“பேஸ்புக்கு, வாட்சாப்புல போட்டு நாறடிக்கிறேனா இல்லையான்டு பாரு”

“போடு! போட்டுட்டு உசுரோட இருந்துடுவீயா நீய்யின்னும் பாரு”

துப்பட்டாவ ஒரு ஒதறு ஒதறிட்டு திரும்ப தோள்பட்டைல தூக்கிபோட்டு அவ வீட்டுக்குள்ளாற போனப்ப அம்புட்டு கெத்தா இருந்துச்சு.

ஒரு பொம்பள, தன்ன உதாசீனப்படுத்துன அவமானம் தாங்காம அதே எடத்துலயே நின்னுட்டு கத்திட்டிருந்தான் காதர்.

வீட்டுக்குள்ள போன தங்கம்மா செல்போன்ல சேமிச்சிருந்த வீடியோ ஒன்ன, தேமேன்னு கெடந்த ப்ளூதூத் ரேடியோ பாக்ஸோட இணைச்சு விட்டுட்டதுல உசுரு கொடுத்து காதர் வசவு பாடினதெல்லாம் அவனுக்கு கூட கேட்டிருக்காது பாவம்!

பள்ளி சென்று படித்ததில்லை
பாடம் ஏதும் கேட்டதில்லை
சொல்லித்தரும் தகுதி இந்த
துனியாவில் எவர்க்கும் இல்லை
அல்லாவே ஆசிரியன்
அனைத்துமே ஆச்சரியம்
சொன்னதெல்லாம் நீதிகளே
சத்தியத்தின் செய்திகளே”

மனமுருகி நாகூர் ஹனீபா பாட, அத சம்மந்தமேயில்லாத உச்ச ஸ்தாதியில அலறவிட்டா. இந்த காலத்துலையும் சண்டைக்கிடையில ரசனையோட தன் பாட்டை எட்டூருக்கு எட்டுறாப்ல கேட்கும் பெண்மணி பத்தி கேள்விபடாமலேயே ‘போய் சேர்ந்து’ட்ட ‘இசை முரசார்’ மற்றுமொரு பாவப்பட்ட ஜீவன்.

சின்னச் சண்டைதான், இம்புட்டு பெருசு பண்ணியிருக்கத் தேவையில்லதான். விதி ஒருத்தனை பந்தாட நெனச்சா , அவனோட சூனிய காலம் விதியோட சேந்துக்கிட்டு வெளாடும். காதருக்கு அதான் நடந்துட்டிருந்துச்சு.

காதர் மகன் சின்னவன் புது ‘R15 பைக்’ல தெருவுக்குள்ளையே சாகசம் செஞ்சுட்டிருந்தான். ஒலகத்துக்கும் தனக்கும் சம்மந்தமில்லாத மாதிரி ஓரமா நடந்து போய்ட்டிருந்த தங்கம்மா மேலையா அவன் ஒரசிட்டு போவணும்?

ஒரசுனதும்தான் ஒரசுனான். அப்படியே ‘பக்கியானு’ திரும்பிப் பாக்காம ஓடிப் போயிருந்திருக்கக் கூடாதா? சிரமப்பட்டு காலூண்டி பைக்ல இருந்து இறங்கி தங்கம்மாக்கு ஏதாவது அடிபட்டுச்சா, ‘சாரி’ சொல்லலாமான்னு வந்தான். வந்த பயல கன்னத்துல பளார்ன்னு ஒன்ன விட்டு, பைக் சாவிய புடுங்கி, ஓடுற சாக்கடை தூம்பால வீசிட்டு அவ பாட்டுக்குப் போய்ட்டா.

அழுதுக்கிட்டே மகன் வீடு வரப்ப, காரணம் கேக்க எந்த அம்மாக்குதான் மதி வேலை செய்யும்? என்ன ஆச்சு ஏதாச்சுன்னு முழு கதையக் கேக்காம அடிச்ச விஷயத்த மட்டும் காதர்கிட்ட ஆக்ரோசமா ஒன்னுக்குப் பத்தா சொல்ல, கோபம் தலைக்கேறிடுச்சு காதருக்கு.

“என்ன தைரியம் பொட்டச்சி நாய்க்கு! செத்தா தூக்கிப் போட ஆளு இல்லாத நாறக்கிழட்டு முண்டம்! எம்புள்ள மேலயே கைய வச்சிருக்கா? அவளுக்கு இருக்கு இன்னைக்கு”

இப்படி ஆக்ரோசமா பாடமெடுக்க வந்தவனைதான் தங்கம்மா ஆட்டிப் படைச்சுட்டிருந்தா.

