ஒரு நிமிச நேரம் எனக்காக ஒதுக்கமாட்டிங்களா? நான் என்ன சொல்லறேன்னு கேட்டுட்டுதான் போங்களேன். அப்படி என்ன உங்களுக்கு நஷ்டம். நான் சொல்றத கேக்க போறதில. ஒரே நிமிசம்.

ஏங்க நமக்கு ஆண்டவன் ஒரே வாயும் ரெண்டு காதும் ஏன் படைச்சான்னு உங்களுக்குத்தான் நல்லா தெரியுமே... தெரியாதா? சொல்லறேன். அடுத்தவங்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. மனசு கனத்துப்போய் மனுசங்க பித்துபிடிச்சி அலையறாங்க. பிரச்சனை பாரம் தாங்க முடியாம இருக்காங்க. அந்த பாரத்தை மனசுக்குள்ள வச்சி புழுங்கப் புழுங்க இன்னும்தான் பாரம் அதிகமாகும். அதை அடுத்தவங்க கிட்ட சொன்னா கொஞ்சம் பாரம் கொறையுமில்லையா? அதனால அடுத்தவங்க பிரச்சனைய செவி கொடுத்து கேக்க ரெண்டு காதும். மனசு நொந்து பேசறவன் பேச்சை கேக்காம தானே பேசி சாகடிக்காம இருக்க ஒரு வாயும் படைச்சான் ஆண்டவன்.

இதென்னாங்க வம்பு. கைய ரெண்டாவும் மூக்க ஒன்னாவும் பல்லு முப்பத்தி ரெண்டாவும் ஏன் படைச்சான்னு கேட்டா நான் என்ன பதில் சொல்லட்டும் சொல்லுங்க.

கொஞ்சம் இருங்க அசந்தா கழட்டிட்டு போக பாக்கறிங்களே... எல்லாத்துக்கும்தான் பிரச்னை இருக்கு. யார் இல்லேன்னு சொன்னாங்க. பிரச்னையோட பிரச்னையா என் பிரச்னையும்தான் கொஞ்சம் கேட்டுட்டு போயிடுங்களேன். வேணா காப்பி போட்டுதறேன். திங்க ஏதாவது தறேன். சும்மா கேளுங்க.

உங்களுக்கும் என் வயசுதான் ஆகும். என் மகன் வயசில உங்களுக்கும் ஒரு மகனோ. மகளோ இருப்பாங்க இல்லையா?

இல்லையா..?

இல்லேன்னு சொன்னா புள்ளைங்களே இல்லைனு அர்த்தமா. இல்ல உங்களுக்கு என் வயசு இல்லனு அர்த்தமா? என் வயசு இல்லையா? சரிங்க என் வயசு இல்லாமயே இருக்கட்டும். என் மகன் வயசில ஒரு பேரனோ பேத்தியோ இருப்பாங்க இல்ல..?

இல்லையா...? என்னை விட சின்ன வயசா..?

சரி விடுங்க. சின்ன வயசா இருந்து கல்யாணம் ஆகாம இருந்தா என்ன? என் மகன் வயசில ஒரு கொழந்தை பொறக்கும் இல்லையா? என் மகனுக்கு என்ன வயசுன்னு கேக்கறிங்களா? நாலாம் வகுப்புன்னா பாத்துக்குங்க. ஐஞ்சிம் நாலும் ஒன்பது வயசாகுதுங்க. ஐயையோ... ஒன்பது வயசில கொழந்தை பொறக்காதா? எடுத்ததுமே ஒன்பது வயசில கொழுந்தை பொறக்கும்னு யாருங்க சொன்னாங்க. குட்டியூண்டா பொறந்து ஒன்பது வயசு ஆகிறதுன்னு வச்சிக்கங்க...

என்னங்க இது. என் பிரச்சினைய சொல்ல வந்தா அதை சொல்லவிடாம கேள்விமேல கேள்வி கேட்டு நீங்களே எனக்கு ஒரு பிரச்சினை ஆயிடுவிங்க போல இருக்கே. அதனால தான் ஆண்டவன் ஒரே வாய படைச்சான்னு சொல்லறேன் வெங்காயம்.

கோபத்துக்கு இல்லைங்க. சொல்லறத கேட்டிங்கன்னா என் மனசு பாரம் கொறையும்னு பாத்தேன். நீங்க கேக்கற கேள்வியில தலைவலி வந்து தைலம்தேக்கணும் போல இருக்கே... அதனால தான் ஆண்டவன் தலைய ஒன்னா படைச்சிருக்கான்.

சொல்லறேன். அவசரப்படாதிங்க. காலையில ஒரு பத்து வயசு பையன நல்லா சோப்பு போட்டு குளிப்பாட்டி சுத்தமா பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறிங்க. அவன் சாயிந்தரம் வரும்போது புழுதியில விழுந்த கழுதை கணக்கா வண்டல் முடியோட. வரண்ட தோலோட. சிவந்த கண்ணோட வந்தா என்ன பண்ணுவிங்க... என்ன நினைப்பிங்க?

என் பையன் தினம் அப்படி வந்தான்.

ஒரு நாள் தலைமையாசிரியர் என்னை கூப்பிட்டு அனுப்பினார். போனேன். என் பையன் தலைமையாசிரியரின் இருக்கை பக்கத்தில் முட்டிபோட்டு கண்களில் நீர்வடிய இருந்தான். அதே புழுதியில் விழுந்த கழதைபோல் நட்டுவைத்ததுபோல் சிவந்த முடியோடு இருந்தான். என்ன ஆச்சின்னு கேட்டேன்.

‘உங்க பையன் தினமும் சரியா நேரத்துக்கு வந்துடறான். மதியம் மணியடிச்சா சாப்பிட போறான். மதியத்துக்குமேல வகுப்பறையில இருக்கிறதில்ல. தினமும் எங்க போறான். வீட்டுக்கு வந்திடறானா?’ தலைமையாசிரியர் நரைமுடியை வகிடெடுத்து சீவி நருவிசாக இருந்தார். நருவிசாக கேட்டார். இவரின் மனைவியும் மனைவி அப்பாவும் இவர் அப்பாவும் எல்லோருமே ஆசிரியர்கள். அதனால் பேச்சில் ஆசிரியத்தொனி அதிகமிருக்கும்;.

‘சொல்லுங்க... பள்ளிக்கு அனுப்பனுமா இல்லையா? மதியத்துக்கு மேல எங்க அனுப்பிடறிங்க இவனை. என்ன வேலை வெக்கறிங்க?

‘எந்த வேலையும் வெக்கலிங்களே. ஐயா... சரியா தானே வந்திட்டு இருக்கான்’

‘அப்படியா? இது உங்களுக்கு தெரியாதுன்னு எனக்கு இன்னைக்குதான் தெரியும். இவன் எங்க போயிட்டுவரான் தினம். கேளுங்க்

அவனைப் பார்த்தேன். முட்டிபோட்டிருந்தவன் வலியில் கண் கலங்கியிருந்தான்.

‘கேளுங்க... எங்க போயிருந்தான். இன்னைக்கு என்ன வேலை செஞ்சிருக்கான்னு கேளுங்க...’

‘என்ன வேலை செஞ்சான்?’ தலைமையாசிரியரையே திரும்பக் கேட்டேன்.

‘சொல்லறேன் உட்காருங்க.’

‘மதியத்துக்குமேல ஏரியில முங்கி முங்கி குளிச்சிட்டு இருக்கான். பியூன் மணி அதை பாத்திருக்கார். அங்கயே முதுகில ரெண்டு போட்டு கூட்டி வந்து என்கிட்டே விட்டுட்டார். நான் ரெண்டு போட்டேன். கண்டிச்சி வளக்க மாட்டிங்களா? ஏரியில குளிக்க போகும்போது ஏதும் ஒண்ணு ஆனா யார் பொறுப்பு...’

நான் பையனை பார்த்தேன். அவன் கண்ணீர் விட்டபடி கண்களை தாழ்த்திக்கொண்டான். செய்திருப்பான் போல. தலையில் வண்டல் இன்னும் இருக்கிறது. இதனால்தான் இவன் மண்ணில் புரண்ட கழுதைபோல் வீட்டிற்கு வருகிறானா?

‘இதை சொல்லத்தான் கூப்பிட்டேன். நீங்க வீட்டுக்கு போங்க... பையன கொஞ்சம் கண்டிச்சி வைங்க.’

