தபால் வர தாமதப்பட்டிருந்தது. எப்பொழுதும் போலுள்ள எதிர்பார்ப்புதான் என்ற போதிலும் கூட துள்ளி வருகிற குழந்தையை முன் மறித்துத் தூக்கிக்கொள்கிற ஆவலை அணிந்திருந்தான்.

கொரியரா, அஞ்சல் அலுவலக மூலமாகவா தெரியவில்லை. அறுதியிட்டுக் கேட்டு விடவும் முடியவில்லை.lovers in the rain 670வரத்தின் ரிஷிமூலம் தெரிந்தால்தானே வாசலைக் கண்டடைய!

தூற ஆரம்பித்திருந்த மழை சற்றே பலம் கொண்டு வெள்ளிக்கம்பிகளை நட்டு விட்டு நகர்கிறது.

பிடுங்கி எடுத்துக்கட்டி பைக்குள் வைத்துக் கொள்ளலாம் என நினைத்துக் கை நீட்டுகிற வேளை போக்குக் காட்டுகிறது.

முகம் நனைத்த தூறலின் சிலுசிலுப்பு கைகோர்த்திருந்த ஜோடி எறும்புகளையும் நனைக்கிறது.

ஒன்றன் பின் ஒன்றாய் வாயில் கவ்வியிருந்த இரையுடன் சென்ற எறும்புகள் வாசலோரம் நின்றிருந்த அவன் பாதமேறிச் செல்கின்றன.

காதல் ஜோடியாய் இருக்கும் போலும். பிணைவும் குழைவும் கோடிட்டுச் சொன்னது.

விழியின் படர்வைப் பின்தொடர்ந்தவனாய் கோடிட்டு எறும்புகள் நனையாது ஓரமூர்ந்து செல்வது கண்டு திருப்தியுறுகிறான்.

வீடற்று உறைந்திருந்த தெருவின் வெற்று வெளி தாண்டி நடப்பட்டிருந்த தென்னங்கன்றுகளின் வரிசையான தலையசைவு ஏனோ இவன் மனமீர்த்ததாக!

வீதியெங்குமாய் வீடுகள் நனைத்து அடைத்துப் பெய்த மழை கூடாய்ப் போர்த்தித் தெரிகிறது.

தெருவடைத்துப் படுத்திருக்கும் நாய்களைக் காணவில்லை.

மழைநீர் நனைத்து மகிழ்கிறது உடலை.

ஆறு மாதங்களுக்கு முன்பாய் தெரு முனையில் ஆட்டோவை நிறுத்தி லக்கேஜுடன் நடந்து வந்தது ஆறாது நினைவிலிருப்பதாய்!

தெருவின் இரு மருங்கிலும் சாக்கடை கட்டித் தெருவில் பேவர் பிளாக் கல் பதிக்க ஏற்பாடு. சாக்கடை கட்டி விட்டிருந்தார்கள். கல் மட்டும் பதிக்கவில்லை. நடையாய் நடந்து கேட்டதன் பலன் ஆறு மாதங்கள் கழித்துச் சாலையைப் பரப்பினார்கள்.

காண்ட்ராக்டரைப் பார்க்கச் சென்ற நாளில் நீண்ட மர இருக்கையின் ஒரு முனையில் அவர் அமர்ந்து கொண்டு மறு முனையில் அவனை அமரப்பணித்தார்.

இப்பொழுதானதில் இது ஒரு பழக்கம் போலும். கையில் வைத்திருந்த தொடுதிரைப் பேசியில் பேசிக்கொண்டே இருந்தார்.

வணக்கம் சொல்லி விடை பெறுகையில் பளிச்சென சிரித்துக் கும்பிடு போட்டு அனுப்பி வைத்தார்.

ஏற்றுக்கொள்வதுதானே?

"உன் முகம் தெரிகிறது" என பாட்டோடிய வரிகளுடன் வீட்டினுள் நுழைகையில் கொமட்டில் விழுந்த குத்துப் பேச்சுடன் நெசவிடுகிறது.

