தமிழிலக்கியப் பரப்பில் கவிதை முதன்மையானது. கவிதை காலந்தோறும் பல்வேறு முன்னொட்டுகளைத் தாங்கி வழங்கப்பட்டிருந்தாலும், கவிதை என்றென்றும் கவிதையே ஆகும். சங்க காலத்தில் கோலோச்சியிருந்த பா வகைகளையெல்லாம் புறம்தள்ளி தாம் வாழ்ந்த காலத்தில் எவரும் தொட்டிடாத குறள்வெண்பாவில் தமது ஒப்பற்ற சிந்தனைகளைப் பொதிந்து வைத்த அய்யன் திருவள்ளுவரை ஒரு புதுமைவாதி எனலாம். அதன்பின் நவீன இலக்கியத்தின் முன்னோடியாக பாரதி அறியப்படுகிறார். மேலை இலக்கியத் தாக்கமும் புதுமை வேட்கையும் ஒருங்கே அமைந்து அவரால் புதுமுயற்சியென வெளிப்படுத்தப்பட்ட வசன கவிதைகள்தாம் தமிழ்க்கவிதையை முற்றிலும் புதியதொரு தளத்திற்கு முன்னெடுத்துச் சென்றுள்ளன. கவிதை என்பது இயற்கையாய் அமையும் சமூகத்தின் மனவெளிப்பாடாகும். ஒரு சிலர் இதைத் தவறாகப் புரிந்துகொண்டு கோட்பாட்டுக் குடுவைக்குள் அடைத்துவைத்து செயற்கைத்தனமான காரியங்களில் ஈடுபடுகின்றனர். இவற்றை அவர்களது அறியாமைப்போக்கு என்றுதான் அழைக்கமுடியும். யாருக்கும் புரிதலை உண்டுபண்ணாதக் கலைப்படைப்புகள் காலப்போக்கில் ஒழிந்துவிடும். இது கவிதைக்கும் பொருந்தக்கூடியது.

    அந்த விதத்தில் விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு கிராமத்தில் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து தற்போது சென்னைவாசியாகத் திகழும் தமிழச்சி தங்கபாண்டியனை தமிழ்க்கவிதை உலகு எளிதில் மறக்கமுடியாத ஓர் ஆளுமை எனலாம். இவர் புறவுலகின் தேவைகளுக்காக அரிதாரம் பூசிக்கொண்ட அந்நிய மனிதராகத் தென்பட்டாலும் அடிப்படையில் இவர் பழகுதற்கு மிக எளியவராவார். இவரது மனம் எப்போதும் குழந்தைமைக் கொண்டது. தொலைந்துபோன கிராமத்து வாழ்க்கை ஏக்கமும் மனத்தை விட்டு அகலாத அதன் மண்வாசமும் கள்ளம்கபடமற்ற மனிதர்களும் அவர்களது செய்கைகளுமே இவருடைய கவிதைகளின் பாடுபொருள் களங்களாகும். எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி, மஞ்சணத்தி ஆகிய இவரது முந்தைய கவிதைத்தொகுப்புகள் இதற்கு சாட்சியாகும். அண்மையில் உயிர்மை வெளியீடாக வந்திருக்கும் இவரது நான்காம் தொகுப்பான அருகன் கவிதைத்தொகுதியிலும் அவற்றின் நீட்சியினைக் காணமுடியும். எனினும், அவை சலிப்பை ஏற்படுத்தாதவை. வாசிப்போரை மீட்டுருவாக்கம் செய்ய வல்லவை. ஏனெனில், ஆதிவழிப்பட்ட மனம் கிராமியம் சார்ந்ததாகவே உள்ளது.

    இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் முப்பத்தொன்பது தலைப்பில் அமைந்துள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் வௌவேறு அனுபவங்களின் பதிவுகளாகக் காட்சியளிக்கின்றன. அன்றாட சமூக நிகழ்வின் மீதான ஒருவித பதற்றம், இயலாநிலை, மனப் புழுக்கம், தவிப்பு, சுயகழிவிரக்கத்தன்மை முதலானவற்றின் புறவெளிப்பாடுகளாக இக்கவிதைகள் காணப்படுகின்றன. குடும்பம், சமுதாயம், பெண்ணியம், உளவியல், உலகியல் முதலானவற்றின் மீதான பார்வைகள் இக்கவிதைகளில் அடிநாதமாக உள்ளன. காட்டாக, உதிர்ந்த பற்களைப் புதைக்கும் சிறுமி எனும் தம் முதல் கவிதையில் இக்கவிஞர் ஒவ்வொரு பெண்ணும் இச்சமுதாயத்தில் மிக நேர்த்தியாக தமக்குகந்த, உரிய முறையில் பெண்ணாக ஆக்கப்படுவதைச் சுயபாதிப்பு நிலையில்நின்று படம்பிடித்துக் காட்டுவதை,

    நாளைய பகல் புலர,
    இறக்கைகள் பிடுங்கப்பட்ட எல்லா வார்த்தைகளும்
    கிசுகிசுத்தபடி புதைக்கப்பட்ட இடங்களுக்கு
    அவசரமாகத் திரும்பின.

