நீண்டு வளைந்து திரும்பி பாம்பு மாதிரி செல்லுகின்ற அந்த மெயின் ரோட் பிரபல சந்தியில் முடிவடைகிறது. காலை ஏழு ஏழரை ஆனதும் பரபரப்பு அடையும். தெரு ஒன்பது மணியானதும் அடங்கி விடும்
.
மீண்டும் இதே பரபரப்புடன் மாலை ஆனவுடன் தோற்றம் அளிக்கும். 200 யார் ஒரு இடைவெளிக்கு பஸ்தரிப்பிடம். பஸ்தரிப்பிடம் என்றதுக்கான அறிவுப்பலகையோ அடையாளமோ இல்லை. அது தான் என்று வழக்கமாக்கி கொண்டார்கள்
.
அங்கு கூட்டமாக நிற்கும் வெள்ளை உடை அணிந்த பள்ளி மாணவிகள் ஸ்கூல் பஸ்க்காக காத்திருப்பது ஒரு புறம். சந்தியில் சென்று டவுன் பஸ் பிடித்து அலுவலக வேலை செல்பவர் மறு புறம் சைக்கிளிலும் கால் நடையாகவும் அறக்க பறக்க சென்று கொண்டிருக்கிறார்கள்
இந்நேரத்தில் இந்த றோட்டை பார்ப்பவர்களுக்கு வாழ்க்கை இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கின்றதே,வேகமாக இருக்கின்றதே என்ற எண்ணத்தை தோற்றுவிக்கும். இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த தெரு மயானம் அமைதி அடைந்து விட சோம்பலுடன் பயணிக்கிற வாழ்க்கை மாதிரியும் ஒருவித ஏமாற்றம் கலந்த தனிமை பய உணர்வை தோற்றுவிக்கும்.

இந்த நேரத்தில் இந்த பரபரப்புக்கு மத்தியில் தவறாமால் காணப்படுவார். தரகர் கந்தையா காலையில் போய் மாலையில் இதே வேக பரபரப்புக்குள் திரும்பி வருவார். அறுபது தாண்டிய நிலையிலும் அவரது கட்டுமஸ்தான உடம்பும், வெள்ளையும் கறுப்பும் கலந்த அடத்தியான மயிருடனான தோற்றமும் அவருடைய நடையும் இளமை சுறுசுறுப்பை பறைசாற்றி கொண்டிருக்கும். வலது பக்கத்தில் புத்தக கடதாசி கட்டுகள் அடங்கிய பையும் இடது பக்க கமக்கட்டில் மான் மார்க் நீண்ட குடையும் எப்போதும் இருக்கும்.

அந்த குடை வேற தேவைகளுக்கு பயன்படுகிறதோ இல்லையோ என்னவோ. ஆனால் ஊர் கட்டாகாலி நாய்களின் தொல்லைகள் இருந்து இவரை தற்காக்க நன்கு பயன்படுகிறது.

தரகரின் கபட குணங்களை மனிசர் கண்டு கொள்ள முடியாவிட்டாலும் கண்டு கொணடோம் நாங்கள் என்ற மாதிரி ஒன்று குரைக்க ஊரிலை உள்ளது எல்லாம் சேர்ந்து குரைத்து இவரை கண்டவுடன் தொல்லை கொடுக்கும். குடையை கடாயுதமாக பாவித்து உதுகளோடை மல்யுத்தம் செய்து படாத பாடுபடுவதை கண்கொள்ளா காட்சியாய் ரசிக்கவைக்கும் பார்க்கும் சில சிறுசுகளுக்கு.

உவர் வரும்படி வருகிற எந்த வேலையும் செய்ய தயாராய் இருப்பார். நீதி அநீதி பார்க்க கூடாது என்பது இவரது தாரக மந்திரம் இதை தனது தொழில் தர்மமாக வழுவாது கடைபிடிப்பவர். குடும்பத்தை பிரிச்சு வைப்பார் தேவை இல்லாத குடும்பத்தை சேர்த்து வைப்பார். கலியாண தரகு மட்டுமல்ல..காணி நில சம்பந்தமாண சட்ட நுணுக்களிலும் கை தேர்ந்தவராக இருந்தார். வாதி பிரதிவாதிகளின் இருவரிடம் காசு வேண்டி இரண்டு பேருக்கும் உபத்திரவம் செய்ய தயங்காதவர் தனது நலனுக்காக

காணி உறுதியை ஏன் தான் எல்லாராலும் வாசிக்கமுடியாமால் இவரை போன்ற ஆசாடபூடபதிகளால் மட்டும் வாசிக்க கூடியது மாதிரி எழுதியிருக்கிறார்களோ தெரியலை. தமிழை கொன்று எழுத்தை விளங்கமுடியாமால். படித்தவர்கள் கூட இவரை தேடி வருவார்கள் தோம்பு உறுதி போன்றவற்றை வாசித்து விளங்குவதற்க்கு.

