“அப்பா..ஆ அம்மா உங்கள மேல வரச்சொல்லுது”

“ப்போடா வர்ரேன்” மாடிப்படியிலிருந்து எட்டிக் கூப்பிட்டவனுக்கு அழுத்தமான குரலில் பதில் சொல்லிவிட்டு வேறொரு புத்தகத்தை ராவினேன்.

இப்பொழுதெல்லாம் மாமா வீட்டிற்கு வந்தாலே என்னை அதிகமாக கவர்ந்திருப்பது கீழேயிருக்கும் பழம்பொருட்கள் நிறைந்திருக்கும் இந்த அறைதான்.

ஓடாத சைக்கிளும், அக்காலத்து கனத்த மின்விசிறியும், ஓய்ந்துபோன அடிக்குழாயும், தகர நாற்காளியும், கருத்துப்போய் சிலைகளாய் அசையாமல் பரண்மேலேயே வீற்றிருக்கும் பாத்திரங்களும், மேலும் நான்கைந்து சாக்கினுள்ளே பொதிகளாய் பழைய இரும்புத் தகரம் பிளாஸ்டிக் சாமான்களும் அடங்கிக் கிடக்க, தற்போதைய மாமாவின் மசால்பொடி வியாபாரத்திற்கான மூலதனங்களான மிளகாய் வத்தல், மஞ்சள் மற்றும் ஏனைய அரவைச் சாமான்களும் சின்னஞ்சிறு மூடைகளாய் ஒருபக்கம் இருப்பதுமன்றி கதவுகள் இன்றி இரண்டு அலமாரிகளும் அதுநிறைய புத்தகங்களும், இன்னமும் மூலையை ஒட்டி பெரிய மரமேசையும் அதன் உட்புறத்திலும் மேலேயும் புத்தகங்கள் அடுக்கியும் குவிந்தும் கிடக்கும்.

books catsபுதுமைப்பித்தன் முதல் பதுமுகங்கள்வரை எழுத்துவடிவில் அங்கே இருப்பதைக் காணலாம். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், கடிதநூல்கள், மாத வாரஇதழ்கள், மற்றும் மாமா எழுதிய சிறுகதைத் தொகுதிகளும், அவரது கதை நோட்டுக்களும் ஆய்வுக்குறிப்புகளும் நிரம்பிக்கிடக்கும். அதுதான் இப்போது என்னை வசீகரிக்கக் காரணம்.

இப்புத்தகங்களுக்குச் சொந்தக்காரரான மாமாவை சிறுவயதிலேயே எனக்குத் தெரியும். உருண்டையான சிவந்தமுகம், உதட்டின் இருமருங்கிலும் தொங்கிய மீசை, கிப்பிமுடி, திடகாத்திரமான உடல்வாகு, வெள்ளை வேட்டியம் சட்டையும் அணிந்து சைக்கிளில் வலம் வருவார். கையிலோ கேரியரிலோ எப்பொதும் பேப்பரும் புத்தகமும் அவரைத் தொடுத்தபடி தானிருக்கும். சாதாரண உரையாடல்கூட மேடைப்பேச்சு போலத்தானிருக்கும்.

ஒருநாள் தற்செயலாக வீட்டுப்பக்கம் வந்தார். அம்மாவும் அப்பாவும் நலம் விசாரித்து தேனீர் உபசாரம் முடித்தபிற்பாடு “வர்றேங்மா.. வர்றேங்” என சொல்லியபடி ஓட்டக்கேட்டு வருகிற வேட்பாளர் போல பவ்யமாய் இருகைகளையும் கூப்ப முற்பட்டு விடைபெற்றார்.

“யாருப்பா இவரு.. நம்ம சொந்தக்காரா! ரொம்ப வித்யாசமா இருக்காரே. என்ன பண்றாரு?” நான்கேட்டேன்.

“எங்க அண்ணன்டா.. பெரியாத்தா மகே..” அம்மா சொன்னபோது குறுக்கிட்ட அப்பா “ஆமாடா ஒருவகையில ஒனக்கு தாய் மாமந்தே. நெல்லு அரிசின்னு கமிசன்கடை ஏவாரம் பாக்குறாரு. அப்பரும் கதை எழுதுவாரு.”

“என்னாது கதை எழுதுவாரா” வியப்புடன் கேட்டேன்.

