கொத்து கொத்தாகப் பூக்களும், பிஞ்சுகளும், கிளைகளுமாக பரப்பி பூதராஜா கொல்லையில் வானளாவிக் நிழல் தந்த அடர்ந்த வேப்பமரம் வேரோடு சாய்க்கப்பட்டுக் கிடந்தது. கடைசியாய் வாசம் நிறைந்த அந்த பூக்களின் தேனை மின்மினிப்பூச்சிகள் உறிஞ்சிக் கொண்டிருந்தன. அதன் அருகே ஆறடி நீளமான மனைப்பாம்பு நசுக்கப்பட்டு மல்லாக்காய் புரட்டப்பட்டுச் செத்து கிடந்தது. அதன் சதைகளைப் பிய்த்துத் தின்ன எறும்புக் கூட்டங்கள் முயன்று கொண்டிருந்தன. அந்த இரவில் இவைகளைப் பார்த்த கண்ணுசாமி பேயறைந்தது போன்று அலறினார். அவரின் மனைவி கைத்தாங்கலாக சேர்த்து அணைத்து மெதுவாக நடத்திக் கொண்டு வந்து அவரை வீட்டில் படுக்க வைத்தார். அவர் உடம்பு அனலாய்க் கொதித்தது. அவர் வாய் எதை எதையோ தன்னிச்சையாய் பிதற்றிக் கொண்டிருந்தது.

Nammalvar 330கண்ணுசாமியின் பங்காளி அதாவது சித்தப்பா மகன் தயாளன். இருவரும் நண்பர்களும் கூட.. ஒத்தவயதும், வகுப்பு தோழர்களுமாய் வாழ்ந்தவர்கள். மறுநாள் காலையில் கண்ணுசாமியை நலம் விசாரிக்க, உதவ தயாளன் வந்தார்.

"போச்சே.. நிலம் போச்ச்சே…. எல்லாம் போச்ச்சே.. " என்று கண்ணுசாமி உளறிக் கொண்டு இருந்தார்.

நண்பன் குரல் கேட்டு கண்ணைத் திறந்து பார்த்தார். அந்த கண்களில் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய பயம், சோகம், சூன்யம் ..கேள்விகள்… அப்பட்டமாய்த் தெரிந்தன. அவர் தோளை பற்றி இருத்தி..

"டேய்… உனக்கு யென்னடா… பேங்கில லட்சக்கணக்கில பணம் போட்டு வைச்சிருக்க… ராஜா மாதிரி ஜாலியா இருடா.." என்றார் தயாளன்.

சில நாட்களில் உடல்நலம் தேறிய கண்ணுசாமி உண்மையில் ‘ராஜாமாதிரி’ வெட்டியாய் மாறத் தொடங்கினார். வெள்ளை வேட்டி, சட்டையுமாய் கிராமத்தில் வலம் வந்தார். காலை வேளைகளில் தேநீர்க் கடைகளில் இருந்த பெஞ்சுகளை தேய்த்தவாறு பேசிக் கொண்டிருந்த ஊர்கதைகளினுள் அய்க்கியமானார். மதிய நேரங்களில் பெண்டாட்டி இரசித்தும், கவலையோடும் பார்த்துக் கொண்டிருந்த பல சீரியல்களில் ஒன்று இரண்டை கண்டு தமிழ்கூறும் ஊடக நல்லுலகுடன் இணைந்து கரைந்து கண்ணயர்ந்தார்.

அனைத்து முக்கிய சாலைகளில் அந்திமாலை டாஸ்மார்க் கடைகள் போவோர்… வருவார்… எல்லாரையும் அன்புடன் கூவி அழைத்து கொண்டிருந்தன. அந்த அழைப்பை அவரின் கிராமத்து நண்பர்கள் சுட்டிக்காட்டி சிலாகித்தனர். எப்பொழுதோ ஒருநாளாக இருந்த கண்ணுசாமியின் இந்தப் பழக்கம் நாளைடைவில் அவரின் காலத்தின் தனிமையை, வெறுமையை தினம் தினம் போக்கும் அருமருந்தானது. இப்படியான மாலை டாஸ்மார்க் ஜமாவில் நண்பரின் வேண்டுகோளைத் தட்டமுடியாமல் ஒரிருநாட்கள் தயாளனும் சென்றார்.