சொல்லுங்க நான் என்ன செய்யட்டும். வேலைக்கு போவேனா பையனோடையே பள்ளிக்கு போவேனா? கொண்டுபோய் விட்டுட்டு வரலாம் கூடவே இருக்க முடியுமா?

தெனமும் இப்படித்தாங்க வரான். எப்படிடா இத்தனை மண்ணாச்சி தலையெல்லாம்னு கேட்டா பதில் பேசாம மொகத்தையே பாத்துட்டு நிக்கிறான். கேட்டு கேட்டு ரத்த அழுத்தம்தான் கூடிப்போகுது. அடிச்சி வளக்கிறதில எனக்கு நம்பிக்கை இல்லைங்க. அடிக்க அடிக்க அதுங்க இன்னும் மோசமா போகுங்க. நெறைய பேர் மிருகம் மாதிரி உடம்பு வீங்கிப்போற அளவுக்கு அடிக்கிறாங்க. நாம மனுசங்கதானே... புள்ளைங்களுக்கு நல்ல வார்த்தை சொல்லி அதுங்கள திருத்தி வளக்க முடியாதா? அதனால அவனை அடிக்கிறதே இல்லைங்க...

அடிக்காம பூமாதிரி பொத்திவச்சி வளக்கிறேன். கேள்வி கேட்டா கேக்கற கேள்விக்கு பதில் சொல்லனுமா இல்லையா? சொல்ல மாட்டேங்கறாங்க. மொகத்தையே பாத்துகிட்டு விரைப்பா நிக்கறான். ஒரு மணி நேரம் சொல்லு... சொல்லு... என் கண்ணு. மணி. செல்லம் சொல்லுப்பா சொல்லுனு கேட்டுட்டே இருக்க வேண்டியதுதான். கேட்டடுகிட்டே தூக்கம் வந்து தூங்க வேண்டியதுதான். அவன் பதிலே சொல்லமாட்டான். நமக்கே சலிப்பா போய் விட்டுட வேண்டியதுதான்.

ஆனா ஒரு அனியாயத்தை பாருங்க... அவன் அம்மா கேட்டா என்னை முறைக்கிற மாதிரி முகம்பாத்து விரைப்பா நிக்கறான். ரெண்டாவது முறை அவ ‘சொல்லுடா...’ன்னு கேக்கற அதிகார தொனியில அழுகை வர்றாப்பல வாய கோணிகிட்டு பதில் சொல்லிடறான். நான் இல்லாத நேரத்தில மயித்தை பிடிச்சி உலுக்கி எடுத்திடுவா போல... எனக்கு தெரியாம அடிக்கிறா... அதனால அதட்டி மிரட்டி கேட்டா அவகிட்ட மட்டும் பதில் சொல்லறான். நான் கேட்டா முறைச்சி முகம் பாத்து நிக்கிறான். ரத்த அழுத்தம் கூடிப்போகுது. கல்யாணமாகி குழந்தை பெத்தவங்களுக்கு மட்டும் அதிகமா ஏன் ஹார்ட் அட்டாக் வர்றதுன்னு இப்ப தெரியுதுங்களா? ஆனாலும் நான் பையன அடிக்கிறதில்லைங்க. அதில எனக்கு நம்பிக்கை இல்லை. அது மிருக குணம்.

சாயிந்தரம் வீட்டுக்கு வந்தவனை பொறுமையா கூப்பிட்டு ‘செல்லம் ஏரியில போயி குளிச்சியா’ன்னு கேட்டேன்... அவன் ஆமாங்கறான். நல்ல பையங்க. உண்மைய ஒப்புக்கறான் பாருங்க. தினமும் இதே மாதிரி ஏரியில போயி நீச்சலடிச்சியான்னு கேக்கறேன். இல்லைங்கறான். பிறகு தலையில ஏன் மண்ணா இருக்குன்னு கேட்டேன். பதில் இல்லை. சொல்லு சொல்லுனு கேக்கறேன் பழைய மாதிரி முகத்தை பாத்து மொறைச்சிகிட்டு வெறைப்பா நிக்கறாங்க. இனிமே இவன் வாயில இருந்து ஒரு வார்த்தை வாங்க முடியாது.

அவன் அம்மா அதட்டி தலையில என்னடா மண்ணுன்னு கேட்டதுக்கு அவன் எதோ ஒரு பையனின் பேர்சொல்லி மண் போட்டுவிட்டதாக சொன்னான். மிரட்டி கேட்டதில் அவன் உண்மை சொன்னதாக அவள் இத்தனை நாள் நம்பிக்கொண்டிருந்தாள். இவன் பொய்சொல்லி இருக்கிறான். ஏரியில் போய் குளிக்கிறான். சாக்கடையும் மனுசக் கழிவும் நிரம்பியிருக்கு அதில. அதில் போய் குளிக்கிறான். கேட்டால் பொய் சொல்கிறான்.

ஒரு முறை அவன் வகுப்பு டீச்சர் கூப்பிட்டு அனுப்பியிருந்ததை உங்களுக்கு சொல்லணும். போனதும் என் பையனோட பரிச்சை பேப்பர் எல்லாதையும் எடுத்து காண்பித்தாள். தமிழ் தாளில் அ போட்டிருக்கிறான் அடுத்து இ போட்டு அதை அழித்து கிழித்து வைத்திருக்கிறான். அவன் இ போடுவது கொஞ்சம் தோசை சுடும் வாகில் சுழித்து போடுவான். இ போலவே தெரியாது. அதனால் அழித்து தேய்த்துத்தான் அவனால் இ போட முடியும். எச்சில் தொட்டு அழித்தது. கிழித்து. ஓட்டைபோட்டு வைத்திருக்கிறான்.

நான் டீச்சரை பார்த்தேன். ‘நான் சொல்லிக்குடுத்து எழுதுப்பான்னு சொல்லிப்பார்த்தேன். இவனை மட்டும் தனியா இருக்க சொல்லி போர்டுல எழுதிப்போட்டு அதை பாத்து எழுதவும் சொன்னேன். எழுதவே மாட்டேனிட்டான். நாலாவது பையனுக்கு அவுக்கு அடுத்து ஆ வரும்னு பரிச்சையில சொல்லி தந்தா அவன் படிப்பு தரம் என்னவா இருக்கும்.’

டீச்சர் என்னை பார்த்தாள். **நீ பெத்த இந்த மகா கெட்டிக்காரனை அடிக்கக்கூடாதுன்னு வேற சொல்லவந்துட்ட* என்ற பார்வை அது. ஒரு முறை அழுதபடி ‘டீச்சர் அடிச்சிட்டாங்க...’ என்று பையன் வந்தபோது வீட்டுக்கே போய் ‘என் புள்ளை படிக்கலைன்னா கூட பரவாயில்ல.. மேல கை வைக்காத ன்னு சொல்லி எகிறிவிட்டு வந்தேன்.

‘அவன மிரட்டி உருட்டாம எழுதுன்னு சொன்னா நல்லா எழுதுவாங்களே...’ என்று டீச்சரின் கேவலப் பார்வையை தவிர்க்க அவன் எழுதி கிழித்த விடைத்தாளை பார்த்தபடி சொன்னேன்.

‘எப்படிங்க... நான் ஒண்ணுமே சொல்லாம எல்லா பிள்ளைக்கும் போல அவனுக்கும் பேப்பர் தந்து எழுத சொன்னேன். வெறும் பேப்பரை வச்சிருக்கான். மத்த புள்ளைங்க என்னமா எழுதியிருக்காங்க பாருங்க.’ காண்பித்தாள். முத்து முத்தாக எழுதியிருந்தன. இந்த டீச்சர் சொல்லித் தருவதில் ஏதும் குற்றம் இருக்க வாய்ப்பில்லை.

‘இதோ உங்க பையன் எழுதின இந்த பேப்பரை பாருங்க...’ பார்த்தேன். ஏ பி சி டி நன்றாக எழுதியிருக்கிறான். ஆனால் ஏ பி சி டி மட்டும்தான் எழுதியிருக்கிறான். பிறகு மரம். வீடு. மாடு என்று குட்டி குட்டியாக பொம்மைகள். மனித முகம். பூனை. குளித்தபடி எருமை. இப்படி வரைந்து வைத்திருக்கிறான்.

‘இப்படி இங்லீஸ் பேப்பர்ல பொம்மை போட்டு வச்சிருக்கான். இதுக்கு என்ன மார்க் போடறது.’

‘என்ன மார்க் போட்டிருக்கிங்க?’