என்னும் வரிகளில் ஆழமாக உணரமுடியும். பெண்ணினுடைய சிந்தனை, சொல், செய்கைகள் அனைத்தும் தந்தையாதிக்கத்தின் அடியொற்றியே நடந்திடவும் நடைமுறைப்படுத்திடவும் அறிவுறுத்தப்படுகின்றன என்பது இக்கவிதையின் உள்ளீடாக இருக்கின்றது. தனிமனித உளவியல் சிக்கல்கள் இங்குப் பெண்ணினத்திற்குத் தான் மிகுதியாக உள்ளன. பெண் தன் தன்னுணர்வு, சுயமதிப்பு, சுதந்திர உரிமை ஆகியவற்றை ஆணாதிக்க அதிகார நிறுவனமாக விளங்கும் குடும்பம் மற்றும் சமுதாயத்தில் ஆண்களைப்போல் எளிதில் வெளிக்காட்டிக்கொள்ளவியலாமல் அல்லாடித் தவிப்பதையும் தம் சோகத்தை தமக்குள்ளாகவே புதைத்துக்கொண்டு புலம்புவதையும் பெண்கள் வாடிக்கையாகக்கொண்டு வாழ்வதை இக்கவிஞர் மறைமுகமாகச் சாடியுள்ளார் எனலாம்.

    அதுபோல், நாடு விடுதலை அடைந்து காணப்பட்டாலும் இந்நாட்டில் வாழும் எல்லா சமுதாயத்தினருக்கும் உரிய சுதந்திரம் என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. ஆட்சி, அதிகாரங்களில் சமஉரிமைகள் மற்றும் சமநீதிகளை நிலைநாட்டுவதில் ஒடுக்கப்படுவோர் அனைவருக்கும் இங்குப் பலவகையான பிரச்சினைகள் காணப்படுகின்றன. சட்டம் அத்தகையோருக்கு நீதியை நிலைநாட்டி வாய்ப்பளித்தாலும் நடப்பியலை உற்றுநோக்கும்பட்சத்தில் அதிகார வர்க்கங்கள் அதற்கு வழிவிடுவதாக இல்லை என்றே சொல்லவேண்டும். தாழ்த்தப்பட்டோர் மக்கள் பிரதிநிதிகளாக உருமாறித் தலைமை பீடத்தில் அமர்ந்து செயலாற்றுவதில் உள்ள நடைமுறைச்சிக்கல்களைச் சமுதாயப் பார்வையுடன் பின்வரும் கவிதை அணுகுவதை உணரவியலும்.

    காலியாயிருக்கின்றதே என்று
    யதேச்சையாக எதிலும்
    ஒரு சாமானியன் உட்கார்ந்து விட முடியாது.

   இவ்வதிகாரச் சிக்கல்களால் ஆட்சியதிகாரம் என்பது எந்தச் சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணாகயிருப்பினும் கைக்கொள்ளமுடியாத கனவாகவே உள்ளது. நாடாளுமன்றத்தில் 33சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற முடியாத நிலையில் பெண்சமூகம் இருப்பதை இதனுடன் ஒப்புநோக்குதல் நல்லது. காலியாக உள்ள நாற்காலியில் கூட இதுபோன்றவர்கள் உட்கார்வதில் உள்ள சிக்கலை இக்கவிதை நன்கு எடுத்துரைத்துள்ளது. தவிர, அண்டைநாடான இலங்கையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த நான்காம்கட்ட ஈழப்போர் இறுதியில் முள்ளிவாய்க்கால் என்னுமிடத்தில் படுகொலைக்குள்ளான அப்பாவி தமிழ்மக்களின் ஓலம் எந்தவொரு படைப்பாளியையும் உலுக்கியெடுக்காமலில்லை. தொப்புள்கொடி உறவென்று சொல்லிக்கொள்ளும் தாய்த்தமிழ்நாட்டில் ஆங்காங்கே எழுந்த குரலை ஒன்றிணைத்து வலுவாக்கிட சரியான தலைமை அமையாமல் போனதை ஒரு சாபக்கேடென்றே கூறலாம். தவிர, அப்போராட்டம் குறித்த போதிய புரிதல்களை அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் உண்டுபண்ணாமல் போனதையும் தாய்த்தமிழர்களிடையே அது பற்றிய அக்கறை ஏற்படாமல் மழுங்கியதையும் மங்கியதையும் நினைந்து மனம்நொந்தவாறு இக்கவிஞர்-

    முள்ளிவாய்க்காலை மறந்து-
    அன்றும்,
    புணர்ந்து,
    அலுத்துத் தூங்கினோம்.

