“எல்லாரும் டீ எடுத்துக்கோங்க …………”   

“அப்னே சாயா லே லோ ……..  பிர் காம் கற்..” (டீ குடித்துவிட்டு வேலையைப் பாருங்கள்)

நாற்பதைக் கடந்திருந்தாலும் உதடுகளில் பூசிய சாயமும், கட்டியிருக்கும் புடவையின் தோரணையும் ஆஷாவின் குரலோடு சேர்த்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

பூஜாவின் பார்வையில் பயம் கனத்திருந்தது. ஏதோ பறிகொடுத்தவள் போல தேனீர்க் கோப்பையை எடுத்தாள்.

அது மசாலா பொருட்களை பொட்டலம் கட்டும் ‘ஆர்.கே. குடோன்'.

மும்பையில் உள்ள ‘டிகுஜினிவாடி’ என்ற இடத்தை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. இங்கு பத்து பேர் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்பட்டு இருந்தார்கள். அதில் ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

“என்ன பூஜா, சேர்ந்த மொதல் நாளே இப்படி பயந்தா எப்படி? சீக்கிரம் டீயைக் குடிச்சிட்டு வேலையப் பாரு” என்றாள் தன் மெல்லிய குரலில் பூமிகா.

அப்பாவை சிறுவயதில் இழந்த பூஜா, அம்மாவின் நிழலில் பயணப்பட்டிருந்தாள். ஆனால் இப்பொது ஒரு குடை தேவைப்பட்டது. வேலை தேடி அலைந்தும், கிடைத்த வேலையில் போதிய ஊதியம் கிடைக்காததாலும், அவள் தோழி ஒருவருடைய யோசனையில் மும்பை ரயில் ஏறியிருக்கிறாள். ரயிலில் ஆஷாவின் நட்பால் இங்கு பணியமர்த்தப்படுகிறாள்.

 இந்தக் கிடங்கு சுமார் ஐம்பதாயிரம் சதுரடியைக் கொண்டதாக அமைந்திருந்தது. நகரத்தை விட்டு சற்று தொலைவில் இருந்தது. இந்தக் கிடங்கு ஆஷா என்ற ஒற்றை நபரால் இயங்கியது.

மதியம் ஆகியிருந்த வேளையில் அனைவரும் உணவு அருந்தப் புறப்பட்டார்கள்.

“பூமிகா எனக்கு என்னமோ இங்க வேலை செய்ய பயமா இருக்கு. தெரியாம இங்க வந்திட்டமோன்னு தோணுது ……”

“ம்ம்… நான் இங்க வந்து ரெண்டு வருஷம் ஆகுது. இன்னைக்கு வரைக்கும் என் பணம் மட்டும் தான் ஊருக்குப் போகுது. என்னை இங்கிருந்து அனுப்ப மாட்டேன்னு இந்த ஆஷா பேய் முடிவா இருக்கு. உன்னையும் அதே மாதிரி தான் விடமாட்டாங்க….. வரதுக்கு முன்னாடி யோசிக்கணும் …..”

தட்டில் போடப்பட்ட இரண்டு சப்பாத்தியை தன் விரல்களால் கிழித்தபடி யோசித்திருந்தாள் பூஜா.

கிடங்கின் பக்கவாட்டில் கட்டப்பட்ட தங்கும் அறைகளில் தான் அனைவரும் தங்க வேண்டும். இவை அனைத்தும் ஆஷாவின் கட்டுப்பாட்டில் இருந்தது.

இங்கிருந்து வெளியில் ஒரு துரும்பு கூட ஆஷாவின் அனுமதியில்லாமல் நகர முடியாது.

தன் படுக்கையில் தூக்கத்தைத் தொலைத்தவளாய் புரண்டு கொண்டிருந்தாள் பூஜா.

“நான் எப்படியாவது அந்த ஆஷா கிட்ட சொல்லி ஊருக்குக் கிளம்பனும்..." என்று நாளை சொல்லவிருப்பதை ஒத்திகை பார்த்திருந்தாள். இரவு வேடிக்கை பார்த்திருந்தது.

“என்ன….. க்யா பாத் கரேகா… என்னை என்ன முட்டாள் நினைச்சய்ய …”

“காலைல என் மூட ஸ்பாயில் பண்ணாத ……………”

“ஜாவோ அவுர் காம் கரோ………” ( போய் வேலைய பார் )

என்று வடமொழியில் வெடித்துப் பொங்கினாள் ஆஷா.

வாய் திறக்க முடியாமல் மௌனத்தோட வலியையும் சுமந்து கண்கள் கண்ணீரில் பேசியது.

“நீயேன் அவகிட்ட போய் பேசறே… அவ மனிஷியே கிடையாது… நம்மள மாதிரி பொண்ணுங்க அடிமையாவே வாழ்ந்து அடிமையாவே சாகனும்”

பூமிகாவின் வார்த்தைகளைத் தாண்டியும் அவள் எண்ணம் தன் அம்மாவைச் சுற்றி வந்தது. தான் மாதாமாதம் பணம் அனுப்புவதாக சொன்ன வாசகம் தன் காதை மொய்த்திருந்தது.

அன்று மதியம் உணவிற்குச் செல்லாமல் அங்கு மலையாய் குவிக்கப்பட்ட மசாலாவை உற்றுப் பார்த்தவளாய் அமர்ந்திருந்தாள் பூஜா.