‘பாருங்க...’ பிராக்ரஸ் ரிபோர்ட் தந்தாள். மூன்று பாடத்தில் பூஜ்யம் வாங்கியிருந்தான். இரண்டு பாடத்தை எழுதாமல் வருகை தரவில்லை என்று போட்டிருக்கிறது.

‘ரெண்டு பரிட்சை எழுதலையா? தினமும் வரானே...’

‘எங்க வரான்... மதியம் சாப்பிட்ட பின்னாடி வரதில்ல... கேட்டா அப்பா கூப்டாங்க. வயித்துவலி. காய்ச்சல்னு போயிடரான்.’

‘வீட்டுக்கும் வரதில்லையே...’

‘எங்க போறான்னு நீங்கதான் பாத்து சொல்லனும். ஸ்கூல்ல இருக்கும்போது நாங்க பொறுப்பு. வீட்டுல நீங்கதான் பொறுப்பு.’

‘சரிங்க... பாடம் சொல்லித்தறது உங்க பொறுப்புதானே... அவன் ஒழுங்கா படிக்கலைனா நீங்க சரியா சொல்லி தரலைனுதானே அர்த்தம்.’

‘மத்த புள்ளைங்களுக்கும் இவனுக்கும் ஒன்னா தான் சொல்லிதறேன். அவங்க சரியா எழுதியிருக்காங்க பாருங்க. நாங்க மட்டும் வீட்டுல சொல்லித்தந்து என்ன பிரியோஜனம். நீங்களும் வீட்டுல சொல்லித்தரணும்.’

‘பிறகு பையன எதுக்கு ஸ்கூலுக்கு அனுப்பணும். வீட்டுலயே வச்சி சொல்லித்தறேன்.’

‘அதைத்தான் ஹெட்மாஸ்டரும் சொல்றாரு.’

‘என்னனு?’

‘பையனை வீட்டுலயே வச்சிக்கச் சொல்லி... இத்தனை மக்கான புள்ளைங்க இந்த ஸ்கூலுக்கு ஒதவ மாட்டாங்க... டி.சி ய வாங்கிட்டு போக சொன்னார்.’

‘இல்லைங்க... நான் சொல்லித்தறேன். பையன வேற எந்த ஸ்கூல்ல சேத்தறது. நான் சொல்லித்தறேன் விடுங்க. அவனை ஒழுக்கமா படிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு. டி சி எல்லாம் வாங்குன்னு சொல்லறிங்களே...’

‘இல்ல... நீங்க ஹெட்மாஸ்டரை பாத்துட்டு போங்க. கண்டிப்பா பாக்கணும்னு சொன்னார்.’

போய் பார்த்தேன். கையில். காலில். தரையில் எல்லாம் விழ வேண்டியிருந்தது. இவன் என்னத்தை படிக்கிறான். நல்லா படிச்சி கலக்டர் ஆகணும்னு கான்வெண்ட்டில் சேர்த்துவிட்டேன். பதினைந்தாயிரம் அன்பளிப்பு தந்தேன். இரண்டவது வரை கூட அவர்கள் இவனை வைத்துக் கொள்ளவில்லை. தேறாத கேஸ் என்று அவனையும் என்னையும் ஒருசேர கழுத்தை பிடித்து வெளியே தள்ளினார்கள். மூன்றாம் வகுப்பு வெளியூரில் ஹாஸ்டல் இருக்கும் கான்வெண்ட்டாக பார்த்து இன்னொரு பதினைந்தாயிரம் தந்து சேர்த்தேன். அவர்கள் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளவில்லை. மூன்றாவதை பெயில்போட்டு கழுத்தை பிடித்து தள்ளினார்கள். அவர்கள் கால் கையெல்லாம் பிடித்து மூன்றாவது பாஸ் என்று போடவைத்து இந்த கவர்ன்மெண்ட் ஸ்கூலில் சேர்த்தேன். இங்கேயும் என் கழுத்தில் கை வைக்கிறார்கள்.

எனக்கு ஏங்க இப்படி ஒரு பையன் பொறக்கணும். நான் யார் சொல்லித்தந்தும் படிக்கவில்லை. நானே படித்தேன். படிப்பென்றால் ஆசையாசையாய் படித்தேன். வாத்தியர் பிள்ளை மக்கென்பார்கள். நான் நன்றாக படிப்பவன் என்பதால் இப்படி மக்காக பிறந்தானா?

படிப்பைத் தவிர பிள்ளைகளுக்கு நாம் தரும் பெரிய சொத்து என்னவாக இருக்கும். ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறதா? படிக்கவில்லை என்றாலும் நிலத்தை வைத்து பிழைத்துக் கொள்வான் என்பதற்கு. இல்லை பத்து பஸ் ஓடுகிறதா? அதை வைத்துக்கொண்டு பிழைத்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட. ஏழு தலைமுறை உட்கார்ந்து சாப்பிட்டாலும் அழியாத அளவுக்கு சொத்து இருக்கிறதா? படிப்பெதற்கு என்று விட்டுவிட. நான் வாங்கும் சம்பளம் என் குடும்பத்தை பார்த்துக்கொள்ள போதும். இவனுக்கு குடும்பம் வந்தால் அதை காப்பாற்ற இவனுக்கு வழி என்ன? பயமாக இருக்கிறது. சொத்தற்றவர்களுக்கு வக்கற்றவர்களுக்கு படிப்பைவிட என்ன பெரிய சொத்து இருக்க முடியும்.

எனக்கு பயத்தில் காய்சல் கண்டுவிடும்போல இருந்தது. மனைவியிடம் வள் வள் என்று விழுந்தேன். ரெண்டு நாள் வேலைக்கு விடுமுறை தந்துவிட்டு பையனை உட்கார வைத்து படிப்பாய் சொல்லித்தந்து பார்த்தேன். அவன் இ என்ற எழுத்தை தோசை சுடுவது போல் தேய்த்து எச்சில் போட்டு பேப்பரை கிழித்ததைத் தவிர பெரிதாய் முன்னேறிவிடவில்லை....

இந்த ஹார்ட் அட்டாக் என்று சொல்கிறார்களே... அது நிஜமாகவே வரும்போல இருக்கிறது. டாக்டரை பார்க்க வைத்துவிடுவான் போல் இருந்தது.

உங்ககிட்ட சொல்லறதில என்னங்க கூச்சம். நான் ஒரு டாக்டர்கிட்ட பையன கூட்டிட்டு போய் காண்பிச்சேங்க. என்னோட நண்பன்தான் அவன். என்னைவிட நல்லா படிச்சான். என்னோடதான் படிச்சான். என்னைவிட நல்லா படிச்சதனால டாக்டருக்கு படிச்சி சொந்தமா கிளினிக் வச்சி கார்ல வரான் பாருங்க. அவன பாக்க அப்பாயிண்மெண்ட் கேக்கறாங்க.

அதாங்க படிப்பு. என்னை பாக்க எவனும் அப்பாயிண்மேன்ட் வாங்கறதில்ல. என் படிப்பு அப்படி? பிரவேட் கம்பெனியில மேனேஜர். யார் வேணுன்னாலும் எப்பவேணுன்னாலும் பாக்கலாம். அவன பாக்க அப்பாயின்மெண்ட் வேணும். அவன் படிப்பு அப்படி. என்னை விட மோசமா படிச்சவங்கள யாரும் பாக்கறதில்ல சீந்தறதும் இல்ல. படிப்பு தர்ற யோக்கியதை அது. படிப்புன்னா சும்மாவா? அதனாலதான் படி படினு தலைதலையா நான் அடிச்சிக்கறேன்.

அப்பாயின்மெண்ட் வாங்கின பின்னாடிதான் என்னை அவன் பாத்தான்னாலும் என்னை அவன் மறக்கல. நல்லா தன்மையா பேசினான். வீட்டுக்கு ஒரு நாள் குடும்பத்தோட வான்னு சொன்னான். என்ன பிரச்சினைன்னு கேட்டான். சொன்னேன். அவன் சிரிக்கிறான். இதெல்லாம் பிரச்சினையே கிடையாதுங்கறான்.