“ஆமா வாரப்பத்திரிக்கை மாசப்பத்திரிக்கைன்னு எதுலயாவது அவரு பேரு வந்துக்கிட்டே இருக்கும். பேனாவும் கையுமாத்தே திரியுவாரு. நாங்கூட ஒருதடவ படிச்சிருக்கேன். தீபாவளி போனஸ் கேட்டு ஓரு சின்னப்பையன் முதலாளிகிட்ட அடிவாங்கி கெடப்பான்.. அவகம்மா ராத்திரியெல்லா தேடி அலைஞ்சு கேள்விப்பட்டு கொதிச்சுப்போயி அந்த சின்னப்பையனயும் இழுத்துக்கிட்ட மொதலாளிகிட்ட மல்லுக்கட்டப் போகும்..அப்டின்னு கதை”

‘நம்ம உறவிலே இப்படி ஒரு ஆளா’ கேள்விப்பட்டதிலிருந்து அவரைச் சந்திக்க ஆசையாயிருந்தது. நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொன்டிருந்தபோது எனதருகில் அமர்ந்திருந்த இரு நண்பர்கள் கலை ஆர்வம் உடையவர்களாய் இருந்தார்கள். காகிதத்திலே கப்பலும் காமிராவும் செய்வதுமன்றி நோட்டுப்பக்கங்களில் வரைவதும் கணக்கு நோட்டிலே கட்டங்களிட்டு படத்துடன் கதைகள் எழுதி விளையாடுவதுமாய் இருந்தனர்.

மலரோடு சேரும் நார் மணப்பதுபோல அருகிலிருந்த எனக்கும் அப்படியான ஆசைகள் துளிர்விட நானும் என்பங்கிற்கு கணக்கு நோட்டை கதை நோட்டாக்கிவிட்டேன். முழுப்பரீட்சை துவங்கவிருந்த நாட்களில் வகுப்பாசிரியர் அதைக் கண்டுபிடித்து பிரம்பில் வெளுத்ததுமல்லாமல் மூவரையும் தனித்தனியே அமர வைத்தும் விட்டடார்.

வருடங்கள் கழிந்த பின்னும் அச்சம்பவம் நெஞ்சில் ஒரு கரும்புள்ளியாய் ஒட்டிக் கொண்டுதானிருந்தது. தமிழ் துணைப்பாடங்களில் வரும் பாட்டையாவும், மைதானத்து மரங்களும் கதைகள் என்னைச் சுண்டி இழுக்க அதை எழுதியவர்களின் பெயர்களையே நெடுநேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பேன்.

நாட்கள் உருண்டோட வீட்டிற்கு வந்த மாமாவைக் குறித்து கேள்விப்படுகையில் என் உடலெங்கும் புதுரத்தம் பாய்ந்தார்போல புத்துணர்ச்சியாயிருந்தது. எப்படியும் அவரை சந்திக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும், பத்திரிக்கையில் அச்சில் என் எழுத்துக்களைக் காண வேண்டும் என ஆவல் அதிகரித்தது.

கேள்விப்பட்டபோது அவரும் வியந்ததாய் அறிந்தேன். ஆனால் தேடிப்போகும் போதெல்லாம் மாநாட்டிற்குப் போய்விட்டதாகவும், கட்சி விசயமாக வெளியூர் போயிருப்பதாகவும், இலக்கியக்கூட்டத்திற்கு போயிருப்பதாகவும் தகவல் வரும். பின்பொருநாள் அவரே தேடிவந்தார். நெடுநேரம் இலக்கியத்தையும் எழுதும் விதத்தையும் சாதாரண வாழ்விலிருந்து எழுத்துலகில் அடியெடுத்து வைத்து உயர்ந்தவர்களின் உதாரணத்தையும் எடுத்துப் பேசினார். கேட்க கேட்க ஆசையாயிருந்தது.

சற்று நெருக்கத்திற்குப் பிறகு அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு இலகுவாய் கிடைத்தது. தெரிந்ததை எழுதிக் கொண்டு வரச் சொல்லுவார். ஏனோ தானோ என்றிறுந்தாலும் அதற்கும் மதிப்பளித்து நிதானமாய் வாசிப்பார். பாக்கெட்டிலிருக்கும் பேனா எடுத்து திருத்தம் செய்து காண்பிப்பார். எங்கே புள்ளி வைக்க வேண்டும், உரையாடலுக்கு மேலே எந்தக் குறி இடவேண்டும், ஆச்சர்யமும் கேள்விக்குறியும் எவ்விடத்தில் வரவேண்டும், ஒரு கதையை எங்கே துவங்குவது, எப்படி கொண்டுபோவது, முடிவு எவ்வாறு இருக்க வேண்டும் என அவரின் கற்றுக்கொடுத்தல் அனைத்தும் மீனுக்காகக் காத்திருந்த தூண்டிலைப்போல மனம் கச் கச்-சென கவ்விக்கொண்டது.