தங்கம்மா அடிச்சது கூட ரெண்டாம்பட்சம்! “ஏன்டாப்பா, எட்டாப்பு படிக்குற ஒம்மவனுக்கு பைக் ஓட்ட கொடுக்கலாமா?”ன்னு நயந்து பேசியிருந்தா காதரும் அனுசரணையா போயிருந்திருப்பான். ஆனா அதுதான் தங்கம்மாவோட சுபாவமில்லையே? அவ ஒடம்ப சிலுப்பிக்கிட்டு எதிர்த்து நிண்ட தோரணைதான் காதரை உண்மையிலேயே கோபப்படுத்தியிருக்கும். பொம்பளைங்க மனசுதான் ஆழம். ஆம்பளைங்க மனச யார் வேணும்னாலும் படிக்க முடிஞ்ச திறந்த புஸ்தவமாச்சே?

அவ வீட்டு வாசல்லையே போயி அவள கிழிகிழின்னு கிழிக்கலாம்னு வேகமெடுத்து போனாக்க, தலைல சாணி கரைச்சு ஊத்தாத குறையா தங்கம்மா டீல் பண்ணுனது இன்னுமே பொறுக்கல.

தனியாவே சண்ட போட வந்திருக்கலாம், யாருக்கும் பாதகமில்லாம செல்போன்ல இன்ஸ்டாகிராம் நோண்டிட்டிருந்த மகன் மூத்தவனையும் கூட்டி வந்தது பெரிய தப்பா போச்சு. புருசன நல்லா ஏத்திவிட்டு, உருளப்போற தங்கம்மா தலைய எடுத்து கோணிப்பையில அள்ளிப்போட்டு போகப் போறமேனிக்கி, வெரட்டி வந்து தங்கம்மா வீட்டு வாசலுக்கு சேர்ந்தா காதர் பொண்டாட்டியும்.

சொல்லப் போனாக்க சொந்தக் காசுல சூனியம் வைக்க சொந்தபந்தத்தையெல்லாம் கூட்டி வந்த மாதிரி ஆகிடுச்சு!

ஒருத்தனுக்கு கெட்ட நேரம் வந்தா இப்படியா குடும்பம் சகிதமா ஒட்டிக்கிட்டே ஓடி வரணும்!?

“ரோட்ட இழுத்து முன்வாசல், பள்ளிவாச இடத்த இழுத்துப் போட்டு கொள்ளப்புறம்! எவன் கேப்பான்னு திமிருதானே. இடிச்சுப் போட்டா அள்ளிப்போட ஆளிருக்கா ஒனக்கு!”

தங்கம்மாளுக்கு கோபம் வர்ராப்ல தெரியல...

“புருசனும் இல்ல புள்ளையும் இல்ல, ஆனாலும் வகவகையா சீல என்ன, கைகழுத்துல நகையென்ன...”

காதர் பொண்டாட்டி தங்கம்மாவ சீண்டிப் பாத்தா. மெயினான சுவிச்சுல கரேக்ட்டா கை வச்சுட்டதாக காதர் நெனச்சான். தங்கம்மாளுக்கு ஷாக் அடிச்சிருக்கும்னு அவன் நெனப்பு.

“மொத தடவ கேட்டா மல்லுக்கு நிக்கலாம். சண்ட போடுற எல்லா பயகளும்,பொட்டச்சிகளும் இதையே சொல்லச் சொல்ல அவளுக்கு அதெல்லாம் “நல்லா இருக்கீயா?”, “சாப்டீயா?”, “ஊர்ல மழையா?”ங்குற கணக்கா சம்பிரதாய சொல்லாகிட்டு!

வீட்டுக்குள்ளாற இருந்துக்கிட்டு தங்கம்மா சிரிச்சுக்கிட்டா.

ரொம்ப நேரமா காதர் கத்திட்டிருந்ததுல அக்கம் பக்கத்துல உள்ளவங்களாம் ஒன்னு கூடி ஏதோ பெரிய பிரச்சனை நடக்கப் போறதா ஆர்வமா பாத்தாங்க. ஆனா தங்கம்மாக்கு அதுவரைக்குமே வெளியே வரதுக்கு சோலி ஏதும் இல்ல..