சரியா படிக்காம இருக்கிறது பிரச்சினை இல்லையா? என்னங்க இது. நான் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு காய்ச்சல்வர என் பையனுக்கு சொல்லித்தறேன். அவன் பேப்பர்ல தோசைசுட்டுகிட்டு இருக்கான் இது பிரச்சனையே இல்லைன்னு சிரிக்கிறான். சரியா படிக்கலையே எப்படி இவன் வாழ்க்கையில முன்னுக்கு வரதுன்னு கேட்டா அவன் மெதுவா தண்ணிய குடிச்சிட்டு. எனக்கும் அவனுக்கும் குடிக்க எதையோ கொண்டுவர வார்டுபாய்கிட்ட சொல்லிட்டு ரொம்ப நிதானமா பேச ஆரம்பிக்கறான். என் வேதனை அவனுக்கு புரியலையா?

‘பாரு... படிப்புக்கும் வாழ்க்கைக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை.’

சொல்ல மறந்துட்டேனே... அவன் ஒரு மனோதத்துவ டாக்டர். இன்னைய தேதிக்கு நெம்பர் ஒன். அவன் சொல்லறான் படிப்புக்கும் வாழ்க்கைக்கும் சம்மந்தமே இல்லைனு. படிக்காமயா இவன் கார் வச்சிகிட்டு குளுகுளு கிளினிக்ல டாக்டரா சுத்தறநாற்காலியில கோட்டு போட்டுகிட்டு உட்காந்திருக்கான்.

‘உனக்கே தெரியும் நாங்க கோட்டீஸ்வரங்க இல்ல. படிச்சாதான் நல்ல வேலையில சேரமுடியும். நல்லபடியா வாழ முடியும்.’

‘அது எனக்கு தெரியும். ஆனா நூத்துல ரெண்டு கோட்டீஸ்வரனுங்க கூட பணிரெண்டாவத தாண்டினதில்லங்கறது உனக்கு தெரியுமா?’

‘அவங்களுக்கு பணம் இருக்கு அதனால படிக்க தேவையில்லை...’

‘அப்படியா? சரி... ஏகத்துக்கும் படிச்சவங்க நூத்துல ஒருத்தர் கூட கோடிஸ்வரன் ஆனதில்ல அது தெரியுமா? நான் இதை ஏன் சொல்லறேன்னா படிப்புக்கும் காசுக்கும் சம்மந்தமே இல்லைன்னு சொல்லதான். எழுதகூட தெரியாதவன் பெரிசு பெரிசா ஓட்டல்கடை வச்சி கோடி கோடியா சம்பாதிப்பான். நல்லா படிச்சவங்க கேட்ரிங் டெக்னாலஜி முடிச்சி அவன்கிட்ட வேலை பாப்பான். படிப்புக்கும் காசுக்கும் சம்மந்தம் இருக்கா சொல்லு?’

உலகம்பூரா பாரு. கோடீஸ்வர மொதலாளிகிட்ட வேலை பாத்து சம்பளம் வாங்கிறவங்க எல்லாருமே அந்த கோடீஸ்வரனைவிட அதிகமா படிச்சிருப்பாங்க. படிப்புக்கும் காசுக்கும் சம்மந்தமே இல்லை...’

‘படிக்க தேவையில்லையா?’

‘படிப்புங்கறது அறிவுக்காக. ஒரு தன்னம்பிக்கைக்காக. நான் படிக்காதவன்னு தாழ்வுமனப்பான்மை வரக்கூடாது. அதுக்காக படிக்கலாம். மாநிலத்திலேயே முதலாவதா வரனுங்கற அவசியம் இல்லை. லச்சரூபாய் குடுத்தா தப்பில்லாம எண்ணத்தெரியற அளவுக்கு படிச்சா போதும். அதான் படிப்புக்கும் காசுக்கும் உள்ள உறவு. மத்தபடி படிப்புதான் காசு சம்பாதிக்க ஒரே வழின்னு நெனைக்கத் தேவையில்லை. ஒலிம்பிக்ல ஓடி தங்கப்பதக்கம் வாங்கினவங்க எல்லாருமே பி. எச். டி படிச்சவங்களா என்ன?’

கடவுளே...கடவுளே... கிளாஸ் எடுக்கிறானே. என் புள்ளை படிக்கலைடா அவனை பாருடான்னு சொன்னா? கிரிக்கெட் விளையாடறவன் பத்தாவது பெயிலாயிட்டு லட்சலட்சமா சம்பாதிக்கிறான்னு சொன்னா நான் என் புள்ளைய இந்தியாவுக்காக கிரிக்கெட் விளையாட அனுப்ப முடியுமா? கிரிக்கெட்டும் வெளையாட மாட்டேங்கறான்.

படிக்க வெக்கவா வேணாவான்னு அவனை கேட்டேன் படிக்க வை ஆனா அதான் வாழ்க்கையே இல்லைன்னா பாழாபோயிடும்னு பயமுறுத்தாத. உன் பையனுக்கு எது சுலபமா வருமோ அதை செய்யவிட்டு அதில முன்னேத்த பாரு அவனை என்கிறான்.

‘என் பையனுக்கு பாடம்படிக்க ஆரம்பிச்சா சுலபமா கொட்டாவிதான் வருது. இதில முன்னேத்தி விட முடியுமா சொல்லு.’

கோபத்தில இதை அவன்கிட்ட சொல்லிட்டேன். எனக்கே சங்கடமாத்தாங்க போச்சி. என்னதான் அவன் என் கூட படிச்சவன்னாலும் இப்ப ஒரு பிஸியான டாக்டர். அவன்கிட்ட இப்படி பேசக்கூடாதில்லையா? அவன் என்னை சில வினாடி பார்த்தான். பிறகு சிரித்தான். மனோதத்துவ டாக்டர். கோபம் வராதா?

‘ஏன். செய்யலாமே... உலகத்திலயே ரொம்ப நேரம் ரொம்ப அழுகா ரொம்ப பெரிய கொட்டாய் விடறவன் உன் பையன்தான்னு சொல்லவையேன். அதை செய்யேன் பேரும் வரும். வேடிக்கை பாக்கறவன் தர்ற காசும் வரும். கின்னஸ் ரெக்கார்டாயிட்டா காரு பங்களாகூட சம்பாதிக்கலாம் அந்த பேர வச்சி.’

‘இதை உலக மகா பிரச்சினையாக்காத. என் பையன் படிக்க மாட்டேங்கறான். அவனை நாலு கேள்வி கேட்டு ஏன் படிக்க மாட்டேங்கறான்னு கண்டு பிடிச்சி படிக்கவை. அது போதும்.’

‘சில புள்ளைங்க படிச்சி பெரிய ஆளாகும். சில புள்ளைங்க படிக்காம பெரிய ஆளாகும். படி படின்னு புள்ளைங்கள இம்சை பண்ணறத நான் ஒத்துக்கறதேயில்லை.’

என்ன சொல்லவரார் இந்த மனோதத்துவ டாக்டர் என்றால் இந்த உலகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் மூடச்சொல்கிறார். இது உங்களுக்கு சம்மதமா? இஷ்டமிருந்தா படி இல்லாட்டி ஊர் சுத்துன்னு சொல்லறது என்ன சைக்காலஜியோ தெரியல.

‘அதனால உன் பையன் எந்த அளவுக்கு இப்ப படிக்கறானோ அந்த அளவுக்கு படிச்சா போதும். வகுப்புல இருக்கிற எல்லா புள்ளைங்களும் பர்ஸ்ட்; ரேங்க் எடுக்க முடியாது. எத்தனை மார்க் எடுக்கிறானோ அத்தனையே போதும்.’

‘எல்லா பாடத்திலையிம் சைபர் எடுக்கிறான். போதுமா?’

‘சைபரா?’

என் பையனை இப்பொழுதுதான் முதல்முறையாக அந்த மனோதத்துவ டாக்டர் நண்பர் பார்த்தார் பார்த்துவிட்டு என்னைத்தான் கோவிந்தாவிட்டார். ‘எந்த அளவுக்கு நீங்க பையனை கொடுமை படுத்தி படிக்க சொல்லியிருந்தா அவன் எல்லா பாடத்திலையும் சைபர் எடுத்திருப்பான். இதுக்கு அர்த்தம் நீங்க மிருகம்மாதிரி அவன்கிட்ட நடந்துகிட்டிங்கன்னு அர்த்தம். ஏகத்துக்கம் அடிச்சிருப்பிங்க. அதனால அவன் படிப்பை வெறுத்து சுத்தமா அதுக்கு எதிர்திசையில மனச விட்டிருக்கான்.’

