அது ஓர் உயர்நிலைப் பள்ளியின் ஆடிட்டோரியம்!

பள்ளியின் கிழக்குப்பக்கம் ஒதுக்குப்புறமான வெளியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை தாங்கி விரிந்திருந்தது!

கைக்கு அடக்கம் போல் தோன்றினாலும் நிறைந்த கூட்டத்தை உலர்த்தி விடலாம் போலும் அவ்விடத்தில் எனத் தெரிந்தது!

முதல் முதலாய் அங்கு வைத்துத்தான் சுரேந்திரன் சாரைப் பார்க்கிறேன். முதல் முதலாய் அங்கு வைத்துதான் சுரேந்திரன் சாரை அறிகிறேன்; முதல் முதலாய் அங்கு வைத்துதான் அவரது பழக்கமும் பண்பும் அறிமுகப்படுகிறது எனக்கு; முதல் முதலாய் அங்கு வைத்துதான் அவரும் என்னை அவரும் அவரை நானும் கற்கிறோம் கொஞ்சமாகவேனும்!

அரங்கு நிறைந்த கூட்டம். வலது பக்கம் மாணவிகளும் இடது பக்கம் மாணவர்களும் அமர வைக்கப்பட்டிருந்தார்கள்; சுரேந்திரன் சார் எங்கிருக்கிறார் தன் அடையாளம் இட்டு என்பது தெரியாமலேயே!

சீருடையில் தேவதைகளாக மாணவிகளும் தேவ தூதர்களாக மாணவர்களும் கனவில் இருந்தார்கள்; அப்போதைக்கு யாரும் அவர்களின் கனவைக் கலைக்க முன்வரவில்லை; கலைப்பது அவ்வளவு நல்லதும் இல்லை!

ஒரே இரைச்சல், சப்தம், பேச்சு; நடப்பு என்னவெனப் புரியவில்லை; இரைச்சல் மட்டும் நீடிக்கிறது!

தலைமையாசிரியையோ, இல்லை மாணவ மாணவிகள் மத்தியில் நற்பெயர் எடுத்த ஆசிரியையோ தெரியவில்லை; ஆடிட்டோரியத்தின் முன்பக்கம் வந்து நின்றவராய் வாய் மீது விரல் வைத்து "ஸ்" என்கிறார் அழுத்தமாக!

சற்று அழுத்தம் நிறைந்தவராகத்தான் தெரிந்தார்!

ஆறடி உயரம், சற்றே பூசினார்போல் தடிமனான உருவம்!

உடுத்தியிருந்தது அம்பர் சேலை போல் தெரிந்தது; அழுந்திப் படிய வாரியிருந்த தலையிலிருந்து முடிகள் ஒன்றிரண்டு நெற்றியில்!

நெற்றிக்கு இட்டிருந்த பொட்டு அளவில் சற்று பெரிதாய் தெரிந்தது!

முகத்தில் பட்டும் படாதுமாயிருந்த ஒப்பனையும் உதட்டுச்சாயமும் விழி உறுத்தாது!

அவர் "ஸ்" சொன்னதும் அடங்கியிருந்த மாணவ, மாணவிகள் அவர் அப்பக்கம் சென்றதும் சளசளத்தார்கள்!

நேரமாகிக்கொண்டே இருக்கிறது. நாடகம் நடப்பதாக அறிவித்திருந்த நேரம் கடந்து ஐந்து நிமிடம் ஆகியிருந்தது.

மதிய உணவிற்காய் வீடு போயிருந்த தலைமையாசிரியர் வந்து கொண்டிருக்கிறார்கள் என்றார்கள்!

பச்சைக்கொடி காட்டினார்கள், தலைமையாசிரியர் வந்துவிட்டார் என!

ஆடிட்டோரியத்தின் கீழ் மறைவில் நின்றிருந்த நாடகக் கலைஞர்கள் நாங்கள் உடல் ஒழுங்கு, ஆடை ஒழுங்கு... எல்லாம் முடிந்து மேடையேறுகிறோம் கேப்டனின் உத்தரவுப்படி!