அவன் வாசல்ல கத்துறதுனால இருக்குற வேலய பாக்காம இருக்க முடியாதுல? அரிசி கழுவுன தண்ணிய வாசல்ல இருக்குற செடிக்கு ஊத்த வந்தா... கரேக்ட்டா அந்த நேரந்தான் காதர் சொன்னான்,

“பெரியவனே! நீ ஒன் செல்போனுல எல்லாத்தையும் வீடியோ எடு.. பேஸ்புக்கு, வாட்சாப்புல போட்டு நாறடிக்கிறேனா இல்லையான்னு பாரு”

“போடு! போட்டுட்டு உசுரோட இருந்துடுவீயா நீய்யி.. சுண்ணாம்புக் கால்வா ஏரியா பசங்களுக்கு ஆளுக்கு நூறூவா விட்டெறிஞ்சா, ஒம்மவன ஆத்துல விட்டு நூறு துண்டாக்கி போட்டுடுவானுங்க. அடக்கம் பண்ண பொறுக்கி அள்ளிக்கிட்டுதான் போவணும் நீய்யி...”

அவ செடிக்கு தூக்கி வீசின தண்ணில ஒன்னு ரெண்டு காதர் மேல தெறிச்சதுல தங்கம்மாவோட நோக்கம் இருந்துச்சோ இல்லையோ யார் கண்டா. அது மீன் ஆஞ்சு கழுவின தண்ணியா இல்லாம இருந்த வரைக்கும் சந்தோஷப்பட்டுக்கிட்டு போவானா காதர்? அதுவும் இல்ல. ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!

பதிலுக்கு காதரும் அவனோட ஜால்ராக்குன்னு சேர்ந்துக்கிட்ட வேடிக்க பாக்குற கூட்டமும் என்ன சொல்லுதுன்னு கேக்குமுன்னவே வீட்டுக்குள்ள திரும்ப போய்ட்டா பொம்பள. கூட்டம் கலைஞ்சு போச்சு.

கூலிப்படை, ஏரியா, கொலை செய்யப் போற மொற, சம்பவம் நடக்குற எடம்... இம்புட்டும் இவ்ளோ வெளாவாரியா பிசிறுத்தட்டாம சொல்றான்னா ‘செய்யக் கூடியவ’தானோன்னு ஒறஞ்சு நின்னுட்டா காதர் பொன்டாட்டி. இப்பவே ஒடம்ப பத்து கூறாக்கி அறுத்துப் போட்டாப்ல உணர்விழந்து போச்சு. இன்னும் உசுரோட இருக்கோம்னு நம்பவே அவளுக்கு டைம் தேவைப்பட்டுச்சுன்னா பாத்துக்கோங்க.

புலி வால்ல பிடிச்சவன் மாதிரி உள்ளாற திணறிதான் போய்ட்டான் காதர். ஆனா அத எப்படி காட்ட முடியும்? ஆம்பளையாச்சே!

 அவளுக்கு பாடம் புகட்டுனாழொழிய கட்டுன பொன்டாட்டிகூட கால் தூசுக்கு மதிக்காம போய்டுவாளேன்னு பீதி அவனோடு ஆக்ரோசத்திலும் ஈசியா அடையாளங் காணலாம். காலம் முழுக்க சொல்லிக்காட்டியே கஞ்சி ஊத்துவாங்குறதும் நியாயமான ஆண் கவலையல்லவோ?

கத்திக் கூப்பாடு போட்டுப் பாத்தான்! கெட்ட வார்த்த பேசிப் பார்த்தான். எல்லாத்துக்குமே பதில் சொல்லத் தனக்கு தலையெழுத்தில்லைன்டு எண்ணம் தங்கம்மாளுக்கு.

வையகம் எங்கும் அமைதியில்லை

தீயவன் முறையால் மக்கள் படும் தொல்லை

நியாயம் தர்மம் வரவேண்டும்

மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்

வல்லவனே மிக நல்லவனே

வாழ்வில் நன்னெறி காப்பாய் இறையோனே”

அனீபாவும் சளைக்காம சண்டைக்கு சாட்சியா நின்னு தங்கம்மாவை ஆறுதல்படுத்திட்டிருந்ததால காதர் எப்ப எடத்த காலி பண்ணான்னு தங்கம்மா கவனிக்கவும் இல்ல.

நீள முடியும் கருப்பு அங்கியும் காதருக்கு இல்லாதது மட்டும்தான் மிச்சம். “பட்டேன் படாத துயரம், உற்றேன் படுகொலை’’ன்னு ஒத்த மாணிக்கச் சிலம்ப ஏந்துனபடிக்கு ஆக்ரோசமா புலம்பிக்கிட்டே மதுர வீதியெல்லாம் நடந்து பாண்டியன் அரசவைல நீதி கேட்டுப் போன கண்ணகியாட்டமே ‘ஆம்பள கண்ணகி’யா நேர்ரா ஜமாத் நிர்வாகச் செயலாளர் வீட்டுக்குப் போய் நின்னான். சிலம்புக்கு பதிலா கையில பைக் ஓட்டுன சின்ன மவன்!