மாலைகள்… சில மாதங்களில் மதியங்களாக கண்ணுசாமிக்கு விரைவில் மாறிப் போனது. உடல் திடகாந்திரமாக இருந்தாலும் முதுமை எட்டிப்பார்க்கும் அந்த வயதில் இதுவரை செய்த உழவுத்தொழிலை மாற்ற முடியாமலும், மறக்க முடியாமலும் வீட்டிலேயே முடங்கிப் போவதற்கு மாற்றாக டாஸ்மார்க் போதை ஆறுதல் அளித்தது.

விளைநிலத்தை விற்று வங்கியில் போடப்பட்டு இருந்த பணம் அரசாங்கத் தண்ணீரில் நீராய் கரையத் தொடங்கியது.

நாளடைவில் காலையில் எழுந்து வாய்கொப்பளித்ததும் டாஸ்மார்க் சரக்கு உள்ளே போனால்தான் கைகால் நடுக்கங்கள் கண்ணுசாமிக்கு நின்றது.

இந்த நேரத்தில் கண்ணுசாமி மனைவி தன் மகளை-மருமகனைப் பார்த்து வருவதற்கு பெருநகரத்துக்கு சென்றார். காலையில் எழுந்த உடன் குடிக்க ஆரம்பித்த கண்ணுசாமி யாரும் இல்லாததால் அளவிற்கு அதிகமாக குடித்தார். அடிக்கடி சிகரெட் குடிக்கும் பழக்கமுடைய அவருக்கு சட்டென்று மாரடைப்பு ஏற்பட்டது. அந்த வலியை சாதாரண உடம்பு வலி, அசதி சோர்வு என்று குடி மயக்கத்தில் நினைத்து இன்னும் அதிகமாக குடித்தார். போதைமயக்கத்தில் மாரடைப்பில் கண்ணுசாமி மரணமடைந்தார்.

ஆனால், குடியில் நாக்கு வற‌ண்டு போய் தண்ணீர் தரக் கூட ஆள் இல்லாமல் கண்ணுசாமி செத்து விட்டதாக சொந்தக்காரர்கள், ஊர்க்காரர்கள் அவர் மனைவியை குறைபட்டுக் குற்றம் சொல்லிக் பொறணி பேசிக் கொண்டிருந்தனர்.

தன் நண்பனின் அகால மரணம் தயாளனை நிலைகுலைய வைத்தது. ஏர் ஓட்ட, அண்டை வெட்ட, நீர் பாய்க்க, பரம்பு அடிக்க, நாத்து வளாவ, உரம் போட, எரு அடிக்க, பூச்சிமருந்து தெளிக்க, அறுப்பு அறுக்க, சுமை தூக்க, பிணை ஓட்ட, நெல்லை விற்க, அரிசியை ஆலைக்கு கொண்டு செல்ல ஒருத்தருக்கு ஒருவர் கைக்கு கை உதவியாக இருந்தவர்கள். வலது கை உடைந்த நிலையாக தயாளன் உணர்ந்தார்.
ஒருநாள் புலர்காலையில் கதவு டொக்..டொக்..டொக்டொக்..என்று வேகமாக கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. தயாளன் மனைவி கதவை திறந்தார். தூரத்து உறவுக்காரர், மாமாமுறை வரும் ஒரு இளைஞன் நல்லசேதி கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான். கழனியில் காலையில் உடனடியாக வேலை இல்லாததால் தயாளன் படுக்கையை விட்டு சுணக்கமாகவே எழுந்தார்.

"வாங்க… எப்படி இருக்கீங்க.."