“கியா கரேகா…………..” என்று முதலாளித்துவ தோரணையில் கடிந்து கொண்டாள் ஆஷா.

அப்போதும் அதே போல அமர்ந்திருந்த பூஜா கன்னத்தில் பளீர் என்று ஒரு அறை விழுந்தது.

திரும்பிப் பார்க்கையில், அங்கிருந்தவர்கள் அங்கு எதுவும் நடக்காதது போல அவரவர் பணியில் தீர்க்கமாக இருந்தனர்.

மசாலா வாசனையும், பல வருடமாக வெள்ளை அடிக்காத சுவர்களும், ஆங்காங்கே தரையில் இருந்த விரிசல்களும் தான் ஒரு மயான காட்டில் உருவம் அற்ற விரல்களுக்கு இடையில் நசுங்குவது போல உணர்ந்தாள் பூஜா.

பொழுது சாய்ந்திருந்தது

“இங்கிருக்கறவங்களுக்கு கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா… ஏன் மனிதர்கள் இப்படி பணத்திற்காக ஒரு இயந்திரம் போல நடிக்கிறார்கள்...? இந்த உலகமே எனக்கு வேண்டாம். நான் எங்கம்மாவோட, கிடைக்கற வேலையை செஞ்சு பொழைச்சுகிறேன்... வா பூமிகா. நாமோ இங்கிருந்து கிளம்பிடலாம்” என்று திரும்புகையில் பக்கத்தில் பூமிகாவைக் காணவில்லை.

பக்கத்துக்கு அறைக்கு சென்றிருப்பாள். முதலில் நாம் தப்பித்துக் கொண்டு இப்படி ஒரு அடிமைத்தனமான உலகம் இயங்குவதை வெளி உலகத்துக்கு சொல்லி மற்றவர்களைக் காப்பாற்றுவோம் என்று நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு அறையை விட்டு நகர்ந்தாள் பூஜா.

அந்தக் கிடங்கின் பின்புறத்தில் ஒரு பெரிய மதில் சுவர் இருந்தது, அதுவும் ஆஷாவின் அறையைக் கடந்து தான் சுவரை அடைய முடியும்.

தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அறையைக் கடக்க முயற்சித்தாள்.

அப்போது அங்கு இரண்டு பெரிய நாய்கள் ஒரு இரையைக் கண்டதுபோல உமிழ் நீர் வடிய கூர்ப் பற்கள் தெறித்தவாறு நின்றிருந்தன.

ஆஷாவின் பக்கபலத்தைப் புரிந்து கொண்டவள் தன் அடியைப் பின்னெடுத்து வைத்தாள்.

அவள் அறையின் ஒதுக்குப்புறத்தில் சாக்கடைக் கால்வாய் ஒன்று இரும்பு கம்பிகளால் மூடப்பட்டு இருப்பதைப் பார்த்தாள். அந்த கால்வாய் கிடங்கின் வெளிப்புறத்தில் முடிவதாய் அமைந்து இருந்தது.

இருட்டு அந்த இடத்தில் விகாரமாக அப்பி இருந்தது.

இதை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அந்த சாக்கடைக் கம்பிகளை திறந்து கால்வாய்க்குள் நுழைந்தாள். 

நாற்றம் குமட்டிக் கொண்டு வந்தது. கண்களை இறுக மூடி, மூச்சை அடக்கிக் கொண்டு அந்த சிறிய கால்வாய்க்குள் தன்னை குறுக்கிக் கொண்டு ஒரு பூனையைப் போல அடி எடுத்து வைத்தாள்.

சிறிது போராட்டத்திற்குப் பிறகு ஒரு வெளியை அடைந்தாள். அங்கு இருட்டு கொஞ்சம் விலகி இருந்ததால் நிமர்ந்து நடக்க ஆரம்பித்தாள். சற்று தூரம் பயணிக்கையில் பேரதிர்ச்சியில் உறைகிறாள்.

அவள் கால்களுக்கடியில் மனித எலும்புகள் உடைந்தும், உடையாமலும் அந்தப் புல்வெளியில் சிதறியிருந்தன.

அங்கு தன் ஓட்டத்தைப் பிடிக்கிறாள்.

“என்னமா தமிழா?” என்றது ரயிலில் ஒரு குரல்.

“ஆமாங்க……” என்று ஓர் இறுக்கமான முகத்தோடு பதில் கொடுத்தாள்.

"என்ன இங்க மும்பைல...”

“டிகுஜினிவாடில ஆர்.கே. குடோன்ல ஒரு வேலைக்கு வந்தேன்…”

“ஆர்.கே. குடோனா ….? அது பத்து வருஷத்திற்கு முன்னாடியே ஒரு மின்சார விபத்துல எரிஞ்சு போச்சே. அதுல வேல செஞ்ச பத்து பேரும் இறந்துட்டாங்க. ஆனா அங்கிருந்த ஒரு ஆள் மட்டும் பொழச்சுட்டாங்கனு கேள்விப்பட்டேன்.. ஆனா அவங்களும் இப்போ மனநலம் பாதிக்கப் பட்டுட்டாங்கனும் வெளில பேசிக்கிறாங்களே..” என்றதும் பேயறைந்தது போல தன் இருக்கையில் சாய்ந்தாள் பூஜா.

“கியா கரேகா இதற் …………..”

திடீரென்று உதட்டுச் சாயத்தைத் தாண்டி வெளிய தெறித்தது பழக்கமான அந்தக் குரல்.

- சன்மது

Pin It