அவனோட ஆக்ரோசத்துக்கு ஈடு கொடுக்குற சூழல்ல ‘செயல்’ அப்போதைக்கு இல்ல! காதர் ஒப்பிச்ச முழுநீள குற்றப்பத்திரிக்கையோட பாதிலையே ‘செயல்’ அதிர்ச்சியானதுல முழுங்க முடியாத எச்சிலெல்லாம் தொண்டைக்குள்ள பொட்டலமா குவிஞ்சது எதிர்ல பேசுறவங்களுக்கு கூட தெளிவா தெரியுறாப்ல இருந்துச்சு. அவரோட அதிர்ச்சில நியாயம் கணக்கில்லாம இருக்கு. அதுக்கொரு கதையுண்டு!

தங்கம்மா இப்ப குடியிருக்குற வீடு இருக்கே... வாசல்க்கு முன்னாடி பத்தடி இடைவெளிவிட்டு பனங்கருக்கு மட்டைல வேலி கட்டியிருக்குறது அவ இடமில்ல. பொதுமக்களுக்கான வழிப் பாதை பாதியை இழுத்து வச்சுக்கிட்டா. அது கூட பரவால்ல, நாளைக்கே கவர்மென்டுக்கு பொழுது போவலைன்னா ரோடு போடுறேங்குற பேருல எடுத்துக்கிடும். ஆனா வீட்டுக்குப் பின்னாடி ஒரு லாரிய குறுக்கால நிப்பாட்டுற அளவுக்கு இடத்த சுத்திவளச்சு ‘தென்னவோலை தட்டி’ல மறைப்பு சுவர் கட்டி ஆக்கிரமிச்சிருக்காளே, அது பள்ளிவாசல்க்குப் பாத்தியப்பட்டது. மைத்தாங்கொல்லையோட கடேசிப் பவுதி!

அத கைப்பத்தணும்னா மொதல்ல காரணம் வேணும்ல? ஒருவழியா பள்ளிவாசப் பெரியவங்களாம் ஒன்னு கூடி கண்டுபிடிச்சாங்க. செலவுதான் அதிகமா போற மாதிரி இருந்துச்சு. பரவால்லன்டு பள்ளிவாசல் நெலத்தை சுத்தி காம்பவுன்ட் சொவரு எழுப்புறதா முடிவாச்சு. ஆனா தட்டிக்கு உட்புறமா அடுப்பாங்கரைக்காக மூனு பக்கமும் செவரு எழுப்பி தன் வீட்டோட சேர்த்து வச்சுக்கிட்டா.

பஞ்சாயம் கூடுச்சு!

“எல்லாருக்கும் தெரியும். நம்மூர்ல பல பேரோடு தோப்புத்தொரவுலாம் கடலுக்குள்ளதான் கெடக்கு! கரைய விழுங்கிட்டே கடல் முன்னேறி வர்ராப்லையே கொஞ்சங்கொஞ்சமா உரிமப்படாத நெலத்த அரிச்சு எடுத்துட்டு வருது தங்கம்மா பொம்பள! அனாமத்தா எடம் கெடந்த வரைக்கும் பிரச்சனையில்ல. இப்ப சுத்தி மதில் எழுப்பணும்பதான் பள்ளிவாசலுக்கு நல்லது. களவாணிப் பயலுகளும் காலிப்பயளுகளும் நைட்டானா மைத்தாங்கர பக்கம்தான் ஒதுங்குறானுக. அதுக்காகதான் கூடியிருக்கோம்” - தலைவர் தொடங்கி வச்சார்!

தங்கம்மா நல்ல மனுஷி. எடுத்த எடுப்பிலேயே எடத்த விட்டு கொடுத்துடுறேன்னு சொல்லிடுச்சு. ஆனா ஒத்த கன்டிசன். அந்த அடுப்பாங்கரைய கட்டுறதுக்கு அம்பதாயிரம் செலவாச்சாம். பணத்த எண்ணி வச்சுட்டு இடிச்சுக்கோன்னுடுச்சு.

“எம்மா, நீயே அடுத்தவன் நெலத்துல இழுத்து கட்டிட்டு, இப்ப காசு எடுத்து வைன்னா என்ன அர்த்தம்?”

