படுத்து புரளும் போது உடல்வலி அதிகமாக தெரிந்தது. கால் கெண்டைச் சதைகள், குதிகால்கள் நெருக்கிப் பிடித்தாற்ப்போல் வலித்தது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கடை மூடிவிட்டாலும் மறுநாளுக்காக மாவு அரைத்து காய் நறுக்கிவைத்து தயார் செய்ய வேண்டியிருக்கிறது. டேபிள், சேர்களை துடைத்து ஒதுக்கி வைக்க வேண்டியிருக்கிறது. ஓட்டல் கடை நடத்துவது மல்யுத்தம் செய்வதைவிட அதிக வலிதரும் விசயமாக இருந்தது அவனுக்கு.

அவன் பரவாயில்லை. அவன் மனைவி இன்னும் பாத்திரங்களை வரட், வரட் என்று தேய்த்துக் கொண்டிருக்கிறாள். விரல் ரேகைகள் பாதி தேய்ந்து போயிற்று - மீதி தேய்ந்து கொண்டிருக்கிறது. அவள் படுக்க பதினொன்று கூட ஆகலாம். இறக்கமுடியாத பாரம். அவன் சலித்துக் கொள்வான்.

பாத்திரங்களை தேய்த்து கவிழ்த்து வைத்து தூங்க வந்தாள். வழக்கமாக அவள் வரும்போது தூங்கியிருப்பான். இன்றைக்கு விழித்தபடி இருந்தான். விழித்தபடி என்றால் அரைக்கண் செருகி அரைக்கனா கண்டபடி இருந்தான் கால்வலி கொஞ்சம் கூடுதலாக தெரிந்தது.

முகத்தை கழுவி துடைத்தபடி வந்தவள் பக்கத்தில் தூங்கிய பையனின் போர்வையை சரிசெய்துவிட்டு ஓய்ந்து உஸ்சென்று உட்கார்ந்தாள்.

“இன்னும் தூங்கலையா நீங்க..?”

“தூக்கம் வரலை... குதிகால் வலி அதிகமா தெரியுது”

தைல பாட்டில் தேடி எடுத்துவரப் போனாள். கால்வலி என்றால் தைலம் பூசுகிறாள். தலைவலி, உடல்வலி எல்லாவற்றிற்கும் தன் பாத்திரம் தேய்த்து, காய் அறுத்து, சமைத்து, சப்ளைசெய்து ஓய்ந்துபோன குச்சு விரல்களால் நிவாரணம் தருகிறாள். ஒருநாள்கூட இவனிடம் கால் வலிப்பதாகவோ பாதம் நோவதாகவோ சொன்னதில்லை. குதிகால் பித்தவெடிப்பில் ரத்தம் வரும் போது நொண்டி நடந்தாலும் அப்படித்தான் சொல்ல மாட்டாள். சொல்லி என்ன ஆகப்போகிறது. அவரவர் வலியை அவரவர்தானே தாங்க வேண்டும்.

“எங்க... இங்கயா?” தைலம் பூசுகிறாள்.

House “உங்க தங்கச்சி லட்டர் போட்டிருந்தா பாக்கலையா?” என்றபடி கால் அமுக்கிவிட்டாள்.

“கல்லாவுல போட்டிருந்தேனே... பாக்கலையா?”

“என்ன போட்டிருக்கா?”

“நானும் படிக்கலையே...” எடுத்து வந்து ஒரு கையால் கால் அமுக்கியபடி இன்னொரு கையில் படித்தாள். “அண்ணா அண்ணி நீங்க ரெண்டு பேரும் சவுக்கியமா... குழந்தை ரமணி நல்லாயிருக்கானான்னு கேட்டு எழுதியிருக்கா...”

“ம்...”

“போனவாரம் பெரிய அண்ணனை போய் பாத்தாளாம்...”

“சரி...”

சிறிது நேரம் மவுனம். மனதுக்குள்ளே படிக்கிறாள்.

“வீட்ட பத்தி எழுதியிருக்கா...”

“என்னவாம்...?”

“அந்த வீட்டை விக்க வேணாம். எப்படியாவது கஷ்டப்பட்டு மீட்டுடுங்கன்னு எழுதியிருக்கா...”

“அவளுக்கு எங்க வலிக்கிது. ரெண்டு ரூபா காயிதத்தில கடனை அடைச்சிடுங்கன்னு எழுதிடுவா..., காசுக்கு மனுசன் கழுதையா சுமக்க வேண்டியிருக்கு...” அவனுக்கு எரிச்சலும் கோபமும் நெஞ்சைக் கரித்துக் கொண்டு வந்தது.

“இல்லே... அந்த எடம் நம்மை பெத்தவங்க வாழ்ந்த இடம். அவங்க உசிர் விட்ட இடம். நம்ம அப்பாவ பொதைச்ச குழி அடுத்தவங்களுக்கு சுடுகாடா தெரியலாம் நமக்கு அது கோயில்னு வருத்தப்பட்டு எழுதியிருக்கா...”

அவன் கண்கள் படக்கென தானாக திறந்துகொண்டது. அவளிடம் இருந்த கடிதம் பிடுங்கி அன்புள்ள அண்ணாவுக்கு இத்யாதிகளை தாண்டி அவள் புலம்பல்களை படிக்க ஆரம்பித்தான்.

“அண்ணா போன வாரம் பெரிய அண்ணனை வீட்டிற்கு போய் பார்த்தேன். அண்ணன்தான் சொன்னான், அந்த வீட்டை நீ ராமனுக்கே வித்திடப் போறேன்னு.

