“சங்கர் என்னப்பா… பத்து மணிக்கே கடையை காலி பண்றே…”

“இல்லனா... நாளைக்கு நியூ இயர்... அதுனால சீக்கிரம் வீட்டுக்குப் போலாமேன்னு…”

சங்கர் தன் சிறுவயதில் படிப்பைத் தவற விட்டதாலும், எதிலும் நாட்டம் இல்லாத காரணத்தாலும் தன் நண்பர்களின் யோசனையில் பேல்பூரி கடை வைத்தான். அவனுக்கு இந்த வாழ்க்கை பிடித்துப் போக, உத்திரமேரூரில் இருக்கும் தன் பெற்றோரை விட்டு விட்டு தர்மபுரியில் உள்ள காளிபாளையத்தில் தன் பாட்டி லக்ஷ்மியம்மாளுடன் வசித்து வந்தான்.

தன் நான்கு சக்கர தள்ளு வண்டியைத் தள்ள ஆரம்பித்தான் சங்கர். பிரதான சாலையிலிருந்து அவன் வீட்டுக்கு நான்கு கிலோமீட்டர் தொலைவு இருந்தது. வானத்தில் நட்சத்திரங்களை கரு மேகம் விழுங்கிக் கொண்டு இருந்தது. இரவு வேறுகோணத்தில் இருளை கக்கிக் கொண்டிருந்தது.

“மழை வரதுக்குள்ள வீட்டுக்குப் போயிடனும்…பாட்டிக்கு ஒரு போன் பண்ணிப் பாப்போம்…”

லக்ஷ்மியம்மாளுக்கு கடந்த வருடம் தன் சம்பாத்தியத்தில் ஒரு வெள்ளை நிற அலைபேசி வாங்கிக் கொடுத்திருந்தான் சங்கர். அதை எப்படி உபயோகிப்பது என்று தெரிந்து கொள்ள முழுதாக மூன்று மாதம் எடுத்துக் கொண்டாள் லக்ஷ்மியம்மாள்.

"என்ன கெழவி போன் எடுக்க மாட்டேங்குது...”

தொலைபேசியின் மறுமுனையில் வாடிக்கையாக ஒரு பெண்மணி ஆங்கிலத்திலும், தமிழிலும் ஒரு வாசகத்தை ஒப்பித்துக் கொண்டு இருந்தார்.

“எங்க போயிருக்கும்…. இன்னைக்கு பக்கத்து வீட்டுலே எல்லோரும் சர்ச்சுக்குப் போயிருப்பாங்க… அங்க கெழவி போகாது. அப்போ எங்க…?”

ஒருவன் வாழ்க்கையில் தனியாக ஒரே பாதையில் கடப்பதென்பது ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சாபக்கேடான ஒன்று. அதைத் தான் சங்கர் கடந்த ஐந்து வருட காலமாக செய்து வந்தான். எந்த நண்பர்களும் கிடையாது, அவ்வப்போது பெற்றோர்களிடம் இருந்து வரும் அலைபேசி அழைப்பு, தன் உலகமே லக்ஷ்மியம்மாள் தான் என்று இருந்தான். அவனுடைய உலகில் அவனுடைய ஒரே அரவணைப்பு லக்ஷ்மியம்மாள் தான். லக்ஷ்மியம்மாளும் அவனைத் தன் மகன் போல பார்த்து வந்தாள்.

இவன் கதையில் இளகிய வானம் துளிகளை சொட்ட ஆரம்பித்தது.

சங்கர் தன் நடையை சற்று அதிகப்படுத்தினான்.

திரும்பவும் தன் பாட்டியின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான், மறுமுனையில் சீமாட்டிகள் தான் குரல் கொடுத்தார்கள்.

மணி இரவு பதினொன்றை எட்டி இருந்தது.

வீடு சற்று தூரத்தில் தெரிந்தவுடன்..

“என்ன லைட் எரிஞ்சுட்டு இருக்கு, கெழவி இன்னும் தூங்காமையா இருக்கு…” என்று பொலம்பியபடியே தன் வேகத்தை சற்று கூட்டிக் கொண்டான்.

அந்த வீடு இரண்டே அறையைக் கொண்டது. அதன் கூரை பழைய ஓடுகளால் அடுக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டைச் சுற்றி இருபதடி தூரத்தில் மற்ற வீடுகள் கட்டப்பட்டிருந்தன. அரசாங்கம், ரயில் தண்டபாலம் கட்டுவதற்காக இடித்த வீட்டிற்கு இழப்பீடாக கொடுக்கப்பட்ட வீடுகள்.

“என்ன கதவு திறந்தபடியே இருக்கு…”

“பாட்டி... பாட்டி….”

எந்த ஒரு பதிலும் இல்லாமல் நாற்காலியில் அமர்ந்து படியே இருந்தாள் பாட்டி.

சங்கர் அருகில் நெருங்கினான். கண்கள் வெறித்தபடி வெற்றிலைப் பாக்கின் ரசம் லக்ஷ்மியம்மாளின் வாய் வழியே ஒழுகிக் கொண்டிருந்தது. கண்கள் வெறித்தபடியே சுவர்களைப் பார்த்தபடி இருந்தது.

சங்கருக்கு ஒரு நிமிடம் உடல் படபடக்க ஆரம்பித்தது. உடல் வியர்த்து, கை தன் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருந்தது. தொடை தசைகளில் மின்சாரம் பாயத் தொடங்கியது.

“அவ்வளவுதானா இனி நான் தனியா…. ? இனிமேல் யார் என்னைப் பார்த்துக்குவா…? நான் யார் மடியில தூங்குவேன்?”

“எனக்கு யார் பேய்க்கதை சொல்லுவா...?”

“இனி யார் எனக்கு சமைப்பா….?”