இவரை போன்ற ஆட்களுக்கு எப்படி விளங்குகிறது. என்பது ஆச்சரியமே. அல்லது அரை குறையுமாய் புரிந்து கொண்டு. விளங்கினமாதிரி நடிக்கிறார்களோ என்னவோ.

வழமையாக இந்த கோர்ட்டு வாசலை அடையும் போது அவரின் வருகைக்கு பலர் காத்திருப்பர் வழக்காளி எதிராளி மட்டுமல்ல. அங்கு கறுத்து கோட்டு போட்டு அங்கு திரியும் அப்புக்காத்து மாரும் தான் . கறுப்பு கோட்டிற்குள் இருந்து கொண்டு கோட்டில் கொலை வழக்கில் றேப்பிங் வழக்கில் கை எப்படி வைச்சிருந்தனி கால்களை எப்படி வைச்சிருந்தனி என்று சாட்சிகளை மிரட்டும் விண்ணரும் உவை தான்.

வெளியிலை வந்து வெள்ளை வேட்டி கட்டி கொண்டு வீராப்பாக நடிச்சு தமிழருக்கு விடுதலை வேண்டி தாறன் என்று பூச்சாட்டி காட்டுகிற தன்மான தானை தமிழின தலைவர்களும் உவைதான்

தரகருக்கு வழமையாக கோர்ட்டுக்கு வருகிற உற்சாகம் இன்றில்லை. இவ்வளவு காலம் கோர்ட் வளாகத்தில் ஒரு அங்கீகரிக்க படாத தொடர்பாளராகவும் ஆலோசகராகவும் யாருடைய கழுத்தறுத்தவாவது தனது பலாபலன்களை தேடி ஓடி ஆடி திரிபவர் வரும்படியோடை திரும்புவேன் என்ற குதூகாலம் இருக்கும்.

இன்று கால்கள் நடை தளர்ந்திருந்தது கோர்ட்டு வாசலை அடையும் போது அவரை தாண்டி இரண்டு விளக்கமறியல் கைதிகளை கை விலங்குகளால் பிணைத்தபடி ஜெயில் காட் நடத்தி செல்கிறான். வழக்குகளின் போது யாழ் சிறைச்சாலையில் இருந்து விலங்கிட்ட படி பஸ்ஸில் தான் சனத்தோட சனமாக வழமையாக கூட்டி வருகிறது வழக்கம்.

கோர்ட் வளாகத்தில் ஆங்காங்கே ஆட்கள் குழுமி இருக்கிறார்கள்... இதே கோர்ட் வளாகத்தில் ராசா மாதிரி ஓடி திரிந்த தான் தீர்ப்பை எதிர்பார்க்கும் குற்றவாளியாக வருவேன் என கனவிலும் நினைத்திருக்கமாட்டார்.

எத்தனையோ மனங்களின் நெஞ்சை பொருமி வேதனை செய்ய வைத்தவரின் நெஞ்சு விம்பி வெடித்தது வேர்த்து கொட்டியது. மனம் அறிந்த செய்த குற்றங்கள் எவ்வளவோ இருக்க. மனம் அறியாமல் செய்த குற்றத்திற்க்காக மாட்டு பட்டு நிற்பதை எண்ணி கலங்கினார். தான் நம்பின அப்புகாத்துமாரும் கை விட்டதானால். தீர்ப்பு வரும் முன் தீர்ப்பு கிடைத்தமாதிரி பதறினார்.கத்தி குளறணும் அழணும் போல அவருக்கு இருந்தது. கோர்ட் அறையில் இருப்பதை உணர்ந்தார். கோர்ட் முதலி இவரது பெயர் சொல்லி உரக்க கூப்பிட்டான். தீர்ப்பு கொஞ்சம் நேரத்தில் தெரிந்துவிடும்.

திடீரென்று விழித்துக் கொண்டு சனங்கள் ஒன்றும் சேர்ந்த மாதிரி வழமையான மாலை நேரத்தில் பரபரப்பாகி விட்ட அந்த மெயின் ரோட் . அந்த பரபரப்பில் வழமையாக எதிர்ப்பார்பில் காத்திருந்து அந்த ஒருவரை காணாமால் என்னவோ .தங்களுக்குள் குரைத்து அடிப்பட்டு அந்த தெரு இரைச்சலை அதிகமாக்கி கொண்டிருக்கின்றன.

அந்த தெருவை இரைச்சலை தாண்டி சென்ற பஸ்ஸில் மூவர் விலங்கு இடப்பட்டிருந்தனர்

- சின்னக்குட்டி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It