எனக்கு வருத்தமா போயிடுச்சி, ராமன் கிட்டே பாத்து பேசேன். உன் கடனை எப்படியாவது தந்துடறேன் அந்த வீட்ட விட்டுடுன்னு. கடனை நீ எப்பாடு பட்டாவது அடைச்சிடு. உன் கஷ்டமும் எனக்கு தெரியும். ஆனா வேற வழி இல்லே. அண்ணன் நல்ல வசதியாத்தான் இருக்கான். ஆனா, கடன் அதுமேல இருக்கிற வட்டி எல்லாத்தையும் கூட்டி கழிச்சி பாத்தா அந்த வீடு அவ்வளவு வெலை பொறாது. அதை கடன் குடுத்தவனுக்கே விட்டுட்டா நல்லது. நமக்கு லாபம்னு அண்ணன் சொல்லறான். லாப நஷ்டக் கணக்கு பாத்தா நம்மை வளத்தார் அப்பா. என்னால அழத்தான் முடிஞ்சது. என்ன கட்டி குடுத்த இந்த மகராசன் ஏழையா போயிட்டாரே.. சக்தியிருந்திருந்தா நான் கேக்காமலேயே அந்த மனுசன் எனக்கு வாங்கி தந்திருப்பார். நான் முடியாம தான் உன்கிட்டே சொல்லறேன்.

என்னோட மூணு பிள்ளைங்களும் அங்க அந்த வீட்டுல தான் பொறந்துச்சிங்க. நானு நீ அண்ணன் எல்லாரும் அங்கதான் பொறந்தோம். நம்ம அண்ணனோட பையன் நம்ம ரமணி குட்டி எல்லாம் அங்கேதான் பொறந்தாங்க. இத்தனைபேரை பெத்தெடுத்த அந்த வீட்டை கடனுக்கு மூழ்கவிடறது நல்லதா படலை எனக்கு.

பாட்டி, அம்மா, அப்பா எல்லாரும் நம்ம கண்ணு முன்னாடி அந்த வீட்டுலதானே உசிரைவிட்டாங்க. அதை விக்கிறேன்னு சொல்லறதை கேக்க முடியலை என்னால...

நான் கட்டிகிட்டு போயிட்ட பொண்ணுதான். வேற வீட்டு ஆளுதான். ஆனா ஏதோ போன ஜென்மத்திலேர்ந்து அந்த ஊட்டுலயே இருக்கிறமாதிரி ஒரு நெனைப்பு எனக்கு. இத்தனைக்கும் அது நம்ம அப்பாவோட பூர்வீக சொத்து - இல்ல அம்மாவுக்கு சீதனமா வந்தது.

உனக்கு தெரியாதா... நம்ம அம்மாவ பிரியப்பட்டு அப்பா கட்டிகிட்டாங்க அவங்க ரெண்டு பேரும் மனச பறிகொடுத்து ஒருத்தரை ஒருத்தர் உசிரா மதிச்சி ஒன்னா குடும்பம் நடத்தின எடம் அது. உனக்கு தெரியாதா... அப்பா ஏன் அம்மாவை வீட்டோட பின் கட்டிலே பொதைச்சாங்கன்னு. உனக்கு தெரியாதா ஏன் அப்பா தன்னையும் அதே குழிக்கு பக்கத்திலே பொதைக்க சொன்னாங்கன்னு.

நம்ம பெத்தவங்க வெதை விழுந்து வேரோடி ஒரு விருச்சமா இருந்திருக்கு அந்த வீட்டுல. அது வீடு இல்லேன்னா கோயில். அதை போயி... விக்க வேண்டாம்ணா..

அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ நமக்காக கஷ்டப்பட்டிருக்காங்க நல்ல வாழ்க்கை ஒண்ணும் வாழலை அவங்க. என்னென்னவோ கஷ்டத்துக்கு வித்து பொழைப்பை நடத்தின அப்பா எத்தனை கஷ்டம் வந்தாலும் வீட்டை மட்டும் ஏன் விக்கலேன்னு உனக்கு தெரியாதாண்னா?

என் கல்யாணத்துக்காக வெளைஞ்சிட்டு இருந்த ஒரு ஏக்கர் நஞ்சைய வித்தாரு அப்பா. அதுதான் அவரோட கடைசி சொத்து. இந்த வீட்ட வித்து அந்த நெலத்திலேயே சின்னதா ஒரு வீடு கட்டிக்கிடலான்னு அம்மா எத்தனையோ சொல்லிபார்த்தா. அப்பா கேக்கவேயில்ல. அம்மான்னா உசிர் அப்பாவுக்கு. அப்பாவை பொருத்தவரையில அது வீடோ இல்லே அம்மா கொண்டாந்த சீரோ இல்லே. அப்பாவை பொருத்தவரையில அது வீடு இல்ல, அம்மா.

“அவ நடமாடின, அவ புலங்கின இடத்தை இன்னொருத்தனுக்கு விக்கமாட்டேன்னு” அப்பா சொன்னாரே ஏன்னு தெரிஞ்சிக்கோண்ணா. அம்மாவோட ஆத்மா அதுலே உலாத்துதுன்னு நம்பினார் அவர். கடைசிகாலத்திலே அம்மா பேர் சொல்லிகிட்டே உசிரைவிட்ட அவர் தன்னையும் அம்மா பொதைச்ச குழி பக்கத்திலேயே பொதைக்க சொன்னாரே ஏன்...? அம்மான்னா அப்பாவுக்கு உசிர்.

நமக்கும் அப்படித்தாண்ணா... அது வீடு இல்லே, நம்ம பெத்த ஜீவன். உசிர், அப்பா ஞாபகமா என்கிட்டே ஒன்னுமே இல்லையே. அவங்க தந்த உசிரைதவிர.

என் சின்ன வயசிலே நான் அம்மாவோட தடுமாறி தள்ளாடி நடந்த அந்த எடம். மழை நாள்ல போர்வை போத்தி அடக்கமா உட்காந்து மழையை ஜன்னல் வழியாக வேடிக்கைபார்த்த அந்த பூஜையறை. அப்பா ஈசி சேரில் உட்கார்ந்து கதை சொல்ல நான் உட்கார்ந்து கேட்ட அந்த திண்ணை. நான் வயசுக்கு வந்து ஓலைக்கு பின்னாடி ஒழிஞ்சி பார்த்த புழக்கடை அறை. என் மொதல் புள்ளைய பெத்த எடம் இப்படி எல்லாம் மனசுலே என்னென்னவோ ஞாபகம் வருது. அதை நீ விக்க போறேன்னு கேள்விப்பட்டதும் என்னால அழாம இருக்க முடியல.