“அடுத்தவன் நெலம்னு இப்பதான் ஒங்களுக்கு தாக்கல் வந்துச்சாக்கும்? நா செவரு எழுப்பினப்ப யார் தலைல பேன் உருவிட்டிருந்தீக எல்லோரும்?”

சபை, சப்தநாடி அடங்கிப் போச்சு! தங்கம்மா செத்தா மையவாடில எடமில்லன்னு தீர்மானம் போடப் போறதா மிரட்டிப் பாத்தாரு தலைவரு..

“நா செத்தப் பொறவு நடுத்தெருல என்னைய வீசினான்னாதான் எனக்கென்ன... நாறி புழுத்துப் போயி நா கெடந்தாதான் எனக்கென்ன... அதெல்லாம் உங்க பாடு... ஆனா ஒன்னு! அடுத்தவனுக்கு மையவாடில எடமில்லைன்னு சொல்றீயளே.. உங்களுக்கு மொதல்ல நல்ல சாவு வருதான்னு பாருங்க”ன்னு சொல்லி சபைல யாரையும் மதிக்காம எழுந்து போய்ட்டா.

அப்பறம் அடுப்பங்கரைய இடிச்சாச்சா?

ம்க்கும்! பரவுன கொரனாக்கு ஊருல மொத காவு தலைவருதான். சாபம் பலிச்சதும் இல்லாம போனஸ்ஸா அவருக்கே அந்த மையவாடில எடமில்லாம போச்சு.

ஊருக்கு ஒதுக்குபுறமா இருந்த எடத்துலதான் குழி தோண்டி அந்தாளை இறக்குனாங்க. நல்ல சாவும் இல்ல, மையவாடில எடமும் இல்ல.

தங்கம்மா சாபத்த விட எக்ஸ்ட்ராவாவே சம்பவம் நடக்க.. அதுல இருந்தே தங்கம்மா நாக்கு மேல எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கத்தான் செய்யுது. ‘செயல்’ தெளிவா அறிவுரைச் சொல்லி கைவிரிச்சார்! “சின்ன புள்ள தானே.. வயசுல மூத்தவங்க கண்டிச்சாங்கன்னு நெனச்சு பிரச்சனைய சுமூகமா கொண்டு போங்க காதர்”

“லீகலா போறதுக்கு முன்ன ஜமாத்ல சொல்லலாம்னுதான் வந்தேன். நாளபின்ன எங்ககிட்ட கேக்காம ஏன் நீயா போயி போலிசு டேசன் நின்னன்னு என்னைய கேட்டுடக் கூடாதில்லையா. இப்ப எனக்கு பிரச்சனை இல்ல.. நா பாத்துக்குறேன்”

செயலாளர்கிட்ட சலாம் சொல்லிட்டு வெளியேறிட்டான் காதர்.

அடுத்தகட்ட நடவடிக்கை!

போலிசுடேசன் ல ரைட்டரா இருக்குறவர் ‘டீக்கடை ஸ்நேகிதன்’. மறு டீ போட்டு தராத பொன்டாட்டியால கெடச்ச ஒரே நல்ல விஷயம் ஓரளவு கைகொடுத்துடுச்சு.

"தொலஞ்சா தங்கம்மா’’ன்டு சந்தோஷப்பட்டான்.

“எப்பா... என்ன இருந்தாலும், கெட்டப் பொம்பளையாவே இருந்தாலும் உங்க பொம்பளைய போலிஸ் ஸ்டேசன்க்குள்ள கூட்டியாந்தா உங்க ஆளுங்க திமுதிமுன்னு வந்து நிப்பாய்னுங்க. எப்படிபோல எங்க புள்ளைய ஸ்டேசன் கூட்டியாருவீகன்னு ஏறிக்கிட்டு வருவாய்னுக. அதுனால அவ வீட்டுக்கே போய் சும்மா அதட்டி வைப்போம். போதும்ல?”

அரமனசா போதுமாவே இருந்துச்சு காதர்க்கு. ஆனாலும் காத்துல பறந்த மானத்த கைப்பத்திடலாம்னு முழுமனசா தலையசைச்சான்.

ரைட்டர், ஏட்டய்யாவ சிபாரிசு செஞ்சார்.

ஏட்டையாவ பைக்ல ஏத்திக்கிட்டான். தெருக்குள்ள வந்தப்ப அனிச்சையா காலர் காற்றுனால தூக்கினதுக்கும் அவன் முடி பறந்ததுக்கும் தனக்குத்தானே ‘பாட்சா....பாட்சா..’ bgm போட்டுக்கிட்டு செருமலோடு தங்கம்மா வாசல்ல வந்து நின்னான். கூட வந்த காக்கி சட்ட கொடுக்குற ஏத்தம் அது.