தனிச்சுற்றுப் பிரதிகளையும் இலக்கிய இதழ்களையும் அவ்வப்போது அவரது படைப்புகள் வெளிவரும் பிரதிகளையும் வாசிக்கக் கொடுப்பார்.

நெடுநாள் பயிற்சிக்குப்பின் நான்குபக்க அளவில் நான் எழுதிய கதையொன்றை படித்துப் பார்த்தவர் பாராட்டியதோடு மேலும் சில திருத்தங்களைச் சொல்லி மறுபடியும் எழுதி வரச் சொன்னார். இரவு பகல் விழுந்து விழுந்து எழுதியதிலும் மாமாவின் செதுக்கலிலும் கதை ஒரு வழிக்கு வர பெருத்த நம்பிக்கையோடு பத்திரிக்கைக்கு அனுப்பப்பட்டது.

பிரசவத்திற்கு ஏங்கித் தவிக்கும் பெண்ணைப்போல அனுப்பிய கதைகளின் பிரசுரத்தைக் காண மனம் துடியாய்த் துடித்தது. பின்னொரு ஞாயிற்றுக்கிழமையில் என்னையும் அங்கீகரிக்கும் பொருட்டாய் தினசரி பத்திரிக்கையின் இணைப்பு இதழ் ஒன்றில் படத்துடன் எனது எழுத்துக்கள் முதன்முதலில் அச்சில் வெளியாகி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது. ஊர் ஊராகவும் உறவினர் வீடுகளுக்கும் அப்பிரதியை எடுத்துக் கொண்டு அழைந்தேன். உற்சாகத்தில் மிதந்தேன்.

“தொடர்ந்து எழுதனும்.. பெரிய ஆளா வரனும்.. இலக்குகளைத் தாண்டி இலக்கியம் படைக்கனும்” என மாமா வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அவரின் சக எழுத்தாள நண்பர்களிடமும் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார்.

பாதைகளின் மேடு பள்ளங்களைப்போல எனது இலக்கியப் பயணமும் உற்சாகத்தில் சிலநாட்கள் ஏறியும் இறங்கியும் கிடக்கும். பார்க்கும் நேரமெல்லாம் மாமா உத்வேகப்படுத்துவார்.

நாளடைவில் நான் அவருக்கு உரிமையான மருமகனாகவும் ஆகிப் போனேன். முன்பு போல பேச சங்கடப்பட்டார். இருப்பினும் இலக்கியம் சம்பந்தமான உரையாடல்கள் தொடரத்தான் செய்தது. அதன்பிறகு அவ்வப்போது பிரசுரமாகும் எனது படைப்புகள் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என நினைக்கிறேன். பாத்திரப் படைப்பை குறித்து என்னிடம் மெச்சிக்கொள்வார். அவரின் சக நண்பர்களுக்கும் அழைபேசியில் அழைத்தும் நேரில் சென்றும் சொல்லுவார். பஞ்சர் பார்க்கப்பட்ட வண்டி மீண்டும் ஓடத் தயாரானது போல கொஞ்ச நாட்களாகவே எனக்கும் தொடர்ந்து எழுத ஆசை வந்தது. பத்திரிக்கை, வலைதளங்கள், எழுத்தாளர்களின் அதிகரிப்பும், படைப்புகளின் வியத்தகு கோணங்களும், பார்வைகளும், போட்டி அறிவிப்புகளும், விமர்சனங்களும், எதிர்வினைகளும் வாசிப்பினூடே என்னை கிளர்ச்சியூட்டியதுமே அதற்கு ஒரு காரணமாயிருந்தது.

 கனவுகளுக்கும் நினைவுகளுக்கும் வடிவம் கொடுத்து நோட்டுக்களிலும் தட்டச்சின் வாயிலாக கணிணியிலும் அழகுபார்க்கிறேன். பிரசுரமான படைப்புகளைத் தூக்கிக் கொண்டு மாமாவோடு நின்று விடாமல் அவரின் எழுத்தாள நண்பர்களிடத்திற்க்கும் போய் விமர்சனங்களைத் தேடுகிறேன். சிலர் பாராட்டுவார்கள், சிலர் “வாசித்தேன் நல்லாயிருக்குது” என்பதோடு நின்று விடாமல் “இன்னும் புதுமையா எழுதனும்.. பழைய நடையிலேயே கதை இருக்குது” என்பார்கள்.