பெரிய அண்ணன் “பயித்தியக்காரி இதுக்கு அழுவாளா ஒருத்தி”னு திட்டறாரு. வேற எதுக்கு அழுவா ஒரு பயித்தியக்காரி. நீ வச்சிருந்தா எனக்கு பெத்தவங்க ஞாபகம் சிறுவயசு ஞாபகம் வந்தா அந்த வீட்டுலே வந்து படுத்து உருளுவேன். வேற ஒருத்தன் கிட்டே அது போயிட்டா என்ன எட்டிப்பாக்க விடுவானா சொல். வேற எதுக்கு அழுவா ஒரு பயித்தியக்காரி... சொல்லு,

அதை விக்காதேண்ணா, பெரிய அண்ணனுக்கு எல்லாமே காசுதான். காசு கணக்குதான். நெரைய படிச்சிட்டாரு. அவருக்கு சொல்லி புரியவக்கிற அளவுக்கு நான் படிக்கல... நீ விட்டுடாதே அந்த வீட்டை. நம்ம அப்பாவுக்காக அம்மாவுக்காக எனக்காக நம்ம புள்ளைங்களுக்காக அதை வாங்கு திருப்பி வாங்கு...
அன்புதங்கை,
ரத்னா

கடிதத்தை முடிக்கும் போது அவன் காலடியிலேயே தைலபாட்டிலைக்கூட மூடாமல் அவள் தூங்கிப் போயிருந்தாள்.

மறுநாள் கடையை மூடிவிட்டு கல்லாவில் உட்கார்ந்து காசு எண்ணும்போதுதான் இரவு தூங்காமல் இருந்த கண் நெருப்பாய் எரிந்தது. பகல் முழுதும் சோர்வாய் உட்கார்ந்து விட முடியாத அளவுக்கு வேலை. இன்றைக்காவது கொஞ்சம் சீக்கிரமாக தூங்க வேண்டும் என்று நினைத்தவனாக கல்லாவில் எண்ணினான்.

“ஏண்டி சாப்பாடு ஏதும் மீதி இருக்கா?”

“இல்லையே.. ஏன்?” பாத்திரம் தேய்த்தபடி அவள் கேட்டாள்.

“இல்லே... காசு வழக்கத்ததை விட கொறைச்சலா தெரியுதே சாப்பாடு கொறைச்சலா செஞ்சியா என்ன..?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல.. நல்லா பாருங்க. ஆமா அரிசிக்காரன் வந்தானே முந்நு}று குடுத்திங்களே எழுதி வச்சிங்களா...?”

“ஆமாம் மறந்து போனேன், சரியா இருக்கு”

பகலெல்லாம் தங்கை எழுதிய கடிதம் அவனை உறுத்திக்கொண்டே இருந்தது. சாம்பார் கேட்டவனுக்கு ரசமும், பொரியல் கேட்டவனுக்கு குடிக்க நீரும் தந்தபடி இருந்த அவனுக்கு அரிசிக்காரனுக்கு கொடுத்த முந்நூறு கூட மறந்து போயிருக்கிறது.

படுக்கும் போது அவள் கேட்டாள், “என்னைக்கு ரிஜீஸ்டர் ஆபீஸ் போகணும்,”

“வியாழக்கிழமை...”

“இன்னைக்கு சனிக்கிழமை, ஞாயிறு ஒன்னு. திங்கள் ரெண்டு செவ்வாய் மூணு...” அவள் விரல் விட்டு எண்ணினாள்.

“இன்னும் நாலு நாள் இருக்கு”

“ஏதும் காசு தரமாட்டாங்களா...” அவள் கேட்டதும் அவன் முறைத்தான்.

“தருவான். ஒரு லட்சரூபாய் ரொக்கமும் ஒரு காரும் தருவான். வாங்கிட்டு வந்திடறேன். வட்டியோட சேத்தா எங்கயோ நிக்குது கணக்கு. மீதி குடுடான்னு கழுத்திலே துண்டு போடாம உட்டுட்டான்னா அதே உத்தமா இருக்கும். மீதி காசு வேணுமாம் காசு.. போய் தூங்கு போ”

“கோபப்படாதிங்க ரத்னாவுக்கு என்ன எழுத? சொன்னா லெட்டர் போட்டுடுவேன். ஒரு வேளை உங்க அண்ணாகிட்டே பேசிப் பாக்கறிங்களா.. அந்த வீட்ட மீட்டுட முடியுமான்னு”

“நீயும் ஏன்டி பயித்தியக்காரி மாதிரி பேசற. கூடப் பொறந்தவளுக்கு புத்திகெட்டு லெட்டர் போட்டா நீயும் பக்க வாத்தியம் வாசிக்கிறயே” அவன் சத்தமாக பேச பக்கத்தில் அவன் மகன் சிணுங்கி புரண்டு படுத்தான். அவள் பயந்து இவனை பார்க்க இவன் குரலை சன்னமாக்கிக் கொண்டான்.

“நீயும் விக்காதே தெக்காதேன்னு சொல்லறியே இன்னைய தேதிக்கு அது மூழ்கிக்போன கப்பல். வெளிய எடுத்தா நஷ்டம்தான் மிஞ்சும். அதை இன்னைக்கு வித்தா நாப்பதாயிரம் போகும். வட்டியோட அது மேல வாங்கின கடன் எழுபதாயிரமா இருக்கு. நஷ்டமானாலும் பரவாயில்லை. எழுபதாயிரம் குடுத்தா அதை மீட்டுடலாம். அவ்வளவு காசுக்கு எங்கே போறது.

கோபம் அவன் மூளையை உஷ்ணமேற்றியது, “மூணு பிள்ளை பெத்த மனுசி மாதிரியா அவ பேசறா? அம்மாவாம் அப்பாவாம் பூர்வ ஜென்மத்து ஞாபகமாம். கடன்காரங்களுக்கு என்ன பூர்வ ஜென்ம ஞாபகம் வாழுது. ஓடா தேய்ஞ்சாத்தான் வயித்துப் பாட்டையே பாத்துக்க முடியும். இதிலே பூர்வ ஜென்ம ஞாபகம் எதுக்கு வருது...”