கேப்டன் செல்லச்சாமி; அவரும் சில நாடகங்களில் நடிப்பார்; செல்லச்சாமியின் நடிப்பு அலட்டிக்கொள்ளாதது என்பார் நண்பர் ராஜ்!

ஆடிட்டோரியம் ஏறிவிட்டிருந்தோம்!

உணவு இடைவேளை முடிந்திருந்த மதிய வேளை. இளவெயிலும் நிழலுமாய் மாறி மாறி போர்த்திக் கொள்கிற சீதோஷ்ணம் அணிந்திருந்தது பள்ளிக்கூடம். மாணவ மாணவிகள் நாடகம் பார்ப்பார்களா, தூங்கிப் போவார்களா என்கிற கேள்வி சற்றே இம்சித்தது!

மேற்குத் தொடர்ச்சி மலையைக் குடையாய் கொண்டிருந்ததில் வாய்க்கப் பெற்றிருந்த பாக்கியத்தை அனுபவ பாத்தியதையாய் பெற்றிருந்தார்கள் அவ்வூர் மக்கள்!

மழை பெய்தாலும் பெய்யலாம். இல்லை இப்படியே மந்தாரப்பட்ட தைல வண்ண ஓவியமாயும் மேகம் காட்டித் தொடரலாம்!

ஏறுகிற ஒவ்வொரு மேடைக்கும் ஐந்திலிருந்து ஆறு வரை நடத்துவோம் நாடகங்களை!

சமயத்தில் அது பார்வையாளர்களையும் அனுமதிக்கப்படுகிற நேரத்தையும் பொறுத்து மாறுபடும்!

ஓரிடத்தில் நாடகம் முடித்துவிட்டு அடுத்த இலக்கு நோக்கி செல்வதற்கு முன் எத்தனை நாடகம், என்னென்னவென எழுதப்பட்ட துண்டுச்சீட்டு கேப்டனால் நாடகக் குழுவினர் பதினோரு பேரிடமும் பகிரப்படும்!

வாங்கிப் பார்க்கிற யாரும் மறுப்பும் மாற்றமும் சொல்வதில்லை பெரும்பாலும்!

சோகமாக முடிகிற நாடகத்தை வழமையாக கடைசியில் வைத்திருந்ததை மாற்றி இடையில் வைத்துப் பார்ப்போம் என்றெடுத்த முயற்சி பல இடங்களில் ஒட்டுமொத்த நாடக நிகழ்வையும் தொய்வுற்று தெரிய வைக்க, எப்பொழுதும் போல் நிகழ்வின் முடிவாக அந்த சோக நாடகம்தான் என முடிவானது!

ஒன்று, இரண்டு, மூன்றென உயிர் காட்சியாய் நகர்ந்து போய்க்கொண்டிருக்கிறது நாடகங்கள்!

அனைத்து நாடகத்திலும் பங்கேற்ற நான் ஒரு நாடகத்தில் பங்கேற்காது இடைவெளி விட்டு கடைசி நாடகத்தில் நடிக்க மேடையினுள் நுழைகிறேன்!

எழுதப் படிக்கத் தெரியாத முதியவர் போஸ்ட் ஆபீஸ் சென்று வரிசையில் நின்று கடிதம் வாங்கி அதை ராணுவத்திலிருக்கிற தனது மகனுக்கு அனுப்ப யாரிடமாவது எழுதச் சொல்லி கேட்கிற நெகிழ்வான காட்சி!