நான் அடிக்கிறதே இல்லை. அவனை ஒரு நாள் ஒரு பொழுது அடிச்சிருக்கேனா கேளுங்க. அடிச்சிஅடிச்சி ஒரு புள்ளை மக்கா போயிடுவான்னு எனக்கு தெரியாதா? அன்பா சொன்னாதான் எந்த புள்ளையும் கேக்குங்கன்னு தெரியாதா? நான் எதற்காகவும் எவ்வளவு பெரிய தப்பு செய்தாலும் அடிப்பதில்லை. இந்த மனோதத்துவன் நான் அடித்து கொடுமை படுத்தியதாக சொல்கிறான்.

‘நான் அடித்ததேயில்லை...’ என்று சொன்னேன்.

‘அது இன்னும் பெரிய தப்பு’ என்கிறான். பிள்ளைகளை அடிக்காமல் கண்டிக்காமல் வளர்ப்பது இன்னம் மோசமான விசயம் என்கிறான். நானும் எம். ஏ சைக்காலஜி படித்தவன்தான் எனக்கும் மனுச உளவியல் தெரியும் ரொம்ப பீத்திக்காதே என்று அவனிடம் சொன்னேன். அன்பு சாதிக்கிற மாதிரி எதுவும் உலகத்தில சாதிக்காது என்றேன். அவன் மெல்ல சிரித்தபடி வார்டுபாய் கொண்டு வந்து கொடுத்ததை குடித்தபடி சொல்கிறான். ‘படிப்பில் சொல்லித்தரும் சைக்காலஜிக்கும் நிஜத்தில் மனிதனின் குறிப்பாக குழுந்தையின் சைக்காலஜிக்கும் ஏகத்திற்கும் வித்தியாசமிருக்கிறது.’

தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடித்து சின்ன தப்பிற்கும் பெரிய அடி அடித்து வளர்க்கும் பிள்ளை மக்குகளாளய் மந்த புத்தியுள்ளவர்களாய் ஆவது எத்தனை சதவிதமோ அத்தனை சதவிதம் கண்டிக்காமல் தொட்டதற்கெல்லாம் செல்லம் கொடுத்து தட்டிக்கேட்காமல வளர்க்கும் பிள்ளை தத்தேரிகளாய் ஆகின்றன என்கிறான். எதிலும் மிதம் அவசியம் என்கிறான். மிதம் என்றால் ஒரு நாளைக்கு எத்தனை முறை அடிப்பது எப்பொழுது அடிக்காமல் விடுவது.

‘த்தா... நான் உன்கிட்ட பாடம் கேக்க வரலை. அவனை பாரு கொஞ்சம்...’ என்று பொறுமை இழந்தவனாக நான் சொன்னதும் அவன் பையனை விசாரித்தான். பேர் கேட்டான். அப்பாபேர். என்ன படிக்கிற. என்று கேட்டதற்கெல்லாம் பதில் பேசாமல் உட்கர்ந்திருந்தான் அவன்.

எனக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்தது. ‘சரி நான் மருந்து எழுதித்தறேன். அவனுக்கு மெண்டலி எதாவது டிப்ரசன் இருந்தா அதை அந்த மருந்து சரிசெய்யும். வீட்டுக்கு வொய்ப்ப அழைச்சிட்டு வா என்று அவன் அடுத்த ஆளுக்கு மணியாட்டினான். பையனை ஒண்ணுமே கேக்காம என்ன மருந்த எழுதித்தறான்.

பையன் கிளம்பும்போது அந்த டாக்டரிடம் ‘ஊசி போடலையே டாக்டர்.’ என்றான்.

‘எதுக்கு?’ என்றான் அவன்.

‘சரியா படிக்கலைன்னா டாக்டர் ஊசி போடுவார்னு சொன்னாங்களே...’

‘யாரு?’

‘அப்பா’

‘போட்டுகிறயா?’

‘சிவனேசனுக்கு ஊசி போடவேயில்லையே...’

‘யாரு சிவநேசன்.’

‘அவன்தான் எங்க கிளாஸ்ல பர்ஸ்ட். ஆனா அவன் ஊசி போட்டுக்கவே இல்லையே.’

அடுத்ததாக வந்த பெண்மணியை கொஞ்சம் வெளியே இருக்க சொல்லிவிட்டு என் பையனிடம் பேச ஆரம்பித்தான்.

‘சிவநேசன் நல்லா படிப்பானா?’

‘ஆமாம்.’

‘நீ?’

‘சரியா படிக்கிறதில்லனு அப்பாவும் டீச்சரும் சொல்லறாங்க்

‘நீ என்ன சொல்லறே?’

‘நானா...?’

‘நீதான். நீ என்ன சொல்லற நல்லா படிக்கிறயா இல்லையா?’

‘நல்லாதான் படிக்கிறேன்.’

‘எல்லாத்தலயும் சைபர் வாங்கியிருக்கறியே...’

‘அந்த டீச்சர்தான் சைபர் போட்டாங்க.’

‘நீ சரியா எழுதியிருக்கமாட்ட.’

‘ஆமாம்.’

‘ஏன்?’

‘ஏன்னா...’

‘சொல்லு.’

‘புடிக்கல.’

‘படிக்கிறதா?’

‘இல்ல... எழுதறது. டீச்சர் ரொம்ப அடிச்சாங்க. அப்புறம் அப்பா வந்து திட்டினாங்க. அப்புறம் டீச்சர் என்கிட்ட சரியா பேசறதில்ல. எழுதுன்னு சொல்லறதில்ல. அதுமில்லாம கை வலிக்குது. பொம்மை போட்டா கை வலிக்கமாட்டேங்குது. பொம்மை போட்டா டீச்சர் திட்டுவாங்க. சைபர் போடுவாங்க.’

‘எழுத சொன்னத எழுதவேண்டியது தானே. ஏன் பொம்மை போட்டே..?’

‘ஊசி போடுவிங்களா?’

‘மாட்டேன்.’

‘நீங்க எத்தனை ஊசி போட்டுகிட்டிங்க?’

‘எதுக்கு?’

‘நல்லா படிக்கிறதுக்கு.’

‘எதும் போட்டுக்கல...’

‘அப்ப மாத்திரை சாப்படிங்களா? கசப்பா இருக்கும் இல்லையா? வேப்பந்தலைமாதிரி?’

‘வேப்பந்தலை தின்னிருக்கியா?’

‘ம்’

‘எதுக்காக அதை தின்ன?’

‘வயித்தில இருக்கிற புழு செத்து போகும்.’

‘அப்பா சொன்னாரா?’

‘அவர் சொல்லல. வயித்தில பூச்சியெல்லாம் இருக்காதுங்கறார். நேருதான் சொன்னார்.’

‘நேரு மாமாவா? ஜவகர்லால் நேரு.’

‘அவருஇல்ல. மாட்டு வண்டி ஓட்டிகிட்டு வருவாரே... உங்களுக்கு தெரியாது. எங்க ஊர்ல இருக்காரு. அவர்தான் கொழுந்தா இருக்கிற வேப்பிலைய புடிங்கி தருவார். அதை சாப்டிட்டு கருக்கட்டான் பழம் பறிச்சிதருவார். அது ரொம்ப இனிப்பா இருக்கும்.’

‘கருக்கட்டான் பழம்னா?’

‘தெரியாதா? குண்டு குண்டா சின்னதா? இருக்கும். உள்ள கொட்டை இருக்கும். வெள்ளைய இருக்கும். கொட்டைய முழுங்கினா வயித்தில மரம் வரும். முழுங்காதேன்னு சொன்னாரு நேரு.’

‘அந்த பழம் எங்க இருக்கும்.’

‘ஓடையில. மாட்டு வண்டியில போகும் போது ஒயர ஒயரமான மரத்தில அது இருக்கும். தெனமும் மாட்டு வண்டியில உட்காந்துகிட்டு போகும் போது பறிச்சிதருவார். உனிமுள் பழம்கூட நல்லா இருக்கும். கோவைபழம் சாப்பிடுவோம். ஏரியில மாட்டை கழுவும்போது...’ பையன் பாதியில் என்னை பார்த்தான்.

‘ம் சொல்லு...’ என்று கேட்டான் டாக்டர்.

அவன் சொல்லவில்லை. என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். இனி பேசமாட்டான். அவன் பார்வை ஸ்தம்பித்துவிட்டது. தூக்கம் வரும்வரை கேட்டாலும் அவன் பேச மாட்டான்.

‘அப்பா ஒண்ணும் சொல்லமாட்டார் சொல்லு...’

அவன் பேசவில்லை.

