இன்னும் அலறல் சத்தம் ஓய்ந்த பாடில்லை. அலறுவது ஆணா ..பெண்ணா என்று ஊகிக்க முடியாதவாறு தான் அந்த ஒலி முறிந்து ஒடுங்கி தான் அவன் காது களில் வந்து அடைந்து கொண்டிருந்தது.

Torture இந்த சுவரை தாண்டி பக்கத்து அறையில் வருவது போல் இருந்தாலும்.. காதில் பஞ்சு அடைத்து விட்ட மாதிரி இருப்பதால் தெளிவில்லாமல் இருந்தது ..அவனையும் வேறு நேற்றிலிருந்து இந்த அறையில் தான் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. ..ஒரு கேள்விக்கு ஒரு பதில் சொல்லாமலே, தெரியாமல் இருக்கும் போது கேள்விக்கு மேல் பல கேள்விகள் அடுக்கி கொண்டு பல பேர் முன்னால் இருந்து கொண்டு. ஒருவன் முடிக்க முன் மற்றவன் தொடங்கி என்று ஏதோ எதுவெதொவோ நேற்று இரவு முழுவதும் கேட்டு கொண்டிருந்தார்கள்.

தெரியாது என்ற வார்த்தையை அவன் திரும்ப திரும்ப சொல்லியும் அவன் மேல் ஏனோ என்னும் ஒரு கை கூட வைக்கவில்லை ....அவனிடம் எந்த உரிய பதிலை எதுமே எடுக்க முடியாமால் களைத்து போய் வெறுத்து போன இரகசிய பொலிசார், ‘என்ன இவன் ஒன்றுக்கும் மசியிறான் இல்லை .....நல்ல கொள்கை பிடிப்பான தீவிரவாதி போல் இருப்பான் போலை என்று தங்களுடைய மூளையின் வேகத்துக்கு ஏற்றவாறு தரவுகளை ஏற்றி முடிவுகளை இறக்கி ..எதுக்கும் அவர் இன்றைக்கு வாறார் ... நல்லாய் அவர் கவனிப்பிலை விட்டால் எல்லாம் சரி வரும் என்று எல்லாரும் ஒருமித்த குரலில் கூறி அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார்கள்

அவனுக்கு அந்த இடைவெளி புயல் ஓய்ந்த மாதிரி இருந்தது. அந்த நிசப்தத்திலிலும் மனோ நிலையிலும் தன்னை மறந்து சிரித்தான் ...நல்ல கொள்கை பிடிப்பான உறுதியான தீவிரவாதி ....அந்த வார்த்தையை மீண்டும் மீண்டும் சொல்லி சிரித்தான். அந்த வசனத்துக்கு முற்றும் தகுதியற்றவன் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். அன்று கூட பக்கத்து வீட்டு லக்சியமக்காவின்ரை அந்த பொடியனை பற்றி என்ன மாதிரியல்லாம் திட்டி படிக்கிற வயதில் என்ன பகிஸ்கரிப்பும் போராட்டமும் என்று தனது கோழைத்தனத்தின் ஊடாக கரித்து கொட்டியதை நினைத்து பார்த்தான்....இப்படித்தான் தன்னைப் போல் சம்பந்தமில்லாதவர்களுக்கு வீரன் பட்டம் கொடுத்து பின் உணமையான வீரர்களாக உருவாகுவதற்க்கு இந்த பொலிஸும் அரசாங்கமும் உதவி செய்யினம் போலை என்று மனதுக்குள் கேலியாக சொல்லி கொண்டான்

அந்த சந்தியில் சந்தை சுவரில் கொஞ்ச காலமாக ஒன்றுக்கு மேல் ஒன்றாக ஒரே சுவரொட்டிகள். அந்த சந்தைக்கு போய் விட்டு வரும் நாட்களில் அதில் ஒட்டியிருக்கிறதை மேலோட்டமாக பார்த்திருக்கிறான் ஒழிய ஒருநாளும் நின்று வாசிக்க விரும்பிறதும் இல்லை...அதிலே ஆர்வமும் இல்லை....