அதுவரை மற்ற கதாபாத்திரங்களின் நடிப்பில் இலகுவாயிருந்த மேடை, முதியவர் தபால் அலுவலகம் சென்று கடித உறை வாங்கி அதை ஒவ்வொருவரிடமாய் சென்று எழுதித்தருமாறு கேட்டுக்கெஞ்சுவதும், அவர்கள் கடிதம் எழுதித்தர மறுப்பதும், கடிதம் எழுதி வாங்குவதற்காய் அவர் அலைமோதுவதுமாய் காட்சி உருமாறுகிற போது பார்வையாளர்களும் மேடையும் அப்படியே உறைந்து உடைந்து போகும்!

அந்த முதியவராய் நான்; குழுவினர் அனைவரின் ஆசியால் அப்பாக்கியம் எனக்கு லெவித்திருந்தது!

நாடக நகர்வில் உறைந்து உடைந்து போன மாணவ மாணவர்களும் ஆசிரியர்களும் அக்காட்சி முடிந்த சிறிது கழித்து நாடகம் முடிந்து கீழிறங்கையில் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள்!

ஆசிரியைகள் சிலர் சற்று தள்ளி நின்று மகிழ்ச்சியைத் தெரிவித்து கையெடுத்துக் கும்பிட்டார்கள். ஆசிரியர்கள் கை குலுக்கி மகிழ்ந்து போய் கை குலுக்கினார்கள். துணிவுள்ள ஆசிரியர்கள் சிலபேர் சேர்ந்து என்னை அவர்கள் தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்!

எனக்கானால் ஒரே சங்கோஜமாய் போய்விட்டது!

கேப்டன் ஓடி வந்து அவர்களின் தோள் மேலிருந்த என் கைகளை இறுகப்பற்றிக் கொண்டார். நானும் அப்படியே!

ஆனாலும் எல்லோருமாய் சேர்ந்து அனுபவித்தோம் அந்த சங்கோஜத்தை!

என் ஒற்றையினனின் சந்தோஷம் ஒட்டுமொத்த குழுவினர் அனைவரையும் தொற்றிக்கொள்ளுகிறது!

இதற்கூடாக மாணவ, மாணவிகள் எங்களை அவர்கள் மத்தியில் சிறிது வேளை அமர்ந்து செல்லுமாறு பணிக்க, தட்ட முடியாமல் அமர்ந்திருந்த நேரத்தில் கூட்டம் பிளந்து வந்து என்னை உச்சி முகர்ந்து தூக்கி வைத்து கொண்டாடிவிட்டார் சுரேந்திரன் சார்!

அவரை எப்பொழுதோ எங்கோ வைத்துப்பார்த்ததாய் நினைவு!

என்னையும் அவரையும் பிணைத்து வைத்திருந்த இயக்கம் எங்களிருவரையும் முன்னமே அறிமுகித்து வைத்திருந்தது இப்பொழுதான் ஞாபகம் வருகிறது!

அருப்புக்கோட்டை இலக்கிய மாநாட்டில் கவியரங்க கவிஞராயும் சிறப்புறு மனிதராயும் வரைபட்டுத் தெரிந்தவர் முன் நெருக்கத்தில் அறியப்படுகிற பொழுது இவ்வளவு இயல்பான நபராய் இருப்பார் என எதிர்பார்த்திருக்கவில்லை!

விக்கித்துத்தான் போகிறேன் சற்று!

தூக்கி வைத்து கொண்டாடிவிட்டார். "அண்ணே எங்க இருந்தீங்கண்ணே இத்தன நாளு, எங்க இருந்தீங்கண்ணே..." என மனதின் இயல்பை கொண்டாடித் தீர்த்துவிட்டார்!

எனக்கும் அவருக்கும் ஆறேழு வருடங்கள் வரை வயது வித்தியாசம் இருக்கும்!

குழுவினருக்கு சந்தோஷம், எனக்கு சங்கடம்!

ஒட்டுமொத்தத்தினரில் ஒருவனை மட்டுமே கொண்டாடுவதென்பது...? குழுவினரைப் பார்க்கிறேன்; சந்தோஷத்தை ஏற்க சமிக்ஞை சொன்னார்கள்!