‘புதுமையா.. அந்த எழுத்து நடை எப்படி இருக்கும்’ தற்காலிக படைப்புகளைத் தேடி நூலகத்திற்கு ஓடுவதுமல்லாமல் மாமாவின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் இந்த அறைக்குள் நுழைந்தும் விடுவேன். மேலும் எதுவுமே புலப்படாமல் மலுங்கிய ரம்பம் போலிருக்கின்ற மனதுக்கு புத்தக வாசிப்பு சாணை தீட்டியது போலிருக்கும்.

பேல்பூரி கடையைப் போலிருக்கின்ற மாமா வீட்டின் புத்தக சங்கமம் எனக்கு ஆசைக்குமேல் ஆசையைத் தூண்டுவதால் நெடுநேரம் இங்கேயே நின்று படிப்பது மட்டுமல்லாமல் முன்னணியாளர்கள், புதுமுக எழுத்தாளர்களின் நூல்களையும் அவ்வப்போது மாமாவிடம் கேட்காமலேயே ஒன்றிரண்டாய் எடுத்துக் கொண்டும் போய்விடுவேன்.

இன்றைக்கும்கூட இரு புத்தகங்கள் என்னை வசீகரித்தன. புரட்டியவுடன் ஆர்வத்தைத் தூண்டுகிற துவக்கம்.. புதிய பதிப்பு.. அன்புடன் நண்பருக்கு தோழமையுடன் என்று யாரோ ஒருவரின் ஆட்டோகிராப் வேறு. இதையும் சேர்த்தால் இருபத்தைந்து புத்தகங்களாவது இருக்கும் இங்கிருந்து என் வீட்டிற்கு இறக்குமதி செய்து..

புத்தகங்களை தூசிதட்டி எடுத்து அறையைவிட்டு வெளியேற முற்பட்டபோதுதான் பின்பக்க உயரத்திலிருந்து இரண்டு பூனைகள் கயாமுயானெ கத்தி மல்லுக்கட்டி என்னை திடுக்கிடச் செய்தது. “அடச்சூ” ஓங்கிவிட்ட சத்தத்தில் தலைதெறிக்க அந்த சன்னலைவிட்டு பின்புறமாய் ஓடியது.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடு என்பதால் சீலிங்கை ஒட்டிய அந்த வென்டிலேட்டர் சன்னல் சற்று பெரியதாகவே இருக்கும். ஆனால் கதவு இன்றி அதன் மையத்திலிருக்கின்ற ஒரேயொரு கம்பியும் துருப்பிடித்து பக்கவாட்டு கட்டைகளும் கரையான் அரித்து இத்துப்போயும் கிடந்தன. பின்புறம் ஆள் அரவமற்ற மாட்டாஸ்பத்திரி வளாகமென்பதால் காற்றும் வெளிச்சமும் சற்று கூடுதலாகவே அவ்வழியே வரும். கூடவே சில பூனைகளும். அறைக்கதவை அடைத்துவிட்டு புத்தகங்களோடு மாடிக்குப் போனேன்.

ஒருநாள் இரவு தூங்கப் போகின்ற நேரம்.. மாமா வீட்டிலிருந்து அவளின் கைபேசிக்கு அழைப்பு வந்தது. எடுத்ததிலிருந்து “ஆ.. அப்டியா அய்யய்யோ.. எப்ப சன்னல ஒடைச்சா..” என பதறிக்கொண்டே பேசிவிட்டு, மாமாவின் புத்தகங்கள் நிறைந்திருக்கும் பழைய பொருட்கள் போட்டிருந்த அந்த அறைக்குள்ளே யாரோ இறங்கி திருடி விட்டுப்போன விபரத்தை பதற்றத்துடன் சொன்னாள்.! பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு உடனே கிளம்பினோம்.

தெருவே அடங்கிப்போக மாமா விட்டு வாசல் மாத்திரம் ஐந்தாறு பேருடன் குண்டு பல்பு வெளிச்சத்தில் திறந்திருந்தது.

“என்னம்மா” அவள் பதறினாள்.

“மதியானங்கூட ஒங்கப்பா மசால்பொடி அரைக்க இந்த ரூம்ப தெரந்துதே மொளகா வத்தல தூக்கிட்டுப் போனாங்க. அப்பகூட ஒன்னுந்தெரியல, இப்பத்தே ரோதையில அரைச்சு முடிஞ்சு பொடிய உள்ள வைக்க கதவ தெறக்குராங்க அந்த கோலத்துல கெடக்கு..”