அன்றைக்கு ஏன் அந்த பித்து பிடித்தது என்று பெருமூச்சு விட்டான். அந்த கணம் ஒரே கணம் என்ன எழுதி இருக்கிறது என்று வாசிக்க தொடங்கி முடிக்க முன் சனம் சிதறி அடித்து கலைந்த சந்தியில் அவன் ஒருவன் மட்டும் அகப்பட்டு இப்போ இந்த அறையில் வைத்து பெரும் பட்டம் எல்லாம் தனக்கு தந்ததை நினைத்து மீண்டும் சிரிக்க முனைய பக்கத்து அறையிலிருந்து வந்த அவல சத்தம், மற்றும் இன்று இரவு அவரின் வருகைக்காக இந்த அறையில் காத்திருக்கின்ற அவனது நிலையை அவனுக்கு இடையில் வந்து அறிவுறுத்த சிரித்து கொண்டே அழுதான். ஒரு முரட்டு கை அவனை தலையை இறுக்கி பிடித்து அழுத்தி கழுத்தை நாற்பத்தைந்து பாகையில் திருப்பி கொண்டு

நான்...,.என்று சொல்லி முடிக்கும் பொழுது மீண்டும் ஒரு குத்து அவன் முகத்தில் விழ அவனுக்கு உலகம் மறுபுறம் சுற்றுவது போல் இருந்தது. அலற அலற அந்த சத்தங்களை முந்தி கொண்டு கேட்டு கேள்வி இல்லாமல் தாக்கி கொண்டிருந்தான்

தாக்கும் போது அவனது முகத்தில் பயங்கர மிருகங்களின் களை தான் ஒன்று ஓன்றாய் வந்து போய் கொண்டிருக்கும். அவன் தமிழனாக இருந்தாலும் மிருகமாக மாறி தாக்கி கொண்டு இருக்கும் பொழுது சுற்றி அவன் கீழ் இருக்கும் சிங்கள பொலிஸ் உதவியாளர்களிடம் கூட இரக்க வேதனை களை இடைக்கடை வந்து போவது ..அவர்களின் முக பாவனையில் தெரியும்.....

அவனது வருகை தொடக்கம் இப்படித்தான் இருக்குமாம் விசாரணையாளர்களை கதி கலங்க வைத்து அவர்களிடமிருந்து பதிலை பெறுவதில் நிபுணன் என்று அக்காலத்தில கேள்வி பட்டிருக்கிறான். முகத்தில் விட்ட குத்தின் காரணமோ என்னவோ தெரியாது.

அவனை பார்க்க முனைந்தான் மங்கலாகவே தெரிந்தான். கஸ்டப்பட்டு பார்க்க முனைந்த போது கலங்கலாக, புகை மூட்டத்துக்குக்குள் இருந்து ஒரு வன விலங்கு எட்டி பார்ப்பது போல் இருந்தது ... அவனது பெயருக்கு ஏற்ற மாதிரி முறுக்கு மீசை முகத்தின் முக்கவாசி பகுதியை மறைத்திருந்தது...அவனே பார்க்க கடூரமாக இருந்தான் அதை விட அவன் செயற்கையாக வலிந்து அலங்கரித்து கொண்டவையும் சேர, கச்சிதமான ஒரு அரக்க வடிவில் தெரிந்தான்.

கன்னங்களும் உதடுகளும் வீங்கி பேசவே கஸ்டபட்டு கொண்டிருந்தவனிடம் எதிர்பார்த்த பதில் வராததால் மீண்டும் கர்ச்சித்தபடி கூறினான். இது என்ன தெரியுமா என்று கேட்டான் ஒரு போத்தலை தூக்கி காட்டியபடி விஸ்கி போத்தல் என்று சொல்ல வாய் எடுத்தான். போத்தல் முன் விளிம்பில் இரத்தம் பரந்து படர்ந்து இருந்ததை கண்டு அந்த அதிர்ச்சியில் சொல்ல வந்ததை சொல்லாமால் தவிர்த்து பேயறைந்தவன் போல் நின்றான்; பக்கத்தில் அறையில் உள்ளவளுக்கு இதை விட்டு எடுத்ததாலை தான் வரவேண்டிய பதில் வந்தது என்று பெருமிதமாக சொல்லி கொண்டு கொஞ்சம் நிறுத்தி இது சரி வராது... உனக்கு வேற ரீட்மண்ட் வைத்திருக்கிறன் என்று பெரிய நகைச்சுவை சொல்லி விட்ட மாதிரி.. கக்க பிக்க என்று எக்களாமிட்டு சிரித்து கொண்டு மற்ற பொலிஸ காரர்களை நோக்கி கண்ணை சிமிட்டினான்.