என்னை கொஞ்சநேரம் வெளியே இரு என்று சொன்னான் டாக்டர். நான் வெளியே இருந்தேன். கொஞ்சம் நேரம். இன்னும் கொஞ்சம் நேரம். பையன் சிரித்தபடி கையில் ஒரு பார்சாக்லெட்டோடு வெளியே வந்தான்.
‘அப்பா உன்ன கூப்டறாங்க அந்த மாமா... ஊசி போடுவாங்கன்னு சொன்னயே... சாக்லெட் சாப்பிட்டா பல் சொத்தை விழாதாம். அவர்தான் குடுத்தார். ஊசியும் போடல.’

நான் உள்ளே போனேன்.

‘பையன்கிட்ட எல்லாத்தையும் சொல்லியிருக்கேன். சரியாயிடுவான் போ.’ என்றான். ‘அதை என்கிட்டையும் சொல்லேன்’ என்றேன்.

‘பையனும் நீயுமா எத்தனை நாள் ஊர் சுத்ததியிருக்கிங்க..?’ கேட்டான். நான் விழித்தேன். அப்படி அவனோடு ஊர் சுத்திபார்த்ததாக ஞாபகம் வரவில்லை.

‘ஞாபகம் இல்லை’

‘அவன்கிட்ட எல்லாம் சொல்லியிருக்கேன் போ...’

‘நான் என்ன செய்யணும் அதை சொல்’ என்றேன்.

‘நீ அவனை இனிமே படின்னு ஒரு வார்த்தைகூட சொல்லக்கூடாது. எழுதுன்னு தவறிகூட சொல்லக்கூடாது’ என்றான். இப்படி செய்தால் அவன் சந்தோசமாக வீதியில் விளையாடிக்கொண்டிருப்பானே...’

‘விளையாடட்டும். அவனுக்கே தோணும்போது படிப்பான்’ என்கிறான். அவனுக்கு தோன்றுமா படிக்க வேண்டுமென்று.

இவன் சொல்வதைப் பார்த்தால் பையன் படிப்பு வராத கேஸ் போலத்தான் தெரிகிறது. என்னங்க நான் செய்யட்டும். அவனுக்குன்னு தர என்கிட்ட ஒண்ணும் இல்லைங்க. அவன் வாழ்க்கை என்னங்க ஆகிறது. எப்படி வாழுவான். சோத்துக்கு என்ன செய்வான். நல்லா படிச்சி ஒரு வேலையில சேந்தாத்தானே பெத்தவனுக்கு நிம்மதி.

அவனிடமே கேட்டேன். ‘பையன் படிப்புக்கு என்னதான் வழி.?’

‘கொழந்தைங்களுக்கு மொத எது பிடிக்குமோ அதை செய்யச் சொல்லணும் அதுதான் கொழந்தைகளை திருத்தற மொத படி. அவனுக்கு எது ரொம்ப பிடிக்கும் சொல்லு...’

‘ரொம்ப பிடிக்கிறதா...’ நான் யோசித்தேன்.

நீ அவனோட அப்பாதானே... ஒன்பது வருசமா பையனை வளக்கிற இல்ல... உன் பையனுக்கு எது ரொம்ப பிடிக்கும் சொல்லு...

நான் ‘சாக்லெட்’ என்றேன்.

அவன் தப்பு என்றான். ‘ரொம்ப புடிச்சதுன்னா திங்கற பொருள்தானா? பிள்ளைங்களுக்கு திங்கறத தவிற புடிச்சது இந்த உலகத்தில இருக்காதா? அவனுக்கு புடிச்சது ஊர் சுத்தறது. காத்தோட்டமா நடக்கறது. ரெட்ட மாட்டுவண்டியில போறது. ஏரியில குளிக்கிறது. ஒன்பது வருசமா பையனை வளத்து அவனுக்கு என்ன புடிச்சிருக்குன்னு தெரியல உனக்கு.’

‘அவன் சாக்லெட்தான் வேணும்னு அடம்புடிப்பான் அதான் சொன்னேன்.’

‘திங்கறதிலயும் அவனுக்கு சாக்லட்தான் புடிக்கும்னு சொல்லறது தப்பு. அவனுக்கு புடிச்சது அவன் சொன்னானே அந்த கருக்கட்டான் பழமும் கோவைப்பழமும்.’

‘அவன் சாக்லேட் கேட்டானே...’

‘அது சும்மா... நீ தரமாட்டேன். தின்னக்கூடாதுன்னு சொன்னதால வீம்புக்கு கேட்டிருக்கான்.’

‘ஏரியில தினமும் குளிச்சானா அவன். தலையேல்லாம் வண்டல் வண்டலா செம்பட்டைக் காக்காய் மாதிரி வர்றப்பவே நெனைச்சேன். அவன என்ன செய்யறேன் பாரு. ஸ்கூலுக்கு போகாம மாட்டு வண்டியில போயி ஏரியில குளிச்சிருக்கான்.’

‘அதான் தப்பு. அதனாலதான் அவன் இந்த விசயத்தை உன்கிட்ட சொல்லல. அவனோட உலகம் அவன் மாட்டுவண்டி போற ஓடையும் அவன் குளிக்கிற ஏரியும் அவன் பழம் பறிச்சி சாப்பிடறமரமும் தான். அதை விட்டு வெடுக்குனு அவனை இழுத்து படிக்க சொன்னா அவன் படிக்க மாட்டான்.’

‘வேற என்ன செய்யட்டும்.’

‘அவன அப்படியே விடு.’

‘அந்த அசிங்கம் புடிச்ச ஏரித் தண்ணியிலையா? சொரி சிரங்கு வந்துடாதா? தோல்வியாதி வந்தா என்ன செய்யறதாம்.’

‘அதுக்கு எத்தனையோ கிரிம் இருக்கு. நல்லசோப்பு இருக்கு. வீட்டுக்கு வந்ததும் குளிச்சிடலாம்.’

‘அப்ப படிப்பு.?’

‘அவன் போக்குல விடு. அவனுக்கு மனநிறைவாயிட்டா... வேறு விசயத்தை சந்தோசமா செய்வான். படின்னா படிப்பான் எழுதுன்னா எழுதுவான்.’

‘நெஜமா எழுதுவானா? வாத்தியார் புள்ளை மக்குங்கறமாதிரி நல்லா படிக்கிறவங்க புள்ளைங்க படிக்காம போறதுக்கு சயின்ஸ் எதுனா சொல்லுதா?’

‘சொல்லுது. நல்லாபடிச்சவங்க படிப்புதான் சொத்துன்னு திரும்ப திரும்ப சொல்லிட்டு இருப்பாங்க. இது ஒருமூட நம்பிக்கை.’

‘படிப்பு மூட நம்பிக்கையா?’

‘ஆமா படிப்புதான் சொத்துங்கறது ஒருமூட நம்பிக்கைதான்.’

‘அப்ப கல்விங்கறது செல்வமில்லையா?’

‘இருந்தது. எட்டாவது படிச்சவன் ஹெட்மாஸ்டர் ஆகமுடியும்கற காலத்தில படிச்சவனுக்கெல்லாம் வேலை வருங்கற காலத்தில அது நம்பிக்கை. இப்ப எத்தனை படிச்சாலும் சத்தியமா வேலை இல்லைன்னு எம்ளனாய்மெண்ட் ஆபிசில பியூன்கூட கற்பூரமணைச்சி சத்தியம் செஞ்சி சொல்லறானே. திரும்பவும் வேலைக்காகதான் படிக்கிறேன்னு சொல்லறது மூட நம்பிக்கை.’

‘படிக்காம இருக்கலாங்கறையா? படிச்சிட்டு யாரும் வேலைக்கே போறதில்லைங்கறயா? படிச்சவன் வேலைக்கு போயி ஆயிரமாயிருமா சம்பாதிக்கிறது உண்மையா இல்லையா?’

‘ஒரு நூறு ரு’பாய் போட்டு உன் பையனுக்கு ஒரு லாட்டாரி சீட்டு வாங்கி தந்துடு. அதான் அவனுக்கு
சொத்து.’

‘அதெப்படி. காசு விழுந்தானே சொத்து. எல்லாருக்கும் லாட்டாரி விழுந்திடுமா? புத்திகெட்டவன் செய்யற வேலை.’

