்கு மன்றத்திற்கு வருகிறது. தன் தரப்பு வாதங்களைக் கூற பண்ணையாருக்கு எதிராக தீர்ப்பு வருகிறது. இடையில்'பிரிவினை மனிதன்'இரண்டு பக்கமும் நயமாக பேசி பகையைத் தொடரச் செய்கிறான். பிரிவினை மனிதர்கள் பற்றி பேசினாலும் படித்தத் தாழ்த்தப் பட்ட இளைஞனின் துணிச்சலான
செயலையும் காட்டுகிறது. பிரிவினை மனிதர்களாலே தீண்டாமைத் தீவிரம் அடைகிறது என்கிறார். மேலும் தலித்துகள் படிக்கக் கூடாது என்பதில் பண்ணையார்கள் கவனமாக இருப்பதையும் உணர்த்துகிறார். இத் தொகுப்பின் பெயர்'பின் இருக்கையில் ஒரு போதி மரம்'.

இளைஞன் படிக்க விரும்புவதான'பறை'க் கதையையும் எழுதியுள்ளார். இழவு வீடுகளில் பறையடிப்பவன் கருப்பு சாமி. மகனை பட்ட படிப்பு படிக்க வைக்க நினைக்கிறார். மகனும் விரும்புகிறான். இழவு வீட்டில் பறையடிடக்க அழைப்பு வருகிறது. அப்பனால் எழ முடிய விடில்லை. வருமானத்தை விட வழியல்லாமல் அப்பா வரும் வரை பறையடிக்க சம்மதிக்கிறாள், அவனுக்கோ அன்று இறுதித் தேர்வு. அப்பன் வருவான் என்னும் நம்பிக்கையில் பறையடிக்கிறான். அப்பன் வரவில்லை. தங்கைக் கண்ணம்மாள் வருகிறாள். பறை அடிக்க வேண்டிய குடும்பம் பறை அடித்தே வாழ வேண்டிய ஒரு கட்டாய நிலை சமு்கத்தில் நிலவுகிறது என்பதை விவரித்துள்ளார் ஆங்கரை பைரவி. தலித்துகள் படிக்க வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.

வரதப்ப கவுண்டருக்கு காட்டில் உள்ள கொட்டகையில் போடப் பட்டிருக்கும் கட்டிலில் இரவில் யாரோ  உடலுறவு கொள்வதாக சந்தேகம். கவுண்டர் கண்டு பிடிக்கும் தீர்மானத்துடன் ஓர் இரவில் காத்திருக்க யாரும் வரவில்லை. வீட்டுக்கு வந்தால் கவுண்டரி ஒரு தாழ்த்தப் பட்ட இளைஞனோடு உறவு கொள்வதைப் பார்த்து மு்க்கும் மனமும் உடைகிறது. இடையில் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்கக் கூடாது என கவுண்டர் ஒரு தாழ்த்தப் பட்ட இளைஞனை அடித்ததாக ஒரு நிகழ்வு காட்டப பட்டுள்ளது. 'குன்னூத்தி நாயம்'என்னும் இக்கதையை எழுதியவர் மு. ஹரி கிருஷ்ணன். தொகுப்பு'மயில் ராவணன்'. இது ஆண்டைக்கு எதிரானது. மட்டுக் குடியினர் கொண்டுள்ள போலி அந்தஸ்தை உடைத்துள்ளது.

'குடி நாசுவன்'கதையும் ஆண்டைக்கு எதிராகவே எழுதப் பட்டுள்ளது. மேட்டுக் குடியினாரல் எவ்வாறெல்லாம் இம்சிக்கிறர்கள் என நுட்பமாகக் காட்டியுள்ளார். "இந்த அங்க முத்து நாசுவனும் செங்கோட வண்ணானும் கொட்டுக் கொட்ற நடேசந் தோட்டியும் செருப்பு தைக்கிற செம்மூஞ்சியூட்டாரும் அன்னிக்கிப் பொழச்ச பொழப்பே இன்னிக்கும் அச்சுக் கொலையாம அப்பிடியேத்தான் பொழைக்கறாங்க. . . எப்படி மின்னேறது ? என்னிக்கு வந்த தாவு சேர்றது ?"என்பது அனைத்துத் தலித்தியரின் குரலாக பதியப் பட்டுள்ளது, தாழ்த்தப் பட்ட மக்களின் வாழ்வில் மாற்றமும் இல்லை முன்னேற்றமும் இல்லை என வருத்தப் பட்டுள்ளார் மு. ஹரி கிருஷ்ணன்.

வளவ. துரையனின் 'தேரு பிறந்த கதை'யும் தாழ்த்தப் பட்டவர்களின் நிலையை விவரிக்கிறது. வர்ணம் குறித்து பேசுகிறது. கடவுளுக்கும் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் இடை வெளி உண்டாக்கியதை உரத்துக் கூறுகிறது. கோவிலுக்குள் அனுமதிக்காமல் தேரிழுக்க அனுமதித்ததே ஒரு ராஜ தந்திரம் என்னும் உண்மையை முன் வைக்கிறது. தாத்தா குழந்தைகளுக்கு கதைக் கூறுவதாக கதை அமைக்கப் பட்டுள்ளது. தாத்தாவே பாத்திரங்களாக மாறி கதை சொல்லும் விதம் அருமை. கதையின் இறுதி உரையாடல் இன்னும் பிரச்சனைத் தொடர்கிறது என்கிறது.