"நல்ல சேதி கொண்டு வந்திருக்கேன் மாமா.. ஐஸ்வரியம் வீட்டைத் தேடு வருது மாமா" என்று துதிபாடிக்கொண்டு அந்த வாலிபன் வந்தான்.

"என்ன…." என்பது போல் ஆச்சரியமாக நெற்றியைக் கேள்வியாய் சுருக்கி தயாளன் பார்த்தார்.

"உங்க நிலத்துக்கு நல்ல விலை கூடி வந்திருக்கு மாமா.. பெரிய பார்ட்டி ஒன்னு… வந்து வாங்க வருகிறார்கள்.. அதிஷ்டம் மாமா…" என்று புகழ்ந்து தள்ளி கொண்டு அந்த இளைஞன் சென்றான்.

சட்டென்று தலைக்கு மேல் கோபம் பற்றி கொண்டு எரிந்தது தயாளனுக்கு….

"கொஞ்ச ஏமாந்தா போதும்டா.. ஊரையே வித்து சாப்பிடுவீங்கடா.. உங்களப் போல ஆளுங்க அப்பன.. ஆத்தாள கூட வித்து …காசாக்கி ஏப்பம் விடுவீங்கடா ..பரதேசி நாயே… காலயில வந்துட்டான்"

தயாளன் போட்ட சத்தத்தில்… அந்த புரோக்கர் தலைதெறிக்க தப்பி ஓடினான். ஆனாலும் கூட வெவ்வேறு வடிவத்தில் இப்படியாக நொய்….ய்…நொய்ய். யென்று ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் சில ஆண்டுகளாக அலைந்து தயாளனை நோகடித்துக் கொண்டிருந்தனர். அதோடு சகதோழனின் இறப்பும் தயாளனை மேலும் கவலை கொள்ள, தனிமையைக் கொண்டு வந்து வைத்தது.

அதிகாலையில் கந்தாய அறுப்பு அறுத்த பின்பு தாளடியாய் கிடைக்கும் தனது நான்கு ஏக்கர் நிலத்தை வெறித்து வைத்த கண் விலகாமல் பார்த்து கொண்டிருந்தார். அடுத்த பயிர் விளைந்தேறுமா என்று தெரியவில்லை. அந்த கிராமத்தில் விளை நிலங்கள் ஒவ்வொன்றாய் ரியல் எஸ்டேட் வியாபாரிகளிடம் போய்க் கொண்டிருந்தன. நொடிகள்.. நிமிடங்கள்… மணிகள்.. போய்க் கொண்டிருந்தன‌. சுரீர் என்று வெயில் உறைத்தது கூட அவருக்குத் தெரியவில்லை.

தாளடியுடன் தாளடியாய் தனது வாழ்க்கை நசித்து போய் விடுமோ என்ற நினைப்பினுள் ஆழ்ந்து கொண்டிருந்தார்.

தயாளனின் தோளை பரிவுடன் ஒரு கை தொட்டது. அன்புத் தோழர்.. தொழிற்சங்கத் தொண்டர்.. சேரிக்கு சொந்தக்காரர்...தபால்துறையில் ஈ.டி.யாக சேர்ந்து, நான்காம்தர வகுப்பு ஊழியராகி பின்பு மூன்றாம் வகுப்பு ஊழியராக உழைப்பால் உயர்ந்தவர் வேலு.

"தயாள் என்ன… இப்படி கல்லாக சமைச்சு நிக்கிற…" என்று வேலு கிண்டல் செய்தார்.

"கல்லா போனாக் கூட பரவயில்ல வேலு… மண்ணா போயிடுவேன்னு பயமாயிருக்கு.." என்று தயாளன் சோகமாய் புன்னகைத்தார்.