‘லட்சம் பேர் படிக்கிறான். லச்சம் பேரும் கலெக்டர் ஆயிடராங்களா? எவனோ ஒருத்தன் டாக்டர் ஆயிட்டாங்கறதுக்காக எல்லாரும் ஆயிரமாயிரமா செலவு செஞ்சி படிக்க வக்கிறது எது கெட்டவன் செய்யிற வேலை சொல்லு. மனுசன் சராசரி ஆயுட்காலம் ஐம்பதுன்னு வச்சா இருபத்தி எட்டு வருசம் அதாவது வாழ்நாள்ள பதிய படிப்பே விழுங்கிட்டா பிறகு எப்ப மனுசன் வாழக்கைய அனுபவிக்கிறது. படிப்பு எதுக்குன்னு புரிஞ்சிக்கோ. ஒரு படிப்ப படிச்சா அது வாழ்நாள்ள ஒருநாள் ஒரு கணமாவது உபயோகமாகணும் அப்படி இருந்தாதான் படிக்கனும். அப்படி உதவுங்கற பட்சத்திலதான் படிப்பு புத்திசாலித்தனமாகுது. படிச்ச படிப்பு வாழ்க்கைக்கு உதவாதுங்கற பட்சத்தில அது மூடநம்பிக்கை ஆயிடுது.’

‘அதெல்லாம் வேணா... பையன் படிக்கிறதுக்கு எதாவது செய்.’

‘எதுக்கு?’

‘பாரு என்னைவிட குறைச்சலா படிச்சவன் எனக்கு கீழ் வேலைபாக்கிறவன் அவனோட பையன் இவனோடதான் படிக்கிறான். என்னமா எழுதியிருக்கான் தெரியுமா? பேப்பர அந்த பொம்பள காமிக்குது எனக்கு கஷ்டமா போச்சி. அவனோட புள்ளையே இத்தனை படிச்சா அவனுக்கு மேனேஜரா இருக்கிறனே என்னோட புள்ளை எப்படி படிக்கணும் சொல்லு.

‘போற போக்குல எனக்கு டேபுள் தொடைச்சி விட்டவனோட பையன் மேனேஜர் ஆகி அவனோட டேபுள என் பையன் தொடைப்பானோன்னு பயமா இருக்கு படிக்கணும் அதுக்கு எதுனா செய்.’

‘சரி அடுத்தவாரம் திங்கட்கிழமை வா... நாலு சிட்டிங் கவுன்சிலிங் பண்ணா சரியாயிடும்.’

‘திங்கட்கிழமையா? கம்பெனி இருக்கு. லீவு போட முடியாது. அவன் அம்மாவோட அனுப்பி வக்கட்டுமா.’

‘நீ வரணும்’

‘பையன் வந்தா போதாதா? யாரோட வந்தா என்ன?’

‘ட்ரிட்மெண்ட் அவனுக்கு இல்ல. உனக்கு. உன் மனசில தப்பு தப்பா என்னென்னவோ இருக்கு. அதை சரி செஞ்சா நீ பையனை கொடைய மாட்ட. பையன் நல்லா படிப்பான். நாலே சிட்டிங் சரிபண்ணிடலாம்.’

கேளுங்க கேளுங்க இந்த கதைய கேளுங்க. பையன் படிக்கலைன்னு டாக்டர்கிட்ட போனா டாக்டர் அப்பனுக்கு ஊசிபோடறேங்கறான். என்னடா கொடுமை இது.

என்னங்க நான் செய்யறது அவன் மனோதத்துவ டாக்டராம். ஊர் பூரா நல்ல டாக்டர்னுபேர் எடுத்திருக்கான். கோயில் குளத்தில குளிக்கவை நல்லா படிக்கும் பையன்னு பெருமாள் கோயில் பூசாரி சொன்னார். அதை கேக்கறதா ஏரியில குளிக்கவை படிப்பு வரும்னு சொல்லறான் இந்த டாக்டர் நண்பன் இதை கேக்கறதா? ரெண்டையுமெ கேக்கவேண்டியதா போயிடுச்சி.

தினமும் பள்ளி விட்டதும் அந்த மாட்டு வண்டி நேருவோட சேந்துகிட்டு மாட்டு வண்டியில ஏறி ஓடை வழியா போய் அந்த ஓடையில இருக்கிற சரலைக்கல் மேல வண்டி சக்கரம் நங்நங்குனு மோதி கடையாணியில இருக்கிற சலங்கை ஜலீர் ஜலீர்னு சத்தம் எழுப்ப போனோம். இத்தனை பட்டாம் பூச்சி இருக்கிறதா? இங்க. ஊருக்ககுள்ள ஒண்ணுகூட வர மாட்டேங்குதே...

அவன் சொன்ன கருக்கட்டான் பழும் சாப்பிட்டு பார்த்தேன். இனிப்பாக நன்றாகத்தான் இருந்தது. உனிமுள் பழம். கோவைப்பழம் எல்லாம் அந்த நேரு பறித்து தந்தான். கெட்டவார்த்தைபோல ஒரு பழத்தின் பேர் சொன்னான். நாதேறிப் பழம் என்று. சப்பாத்திக்கள்ளியில் ஏகத்திற்கு முள்ளோடு. கையெல்லாம் பொத்துக்கொண்டது. உள்ளே ரத்தச்சிவப்பாய் விதையோடு நன்றாக இனித்தது. பீநாறிப் பழம் என்று ஒன்றை பறித்துத தந்தான். பேருக்கு ஏற்றார்போலவே குமட்டிக் கொண்டு நாற்றம் அடித்தது. நேரு உருமாலில் முகம் தெரிய சிரித்தான். மூந்து பாக்கக்கூடாது நாத்தம் அடிக்கும் அப்படியே சாப்பிடுங்க என்றான். சொன்னபடி வாயில் போட்டுக் கொண்டேன். கொஞ்சமாய் கோந்து போல வாயில் ஒட்டிக்கொண்டாலும் மணிக்கணக்காக இனிப்பாய் இருந்தது வாய்.

ஒரே பச்சைப்பிரதேசம். மாட்டு வண்டியில் ஆடி ஆடி புதர் நடுவே போகும் போது சில்லென்று நன்றாகத்தான் இருக்கிறது. அங்கிருக்கும் உனிமுள் பூக்களை கொத்தாக பறித்து உருஞ்சினால் தேன் இருக்கிறது. என்னென்னமோ பார்க்காத குருவிகள் கேக்காத தினுசில் கத்துகின்றன. ஏகாந்த வெளிதான். நான் அலுவலக ரோபோ. எனக்கு இவை தெரியாது. அல்லது மறந்து போயிற்று. இது வேறு உலகம் தான்.

மாடுகளை ஏரியில் கழுவி விடும்போது கரையோரம் உட்கார்ந்து கொண்டேன். பையனையும் குளிக்கக்கூடாது வேடிக்கை மட்டும் பார்த்தால் போதும் என்று சொல்லிவிட்டேன். நீர் செந்நிறத்தில் கலங்கலாய் இருந்தது. மாடு அதிலே சாணி போடுகிறது. மூத்திரம் பெய்கிறது. எருமைகள் மூக்கை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு மணிக்கணக்காக ஊறிக்கொண்டிருக்கிறது. இதில் மனிதன் குளித்தால் ரத்தம் வர சொரிந்து நிரந்தர சொரிதான் வரும். இதில் எதற்க குளிக்க வேண்டும் தேவையில்லை என்று பையனிடம்சொன்னேன்.

பையன் குளித்தாக வேண்டுமென்று அடம் பிடித்தான். அந்த மனோதத்துவன்தான் சொல்லியிருக்கிறானே. ‘குழந்தைகள் கேட்பது முற்றிலும் தவறான ஒன்றைத்தான் என்றாலும் அதை முற்றிலும் நிராகறிக்காதீர்கள். கொஞ்சமமாய் கொடுத்து முற்றிலும் சரியான பாதைக்கு அழைத்து வாருங்கள்.’ வேறு வழியில்லை. முழுங்கல் அளவு தண்ணீரில் நிற்பதற்கு மட்டும் அனுமதி தந்துவிட்டு நான் கரையோரமாகவே உட்கார்ந்து கொண்டேன்.