"வெரிகுட், கீப் இட் அப்" என்கிற நிலையிலிருந்து கீழிறங்காத பேராசிரியத்தனம் மாறி சுரேந்திரன் சாராய் இறங்கி வந்து யதார்த்தித்து நின்றார்!

"சார், என்னிலும் மூப்பு நீங்க; தவுர ஒரு பொஷிசன்ல இருக்கீங்க. நீங்க என்னைய அண்ணேன்னு சொல்றது சங்கடமா இருக்கு சார்" என்கிறேன் சுரேந்திரன் சார் காதருகே!

"அண்ணே, இப்ப என்ன நான் ஓங்க கிட்ட பேசக்கூடாதுங்குறீங்களா?" எனச் சப்தமிட்டு சிரித்தவாறே, "அட போங்கண்ணே! நீங்களும் நானும் இந்த மண்ணுல பொழைச்சி கெடக்குற வரைக்கும் அண்ணன்தாண்னே நீங்க எனக்கு" என்றார்!

"பொஷிசனெல்லாம் இருக்குறதுதாண்ணே ஒரு ஓரமா; அதுக்காக ஒங்கள மாதிரி தெறமைக்காரர கொண்டாடாம இருந்துற முடியுமா சொல்லுங்க!" என்பார்!

அவ்வூரின் கல்வி நிலையங்களுக்கும் அவ்வூரை சுற்றியிருக்கிற கிராமங்களுக்குமாய் போய் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தி வர பணிக்கப்பட்ட எங்களின் நாடகக் குழுவிற்கு அவர்தான் ஒரு வாரத்திற்கு சுரேந்திரன் சார்தான் இயக்கம் சார்ந்த பொறுப்பாளர்!

கோழி தன் குஞ்சுகளைப் பாதுகாக்கிற உள்ளன்புடன் ஒரு வாரமும் அக்கறை எடுத்து அன்பு செலுத்தினார். அதில் எனக்கு கூடுதலாய் ஒரு கரண்டி!

அந்த ஒரு வாரத்தில் தளைத்துக்கிளைத்ததுதான் எனக்கும் அவрымகாண நட்பும் மேலோங்கலும்!

நாங்கள் தங்கியிருந்த விடுதிக்கு தினசரி அதிகாலை ஒரு விசிட் வருவார். பின் காலை டிபன் எடுத்துக்கொண்டு, அதன் பின்னாய் நிகழ்ச்சி நடக்கிற பள்ளிக்கு அல்லது கல்லூரிக்கு இல்லை நிகழ்விடத்திற்கு அம்பு குறியிட்டுவிட்டு எங்களுக்கு முன்னதாக அங்கு போய் நிற்பார்!

நாங்கள் சாப்பிடுகையில் பரிமாறுவார்; சாம்பார் வாளியை தூக்கிக்கொண்டு எங்களின் முன் வந்து நிற்பார்; தேநீர் வாங்கி வருவார். யாருக்காவது உடல் நலமில்லையென்றால் மருத்துவமனை அழைத்துச் செல்வார். என்னிடம் நாடகமும் நட்பும் இன்னும் சிலவும் பேசவேண்டும் என்பதற்காகவே நாடகக் குழு வன் கிளம்பிய பின் என்னை இருசக்கர வாகனத்தில் அமர்த்திக்கொண்டு பின் தொடர்வார்.

காலை வேலை செல்கிற இடம் பெரும்பாலும் பள்ளியாகத்தான் இருக்கும். மதியம் உணவு இடைவேளையை ஒட்டி அல்லது அதன் பின் கல்லூரி வாய்க்கப்பெறும். மாலை இல்லை இரவு வேளையில் ஏதாவது ஒரு கிராமம் அல்லது சாலையின் முச்சந்தி என அமையும்!