சிறிது உரையாடல்களுக்குப் பின்பு இயல்பு நிலைமை திரும்பி.. நீண்ட நேரம் பழைய சம்பவங்களை புதிய நிகழ்வுகளைப் போல் பேசிக் கொண்டிருந்தனர். சில ஆண்டுகளுக்கு முன் தான் வாங்கி போட்ட ஒர் ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்யப் போவதாகவும், அதற்காக மூன்று நாள்கள் அய்யா நம்மாழ்வார் ஒருங்கிணைக்கும் பயிற்சிக்காக "வானகம்" செல்ல கரூர் போகப் போவதாகவும் கூறினார். தயாளனும் வானகப் பயிற்சிக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திக்கு தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த தயாளன் ஏதோ போகின்ற போக்கில் தலையை ஆட்டி வைத்தார்.

அந்த மூன்று நாட்களும் வந்தன. வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் அவர்களின் குழுவினருடன் மூன்று நாட்கள் வானகத்தில் நடந்த உரையாடல்கள், வகுப்பு, பயிற்சிகள்….. தயாளன் வாழ்க்கையை மீண்டும் அர்த்தம் உள்ளதாக மாற்றியது. இயல்பாக தயாளுடைய கடந்த கால வாழ்க்கையில் இருந்ததற்கு மீண்டும் புதியதொரு உள்ளடக்கத்தை, புத்துயிர்ப்பை இந்த முகாம் அளித்தது.

வட்டவடிவமாய் கட்டப்பட்டு இருந்த கட்டடிடத்தில் நாற்புறமும் இருந்து குளிர்ந்த காற்று அங்கு கூடியிருந்த மனிதர்களிடம் இயல்பாய் புகுந்து விளையாடி உற்சாகமூட்டியது. முழு நிலவு வெளிச்சம் மெல்ல பரவி சுற்றுச்சூழலை, அங்கிருந்தவர்களை குளிப்பாட்டி ஒளிரச் செய்துக் கொண்டிருந்தது.

"..என்ஜினியர் இல்லாமல் மனிதன் வாழ முடியும், மருத்துவர் இல்லாமல் இருக்க முடியும்.. அரசாங்கங்கள் கூட இல்லாமல் மனித சமூகம் இருக்க முடியும்… ஆனால்… உணவு இல்லாமல்… அந்த உணவை தரும் உழவு தொழில் இல்லாமல் இருக்க முடியாமா…? சுழன்றும் ஏர் பின்னது உலகம்…." என்று தன்மையானதொரு அலைவரிசையில் அங்கிருந்தவர்களின் மனங்களுடன் நெருக்கமாக உரையாடிக் கொண்டிருந்த நம்மாழ்வாரின் உணர்ச்சிப் பெருக்கான பேருரை தயாளனை என்னமோ செய்து உணர்ச்சிப் பிழம்பாக்கியது.

எந்திரமயமான, இலாப வெறி கொண்ட சூழலில் இருந்து விடுபட்டு புதியதோர் மனிதர்களாக உருமாறிக் கொண்டிருந்தார்கள்.

தயாளன் கண்களில் தானாகவே மெல்ல கண்ணீர் கசிந்தது. உடல் மெல்ல அதிர்ந்து குலுங்கியது. கண்களில் கண்ணீர் கரகரவென சுரந்து வடிந்து கொண்டிருந்தது. தாழ்வு மனப்பான்மை… சுய பரிதாபம்… இயலாமை அதில் கரைந்து வெளியேறி வானகத்தின் மண்ணை ஈரமாக்கியது.

விடைபெறுவதற்காக பெரியவரிடம் வந்திருந்த புதிய இளைஞர்கள் பலரும் கைகளை குலுக்கிக் கொண்டிருந்தனர். தயாளன் உணர்ச்சிப் பெருக்கில் சட்டென நம்மாழ்வாரை இழுத்து தனது மார்புடன் அணைத்து தழுவினார். மண்ணின் மணத்துடன் உழைப்பை உழவை கற்றுத் தந்த தந்தையின் கதகதப்பை, நாளும் நுகர்ந்த மண்ணின் சுவாசத்தை, வியர்வையின் நறுமணத்தை அந்த சில நொடிகளில் சுகானுபவ‌மாய் உணர்ந்து அனுபவிக்க முடிந்தது.