அதில் நகைச்சுவை இல்லாவிட்டாலும் அவன் என்னத்தை சொல்லுறான் அவர்களுக்கு விளங்கி விட்டதால் கஸ்டபட்டு சிரித்தார்கள். அந்த லாச்சியில் உன்னுடையதை ..என்று .சொல்லி முடிக்க முன்பே அவனுக்கு அந்த ட்ரீடமன்டின் சித்திரவதையின் கோரத்தை அவன் நலம் அடிக்க நினைக்கும் வக்கிரத்தை உணர்ந்து பதறி துடித்தான்

அங்கு வந்த உதவியாள் அவசர தொலைபேசி செய்தியை அறிவிக்க அவசரமாக வெளியேறி போனதால். இரண்டு அதிர்ஸ்டம் கிடைத்தது...ஒன்று அவனின் லாச்சி ரீட்மண்டிலிருந்து தப்பியது...இரண்டு இவன் அப்பாவி என முடிவு கட்டி மற்றவர்கள் இவனை வெளியில் விட்டு விட்டார்கள்...

அவன் அந்த ஊருக்கு வந்து அந்த வீட்டிற்க்கு வாடகைக்கு வந்து கொஞ்ச நாள் தான் ஆகிறது......எல்லாம் வசதி அந்த வீட்டில் இருந்தாலும் இரவில் முன் வீட்டில் இருந்து வரும் அவல குரல் அவனது மனசையும் நித்திரையையும் குழ்ப்பி கொண்டிருந்தது ...விடிந்ததும் இது பற்றி விசாரிக்க வேணும் ...என்று நினைத்தான்

விடிந்ததும் யன்னலூடக முன் வீட்டில் கண்ட காட்சி அவனை அதிரவைத்தது அந்த ரீட்மண்ட் கொடுக்க இருந்த அதிகாரிதான் தனது மனைவியுடன் பேசி கொண்டு இருந்தான் ..அவளை பார்த்தால் சோக உருவமான பொம்மை மாதிரி வெறித்த பார்த்த வெறுமையுடன் கேட்டு கொண்டு இருப்பது தெரிந்தது ...இவ்வளவு காலமும் யாரை சந்திக்க கூடாது என்று நினைத்தானோ ...அவனது வீட்டிற்க்கு முன் வாடகையில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான். இன்றைய பகலும் இரவு தான் இங்கு இருப்பது அதறக்குள் மாறி விட வேண்டும் என்று முணுமுணுத்து கொண்டான்.

அவனது எண்ண ஓட்டத்துக்கு ஏற்ற அன்றைய இரவும் விரைவாக வந்தது. அந்த அலறலும் கேட்டது இன்று மரண ஓலத்தை மிஞ்சுமளவுக்கு கேட்டது. கேட்டும் கேட்காமால் தூங்கி கிடக்கும் சனம் போல் இருக்க அவன் மனம் ஒப்பு கொள்ளவில்லை. அந்த அதிகாரியை நன்கு அறிந்தவன் என்றபடியால் அந்த சத்தத்துக்கு காரண்த்தை நன்கு விளங்கி அந்த கணம் கலங்கினான். என்ன தான் நடக்கிறது பார்ப்போமே என்று இருட்டோடு இருட்டாக கள்ளன் போல் வீட்டு முற்றத்தில் குதித்தான். யன்னலூடாக அறையினுள் மெல்லிய வெளிச்சம் தெரிந்தது தெளிவாக அலறல் சத்தம் கேட்ட்து.

யன்னலூடக தெளிவாக அவன் பார்த்த போது அவர்கள் இருவரும் அலங்கோலமான நிலையில் ஆனால் அவள் அலறவில்லை ...அவள் தான் தாக்க அந்த அதிகாரி தான் அலறி கொண்டிருந்தான் நபுஞ்சகத்தனத்துடன்

ஏன் என்றது விளங்கினது மாதிரியும் இருந்தது விளங்காத மாதிரியும் இருந்தது அந்த கணத்தில்...


- சின்னக்குட்டி
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It