சுரேந்திரன் சார் எந்நேரம் தன் உடல் அணிந்திருக்கிற இறக்கைகளைக் கழட்டுவார், எந்நேரம் அதையெடுத்து திரும்பவும் அணிந்துகொள்வார் என்பது ரகசியமே!

எந்நேரம் தூங்குவார், எந்நேரம் விழிப்பார், குடும்பத்திற்கான தனது அன்றாடங்களை எப்படி ஒதுக்குகிறார், இதில் எங்களைப் பார்த்துக்கொள்ள எப்படி நேரம் ஒதுக்குகிறார் என்பதெல்லாம் அவருக்கு மட்டுமே தெரிந்த, அவர் மட்டுமே அறிந்த ரகசியமாய் இருந்தது!

முடங்கியார் சாலையிலிருக்கிற பெரிய விடுதியின் இரண்டாவது தளத்தில்தான் தங்கியிருந்தோம்!

நாடகம் நடத்திவிட்டு வந்த ஓர் நாளிரவில் எல்லோரும் தூங்கிப் போன பின்னிரவு வேளையாய் விடுதியின் கீழுள்ள கடைக்கு சிகரெட் வாங்கச் சென்றிருந்தேன். ஆச்சரியம்! கடையை விட்டு சற்று தள்ளி ஓரமாய் நின்றுகொண்டும் எனக்கு முதுகு காட்டியவர்களுமாய்ச் சுரேந்திரன் சாரும் எங்கள் நாடகக் குழு கேப்டனும்!

கேப்டன் சிகரெட் குடிப்பார் என்பது அன்றுதான் தெரியும் எனக்கு; ஆனால் குழுவிலுள்ள எல்லோருக்கும் தெரியும்!

சிகரெட் மட்டும் வாங்கிக்கொண்டு நழுவி விடலாம் என நினைத்த என்னை சுரேந்திரன் சாரின் குரல் இழுத்து அவர்களுக்கு மத்தியில் நிற்க வைத்தது!

மடிப்புக்குலையாத அரைக்கை சட்டை, ஃபேண்ட், கிளீன் ஷேவில் பளிச்சென்றிருந்த முகம், மாறாத அதே புன்னகை, களைப்புற்றிராத உடல்!

"அண்ணே, ஒங்களோட நின்னு சிகரெட் குடிக்கிற குடுப்பினையாவது எனக்கு குடுங்கண்ணே" என்பார்!

அம்மாதிரியான தருணங்களில் அவரிடமிருக்கிற பேராசிரியத்தனம், மாதச்சம்பளம் வாங்குகிற உயர் மத்திய தர வர்க்க குணம், அதிகார அடுக்குகளில் அமர்ந்திருக்கிற கெட்டி, இத்தியாதி இத்தியாதி என்கிற "கூடுதல் பொருத்துதல்கள்" சகலத்தையும் கழட்டி கீழ் வைத்துவிட்டு தோள் படர்ந்திருக்கிற சாதாரணராய்த் தெரிவார்!

அன்றிலிருந்து இது போலான தனித்துப்பட்ட இரவுகளின் தேநீர்க் கடைத் தேநீரையும், சிகரெட் புகையையும் மட்டுமல்ல, பரஸ்பரமான நெருக்கத்தையும் மனம் படரச் செய்திருந்தது!

அப்பொழுதிலிருந்து அவ்வூரிலிருந்து நிகழ்ச்சிகள் முடிந்து கிளம்புகிற நாளது வரை சிகரெட் புகை ஆசுவாசமும் "அண்ணே" என்கிற வாஞ்சையும் மனப்படர்விலேயே!

வீடு விட்டு வீதி இறங்குகையிலேயே நேரம் மீறியிருந்தது சற்றைக்கும் அதிகமாக!

உடல் என்ன உடல்! இந்த அறுபத்தி மூன்றில் இருக்க வேண்டிய அனைத்தையும் சுமந்தே!

இருந்தாலும் முயற்சிதானே... என இருசக்கர வாகனம் எடுக்கிறேன்!