குழைகுழைந்த நாற்று நடவு சேற்றைப் போன்ற நம்மாழ்வாரின் யதார்த்தனமான சிரிப்பு தயாளனுக்கு இடம் மாறியது.

தனது மூன்று ஏக்கர் நிலத்தை முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு மாற்றத் திட்டமிட்டார். மண் புழு உரம் தயாரிப்புக்கான வேலைகளை செய்தார். தயாளனும், அவர் மனைவியும் தொடர்ந்து உழைப்பில், விவசாயத்தில் தன் முனைப்புடன் இருந்த‌தால் இயற்கை விவசாயத்திற்கு மாறுவது பெரிய விசயமாகத் தெரியவில்லை. பிள்ளைகளைத்தான் விவசாயத்தில் ஈடுபடுத்த முடியாமல் போனது!

சிறிது வளர்ந்த கொம்புகளைக் கொண்ட ‘வடகத்தியான்’ எருது ஜோடியும், நாட்டு பசுமாடும் அவரிடம் ஏற்கனவே இருந்ததால் ‘பஞ்சக்காவியா’ தயாரிப்பதும் சுலபமாக இருந்தது.

வாழைத் தோப்பும், பப்பாளி மரங்களும், நெற்பயிரும் தனித்தனியாக ஒவ்வொரு ஏக்கரில் நடவு செய்தார்.

வாழையில் வரும் நூற் புழு, வேர் அழுகல் நோய்களுக்கு "கார்போபியுரான்"
போன்ற கொடிய இரசாயன விஷத்தை அடிக்கிழங்குகளில் தோய்த்து நடவு செய்யும் பழக்கம் ஊரில் பரவலாக இருந்தது. அதற்கு மாற்றாக "சூடோ மோனாஸ்" என்ற இயற்கை நூண்ணுயிர்க் கலவையை நீரில் கரைத்து வாழைக்கன்றுகளின் அடிக்கிழங்குகளை அதில் தோய்த்து ஊறவைத்து தயாளன் நட்டார்.

பப்பாளி, வாழைத் தோட்டங்களில் ஊடுபயிராக 80 நாட்களில் பலன் தரும் உளுந்து, பாசிப் பயிறை விதைத்தார். அவைகள் பலனை மட்டுமல்லாமல், மண்ணில் இலட்சக்கணக்கான வேர் முண்டுகளில் உயிர்ப்பை, நைட்ரஜன் சத்தை தேக்கி மண்ணை செழுமைப்படுத்தின.

பப்பாளி மரங்கள் செழிப்புடன் வேகவேகமாக வளர்ந்தன. மற்ற மரங்கள் பல ஆண்டுகள் வளரும் உயரத்தை சில மாதங்களில் அடைந்தன‌. பப்பாளி மரங்களின் அகன்ற பச்சைப் பசேலென்ற இலைகள், நிலம் எங்கும் முழுவதும் படர்ந்து பசுமையைப் போர்த்தி குளிர்ச்சியைப் பரப்பியது.

ஆறு மாதத்தில் பெண் பப்பாளி மரங்கள் குட்டி குட்டி வெள்ளை ரோஜா மலர்களைப் போல் ஒவ்வொரு இலை கணுக்களிலும் வரிசையாய்ப் பூத்தன. ஆண் மரங்களின் கணுக்களில் கொத்து கொத்தாய் கொடி மல்லியாய் பூக்கள் நீண்ட காம்புகளின் நுனிகளில் அடர்ந்து காணப்பட்டன. வயலுக்கு சிறிது தூரத்தில் வரும்பொழுது பப்பாளிப் பூக்களின் நறுமணம் காற்றில் பரவி இருப்பதை அனைவரும் உணர முடிந்தது.