கண்களில் நீர் தேங்க ஆரம்பித்தது. இந்த உலகமே இருண்டது. இதயம் வரம்பு மீறித் துடித்தது. கண்ணீர் உடைந்து வெளியேறியது. 

வெளியில் மழை அதிகமாகியது..

லக்ஷ்மியம்மாளை நெருங்கியவன் தரையில் மண்டியிட்டு, மெதுவாக தன் தலையை லக்ஷ்மியம்மாளின் மடியில் கிடத்தினான்.

“டேய் சங்கு…….. எப்போ வந்த....” என்ற குரலைக் கேட்டு நிமிர்ந்தான்.

திடீரென மின்சாரம் தடைபட்டது

“பாட்டி... நீ…?”

“என்னடா... நான் செத்துட்டேன்னு நினைச்சியா? உனக்கொரு கல்யாணம் பண்ணி வைக்காம இந்தக் கெழவி கட்ட எப்படி வேகும்…?”

இருட்டில் தடுமாறியபடியே மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினாள் லக்ஷ்மியம்மாள்.

திகைத்துப் போன சங்கர் விளக்கின் வெளிச்சத்தில் பாட்டியின் சிவப்புக் கறை படிந்த பற்களில் தெறித்த சிரிப்பில் மீண்டும் உறைந்து போனான்.

“நல்ல சாப்புடுடா……. உனக்குப் பிடிக்கும்னு கோழிவாங்கி வறுவல் பண்ணி வைச்சேன்…. ஏன்னா நாளைக்கு வருஷம் பொறக்குது. கவுச்சி சாப்பிடக் கூடாது பாரு … அதான்“ என்ற லக்ஷ்மியம்மாளிடம்,

“ஆமா. ஏன் நீ போன் எடுக்குல… அப்பறம் …”

“டேய் சங்கு….. இருடா… நீ கூப்பிடறதுக்கு முன்னாடி என் மவன், அதான் உன் அப்பன் கூப்பிட்டிருந்தான். நாளைக்கு சென்னைல நடக்கயிருக்கிற உன் அத்த புள்ள கல்யாணத்திற்குப் போறாங்களாம். கட்டாயமா உன்ன… வர வேண்டான்னு சொன்னான் கேடுகேட்டவன்… அதுக்கப்பறம் தான் உன்ன நெனைச்சு மெய்மறந்து உட்கார்ந்திருந்தேன்.… அதுல நீ கூப்பிட்டது கூட தெரியல…”

“என்னோமோ பாட்டி நான் பயந்தே போய்ட்டேன் …”

“நல்ல வேல அடக்கம் பண்ணாம இருந்தையே……”

மழை சற்று ஒய்வு எடுத்திருந்தது. காற்று சற்று குளிர்ந்து வீட்டின் கூரைகளில் தஞ்சம் புகுந்தது.

பாட்டியின் மடியில் படுத்தவாறு பாட்டியிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தான் சங்கர். வழக்கம் போல பேய்க் கதை தான் சொல்லிக் கொண்டிருந்தாள் பாட்டி.

பேய்க்கதையை கேட்டு தூங்கிப் போனது இரவு……

“டேய் ... சங்கர்… ஏன்டா இப்படி தூங்கற....?”

கண்களை மிகவும் சிரமத்தோடு திறந்தான் சங்கர்.

புத்தாண்டில் அவன் வீட்டை நிறைத்திருந்தது அந்தக் கூட்டம்.

“ஏன்டா சங்கரு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. ஒரு எட்டு எங்களுக்கு சொல்லுணும்னு தோணலையா…” என்றான் கூட்டத்தில் ஒருவன்.

அந்தல் கூட்டத்தை விலக்கிப் பார்த்தான் சங்கர்.

பாட்டி நாற்காலியில் அமர்ந்தபடியே இருந்தாள். அவள் கழுத்தில் மாலைகள் தொங்கியிருந்தன. சுற்றியும் ஒப்பாரிப் பாடல்கள்.

நாற்காலியில் அமர்ந்தபடியே இருந்த பாட்டியின் உதட்டோரம் வெற்றிலைச் சாறின் கறை உறைந்தபடி இருந்தது.

“நேத்து நைட்டு செத்த பிணத்தோட எப்படி இந்தப் பையன் இருந்தான்…?” என்று முணுமுணுத்தது அந்தக் கூட்டம். 

எது நிஜம் என்று, ன்னை மீட்டெடுக்க முடியாமல் தவித்திருந்தான் சங்கர்.

“அவங்க சொந்தம் யாரும் வரமாதிரி தெரியல, பேசாம இந்தக் கிழவியை அடக்கம் பண்ணிரலாம்…”

ஏதோ காதுகளில் விழுந்தபடியே அழுகையும் இல்லாமல் தன் மொழி மறந்தவனாய் நடந்த சடங்குகளில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை என்றவாறு மயானத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருந்தான் சங்கர்.

லக்ஷ்மியம்மாள் புதைக்கப்பட்டாள். அவள் மரிப்பதற்கு முன் அவள் கையில் அலைபேசி இருந்ததால் அதையும் சேர்த்துப் புதைத்தார்கள்.

அந்தப் புத்தாண்டு இரவில் தனிமையுடன் அமர்ந்திருந்தான் சங்கர்.

நேற்று ஓய்ந்த மழை இன்று அவன் கண்களில் பெருமழையானது.

அப்போது அவன் அலைபேசி சிணுங்கியது………….

நேரம் தாழ்த்தி… காலத்தை வென்றவனாய் அனைத்தையும் கடந்தவனாய்... அலைபேசியை எடுத்தான்.

“டேய் சங்கு… பாட்டி பேசறேன்டா...” என்றது அலைபேசி

- சன்மது

Pin It