“நீதான் தங்கம்மாவா? ரோட்டுல போற புள்ளைய அடிச்சீயாம்ல? ஏன்னு கேக்க வந்தப்ப அறுத்துப் போட்டு ஆத்துல வீசுவேன்னீயாம்ல? கொல முயற்சின்னு கேஸ் போட்டா என்னாகும் தெரியுமா?”

“இந்த காதரு சொன்னானா? போலிசுடேசன் படியேறுறது அவமானம்னு நெனச்சது தப்பா போச்சு... அதுனால இவன் முந்திக்கிட்டான். என் வீட்டு வாசல்ல நின்னு, என் சேலைய உருவ வந்தான். இந்தா, என் கைய பிடிச்சு இழுத்ததுல என் வளவி நெழிஞ்சிருக்கு பாருங்க. நா கம்ளைன்ட் கொடுத்தா ஏத்துப்பீங்களாங்க? இல்லல்ல! நீங்க இவன் ஆளு... இவனுக்குதான் சப்போட்டு பண்ணிக்கிட்டு வருவீக. நா பெரிய போலிஸ்ஸ பாத்துக்குறேன். கலெக்டரு ஆபிஸுக்கு மண்ணண்ணெ கேனோட போய் நிக்கிறேன்!”

ஏட்டையாவ பைக்கில கொண்டு போயி ஏத்துன இடத்துலையே விட்டுட்டு வந்துட்டியான் காதர். ரைட்டருக்கும் ஏட்டையாவுக்குமாக இரண்டு சிக்கன் பிரியாணி பொட்டலம் காதருக்குத் தண்டச் செலவு. எதுவும் வேலைக்காவல.

கண்ணிமைக்கிற நொடில ஆதாரமா தங்கம்மா காமிச்ச வளவி மதியம் தூங்கும்போதும் தலகாணிக்குள்ள கைவிட்டு படுத்ததால நெழிஞ்சுப் போனதுதான். மகன காணாப் பொணமா ஆக்கிடுவேன்னு தங்கம்மா சொன்னதுக்கும் சாட்சிக்கு எவனும் வரப் போறது இல்ல... உருவாத சேலைக்கும் சாட்சி அவளுக்குத் தேவையில்ல.

அதுனால இன்னும் கூடுதலா தங்கம்மா சொல்லியிருந்தாகூட திக்கல் தெணகல் இல்லாம ஒரே வரிசைல பெரிய பொய்ய கதைகட்டி விடும் தெறமை தங்கம்மாக்கு உண்டு. அந்த வகையில் குறுகுன குற்றச்சாட்டோட காதர் பொழச்சுக்கிட்டது தங்கம்மாவோட கருணையாலன்னுதான் சொல்லியாவணும்.

மதியம் சாப்ட வீட்டுக்குப் போனான்! பொண்டாட்டி மொகங்கொடுத்து பேசல. சாப்பாட்டுப் பாய் மேல எல்லாத்தையும் வச்சுட்டு போய்ட்டா. சாப்பாடுக்கு வச்ச தண்ணி சொம்பை அழுத்தமா தரைல தட்டினதுலையே பொன்டாட்டி கோபம் புரிஞ்சது. சொல்லப் போனா அது கோபம் இல்ல. “எப்படி சோத்த முழுங்க உன்னால முடியுது”ங்குற எகத்தாளத்தோட ஆரம்பப் புள்ளி.

மனைவிமாரெல்லாம் பொதுவா இப்படிதான் சிக்னல் கொடுத்து தன் வேலைய படிப்படியா ஆரம்பிப்பாங்க.

“யாரு கிட்ட வச்சுக்கிட்ட”ங்குற தங்கம்மா பார்வ காதர்ரை சாப்பிடவும் விட்டப்பாடில்ல.

கடைசி முயற்சியா ஒட்டடை அடைஞ்ச ஊராட்சி மன்றத்துக்குப் போனான்.

“அந்த ராங்கி பொம்பளையோட மல்லுகட்டச் சொல்றீயா?”- தலைவர் ஆதங்கப்பட்டாரு!

“பனந்தட்டி தானே? தள்ளிவிட்டா சரிஞ்சுடப் போவுது! மரம் செடிலாம் பறிச்சுவிட்டு, அவளையும் எச்சரிச்சுட்டு போய்டுங்க. முடியாதா என்ன?”