நிழல் விரித்த குட்டை மரங்களில் இடையில் நுழைந்தும் தேனீக்களும், வண்டுகளும் பூக்களின் தேனை பருகி ரீங்காரிக்கும் இசைச்சுரங்களின் கூட்டிசைவை தெளிவாக தயாளன் உணர்ந்தார். வண்ண வண்ண தேன்சிட்டுக்கள் அதிவேகமாக சிறகுகளை விரிந்து மடிந்து பாடித் திரிந்து கொண்டிருந்தன. இசை நாடகங்களுக்கான ஒத்திகைகள் மூலைக்கு மூலை பப்பாளி தோட்டத்தில் அரங்கேறிக் கொண்டிருந்தன. பலவித பறவைகள், பூச்சி இனங்கள் மகிழ் நடனத்துடன் ஆடுவதும் இரசிப்பதுவுமாய் அந்த தோட்டம் கொண்டாட்டங்களால் நிறைந்திருந்தது.

சில நாட்கள் கழித்த பிறகு கூட்டமாய் கறுப்பு கட்டெறும்புகள் மரங்களிலும், தரையிலும் சாரை சாரையாய் ஊர்ந்து கொண்டிருந்தன. பப்பாளி காய்களில் வெள்ளை வெள்ளை திட்டுகள் தோன்றின. அது என்ன என்று தயாளன் புரிந்து கொள்வதற்குள் … ஒரிரு நாட்களில்… இலைகள், காய்கள் முழுவதும் வெள்ளைமாவு பூச்சிகள் பல்கிப் பெருகி விட்டன. தோட்டம் முழுவதும் சோகைபிடித்து குன்றிப் போய் விட்டது.

ஊர்ந்து செல்லும் தன்மை கொண்ட இந்த மாவு வெள்ளைப் பூச்சிகள் மிகவும் இனிப்பானதொரு மெழுகு போன்ற பசை திரவத்தை தனது உடலில் சுரக்கின்றன. இந்த இனிப்பு சுவை கட்டெறும்புகளை கூட்டம் கூட்டமாய் ஈர்த்தன. இந்த கட்டெறும்புகளின் உடல்களில், கால்களில் சின்ன சின்ன அந்தப் பூச்சிகள் ஒட்டிக் கொண்டு ஓரிடத்தில் இருந்து ஒரிடத்திற்கு, ஒரு மரத்தில் இருந்த இன்னொரு மரத்திற்கு வேகமாக‌ பரவிக் கொண்டிருந்தன.

வெள்ளைப் பூச்சிகள் காய்களில்.. இலைகளில் ஒட்டிக் கொண்டு சாற்றை உறிஞ்சி கறுத்துப் போகச் செய்து விட்டன. மெல்ல மெல்ல ஊர்ந்து வளர்ந்து பரவும் இந்த மாவுப் பூச்சிகளும், அதை வேகமாகப் பரப்பும் கட்டெறும்புகளும் கனமழை வந்தால் அடித்துக் கொண்டு காணாமல் போய் விடும் என்று சில விவசாயிகள் தயாளனிடம் கூறினார்கள். மழை வருவது மகேசனுக்கே தெரியாத பொழுது உழவனான தயாளனுக்கு எப்படி தெரியும்? மழைக் காலம் வருவதற்கு இன்னும் சில மாதங்களாவது ஆகும். உரக்கடைக்களுக்கு சென்றால் கொடிய இராசயன நஞ்சு பூச்சிக்கொல்லிகளை பரிந்துரைக்கின்றார்கள்.

மீண்டும் பழையபடி இராசயன விவசாயத்திற்கு மாறுவதா என்று மன குழப்பத்துடன் தயாளன் வீடு வந்து சேர்ந்தார். வரித்துக் கொண்ட இலட்சியம் காணாமல் போய் விடுமோ என்ற அச்சம் அவர் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