“சரி விடுங்க பொம்பளை புத்தி... பெத்தவங்க மேலே வச்ச பாசத்திலே எழுதிட்டா... விடுங்க...”

“இல்லடி அவளுக்கு நான் குருவி மாதிரி சேத்து வச்ச காசு உருத்தியிருக்கு. அதை தொலைச்சிடுன்னு எழுதியிருக்கா. நாப்பதாயிரம் போற வீட்ட எழுபதாயிரம் குடுத்து யார் வாங்குவான். அதுலே ஆத்தா அப்பன் ஆவியே அலைஞ்சாகூட”

ஆனால் வீடு என்றாலே அவனுக்கு அந்த வீடுதான் நினைவுக்கு வருகிறது. வேறு ஊர் வந்து ஓட்டல் வைத்து கஷ்டப்பட்டு வீட்டை கட்டி குடியிருந்தாலும் அவனுக்கு வீடு என்றால் அந்த வீடுதான் ஞாபகத்திற்கு வருகிறது.

சொல்லமுடியாத சின்ன வயசு ஞாபகங்கள், வீட்டோடே அலைந்து திரியும் அம்மா அப்பா நினைவுகள் ரகசிய அனுபவங்கள், மாறாத ரணங்கள் எல்லாம் நினைவிற்கு வருகிறது. ஆனால் அதை மீட்கும் தகுதி அவனுக்கு இல்லை. இரவெல்லாம் தூக்கம் வராமல் புரண்டான். அண்ணனை பார்க்க சென்றான்.

அண்ணன் வாத்தியார். படிப்பு அவனுக்கு சுலபமாய் வந்தது. முதல் பையன் என்றதால் அப்பாவுக்கும் படிக்க வைக்க சக்தி இருந்தது. இவனையும் படிக்க வைத்தார். இவன் மக்கு படிப்பு ஏறவில்லை. தங்கையாவது பனிரெண்டாவது படித்தாள். இவன் ஐந்தாவதைத் தாண்டவில்லை.

அண்ணன் முன் பார்த்ததற்கு இப்பொழுது கொஞ்சம் பருத்து செழுமையாய் இருந்தான். அண்ணியும் நிறம் மாறி வயிறு பருத்திருந்தாள். கர்பமாக இருக்க வேண்டும். கன்னத்தில் போசாக்கு கூடிப் போயிருந்தது. இது இரண்டாவது குழந்தை.

“வாடா... நல்லா இருக்கியா பையன் எப்படி இருக்கான்?” அண்ணன் அவனை விசாரித்தான். அவன் மனைவியைப் பற்றி விசாரிக்க வில்லை. விரோதமிருக்கிறது

அண்ணி காப்பி கொண்டுவந்து கொடுத்தாள். அண்ணன் கேட்டான், “என்ன விசயம் சொல்லு?” இப்படித்தான் எடுத்த உடன் ஆரம்பிப்பான். கேட்க சம்பிரதாயமாய் சங்கடமாய் இருக்கும்.

“இல்ல... அந்த வீட்டை வியாழக் கிழமை ரிஜீஸ்டர் பண்ணி குடுக்கணும்”

“வியாழக் கிழமையா...? லீவு இல்லையே... சரி விடு பர்மிசன் போட்டுட்டு வந்துடறேன்”

“ரத்னா இங்கே வந்திருந்தாளா?”

“ஆமாம்”

“இல்லே... வீட்ட விக்க வேணான்னு சொல்லறா... பெத்தவங்க ஞாபகமா இருக்கட்டும்னு சொல்லறா...”

“நல்லது வாங்கிக்க சொல்லு... கூடப் பொறந்தவதானே வாங்கட்டும்”

“இல்ல அவகிட்டே காசு கிடையாது, என்ன வாங்கச் சொல்லி லெட்டர் போட்டிருந்தா..”

“வாங்ககேன் ஒன்னும் தப்பில்ல...”

“என்கிட்ட அவ்வளவு காசு ஏது...?”

“அப்ப ரிஜீஸ்டர் பண்ணி குடுத்திடு..”

“எனக்கு என்ன தோணுதுன்னா என்கிட்ட ஒரு முப்பதாயிரம் இருக்கு நீ கொஞ்சம் காசு கொடுத்தா நம்ம பெத்தவங்க ஞாபகமா... நம்ம அப்பா அம்மாவுக்காகத்தான் இதை சொல்லறேன். உன் மேலே அப்பாவும் அம்மாவும் எவ்வளவு பாசமா... அப்பா எத்தனை கஷ்டப்பட்டு உன்னை படிக்க வச்சி... அதை விடு அந்த வீட்டுலதானே நீ நானெல்லாம் பொறந்து...” அவனுக்கு எதையுமே கோர்வையாக பேசவும் முடியவில்லை முடிக்கவும் முடியவில்லை,

அவன் பேசப்பேச இவனை அண்ணன் பார்த்த இளக்காரப் பார்வை - இவனை திக்கிப் பேச வைத்தது. இந்த அளவுக்கு அண்ணன் முன்னால் அவன் திக்கித் திணறியது இல்லை. ரெண்டு மடங்கு விலை கொடுத்து ஒரு பொருளை வாங்கச் சொல்லும் அபத்தம், அண்ணனின் இளக்காரப் பார்வை, அவன் மவுனம் எல்லாம் விளக்கை ஊதி அணைப்பது போல் இவன் பேச்சை அணைத்தது. மடத்தனமாக முடிவெடுத்து இவனிடம் கேட்க வந்துவிட்டோம் அபத்தம் என்று நினைத்துக் கொண்டான்.

“பாரு தம்பி.. எனக்கு அப்பா அம்மா மேல பாசம் இல்லாம இல்ல. இருக்கு. என்ன கஷ்டப்பட்டுதான் வளத்தாங்க இல்லன்னு சொல்லல. அதுக்காக முப்பது பொறாத எடத்தை எம்பது கொடுத்து எவன் வாங்குவான் எந்த முட்டாப்பய வாங்குவான் சொல்லு”

அண்ணன் சொல்வதும் நியாயம்தான்.