குத்துக்களை ஏற்றுக்கொள்ள வாய்க்கப் பெறுவது தனி மனோநிலைதான் போலும்.

இல்லைன்னு சொல்லல, அதுக்காக... என முற்றுப்பெறா வார்த்தையை முடிச்சிடுகிறான்.

அந்த முடிச்சிற்கொரு குத்துமாய் விழ தவிர்க்காது அவள் கையேந்தி முத்தம் தருகிறான்.

ஏய் கோட்டிக்கார மனுசா, இப்பிடியா, தலை நரைச்ச காலத்துல, அப்பறம் அப்பறம்... என தலையிலும், முன் நெற்றியிலும் குத்தியவாறே தோளில் சாய்ந்து கொள்கிறாள்.

"இத்தனை வருஷம் பாத்து அலுத்த முகம்தான, இன்னும் என்ன பெரிசா பாடிக்கிட்டு..." என்ற போது மௌனித்து ஆழ்ந்து போகிறான்.

ஆழ்தல்களின் சுகம் எப்பொழுதும் மடியிட்டுத் தாலாட்டுவதுதானே, காதில் சப்தமின்றி சொல்லி விட்டு விலகிக் கொள்கிறாள் சற்று!

இது போலான பேச்சுக்களை அவள் பேசும் பொழுதெல்லாம் வீடதிர சப்தமிட்டுச் சிரித்திருக்கிறான். இல்லையானால் சின்னதான குத்தாட்டம் போட்டிருக்கிறான்.

அவனது மௌனம் கண்டு திகைத்த அவள் "ஏய் என்ன இது லூசு மனுசா..." என்கிற தீற்றலான சொல் எய்கிறாள்.

எய்த சொல் மனம் தைக்க, அலுத்தடைந்த தலை கலைத்து விட்டுச் சீப்பெடுத்து வந்து தலை வாரி விடுகிறாள். பிடிக்காத போதும் கூடத் திருநீற்றைப் பூசி விடுகிறாள். லேசாக அவளது ஸ்டைலில் பட்டும் படாமல் குங்குமத்தையும் சந்தனப் பொடியையும் தொட்டு வைக்கிறாள்.

தவமெல்லாம் செய்ய வேண்டாம். பாட்டெல்லாம் பாட வேண்டாம். இறைவனும் அவளது பெற்றோர்களும் இட்ட வரமும்தானே அமைவதெல்லாம்! அமைந்து விட்டாள்... வீடெனும் கோவிலில்!

உடம்புக்கெல்லாம் ஒன்றுமில்லை ஐயாவுக்கு, இந்த மழையிலும் எளவட்டம் மாதிரி இப்பதானே போய் பச்சைத் தண்ணியில் குளிச்சிட்டு வந்தீங்க என்கிறாள்.

சடசடத்து ஊற்றுகிற மழையில் கண்மாய்த் தண்ணீரில் குளித்தெழுந்து ஓடி வந்ததை ஞாபகமூட்டினாள்.

பாண்டியும் குணாவும் கூட உடனொத்த சேக்காலிகள் இரண்டு பேரும் சட்டென வந்து மனம் தொட்டுப் போனார்கள்.

பேசிக்கொண்டே தரையமர்ந்து ஆற்றித் தந்த தேநீரிலிருந்து பறந்த ஆவி அவள் முகம் தொட்டுப் படர்கிறது.

ஆவிபடர்பவும் ஓர் அழகுதான் போலும் அவள் முகத்திற்கு!

"என்ன மஞ்சள் தூள் தேய்ச்சுக் குளிச்சீங்களாக்கும்? ஜம்முன்னு இருக்கு. எப்பயோ நான் சொன்ன சொல்லை இப்ப வரைக்கும் தூக்கிச் சுமக்கிறீங்களே?"