நண்பன் வேலு தான் மீண்டும் அவருக்கு கை கொடுத்தார். அவன் பரிந்துரைத்தபடி, இயற்கை உயிர் உரங்கள், இயற்கை பூச்சிக் கொல்லிகள், நோய்த் தடுப்பு தயாரிக்கும் சிறிய தொழிற்கூடத்திற்கு சென்றார். மிகவும் கெட்டியான பசையை அய்ந்து கிலோக்கள் வாங்கி வந்தான். ஒவ்வொரு பப்பாளி மரத்தைச் சுற்றி நான்கு விரல்கள் அளவிற்கு பசை வளையத்தை தயாளனும் அவர் மனைவியும் உருவாக்கினர். பசையினால் ஓட்டிக் கொண்ட விரல்களை மண்ணெண்ணெயில் கழுவிய பிறகே பிய்க்க முடிந்தது. நிறைய கட்டெறும்புகள் மரங்களின் அந்த பசை வளையங்களில் சிக்கி நகர முடியாமல் செத்தொழிந்தன.

மாவு வெள்ளைப் பூச்சிகளை உண்ணும் ஒருவகையான இயற்கை ஒட்டுண்ணி திரவத்தை அந்த சிறிய தொழிற்கூடத்தில் தந்தார்கள். அதனுடன் பால், வேப்பண்ணைய், தண்ணீர் கலந்து விசைத்தெளிப்பான் மூலம் பப்பாளி இலைகள், காய்கள் நன்கு நனையும் அளவிற்கு தயாளன் தெளித்தார்.

படிப்படியாக சில நாட்களுக்குள் வெள்ளைப் பூச்சிகள் கட்டுக்குள் வந்தன. பப்பாளி தோட்டத்தில் மீண்டும் இசை நாடக மேடைகள் அரங்கேறி ஆர்ப்பரித்தன. வாழை மரங்களில் குலை தள்ளவதற்கு அறிகுறியாக சிறிய கண்ணாடி இலைகள் வெளிவரத் தொடங்கின. பப்பாளி காய்கள் முற்றி இலேசான பசுமை கலந்த இளமஞ்சள் நிறமாக மாறின. செங்காய் பருவத்தில் இருந்த பப்பாளியைப் பறிந்து குலதெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும் சர்க்கரைப் பொங்கல் வைத்து படையல் போட்டார்.

மறுநாள் ஒரு கூடை நிறைய செங்காய்களை பறித்தார். அவரது டிவிஎஸ் சூப்பர் எக்ஸ்.எல் வண்டியின் பின்புற சீட்டு எடுக்கப்பட்டு அதற்கு மாறாக கூடை வைப்பதற்கான வசதி செய்யப்பட்டு இருந்தது.

இரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பேருராட்சி நகரத்திற்கு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றார். அங்குள்ள பல காய்கறி, பழக் கடைகள் தயாளனுக்கு பழக்கானமானவைகளாக இருந்தன. கத்தரிக்காய், மிளகாய், பீர்க்கங்காய், சுரக்காய் மற்றும் பலவகை கீரைகள் … என்று தயாளன் கிராமம் பயிரிடும் பொழுது இங்குள்ள வியாபாரிகள் சைக்களிலும், தலைசுமையாகவும் வந்து வாங்கிச் சென்ற காலம் ஒன்று இருந்தது. இன்று ஆர்டர் செய்தால் டெம்போவில் மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து வந்து இறங்கி விடுகிறது. அதனால் விவசாயிகள்தான் சில்லறை வியாபாரிகள், மொத்த வியாபாரிகளுக்கு கொண்டு சென்று தாங்கள் விளைவித்த விளை பொருள்களை விற்க வேண்டி உள்ளது.