அவன் உடைகளை கழற்றினான். நான் கூடாது கால் மட்டும் நனைக்கலாம். அப்படியே போ என்றேன். அவன் நீரின் பக்கமாக போய் அங்கே உடைகளை களைந்து விட்டு நீரில் சர்ரென பாய்ந்தான். நான் பயந்து போனேன். எத்தனை ஆழமிருக்குமோ நேரு அங்கே நின்று இடுப்பளவு நீரில் இவனை பார்த்து சிரித்தபடி மாடுகளை கழுவிக்கொண்டிருந்தான். உள்ளே போன பையனை காணலையே... மூழ்கி போயிட்டானா... பயந்து ஓடினேன். பாருங்க பாருங்க என் பையன் நீச்சல் அடிக்கிறான். தபீர் தபீர் என்ற கால் கை அடித்தபடி நீச்சல் அடிக்கிறான். யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் எனக்கு நீச்சல் தெரியாது. இவனுக்க யார் சொல்லித்தந்தார்கள். இந்த நேருவா?

பையன் நீரில் மூழ்கி வெகு நேரம் மூச்சி பிடித்தான். வெளியே வந்த தலையை சிலுப்பிக்கொண்டு என்னை பார்த்து சிரித்தான். வாப்பா என்று என்னையும் அழைத்தான். எனக்கு நீச்சல் தெரியாது என்றேன். இங்கே ஆழம் இல்லை என்று முங்கி உள்ளே போய் கையளவுக்க எடுத்து கொண்டு வந்து மண் காண்பித்தான். நான் பயந்தேன். அவன் நின்றே காண்பித்தான். அவனுக்கு கழுத்தளவு இருந்தது. அவனுக்கு கழத்தளவு என்றால் எனக்கு இடுப்பளவு இருக்கும்.

நான் குளிக்கும் என்னத்தோடு போகவில்லை. கொஞ்சம் அருகில் நின்று பார்க்கலாம் என்று தான் போனேன். அங்கே போனால் பையன் உள்ளே இருந்து மாடு போட்ட சாணியை கைநிறைய அள்ளிக் கொண்டு வந்து என்னிடம் காண்பிக்கிறான். எனக்கு கோபம் வருமா வராதா? கருமம் கருமம். மாட்டு சாணிய உள்ள இருந்து எடத்துட்டு வரானேன்னு கைய வீசி அவனை இழுத்து மேலே வாடான்னு சொல்லப்போக அவன் துள்ளி ஏரியில் தப்பிக்கும் போது மோதிரம் விழுந்து போச்சிங்க ஏரியில....

அது என் மாமனார் வீட்டு சீருங்க. குடும்பம் ரெண்டுபட்டு போக இது போதாதா? இது வாழ்க்கைப் பிரச்சினைங்க... ‘டேய் அதை எடுடா எடுடா...’ என்ற அவனை கெஞ்சினேன். அவன் முங்கி முங்கி தேடினான். இல்லை. நேரும் முங்கி முங்கி தேடினான். அவனக்கும் கிடைக்கவில்லை. வாழ்க்கை பிரச்சினைங்க. அங்க எவ்வளவு தண்ணி என்று ஆழம் கேட்டுக்கொண்டு நானே ஜட்டியோடு நீரில் இறங்கினேன். கலங்கிய நீர் பரப்பு விரித்து செந்நிறத்தில் சிற்றலைகலோடு வெய்யிலில் மினுமினுத்துக் கொண்டிருந்தது. விழுந்த இடம் இதுதானே. கால்களால் தேடிப்பார்த்தேன் தட்டுப்படவில்லை. கைகலால் தேடி பார்த்தேன்; தட்டுப்படவில்லை.

மூச்சை பிடித்துக்கொண்டு தலைமுழுதும் உள்ளுக்கிழுத்து நீருக்கடியில் கைவிரித்து துளாவினேன். ஒரு கணம்தானே ஞானம் பிறக்க. நான் கேவலம் ஒரு பவுன் மோதிரத்தை நீருக்கடியில் தேடிக்கொண்டிருக்கிறேன். என் பையன் அவனின் சந்தோசத்தை இதனடியில் தேடியிருக்கிறான். அவனுக்கு இந்த சில்லிட்ட செந்நிற வண்டல் திரவத்தில் நான் கொடுக்காத கல்விகொடுக்காத யாரும் கொடுக்காத சந்தோசம் இருந்திருக்கிறது. தடவி தேடிக்கொண்டிருக்கும் போது நீருக்கடியில் கூடை அளவிற்கு மாடு போட்ட சாணிதான் தட்டுபட்டது. உள்ளே கண்ணெல்லாம் சாணி பட்டு எரிச்சல் எடுத்தது. அதற்குமேல் உள்ளே இருக்க முடியவில்லை. வெளியே வந்தேன்.

நேருவும் பையனும் சிரித்துக்கொண்டிருந்தார்கள். என்னசார் கண்ணு சிவந்து போச்சி. நீருக்குள்ள போணா கண் திறக்கக்கூடாது. சிரித்தார்கள். ‘செவந்தா சிவக்கட்டும் ஒரு பவுன் மோதிரம்யா... வெளிய நிக்காத தேடி எடுத்து குடு.’ என்று நேருவிடம் சண்டைக்கு போனேன். பையன் பின்பக்கமாக மறைத்து வைத்திருந்த மோதிரத்தை உள்ளங்கை விரித்து காண்பித்தான்.

எனக்கு எத்தனை சந்தோசமாகிவிட்டது. ஞானம் ஒரு கணத்தில் தான் கிடைக்கிறது. இந்த மோதிரம் பார்த்ததும் எனக்க வந்த சந்தோசத்தளவுதான் இவனுக்கு இந்த செந்நிற வண்டல்திரவத்தின் கீழ் கிடைத்திருக்க வேண்டும். நீருக்கு கீழ் நான் மோதிரம் தேடினேன். அவன் சொர்கம் தேடுகிறான்.’

என்னங்க என் கதைய பாதியிலையே விட்டுட்டு போனா எப்படிங்க. வேலை இருக்கா... சரி பரவாயில்லை விடுங்க. என் பையனை ஸ்கூல் பக்கம் எதாவது பாத்திங்கன்னா இன்னைக்க சாயிந்திரமாவது நேருகூட வண்டியில போயிட்டு வா உங்க அப்பா காத்துகிட்டு இருக்காருன்னு சொல்லுங்க.

படிப்பு படிப்புன்னு சும்மா புத்தகமும் கையுமா இருக்காங்க. ஐஞ்சாவதுதானேங்க படிக்கிறான். ஏதோ கலக்டருக்கு படிக்கிற மாதிரி அலட்டிக்கிறானே. ஒரே ஒரு மணிநேரம் மாட்டு வண்டியில சலங்கை ஒலியோட ஓடையில போயி சாயிந்திரமா வெய்யில் அடிக்கிற ஏரியில குளிச்சிட்டு வந்தா என்னங்க ஆயிடும்.

ஒரு மேனேஜர் போயி தணியா ஏரியில குளிக்க முடியுங்களா? அவனை வர சொல்லுங்களேன். அவன்கூட ஏரியில குளிச்சா யாரும் எதும் சொல்ல மாட்டாங்க பையனுக்கு வேடிக்கை காட்ட போறான்னு சொல்லுவாங்க. உடம்பு சொரி வந்துடுன்னு சொல்லறான். அதுக்குத்தான் எத்தனையோ கிரிம் சோப்பு எல்லாம் இருக்கே... டீச்சர் திட்டுவாங்க வீட்டு பாடம் இருக்கு எழுதணும் படிக்கணும்னு ரொம்பதான் படம் காமிக்கிறாங்க. நான் வீட்டு பாடம் எழுதித்தறேன் வரச்சொல்லுங்க.

தினமும் வரலைன்னாகூட பரவாயில்லை. ஞாயித்து கிழமையிலையாவது வரனுமில்லையா? டியூசன் போகணுன்னு சொல்லறான். நான் ஒத்தையில போனா ஊர் சிரிக்காதா? அவன் கிட்ட சொல்லுங்க ஒரே மணிநேரம். என்னமோ போங்க இந்த இயற்கையோட உளவியல புரிஞ்சிக்கவே முடியல. நேத்து வரையில போகாதன்னா போனான். இன்னைக்க வாடான்னா வரமாட்டேங்கறான். நீங்க சொல்லுங்களேன். இல்ல நீங்களாவது வாங்களேன். இல்ல உங்க பசங்களையாவது யாராவது வர சொல்லுங்களேன். அந்த பீநாறிப்பழம் தின்னு வாய் இனிக்க இனிக்க அந்த வண்டல் தண்ணியில மூழ்கினா அதுக்கு கீழே சொர்கம் இருக்குங்க. சொன்னா நம்புங்க. ஒண்ணு நீங்க வாங்க. இல்ல என் பையன வர சொல்லுங்க....

- எழில் வரதன்
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It