என்று தமிழர் வாழ்வியல் நடப்பைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளார். நீள்துயிலில் ஆழ்ந்திருக்கும் சமூகத்தைத் தட்டியெழுப்பி வீறுகொள்ளச்செய்து நேர்வழியில் நடப்பிப்பதை ஒரு நல்ல கவிஞருக்குரிய மாண்போடு நிகழ்த்திக்காட்டியிருக்கின்றார் இக்கவிஞர் என்பது சாலப்பொருத்தமாகும். அதுபோல், ஆப்கானிஸ்தான் மதப் பழைமைவாதிகளான தாலிபான்களால் மூக்கறுபட்டு வன்கொடுமைக்கு உள்ளான ஆயிஷா எனும் பாலியல் தொழிலாளியின் அவலத்தைத் தமிழுலகிற்குச் சுட்டிக்காட்டும் விதமாக தமிழச்சி தங்கபாண்டியன் தம் மனப்பதிவை இவ்வாறு வெளிக்காட்டியுள்ளார்.

    மூக்கறுபட்ட அவஸ்தையுடன்
    அவமானமும், வலியும் தெறிக்கின்ற
    உனது மூளி முகம் தான்
    என்றென்றும்,
    அநீதிக்கு எதிரான எம் அழகின் சின்னம்.

    இக்கவிதையின் மூலமாக இந்திய இதிகாசத் தொன்மையாக விளங்கும் சூர்ப்பனகை மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைக்காட்சியும் அவளது தீராவலியும் வேதனையும் நன்கு உணரப்படுகிறது. இதுபோன்ற ஆணாதிக்கத்தின் அழித்தலின் அழகியலை பெண் சமூகம் மனம்தளராமல் எதிர்கொண்டு அதனையே அநீதிகளை அழிக்கவல்ல ஆயுதமாகத் தரித்து பெண்ணியம் சார்ந்த உடலரசியலை முன்னெடுக்க முயல்வதுதான் வெற்றிக்குச் சிறந்த வழியென இக்கவிஞர் அறைகூவல் விடுத்துள்ளார். உடலரசியல் என்று உரத்துக்கூவிக்கொண்டு நுகர்வுப்பொருளாகிப் போன பெண்ணுடலை மீளவும் நுகரத்தக்கப் படையலாக்கிக் கொண்டிருக்கும் அதிதீவிரப் பெண்ணியப் படைப்பாளிகளிடமிருந்து விலகி, பெண் உடலரசியல் என்பது மணிப்பூர் மாநில பாதிக்கப்பட்ட பெண்கள் நிர்வாணக் கோலம் பூண்டு இராணுவ ஒடுக்குமுறைக்கெதிராக எழுந்த கிளர்ச்சியை ஒட்டியதாக அமைந்திட வேண்டுமென்பதில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்ட ஒரு முன்மாதிரியாக இவர் இன்றைய இளம்தலைமுறைகளிடம் திகழ்கின்றார்.

    மேலும், இக்கவிஞர் தாம் ஒரு சூழலியப் பெண்ணியவாதி என்பதை எப்போதும் நிரூபிக்கும் முகமாகத் தம்முடைய எல்லா கவிதைத்தொகுப்புகளிலும் தாம் பிறந்து வளர்ந்த கிராமத்தின் மண்வாசம், அங்கு வாழ்ந்த, வாழும் வெள்ளந்தியான மனிதர்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், அதன் இயற்கையமைப்புகள் ஆகியவை பற்றிய பதிவுகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும். உளவியல் நோக்கில் இவற்றை ஒப்புநோக்கும்பொழுது இஃதோர் ஆற்றாமை வெளிப்பாடெனவும் பின்னோக்கிச்சென்று மகிழுறும் தற்காப்புச் செயல்பாடெனவும் கருதமுடிகிறது. இயற்கையோடு இயைந்த மனித வாழ்வென்பது தற்போது அந்நியமாகிவரும் இச்சூழலில் ஆதி இயற்கைவழிப்பட்ட மனித மனம் மீண்டும் மீண்டும் இயற்கையையே நாடும் விந்தையை அருகன் எனும் கவிதையில்,

    நெடிதுயர்ந்த பனைத்தோழிகள்
    உச்சி தொட்ட என் மகிழ்ச்சிப் பெருமூச்சால்
    தம்மை விசிறிக் கொண்டன.