“அதுக்கு கொடுக்கிற எம்பதாயிரம் ரூபாய்க்கு இங்க ஒரு பிளாட் வாங்கி போட்டேன்னா ஒரே வருசத்திலே லட்சரூபாய் ஆகும். இன்னைக்கு ரியல்எஸ்டேட் நிலவரம் அப்படி. அந்த கிராமத்தில அதை போயி வாங்கினா இன்னும் இருபது வருசம் ஆனாலும் லட்சரூபாய் போகாது”

அண்ணன் சொல்வதும் நியாயம் தான்.

“நீ ஏன் பெத்தவங்களையும் ஊட்டையும் போட்டு குழுப்பிக்கிற. வீட்ட பொருத்தவரையில அது கட்டடம். செங்கல் கதவு ஜன்னல் அவ்வளவுதான். அதை உசிருள்ள பொருள் மாதிரி அப்பா அம்மா ஆத்தாவா எல்லாம் கற்பனை பண்ணி பாத்தா இப்படித்தான் முட்டாள் தனமா காசை நஷ்டப் படுத்திக்க சொல்லும்”

அண்ணன் சொல்வதும் நியாயம்தான்.

“உனக்கு அப்பா அம்மா மேலே பாசம் இருந்தா நல்லா பெரிய சைசுக்கு போட்டோ போட்டு ஹால்ல மாட்டி தினமும் பாத்துக்கோ. பூஜை போட்டுக்கோ. அதுக்காக அவங்க இருந்த இடமே வேணுமா என்ன. மனசில இருக்கு பாசமும் பந்தமும். வீட்ட எதுக்கு இழுக்கிற”

அண்ணன் சொல்வதும் நியாயம்தான்.

“பொறந்த எடம். நடந்த எடம். வளந்த எடம். எல்லாத்தையும் பொக்கிசமா பாதுகாத்து வைக்கவும், அரும் பொருட்காட்சியகமாக ஆக்கவும் நம்ம பெத்தவங்க என்ன தியாகிங்களா? அரசியல்வாதிங்களா? கவிஞர்களா? சுதந்திர போராட்ட வீரர்களா? சொல்லு..” அண்னன் மூச்சு வாங்காமல் திக்காமல் திணறாமல் மெதுவாய் கண்களை இடுக்கி, விடாமல் பேசினான்.

“என்னப் பொருத்தவரையில உசிரோட இருக்கிற வரையில பாசத்தை வைக்கணும். செத்துப்போனா ஞாபகத்திலே வச்சிக்கிடணும். அவ்வளவுதான். பாசத்துக்காக எல்லாத்தையும் விட்டு அந்த ஞாபகார்த்த வீட்ட கட்டிட்டு அழமுடியாது.”

இல்லை. இல்லை அண்ணன் சொல்வது நியாயமில்லை.

“உன்னால முடியுமா முடியாதான்னு கேட்டு போக வந்தேன். அப்பா தியாகியான்னு கேக்க வரலை...”

“அதான் முடியாதுன்னு சொல்லிட்டனே...”

“அவ்வளவுதான் உன் பாசம். சம்பாதிச்ச காசு உன் கண்ணை மறைக்குது. உன் பேச்சை பெத்தவங்க கேட்டிருந்தா என்ன வேதனை பட்டிருப்பாங்க”

“ஆமாம். அவங்க குழியில இருந்து எழுந்து வந்து நான் சொன்னதை கேட்டுட்டு ஐயோன்னு கன்னத்திலே கைய வச்சிக்க போறாங்க...”

“பெத்தவங்கள அசிங்கப்படுத்தாதே... ஆமா.”

“என்ன பேச்சிது பெத்தவங்க செத்தவங்கன்னு. நாய்கூடதான் நாலு குட்டி பெத்துக்கிது. அதுக்காக நாய்க்கு கோயில் கட்டி..” அண்ணன் பேசி முடிப்பதற்குள் ரசகுண்டாவாய் கொதித்த அவன் கோபத்தை அண்ணன் கன்னத்தில் காண்பிக்க கையை ஓங்கிப் போக நிறைமாத கர்பிணி வந்து தடுத்தாள்.

நடு இரவில் வீடு திரும்பினான். கதவைதிறந்த மனைவி என்னவாயிற்று என்று கேட்கவில்லை. முகம் துவண்டு வீடு திரும்பியவனை என்னவென்று கேட்டால் எரிந்து விழுவான். சோர்வாய் படுக்கையில் சாய்ந்தான்.

“சாப்டிங்களா?”

“ம்...” மனசு இன்னும் ரசமாய் கொதித்தபடிதான் இருந்தது. அவனை அடித்திருக்க வேண்டுமென்று நினைத்து மறுவினான்.

“இந்த ஊடு எவ்வளவுக்கு போகும்.” என்று அவளிடம் கேட்டான்.

“எதுக்கு கேக்கறிங்க...?”

“சொல்லு...”

“எதுத்த கடைய போன மாசம் லச்சத்து பத்தாயிரத்துக்கு வித்தாங்க. அந்த இடத்தை விட நமது சிறுசு”

“ஒரு எழுபதாயிரம் வருமா..?”

“வரும்.”

“போதும். வித்திடப் போறேன்.”

அவள் பேய் விழி விழித்தாள். நடு ராத்திரியில் தூக்கக் கலக்கத்தில் இருக்கும் இவளிடம் இதை சொல்லியிருக்கக் கூடாது என்று அவன் வருத்தப்பட்டுக் கொண்டான்.

“என்னமா பேசறான் தெரியுமா அவன். மயிறான். தியாகிங்க வீடுதான் ஒசத்தியா...? பெத்தவளை நாயின்றான். காசு திமிர். அப்பா எத்தனை கஷ்டப்பட்டாரு இவனுக்காக. எழுபதாயிரம் அவனுக்கு பீத்த காசு.. லட்ச லட்சமா வச்சிருக்கான்.