பெரும்பாலும் தரைதளத்திலிருக்கும் இந்த அறையில் பழம்பொருட்களும், அரவைச்சாமான்களும், புத்தகங்களும் வைப்பதுமன்றி மற்ற இரு அறைகளும் சைக்கிள் பைக் நிறுத்துவதற்கும் தண்ணீர் ட்ரம்கள் குடங்கள் வைப்பதற்குமே பயன்படும். புழக்கம் அனைத்தும் மேல் அறைகளில்தான். கோட்டைக்களத்து ஒயின்ஸ்-க்குப் போகிற மாற்றுப்பாதையாகவும் குடிமகன்களால் தெருவு தற்போது பயன்படுகிறது. இவ்வழியே யார் போகிறார்கள், வருகிறார்கள் என கணிக்க முடியவில்லை, மேலும் வீட்டின் பின்புறம் குடியிருப்புகளற்ற மாட்டாஸ்பத்திரி வளாகம், சன்னலும் பெரிது என்பதால் திருட முடிவெடுத்தவனுக்கு எல்லாம் இலகுவாயிருந்திருக்கிறது.

உள்ளே போய்ப் பார்த்தோம். மாமாவும் இருந்தார். எது களவு போனது என்று தெரியவில்லை. முன்புபோலவே பொருட்கள் நிரம்பி கண்களுக்குக் குளிர்ச்சியாய் காட்சிதந்தது. ஆனால் உளைக்கப்பட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாய் உருண்டும் புரண்டும் புத்தகங்களெல்லாம் களைந்து சிதறியும் கிடந்தன. உயர இருக்கும் வென்டிலேட்டர் சன்னலின் ஒரேயோரு இத்துப்போன கம்பியும் அறுபட்டு வளைந்து அவ்வழியாக ஆசாமி ஒருவன் சிரத்தையுடன் இறங்கியதற்கான அடையாளமாக சுவரில் பாதத்தடமும் விழுந்திருந்தது.

“ஊர அடிச்சு உளையில போடுரவுக எம்புட்டு பேரு இருக்காங்க.. அட நாசமாப் போனவெங்களா.. அவுக வீடுகள்லயெல்லாம் போயி திருடி தின்னுட்டப் போக வேண்டியதுதான.. பாவம் வாறதுந் தெரியாது போறதுந் தெரியாது. உழைச்சு கஞ்சி குடிக்கிற இந்தப் புள்ள வீட்லயா ஒங்க தெறமைய காட்டனும்” வெற்றிலையை குதப்பியபடி பக்கத்து திண்னையில் குடியிருக்கற பொன்னுத்தாயி கிழவி புலம்பிக் கொண்டிருந்தது. அவ்வப்போது மாமா வீட்டிலே சோறு தண்ணி வாங்கிக் குடிக்கிற விசவாசம் அதற்கு..  

“நா என்னா நெனைக்கிறேன்னா தவறுதலா நம்ம வீட்டுக்கு திருட வந்திருப்பாங்களோன்னு.. இந்த ரூம் அடச்சே கெடக்கு அப்பப்ப திறக்குறாங்க எதையோ வைக்கிறாங்க எடுக்குறாங்க அதுனால பெருசா எதாவது இருக்கும்னு கனவுகளோட கம்பியெல்லா அறுத்து உள்ள எறங்கி வந்துருப்பாங்க.. எல்லாத்தையும் ராவிப்பாத்துட்டு ஏமாந்து போயிருப்பாங்க..” மாமாவின் பேச்சு வியப்பாயிருந்தது.

“இதச் செஞ்சது பெருந்திருடனா இருக்க மாட்டான்.. பின்னாடி இருந்து எட்டிப் பாத்திருப்பான்.. பழசுபட்ட சாமாஞ்சட்டு கெடக்கறது தெரிஞ்சிருக்கும்.. எடுத்துப் போட்டா தண்ணிகிண்ணி அடிக்க ஆகுமேன்னு வந்துருப்பான் பஞ்சப்பரதேசிப்பய..”

“பின்னாடி இருக்க மாட்டாஸ்பத்திரிக்கி ஒரு வாச்மேன் போடச் சொல்லணும். அந்தப்பக்கமா குண்டு விளையாட சீட்ட விளையாட வர்றவங்கள பத்தணும். அப்பறும் மொதல்ல இந்த சன்னல செங்கலு வச்சு அடைக்கனும்..”