“சொன்னோமே! அவளும் ஒத்துக்கிட்டாளே.. ஆனா ஒரு கன்டிசன்னு பெரிய செலவ இழுத்துவிடப் பாத்தா...”

“என்னன்னு?”

“வாசல்ல தண்ணிதொட்டி ஒறை வச்சு, எல்லாத்துலையும் மண்ண கொட்டி, அதுல செடி வளத்து வச்சிருக்கா. எடுத்தா செடி, மண்ணுன்னு மொத்தத்தையும் வழிச்சு எடுக்கணுமாம். ஆனா ஒறை ஒடையக் கூடாதாம். ஆள் கூலி, அள்ளுற கூலிலாம் இருக்குல! அதெல்லாம் விடு, அவகிட்ட இருந்து எடத்த பறிக்கப் போயி அவளுக்கு வேலக்காரனா நிக்கிற நெலமைய நெனச்சுப் பாரு. அது எவ்ளோ அசிங்கம்னு புரியும்! அம்புட்டு செலவு பாத்துட்டும் ரோட்ட போடலைன்னா ஊருசனம் காரிதுப்பும். மொதல்ல கவர்மென்ட் ஆர்டர் வரட்டும். பாத்துக்கலாம்”

காலைல எட்டுமணிக்கு ஆரம்பிச்ச பிரச்சனை. மகரிபும் வந்துடுச்சு. மொத்தமாக தோத்துப் போய்ட்டதாக உணர காதருக்கு 10 மணி நேர அலைகழிப்பு தேவைப்பட்டுச்சு.

தங்கம்மா இன்னைக்கு நேத்தா இந்த கேடுகெட்ட மனுஷங்களோட மல்லுக்கட்டுறா?

அவளும் ஒரு காலம் அப்புராணிக்கு அகராதியா இருந்தவ. கரம்பிடிச்சவனுக்கு சேவகம் செய்றது ஒன்னே இந்த பூமில ‘தான்’ படைக்கப்பட்ட நோக்கம்னு நெனச்சவ. மகன் பொறந்தப்ப நெஞ்சுலையே படுக்கவச்சு பாதுகாத்தவ.

அடுத்த புள்ள எதிர்பாத்து பல வைத்தியம் பாத்தா.. அதோட ஏர்வாடில அடங்கியிருக்குற ‘சையிதா ராபியாம்மா’ பேரால மரத்துல ‘புள்ள தொட்டி’ கட்டி நேந்துக்கிட்ட பத்துவருசம் கழிச்சு ரெண்டாவது புள்ள சனிச்சுச்சு. பொறந்தா, ராபியான்னு பேரு வைக்கிறதா நிய்யத்தும் வச்சா!

நல்லாதான் போயிட்டிருந்துச்சு. கெட்டவிங்களோட சகவாசம் வச்சு வீணா போக ஆரம்பிச்சான் தங்கம்மா புருசன். சீட்டாடுற பழக்கம் தொத்திக்கிட்டப்ப வீட்டுல சைத்தான் குடிபுகுந்துச்சு. சீட்டாட கடன், கடனடைக்கக் கடன்...

அவன் சுதாரிக்கும்போது எல்லாம் கைமீறி போச்சு. எலி அழுதா பூனை பாவம் பாத்துவிடுமா என்ன? தொழில் நொடிப்பு காலம்னு நெனச்சு தங்கம்மா செலவ சுருக்கி குடும்பத்த நடத்துனா. அவளுக்கு புருசன் மேல சந்தேகமும் இல்ல.. கோபமும் இல்ல...

“கஷ்ட்டமும் நல்லதும் மாறிமாறி வரதுதானே வாழ்க்கை”- அவ நம்பிட்டிருந்தா!

மீட்டர் கேஜ்லாம் மாத்தி ப்ராட்கேஜ்ஜா போட்டபொறவு, ஓடப்போற மொத ரயில பாக்க ஊரே தண்டவாளத்தோட ரெண்டு பக்கமும் வரிசைகட்டி கூடுச்சு. தங்கம்மா மவன் வெவரம் அறிஞ்சு ரயில பாத்ததில்ல. அவன் கண்ணுல அம்புட்டு ஆர்வம். அத்தாகாரர் தோள்பட்டைல ஏறிக்கிட்டான்.

