நடந்து முடிந்திருக்கின்ற சட்டமன்ற தேர்தல், வரலாறு காணாத திருப்பமாக அமைந்து விட்டது. தி.மு.க.வின் அரசியல், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்பட்டுள்ளது. அரசியல் அதிகார மையமாக, கருணாநிதி குடும்பம் கிளை பரப்பிக் கிடந்ததை மக்கள் ஏற்கவில்லை.

அலைக்கற்றை ஊழல் மக்களுக்குப் புரியாது என்று நம்பியவர்கள், தங்கள் அரசியல் அறியாமையை  உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் வழங்கிய இலவச வண்ணத் தொலைக்காட்சி வழியாகவே இந்த ஊழலை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஜெயலலிதா வேண்டும் என்று யாரும் வாக்களிக்கவில்லை. கலைஞர் அரசு வேண்டாம் என்று வாக்களித்திருக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு, மின்வெட்டு, மணல்கொள்ளை, மீனவர்கள் படுகொலை, ஈழத்தமிழர் இன அழிப்புக்கு துணை நின்றது, திரைப்படத் துறையில் குடும்ப ஆதிக்கம், சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனது போன்றவை எல்லாம் இந்த சவப்பெட்டிக்கு ஆணியடித்திருக்கிறது.

இதற்கெல்லாம் மாற்றாக அமைய வேண்டிய விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி போன்றவை தி.மு.க.விற்கு முட்டுக் கொடுத்து, தவறுகளுக்கு உடந்தையானதால் வீழ்த்தப்பட்டுள்ளன. சார்பு நிலை அரசியலால், தேர்தலுக்கு முன்பே வைகோ வீழ்த்தப் பட்டார். அதே சார்பு நிலை அரசியலால் திருமாவளவனும், மருத்துவர் ராமதாசும் உடன்கட்டை ஏற வேண்டிய அவலம் நிகழ்ந்து விட்டது.

தமிழகத்தில் இடதுசாரிகள் சவாரி, வழக்கம் போல வென்றிருக்கிறது. ஆனால், உலகமயமாக்கலை தழுவிப் போன குற்றத்திற்காக 34 ஆண்டுகள் வெற்றிக்கொடி கட்டிய மேற்கு வங்கம் பறி போயிருக்கிறது. கேரளமும் தோல்வியைத் தழுவியிருக்கிறது.

இவ்வளவு காலமும், சிறுபான்மை மக்களின் காவலனாக தன்னை காட்டிக் கொண்ட தி.மு.க. அதிலும் தோல்வியைத் தழுவியிருக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் ஆதரவு நிலையை மாற்றி இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் துறைமுகம், வாணியம்பாடியில் தி.மு.க. தோற்று இருக்கிறது. தனக்கு வழங்கப்பட்ட மூன்றில் இரண்டு இடங்களில் வென்றிருக்கிறது மனிதநேய மக்கள் கட்சி. அ.தி.மு.க.வைப் போலவே கொள்கை ஏதுமின்றி, கருணாநிதி எதிர்ப்பு ஒன்றையே மையப்படுத்தி விஜயகாந்த் வென்று இருக்கிறார். விஜயகாந்தின் வளர்ச்சி, பலருக்கும் அதிர்ச்சியூட்டக் கூடியதாக உள்ளது.

இது ஆரோக்கியமான அரசியல் போக்கா என ஆராய வேண்டி உள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் தகுதியானவர் தானா என்ற கேள்விகள் முளைப்பது தவிர்க்க இயலாதது ஆகிறது.  இந்த இடத்தை வைகோ, ராமதாஸ், திருமாவளவன், தா.பாண்டியன் போன்ற தகுதியாளர்களால் நிரப்ப முடியாத சூழல் ஏன் ஏற்பட்டது?

கொள்கையும், ஆட்சி அதிகாரமும் வேறு வேறு திசைகளில் இயங்குவது ஏன்? தங்களுக்கான தலைவர்களை இன்னமும் தமிழன், திரைப்பட கொட்டகையில் தேடுவது ஏன்? இதை மாற்ற நம்மிடம் என்ன சாத்தியக் கூறுகள் உள்ளன? நம் சமகாலத்தில் வாழும் தோழர்.நல்லக்கண்ணு போன்ற மகத்தான மாமனிதர்களை அதிகாரம் சென்றடையாதது ஏன்?

கருணாநிதியிடம், ஜெயலலிதாவிடமும் மாறி மாறி சரணடையும் போக்கு எப்போது மாறும்? விலைவாசி உயர்வின் உண்மையான ஊற்றுக்கண் எது? இதை மக்கள் இயக்கமாக மாற்றாத குற்றம் யாருடையது? உலகமயமாக்கலின் தீமையை, பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பை அம்பலப்படுத்த வேண்டியவர்களின் கடமை நிறைவேறி விட்டதா? இயற்கையை சுரண்டிப் பிழைக்கும் கும்பலிடம் இருந்து  நாட்டை யார் காப்பது?

மூன்றாவது அணியை கட்டமைக்காத குற்றம் யாருடையது? ஜெயிக்கிற கட்சிக்கு தான் ஓட்டுப் போடுவேன் என்கிற மக்களின் மனநிலையை மாற்ற வேண்டியது பொறுப்பை யார் ஏற்பது? இதற்கெல்லாம் விடை காண வேண்டிய பொறுப்பு நம் அனைவர் கடமையாகிறது.

நம்மை மீட்க தேவதூதர்கள்  தீர்க்கதரிசிகள் வர மாட்டார்கள்.
நம் அரசியல் விடுதலையை நாமே வென்றாக வேண்டும்.
Pin It