நந்தா ஹோட்டல் அருகே சைக்கிள் ஸ்டாண்ட் இருந்தால் நிப்பாட்டி விட்டுச் செல்வோம்; இல்லையெனில் திருகிய கையை எடுக்காமல் ஒரே முறுக்குதான் என்கிற முடிவிலிருந்து விலகாது!

நந்தா ஹோட்டல் அருகே சைக்கிள் ஸ்டாண்ட் இல்லை. நான் ஆசைப்பட்டபடியே இருசக்கர வாகனப் பிரயாணமே வாய்க்கிறது!

என் உடலோடும் உணர்வோடும் ஒட்டிக்கிடந்த ஈர மண் துகள்கள் சுமந்த ஊர் நோக்கிச் சென்று!

நிமித்தங்களின் அவசியம், அழைத்தலை தட்டி விடவும், உதிர்த்து விட மனமின்றியும் என் பயணம்!

சென்று விடலாம் சற்றே தாமதமாக வேணும் என்கிற முடிவு கொண்டு!

சிவகாசி வரை எனக்கு பயணத்தின் மீதான மலைப்பேதும் பெரிதாய் இல்லாத போதும் சென்று விடலாமா நேரத்திற்கு என்கிற கேள்வி மட்டும் தொக்கி நிற்கிறது பெரிதாய்!

பயணிக்கிறேன் சாலை முழுக்கவுமாய் பேசிக்கொண்டு; சிரிக்கிறேன் சாலைகளின் பக்கவாட்டுச் சுவர்கள் எதிரொலிக்க; நினைக்கிறேன் சக்கரங்களுக்கு அடியில் நழுவுகிற சாலையின் மேனி படரச்செய்து!

அது ஒரு நேரம், அதுவொரு காலம், அது ஒரு நெசவு சாலை சொல்கிறது நெகிழ்வுடன்!

ஆம் என்கிறேன் விழிகளில் ஆனந்த நீர் வைத்து!

எனக்கென இல்லாவிட்டாலும் கூட இரு சக்கர வாகன ஓய்விற்காய் வண்டியை நிறுத்திய இடம் தேநீர்க் கடையாய் இருந்தது!

வடை எடுத்துக்கொள்ளவில்லை, கடைக்காரர் சொல்லிற்காகக்கூட!

நினைத்தால் சாப்பிடுவதுண்டு!

நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துப்போகிறது காலக்கடிகாரம்!

கடைக்காரர் கூறினார்; "இப்பிடியே லெப்ட் எடுத்து நேரா போனா பத்தாவது கிலோ மீட்டர்ல ராஜபாளையம்" என!

சிற்பியின் வரைதலாய், ஓவியனின் செதுக்கலாய் ஊரின் முகம் வேற்றுத் தோற்றத்தில்!

மனம் முழுக்க சுரேந்திரன் சாரின் முகமும், அவரின் அப்பழுக்கற்ற குணமும்!

எப்படியிருக்கிறார் அவர், எங்கிருக்கிறார், பணியில் இருக்கிறாரா, பணி நிறைவு அடைந்துவிட்டாரா, இன்று பார்க்க இயலுமா, சந்தர்ப்பமும் சூழலும் கை கொடுக்குமா...? என்கிற இதர இதர கேள்விகளுடன் சென்ற பணியின் நிமித்தங்களில் கரைந்துவிட்டு திரும்புகிறேன்!

எண்பதுகளின் இறுதியில் சுவடு பதித்த மண். திரும்பவுமாய் கால் வைக்க இப்பொழுதுதான் வாய்த்திருக்கிறது!

நகர் தாண்டி வெளிவருகையில் தென்பட்ட ஒரு தேநீர்க்கடையைக் கடந்த பொழுது "அண்ணே" என அசரீரியாய் தோள் தொட்ட குரல் கேட்டு நிற்கிறேன் விழிநீர் படர!

- விமலன், விருதுநகர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.