ஆளாளுக்குச் சொல்ல அந்த இரவு கடந்தது. மறுநாள் துரிதகதியாக கொத்தனாரைக் கூப்பிட்டு அந்த சன்னலை முழுவதுமாய் கட்டி அடைத்துவிட்டோம். மீண்டும் பாத்திரங்களெல்லாம் விளக்கி பரண்மேல் அடுக்கப்பட அறை கொஞ்ச கொஞ்சமாய் ஒழுங்குபெற ஆரம்பிக்கவும் திருடுபோன பொருட்கள் நினைவுகளில் புலப்படத்தெரிந்தன.

ஓடாமல் கிடந்த பழையகாலத்து கனத்த மின்விசிறி, ஒரு பித்தளைச்சொம்பு, கப்பைக்கிழங்கிற்கு போடவிருந்த பழைய இரும்புச் சாமான்பை இரண்டு, வீட்டு உபயோகத்திற்கு வைத்திருந்த எலக்ட்ரிக் வயரும் படிக்காத வரலாற்றுச்சின்னமான வானொலிப் பெட்டி ஒன்றும் திருடு போனவைகளின் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

“திருட்டுப் பயகல்லயே இவெ ரொம்ப வித்யாசமானவனா இருப்பாம்போல மாமா.. அவெ அவெ நகை நட்டு, ஓடுற ரயில்ல கோடிகோடியா பணம்னு கொள்ளையடிச்சு காவல்துறையவே கதிகலங்க வைக்கிறாங்கே.. இவெம்பாருங்க பழைய இரும்பு சாமாஞ்சட்ட களவாடிட்டுப் போறத.. சரியான கஞ்சாக்குடிக்கியா இருப்பாம்போல..”

ஆலமாரிகளை துடைத்து பேப்பர் விரித்து புத்தகங்களை தூசிதட்டி காலவரிசையிலும், வகைவகையாகப் பிரித்தும் முன்பைவிட அழகாகவும் நேர்த்தியாகவும் அடுக்கிய மாமா இதைக் கேட்டதும் சிரித்தார்.

“வேறெதுவும் காணாப்போயிருச்சா மாமா..”          

 புத்தகக்குவியலிலே கை வைத்தபடி அறையை மேழும் கீழும் நோட்டம் விட்டவர் “என்னப் பொருத்தவரையில காலாவதியான பழம்பொருட்கள் போனதுல வருத்தமில்ல.. இந்த புத்தகங்கள் களவுபோகம தப்பியிருக்கிறதே பெரிய சந்தோஷம்தான். வாசிக்கிறதுக்காக எடுத்தாக்கூட பரவாயில்ல, எடுத்து எடைக்குப் போடலாமேன்னு ஒருவேளை அந்த திருடன் நினைச்சிருந்தா.. அது படைப்பாளிகளுக்கு கிடைக்கிற அவமரியாதையா ஆகியிருக்குமில்லையா.. இருந்தாலும் பாதுகாப்புல நாம கவனம் செலுத்த வேண்டியது அவசியம்..” எனச் சொன்னார்.

மீண்டும் அலமாரியில் அடுக்கப் போனவர் “ஆனாலும் ஒரு சில முக்கிய எழுத்தாளர்களோட புதிய புத்தகங்கள் சிலதும் விடுபடுறமாதிரி தெரியுதே.. எங்க போச்சு..” எதையோ கூர்ந்துபார்த்து யோசித்துக் கொண்டிருந்தார்.

“கவலைப்படாதீங்க மாமா அந்த புத்தகங்கள எடுத்துட்டுப்போனவன் படிச்சிட்டு மறுபடியம் கொண்டு வந்து வைக்க வாய்ப்பிருக்கு.. அனா நிச்சயம் திருடனும்னு எடுத்திருக்க மாட்டான், வாசிக்கிறதுக்காகத்தான் எடுத்திருப்பான்” ரசனையுடன் சொன்னேன் நான்.

“என்ன சொல்றீங்க!” வியப்புடன் கேட்டார்.

“ஏன்னா அந்த புத்தகங்கள மட்டும் எடுத்துட்டுப் போன வாசகன் நான்தான், அந்த திருடன் இல்ல” சொன்னதும் புன்சிரிப்பில் மலர்ந்தது அவர் முகம்.

- மொசைக்குமார்

(நன்றி: வண்ணக்கதிர்)

Pin It