“விடமாட்டேன் அந்த வீட்ட. தியாகிங்க வீட்டதான் வச்சி காப்பத்தணுமா? பெத்தவங்களையும் கட்டடத்தையும் போட்டு கொழப்பிக்க கூடாதாம். வாத்தியார் புத்தி சொல்லறான். அது பொக்கிசம் இல்லையாம். எந்தையும் தாயும் மகிழ்ந்து குழாவி இருந்ததும் இந்நாடேன்னு இவன் போயி பாடம் நடத்த போறான். தாய்மண்னை காப்பாத்தணும்னு பாடம் நடத்துவான். தன் சொந்த தாய் மண்ணை அவ இருந்த வீட்ட காப்பாத்த துப்பில்லாதவன். இவன் வாத்தியார். இவன் கிட்டே பாடம் கத்துக்கிற புள்ளைங்க பாடு அதோ கதிதான்.”

“ஓட்டல் வைக்க முடியாதே அந்த கிராமத்திலே...” இவள் பயந்தபடிதான் கேட்டாள். என்றாலும் அவனுக்கு கோபம் வருகிறது.

“பிச்சை எடுத்து வந்து உனக்கு கஞ்சி ஊத்தறேன். போத்திகிட்டு தூங்கு..” பேசினால் இன்னும் கத்துவான் என்று படுக்கப் போனவளை தடுத்து நிறுத்தினான்.

“கொஞ்சம் கேளு. இந்த வீட்டை வித்தா எழுபது வருமா? வரட்டும். அந்த வீட்டை மீட்டுடலாம். இந்த கடைய வாங்கினவன் கிட்டையே வாடகைக்கு பேசி ஓட்டல் நடத்திக்கிடலாம் நீ சரின்னு சொல்லு.”

“சரி...”

அவனுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. புருசன்தான் எல்லாமே அவளுக்கு அவன் சொல்லே அவளுக்கு வேதம்.

மறுநாளே ராமனை பார்க்க பஸ் ஏறினான். ராமன் வீட்டில் இல்லை. இவன் வீட்டை பார்க்கத்தான் சென்றிருப்பதாக அவன் மனைவி சொன்னாள். வீட்டிற்கு சென்றான். பழைய காலத்து வீடு. தொட்டிவீடு நாட்டு ஓடு வேய்ந்து யானை போன்ற சுவர்கள் கொண்ட அந்த வீடு கால மழையில் கொஞ்சம் சிதிலமடைந்து வயசாகி இருந்தது.

வீட்டில் ராமனும் அந்த ஊர் மேஸ்திரியும் இருந்தார்கள். இவனைப் பார்த்ததும் ராமன் பலமாக வரவேற்றான். பால்ய சினேகிதன். கூடப் படித்தவன். ஐந்தாவதற்கு மேல் இவன் தாண்ட வில்லை. அவன் வசதியான அப்பாவின் தயவில் நிறைய படித்திருந்தான். படித்திருந்தும் சினேகிதனை அண்ணன் போல் அல்லாமல் தலைக்கணம் அற்று வரவேற்றான். பால்ய சிநேகிதன்.

இவன் அப்பாவிடம்தான் அண்ணணும் இவனுமாக சேர்ந்து அப்பா வைத்தியச் செலவிற்காக இந்த வீட்டு பத்திரம் வைத்து கடன் வாங்கினார்கள். பிறகு தங்கச்சியின் பிரசவத்திற்காக. அண்ணன் வேலைக்கு லஞ்சம் தருவதற்காக என்று தவனைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக கடன் அதிகமாகி அதன்மேல் வட்டி அதிகமாகி இவ்வளவு பெரிய வீடு சுவடு தெரியாமல் மூழ்கிப் போயிற்று.

நலம் விசாரித்தான். “கொஞ்சம் பொறு வீட்டுக்கு போகலாம்..” என்று சொன்னவன் மேஸ்திரியிடம் பேசினான்.

“நான் சொன்னது உங்களுக்கு புரியுதில்ல... இது கொஞ்சம் வெளிநாட்டு தினுசானா வீடு. இங்க மாதிரி எத்தனை நாளைக்கு சதுரம் சதுரமா வீட்டகட்டறது. காத்து வரணுன்னா கொஞ்சம் வளைவும் இருந்தாத்தான் நல்லா இருக்கும். வீட்ட முழுசா இடிச்சி அதுக்கு மேல பேஸ் போட நு}ல் புடிச்சா உங்களுக்கு புரியும். அப்பாவோட ஐடியா ஒத்துவராது நான் சொல்லறதை கேளுங்க”

நான் குறுக்கிட்டேன். “ராமா... வீட கட்டப் போறியா..?”

“ஆமாண்டா. இப்ப இருக்கற வீடு பழசா போச்சி அதான் இங்க புதுசா ஒரு வீடு கட்டி வந்திடலான்னு அப்பா பிரியப் படறாரு.”

“ராமா இந்த வீட்ட நானே வச்சிக்கிடலான்னு பாக்கறேன்.”

“நீயேவா... வெளையாடறையா? அப்பா வியாழக்கிழமை ரிஜீஸ்ட்ரேசனுக்கு ரெடியா இருக்காரு. அதுவும் இல்லாம அவ்வளவு காசுக்கு எங்கேடா போவே...”

“அந்த ஓட்டல் கடைய வித்து...”

“முட்டாள் மாதிரி பேசாத. அப்புறம் எங்க கடை வெப்பே. வட்டி முதல்னு எங்கியோ இருக்கேடா.. அப்படி என்னடா இந்த வீட்ட வாங்கணும்.”

“எங்க அப்பா அம்மா இருந்த வீடு.”

“இடிச்சி வீடுதானே கட்டறோம்.”

“இல்லே நீ இப்போ டாய்லெட் கட்டலாம்னு சொன்ன இடம் என் தங்கச்சி எம்புள்ளைங்க அவ புள்ளைங்க எல்லாம் பொறந்த எடம்.”