சொன்ன சொல்லின் ஈரம்தானே மனமொட்டிக் கிடக்கிறது இன்னும். பின் ஏன் எப்பொழுது சொன்னாள் என்கிற அனாவசியம்?

முகத்தில் ஆங்காங்கே இருந்த தடிப்புகளையும் தோல் உலர்தலையும் காண்பித்துச் சொன்ன நாளில் "மஞ்சள் தேய்ச்சுக் குளிங்க சரியாப்போகும்" என்ற அவள் பேச்சிற்குக் கண்ணடித்துச் சிரித்த பொழுது தலை அதிர ஓங்கிக்கொட்டி விட்டு நகர்ந்தாள்.

அந்த வலியையும் சொல்லையும் ஏந்திப்பிடித்த ஞாபகம் ஏனோ இப்பொழுது சூழ்கொள்ள வெறுமை கொண்ட பார்வையை வீசியவனை ஏறிடுகிறாள்.

முகமேந்தி அர்ச்சிப்பதான ஏறிடல்கள் இழையோடுகிற மனதும் இடமும் பாக்கியம் சுமந்ததுதானே?

இது போலான வெறுமைகளை அவன் அணிந்து கொள்கிற சமயங்களை அவள் அறிவாள். யூகித்தும் கொள்வாள்.

காலியான தேநீர் டம்ளரை வாங்கியவாறே அருகில் வந்தமர்ந்தாள்.

அடுத்த குவளை தேநீரை ஊற்றத் தயாராகிறாள்.

குனிந்த தலை நிமிராது "யாருக்கும் தெரியாம எங்கயாவது ஓடிப்போயிருவோமா" என்கிறான் குரல் தளுதளுத்தவனாய்!

சாந்தா அக்காதான் சொல்வாள் அடிக்கடி. "டேய் கிறுக்குங்களா, இப்பிடியா ஒண்ணு சொன்னாப்புல ரெண்டு பேரும் மனசாய்ந்து போய் நிப்பீங்க? ரெண்டு பேரு மனசும் ஒரே பூக்காடு. யாராவது ஒருத்தரு முள்ளுக்காடா இருங்கடா" என்பாள்.

முட்காடு முளைக்க மறுக்கிற சமயங்களில் அவர்களிருவரையும் கூட்டி வைத்து கனமானதொரு சாபமொன்றை அள்ளித் தெளித்துப் போவாள்.

நேற்றைக்கு முன்தினம் தொலைபேசினாள்.

டேய் என்னடா பண்றீங்க ரெண்டும்? தத்து பித்தின்னு திரியாமல் நில்லுங்க வரைஞ்சதுக்குள்ள என்றாள்.

என்ன சொல்வதென தெரியவில்லை பதிலாக!

சிரித்து வைத்தான்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன் அவசர அவசரமாக வந்த காலன் மாட்டிவிட்டுச் சென்ற சுவர்க்கடிகாரம் மதிய சாப்பாட்டு நேரத்தை அறிவுறுத்திச் செல்கிறது.

பிள்ளைகள் சாப்பிட்டிருப்பார்களா தெரியவில்லை.

வெளியில் இருக்கிறார்கள்.

பணி ஓய்விற்குப் பின்னால் எப்பொழுதாவது வந்து போர்த்திக் கொள்கிற வெறுமை இப்பொழுதெல்லாம் அடிக்கடியாய்!

கட்டாயத்திற்குட்பட்டும் தேவை வேண்டியுமாய் இயங்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.

அவளைப் பார்க்கிறான் அவன். அவனைப் பார்க்கிறாள் அவள். தேநீர் டம்ளரை அவனருகில் வைத்து விட்டு அவன் தோளில் சாய்ந்தவளாய் "யாருக்கும் தெரியாம எங்கயாவது ஓடிப்போயிருவோமா" என்கிறாள் குரல் தளுதளுக்க.

- விமலன், விருதுநகர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.