என்று வயல்வெளியெங்கும் ஓங்கியுயர்ந்து வீற்றிருக்கும் பனைமரங்கள் உறவாக்கப்படுவது என்பது சங்க கால புன்னைமரச் சகோதரி படிமத்தை ஒத்ததாக அமைந்துள்ளது எண்ணத்தக்கது. அஃறிணைகளை உயர்திணைகளாகக் கருதி நேசம் கொண்டிடும் மனப்பாங்கு இதுபோன்ற சுற்றுச்சூழல் நல விரும்பிகளுக்கு மட்டுமே அமைந்திடும்.

    அந்நியமாதல் பண்பு தற்காலத்தில் மனித உறவுகளில் ஊடுருவி மனித சமூகத்தை அன்பு, இரக்கம், கருணையற்றதாக மாற்றி வைத்துள்ளது. தம்மைப் பற்றியோ தம்மைச் சார்ந்தவர்கள் பற்றியோ அருகாமையிலுள்ள சக மனிதர்கள் பற்றியோ கிஞ்சித்தும் கவலைக் கொள்ளாமல் தப்பித்தலையே குறிக்கோளாகக்கொண்டு வாழ்ந்துவரும் அபத்தம் வாடிக்கையாக நடந்துவரும்போக்கு கண்டிக்கத்தக்கது. நாகரிகம் என்ற பெயரில் சக மனிதர்களுடன் செயற்கையாகச் சிரித்து தாமரை இலைமேலிருக்கும் தண்ணீர் போல ஊடாடும் மனித நடத்தையை இக்கவிஞர்,

    உரத்து ஒலிக்கின்ற எல்லாமும்
    நேசிக்கப்பட்டு ரசிக்கப்படுகின்றன
    எட்டூருக்குக் கேட்க
    ஒப்பாரி வைக்கின்ற சண்முகத்தாயாலும்,
    சண்டைக்காரியான பூர்ணத்தம்மாவாலும்.
    கைகுலுக்குதலையும் கட்டியணைத்தலையும்
    நேசிக்கின்ற என் காலை வணக்கத்தை
    எப்படிச் சொல்வேன் அவர்களுக்கு?

என்னும் கவிதையில் நயம்படச் சித்திரித்துள்ளார். இப்படித் தொகுப்பு முழுவதும் எண்ணற்ற பல நல்ல கவிதைகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டே போகமுடியும். இதுவே ஒரு சிறந்த தொகுப்பின் அடையாளமாகும். தவிர, அழகியலும் புரிதலும் இத்தொகுப்பு நெடுகிலும் ஒருங்கே இணைந்துள்ளதும் பாதுகாத்துப் போற்றிட தக்கவகையில் இதன் வடிவமைப்பும் மிக அழுத்தமான அட்டையிலமைந்த கட்டுக்கோப்பும் எழுத்திலிருக்கும் கவிதைமொழிக்குத் தம் தூரிகை மூலமாக உயிரூட்டிய ஓவியர் வேல்முருகனின் அழகிய கோட்டோவியங்களும் எந்தவொரு வாசகனையும் முதல்பார்வையிலேயே வாங்கச்செய்து கட்டுண்டு இருக்கச்செய்திடும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. இது புத்தகமல்ல தோழனே-இதைத் தொடுகிறவன் ஒரு மனிதனைத் தொடுகிறான் என்பார் வால்ட் விட்மன். அந்த உணர்வுதான் எனக்குக் கிட்டியது. இவ் அருகனை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தமிழச்சி தங்கபாண்டியனுக்குள் மறைந்திருக்கும் அருங்குணங்கள் கொண்ட ஒரு மனுஷியைத் தரிசிக்க முடியும். இது போன்ற தொகுப்பின் வரவால் நீண்ட பாரம்பரியமிக்க தமிழ்க்கவிதை தமக்குத்தாமே மணிமகுடம் சூட்டிக்கொள்வதோடு மட்டுமல்லாமல் மேலும் ஒரு மைல்கல்லைத் தொட்டுப் பெருமிதமடைகிறது.

- மணி. கணேசன், மன்னார்கு

Pin It