ரயில் தூரத்துல இருந்து வந்துட்டிருந்ததை நின்னுட்டிருந்த காலுக்கடியில் அதிர்வு உணர முடிஞ்சது. மகன்காரனுக்கு மொகமெல்லாம் வாய் விரிஞ்சு பல்லெல்லாம் தெரிஞ்சது! அம்புட்டு சந்தோஷத்துல இருந்தான். ரயிலோட சத்தம் பக்கத்துல வர்ர, வர்ர கண்ண மூடிக்கிட்டே புருசன் கைய இருக்கப் புடிச்சுக்கிட்டா தங்கம்மா.

 அந்த நம்பிக்கைக்காச்சும் தங்கம்மா புருசன் மனசு இறங்கியிருக்கலாம்.

அவளையும் இழுத்துக்கிட்டு ரயில் தண்டவாளம் கிட்ட போக, கண்ண மூடிக்கிட்டே “இழுக்காதீங்க மச்சான்! பயங்காட்டாதீங்க”ன்னு மல்லுகட்டினப்ப அவளுக்கு விபரீதம் புரியல.

புருசங்காரன் தன்னை விளையாட்டா பயம் காட்டுறதாக நெனச்சு அவளும் கண்ணை தொறக்காமையே கூச்சப்பட்டபடி நழுவிட்டிருந்தா. தோள்பட்டைல ஏத்துன புள்ளையோடு தண்டவாளத்துக்குள்ள போய்ட்டான் புருசன். ரயில் வேகத்துக்கு இவ முள்ளுகாட்டுல தூக்கி வீசப்பட்டா. கண்ண மூடி கண்ண தெறக்க, ஏதேதோ நடந்து முடிஞ்சுடுச்சு.

தூக்கி வீசினதுல அவ பொழச்சதே மறுபொழப்பு. வயித்துக்குள்ளயிருந்த கருவெல்லாம் எம்மாத்திரம்?. ஆணா பொண்ணான்னு அறிய முன்னாடியே பேர் வச்ச புள்ளை, கருவுலையே வாழ்க்கைய முடிச்சுக்கிச்சு.

இன்னைய தேதி வரைக்கும் புருசன அவ மன்னிக்கவே இல்ல. ரெண்டு புள்ளைய எழந்த சூட்டுல என்ன கொதி கொதிச்சு போயிருப்பா? எதுக்கு மன்னிக்கணும்?

ஒடம்பு தேறி அவ வீட்டுக்கு வந்தத கேள்விப்பட்டு துக்கம் விசாரிக்கிற மாதிரி வந்தவங்களை கணக்கெடுத்து, பிரிச்செடுத்துப் பார்த்தா ஏழுபேரு புருசன் வாங்கின கடனை காதுல போட்டு வைக்க வந்தவங்கதான். புருசன் வித்து திண்டது போக மீதமிருந்தது அவனோட ஒரு மோட்டோர் சைக்கிளும் இவ கழுத்துல இருந்த கருகமணிக்கிடைல இருக்குற தங்கமணியளும் மட்டும்தான்!

“அவன் என் புருசனே இல்லைன்னுட்டிருக்கேன். வந்து காசு கேட்டு வரீக? காசு கொடுத்ததுக்கு ஏதாவது கையெழுத்து சாட்சி வச்சிருக்கீங்களா? ஒருத்தன் செத்துப் போய்ட்டா போதுமே? அவன் திரும்ப வந்து பதில் சொல்ல மாட்டான்னு ஆளாளுக்கு பொய்யா பணம் பறிக்க கிளம்பிட வேண்டியது”

அன்னைக்கு வெளக்கமாத்த தூக்குனவதான்.

வாழ்றதுக்காக முடிவெடுத்தவ எல்லாரையும் வச்சு செய்ய துணிச்சுட்டா. ஏப்பச்சாப்பையா இருந்தாதான் தலைல மொளகா அரைச்சுடுவாய்ங்களே?

அப்பறம் சொல்ல மறந்துட்டேன்! தங்கம்மா இப்ப குடியிருக்குற வீடு கூட பள்ளிவாசலுக்கு பாத்தியப்பட்ட வீடுதான். வாடகைக்குன்னு வந்தவ கடைசி வரைக்கும் வீட்ட காலி பண்ணி கொடுக்கவே இல்லையே! வாழணும்னு முடிவெடுத்தா பிழைக்க ஆயிரம் வழி உண்டு.

__________

மைத்தாங்கொல்லை, மைத்தாங்கரை, மையவாடி – இஸ்லாமியர்களின் மயானம்.

மகரிபு – சூரியன் மறையும் பொழுது

அத்தாகாரர் - தந்தை

- ஆமினா முஹம்மத்

Pin It