"இன்னா தாத்தா. . . கதை நின்று போச்சு"

"இல்லடா. . . இன்னிக்கும் தொடர்ந்துக் கிட்டேதான் இருக்கு"

தலித்துகளை முன்னேற விடாமல் மேல் சாதியினர் தடுத்துக் கொண்டே இருப்பதை மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். தொகுப்பின் பெயரும்'தேரு பிறந்த கதை'யே யாகும்.

குருதி வடிக்கும் நெஞ்சங்கள்'என்னும் சிறுகதை மூலம் தலித்திய பிரச்சனைக்கு ஒரு தீர்வை முன் வைக்கிறhர் மு. அம்சா. தொகுப்பு'புதிய பாஞ்சாலி'. ஓர் ஊரில் ஒரு மாரியம்மன் திருவிழாவின் போது ஒரு கிராம அதிகாரியாக ஒரு தலித் வருகிறார். அவரை வரவேற்று மரியாதைச் செய்கிறது ஊர். ஆனால் அவ்வூரிலேயே தலை தலைமுறையாக வாழும்'தோட்டி'யை ஆலயத்துக்கு வெளியிலேயே நிறுத்துகிறது. தோட்டியின் மனமறிந்து ஆலயத்துக்குள் அழைத்து அனைவரும் சமம் என்கிறது கதை. வரவேற்பிற்குரியது.

தலித் பற்றிய கதைகளில்'தம்பலா'வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பாரதி தாழ்த்தப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ரா. கனக லிங்கத்துக்கு பூணூல் அணிவிக்கப் பட்டு"இன்று முதல் நீர் பிராமணன்"என்ற நிகழ்வு பரவலாக்கப் பட்டது. அனைவரும் அறிய முடிந்தது. பாரதி வசந்தன் பாரதி வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த ஒரு தோட்டியைப் பற்றி அறிந்து அவன் நடவடிக்கைகளைக் கள ஆய்வுச் செய்து ஒரு சிறுகதையாக்கியுள்ளார். "ஒரு மனுஷன் தாழ்ந்த குலத்திலே பிறந்து விட்டான் என்கிறதுக்காக அவனை ஒதுக்கி வைப்பதோ . ஒடுக்கி வைப்பதோ அவனுக்கும் கேடு. இனி மேல் பள்ளனோ. . . பறையனோ. . . சக்கிலியோ. . . தோட்டியோ. . . யாரும் நம்மைக் கை நீட்டி அடிக்காத வண்ணம் பார்த்துக் கொள்வது நல்லது"என பாரதியின் கூற்றhக கதையை முடித்து தலித்துகளையும் சமமாக நடத்த வேண்டும் என்கிறார். இக் கதை இடம் பெற்ற தொகுப்பு'20 ஆம் நூற்றாண்டு புதுவைக் கதைகள்'. பின்னர்'தம்பாலா'என்றே பெயரிலேயே ஒரு தொகுப்பாக வந்துள்ளது.

'கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் எழுதப் பட்டிருந்தாலும் அனைவரின நோக்கமும் ஒன்றாகவே உள்ளது. தலித்தியரை முன்னேற்ற வேண்டும் முதன்மைப் படுத்த வேண்டும் என்னும் முனைப்புடனே அனைவரும் எழுதியுள்ளனர். கதைகள் கற்பனையாக எழுதப் பட்டிருப்பினும் உண்மை சம்பவங்களின் அடிப் படையிலேயே எழுதப் பட்டுள்ளது என்பதைக் கதைகள் மூலம் அறிய முடிகிறது. சில கதைகள் உண்மையானவை என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும். தீண்டாமை எத்தகைய தீங்கானது. கொடுமையானது என அனுபவித்தால் தெரியும் என்பர். கதைகளை வாசித்தாலே உணர முடிகிறது. சிறு கதை ஆசிரியர்களில் தலித்தும் உண்டு. தலித்தல்லாதவரும் உண்டு. கதைகளிலே தலித்தியம் மட்டுமே முன் வைக்கப் பட்டுள்ளது. தலித் குறித்தும் தலித்தியம் பற்றியும் பேசுவதற்கும் எழுதுவதற்கும் சிறு கதை என்னும் வடிவத்தைச சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. சிறு கதைகள் அனைத்தும் மிகைப் படுத்தப் படாமல் தலித்துகளின் வாழ்க்கை நிலையை வாசகர்களுக்கு முன் வைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. தலித்துகளின் வாழ்க்கை நிலையையும் வாழ்க்கைத் தரத்தையும் இச் சிறு கதைகள் உயர்த்தும் என்னும் நம்பிக்கை அளிக்கிறது.

Pin It