அவன் இவனை புதிராய் பார்த்தான். “தப்புதான். உன் முன்னாடியே ஊட்ட இடிக்கிறதை பத்தி பேசியிருக்கக் கூடாது. இப்ப என்ன டாய்லெட் பிரச்சினை அவ்வளவுதானே. டாய்லெட் பின்னாடி அங்க அந்த மூலையிலே வச்சிடலாம். இங்க அப்பா சொன்னமாதிரி பூசை அறை கட்டலாம் இப்ப சரியா...?”

“அங்கயா... அங்க துளசிமாடம் இருக்கு அம்மா தினம் பூசை போட்டது...”

“போச்சிடா... டாய்லெட் நடு ஊட்டுலே கட்டிடறேன். இப்ப சந்தோசமா?”

“நடு வீட்டுலதான் அப்பா உசுர விட்டாரு.”

“அப்ப நாங்க யாரும் டாய்லெட்டே போறதில்லே... அப்பா சொன்னமாதிரி சோளக்கொள்ளைக்கே போயிக்கறோம். இப்ப சரியா...?”

அவன் தலையில் தட்டிக் கொண்டு சொல்லவும் இவனுக்கு மனசு கனமாய் கனத்தது. வீடு கைவிட்டு போய் விடுமோ என்ற நிலையில் அந்த வீடு இவனுக்கு என்னென்னவோ ஞாபகங்களை தட்டி எழுப்பியது. அவன் அப்பா மார்புமேல் தூங்குகிறான். பாட்டி கதை சொல்லுகிறாள். அம்மா அவன் தங்கையை பெற்றுப் போடுகிறாள். அப்பா அவன் மடிமேல் இறந்து போகிறார். மனைவியோடு முதல் இரவில் சங்கமிக்கிறான்.

தங்கை பூப்பெய்தி ஓலைக்கு உள் இருக்கிறாள். அவன் குழந்தை அழுகிறது. அம்மா நடக்கும் ஓசை கேட்கிறது. அப்பா ஈஸிச் சேரின் கீரிச் கேட்கிறது. அண்ணன் இவன் தலையில் கொட்டுகிறான். பாட்டி இருமுகிறாள்.

அம்புஜம் அத்தை பெண்ணின் இடுப்பை யாருக்கும் தெரியாமல் கிள்ளிவிட்டு ஓடுகிறான். இவன் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் கன்னத்தை எச்சில்படுத்துகிறாள். அப்பாவும் அம்மாவும் பிறந்தநாளுக்கு ஆசிர்வாதம் செய்கிறார்கள்.

இவன் இங்கே இல்லை எங்கோஇருக்கிறான். கண்கள் இவன் வசம் இல்லை கடந்த ஏதோ ஒரு காலத்தின் ஈரக்கசிவில் சுரந்து வழிகிறது. கண்கள் ஈரம் சொட்டும் இமையோடு ஆதிகாலத்தின் பிம்பங்களை தேடி அயர்கிறது.

“டேய்... இதுக்கு ஏண்டா அழறே. கண்ணை தொடச்சிக்கோ... மொதல்ல கண்ணை தொடைச்சிக்கோ சொல்லறேன்...” ராமன் அவனை முதுகில் தட்டித்தருகிறான். பால்ய சினேகிதன்.

ராமன் அப்பா கண்ணாடியோடு பழைய நோட்டுப் புத்தகங்களில் இருந்து நிறைய எழுதி கூட்டி பெருக்கி உப்ப வைத்து மொத்தக் கணக்கு ஒருலட்சத்து ஐந்தாயிரம் ஆகிறது என்றார்.

“ஐய்யோ... முன்ன ஏழுபதாயிரம் ஆகும்னு சொன்னிங்களே...”

“நீ திருப்பி வாங்க போறதில்லேன்ன நெனைச்சி கணக்கு சுமாரா சொன்னேன். இப்ப துல்லியமா இருக்கு சரிபார்த்துக்கோ...” ராமனின் அப்பா நோட்டையும் கணக்கையும் இவனிடம் நீட்டினார்.

“லச்சத்து அஞ்சாயிரமா...?”

இவன் திகைப்பதைபார்த்து ராமன் “ஏண்டா இப்படி அவஸ்தை படறே. வேணுன்னா அந்த வீட்டை நான் இடிக்கலே அப்டியே இருக்கட்டும் இந்த வீட்ட லச்சரூபா குடுத்து வாங்க போறியா. வேணான்டா விட்டுடு உன் அண்ணன் வசதியானவர் அவரே வேணான்னு விட்டுட்டார். நீ போயி இதை...”

இவனுக்கு அண்ணன் பேரைக் கேட்டதும் உக்கிரம் அதிகமானது.

“இல்லே செட்டில் பண்ணிடறேன். கொஞ்சம் டைம் குடுடா ராமா.” அவன் கெஞ்சுவது ராமனை படுத்தியது. கும்பிட்ட அவன் கையை பிடித்துக் கொண்டான்.

இருக்கும் வீட்டை என்ன முக்கி வித்தும் அறுபதுக்கு மேல் போகவில்ல. வித்தாயிற்று. பிள்ளைக்கென போட்டு வைத்த முப்பதும் சேர்த்து தொண்ணுராயிரம். அதைக் கொண்டு போய் ராமனின் அப்பாவிடம் வைத்தான்

சந்தோசம் என்று வாங்கிய ராமனின் அப்பா பணத்தை எண்ணிப் பார்த்து “இன்னும் பதினைந்தாயிரம்..?” என்றார்.

“அப்புறமா தந்துடறேன்...” என்று ஆரம்பித்தவன். “இல்லைங்க இனிமேல் என்னால முடியாதுங்க. வீட்ட வித்தாச்சி புள்ளைக்காக சேத்துவச்ச காசும் கொடுத்தாச்சி இனிமேல் என்னால.” என்று அவன் தொண்டை அடைத்து செருமிக்கொண்டான்.

பக்கத்தில் நின்றிருந்த ராமன் “அப்பா போதும்பா பத்திரத்தை குடுத்திடுங்கோ...” என்றான்.

அப்பா முனகிக் கொண்டே பத்திரத்தை கொடுத்தார். வீடு அவன் வீடாயிற்று.

அவன், அவன் மனைவி, அவன் தங்கை, தங்கை பிள்ளைகள், அவள் புருசன் எல்லாம் வந்து அந்த வீட்டை சுத்தம் செய்தார்கள். அப்பா ஈசிச்சேரில் அவன் உட்கார்ந்து பெருமூச்சி விட்டான். நாற்பதாயிரம் வீட்டை தொன்னுராயிரம் கொடுத்து வாங்கிய இவன் முட்டாள தனத்தில் ஊரே சிரித்தது. ஓட்டல் வைத்து ஏமாற்றிய காசை ஏமாந்துவிட்டதாக பேசி சிரித்தார்கள்.

“எதுக்கு ஐம்பதாயிரம் அதிகம் போட்டு வாங்கினே இங்க புதயல் ஏதும் இருக்கா..?” என்று அப்பாவின் சொந்தக்காரக் கிழவன் ஒருவன் கண் இடுக்கிக் கேட்டான். போகும் போது “அட பயித்தியமே...” என்று முனகியபடி போனான்.

அவனை பயித்தியம் போல் தான் எல்லோரும் பார்த்தார்கள். அவர்கள் பார்ப்பதும் நியாயம்தான். சொல்வதும் உத்தம வார்த்தைதான். இருக்கிற வீட்டை விற்று சேமிப்பை எடுத்து இதை வாங்க வேண்டுமா அவன். ஏதோ மடத்தனம் செய்துவிட்டது போல அவனுக்கு உள்ளுக்குள் உறுத்திற்று.

மனைவியை அவன் கூப்பிட்டான். “ஏண்டி எல்லாத்துக்கும் மாடு மாதிரி தலைய ஆட்டினியே நீயாவது வேணாங்க இந்த வீடு விட்டுடுங்கன்னு சொல்லக்கூடாதா?

“ஏன் சொல்லணும்...?”

“நாம இருந்த வீடு போச்சி. சேத்து வச்ச காசு போச்சி நமக்கு என்ன ஆச்சின்னு தெரியுதா? இப்படி நான் செஞ்சது நம்ம எந்த நெலமையிலே கொண்டு போய் விடும்னு உனக்கு புரியமாட்டேங்குதா? என்ன பாத்தா பயித்தியக்காரன் மாதிரி உனக்கு தெரியலையா? இந்த மாதிரி பயித்தியம் எங்க உன்னையும் உன் புள்ளையையும் கரையேத்தப் போகுதுன்னு பயமா இல்லே உனக்கு.”

“பயமா இல்ல. அப்பா அம்மா மேலே இத்தனை உசிரா இருக்கிற நீங்க எங்கமேலையும் அத்தனை உசிராத்தான் இருப்பிங்க. அவங்க இருந்த வீட்டையே இத்தனை கஷ்டப்பட்டு வாங்கின நீங்க என்னையும் பிள்ளையையும் எப்பாடு பட்டாவது காப்பாத்துவிங்க

“நீ என்ன புரிஞ்சிகிட்டா சரிடி. எவன் என்ன பேசிகிட்டா என்ன. எத்தனை சோதனை வந்தாலும் பெத்தவங்க வாழ்ந்த பூமிய அவங்க ஞாபகமா இருக்கிற ஒரே ஒரு பொருளை எப்படிடி ஒரு மனுசன் விட்டுத்தருவான். நீ என்ன புரிஞ்சிகிட்டா சரிடி...”

இதே புருசன் ஓட்டல் கடை வைக்க வேண்டும் உன் கழுத்தில் இருக்கும் ஏழு சவரன் அட்டிகையையும் கொடு என்று கேட்ட போது அம்மா போட்டது தரமாட்டேன் என்று அடம் பிடித்த போது, என்ன சொன்னான், கஷ்டத்துக்கு உதவட்டுமேன்னு தான் கழுத்திலே நகை போட்டுகிறது. அம்மா பேரை சொல்லிட்டு இருக்கிறதுக்கு இல்லை என்றானே.

கல்யாணம் ஆகி புருசன் வீட்டிற்கு வரும் போது இவள் கழுத்தில் அந்த அட்டிகையை மாட்டி விட்டு அம்மா “இது மூனு தலை முறை சொத்து பத்தரம்” என்றாள்.

“அம்மா ஞாபகமா இது மட்டும் தான் இருக்கு” என்று இவள் சொன்ன போது அவன் “ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்க...” என்று ஏதோ ஒரு சித்தர் பாடலை முழுசாக பாடி “கஷ்டத்துக்கு ஒதவத்தானே நகையும் நட்டும்” என்று நயமாய் பேசினான்.

தரமாட்டேன் என்று அடம்பிடிக்க கன்னம் வீங்க அரைவிட்டு சண்டையிட்டு தகாத வார்த்தையில் பேசி பின் அடகு வைத்து வித்து அம்மா அட்டிகையோடு அம்மா நினைப்பும் போச்சு.

இதையெல்லாம் நித்திரை கெட்டு யோசித்திருக்க அவளுக்கு நேரமில்லை. அவள் மாடாய் உழைப்பவள். தூங்கிப் போனாள். கனவில்கூட அந்த ஆரம் சிவப்பும் பச்சையுமான கல் ஜொலிக்க வந்தது. அம்மா வந்து அதை தேய்த்து புதிதாக்கி மீண்டும் கழுத்தில் இவளுக்கு அணிவித்தாள். மீண்டும் அவள் புருசன் ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்க என்று சித்தர் பாடல் பாடினான். இவள் அட்டிகைக்கு மட்டும் தான் ஓடும் செம்பொன்னும் சித்தர் பாடல் இருக்கிறதா இல்லை அவன் அப்பாவின் வீட்டிற்கும் அந்த பாடல் பொருந்துமா என்று தர்க்கம் செய்யத் தெரியாது இவளுக்கு. தன் தேய்ந்த கைகளில் கணவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள் இரவுத் தூக்கத்தில் இவள்.


- எழில் வரதன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It