தயாளன் அந்த காய்கறிக் கடையின் முன் வண்டியை நிறுத்தினார். நடுத்தர வயதைத் தாண்டிய அந்தப் பெண்மணி தனது வாடிக்கையாளர்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்வதில் மும்முரமாக இருந்தார். அவர் கழுத்தில் தொங்கிய தாலிக்கயிறு முழுவதும் கோர்க்கப்பட்டிருந்த தங்க நாணக்குழாய்கள் தயாளன் கண்ணை உறுத்தின. தனது மனைவி கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் வெற்று மஞ்சள் கயிறு ஏனோ நினைவில் வந்து தொலைத்தது. பல ஆண்டுகளுக்கு முன் இந்த காய்கறி விற்பவரும் அவரது கணவனும் அதிகாலையில் நடந்து வந்து தங்களது தோட்டத்தில் கத்திரிக்காய்களை பறித்து எடை போட்டு மூட்டைகளாய் தலையில் சுமந்து சென்றதும் கூடவே நினைவில் வந்து தொலைத்தது. வியாபாரிகள் வசதியாகதான் இருக்கிறார்கள் போல…

"பப்பாளி பழம் வாங்கிக்கிறீயம்மா.." என்று இரண்டு பப்பாளி பழங்களை நீட்டினார்.

அந்த அம்மாள் பழத்தை கையில் வாங்கக் கூடவில்லை.

"இன்னா ..இது காய யடுத்தாந்து பயம் ங்கிறீங்களே.."

"இல்ல..இது பழந்தாம்மா.. அறுத்துப்பாரு.."

அந்த அம்மா அதை அறுத்துப் பார்த்தார். அப்படி ஒரு சிகப்பு நிறத்தில் அறுத்த பப்பாளி பழம் ஜொலித்தது.

"தேனாட்டும் தித்திக்..கும்மா.." என்றார் தயாளன்.

"ஆமா…..சர்க்கைர யாட்டும் கரையுதே.. ஆனா.." என்று இழுத்தார்.

"மஞ்சளாக கலர் பழமா இருந்தாத்தான் ..கஸ்டமருங்க பப்பாளி வாங்கு வாங்க ..இப்படி இருந்தா வாங்க மாட்டாங்க… இதோ பாரு எப்படி மஞ்சளா இருக்கு" என்று அங்கு மஞ்சள், மஞ்சளாக குவித்து வைக்கப்பட்டிருந்த பப்பாளி பழங்களில் ஒன்றை தூக்கிக் காண்பித்தார் அந்த வியாபாரி.

"மஞ்சளாவா… ! "

"உள்ளே சிகப்பாக தித்திப்பா இருக்கு..தானம்மா.. வெளியே எப்படி இருந்தா இன்னா..?"

"உள்ளே யாரு பாக்கிறாங்க முதலாலி…. பார்க்க மஞ்சளா.. பளபளன்னு இருக்கனும் அப்பத்தான் வாங்குவாங்க..இல்லாட்டி விக்காது.." என்றார் அந்த அம்மா.

"பளபள மஞ்சளுக்கு… நா எங்க போவது.." என்று முணுமுணுத்துக் கொண்டே தயாளன் அடுத்த வியாபாரியிடம் சென்றார்.

ஒன்று..இரண்டு. … .. … … பத்து பன்னிரண்டு என்று வியாபாரிகளிடம் சென்று தான் கொண்டு வந்த பப்பாளிப் பழங்களை காட்டினார். எல்லாரும் ஒரே பல்லவியைப் பாடினார்கள். "மஞ்சளா.. பளபளன்னு.."

இது என்னடா மனநிலை என்று தயாளன் குழம்பினார். பக்கத்தில் இருந்த இன்னொரு சிறு நகருக்கும் சென்றார். அங்கு பார்ப்பனர்கள், மேல்தட்டு வர்க்கத்தினர் அதிகமாக இருந்ததால் பப்பாளி பழங்கள் இரண்டு மடங்கு விலை விற்றன.

அதிஷ்டம் நம் பக்கம் இருக்கிறது என்ற நினைப்போடு தயாளன் அங்கிருந்த சில பழமுதிர்சோலை பழ அங்காடிகளை அணுகினார்.. எல்லாரும் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் பப்பாளி பழங்கள் மஞ்சளாக பளபளன்னு இருக்க வேண்டும் என்றார்கள். பச்சை வாழைப்பழங்கள் கூட பழமுதிர் சோலைகளில் பளபள மஞ்சள் வாழைப்பழங்களாக அடுக்கி கிடக்கும் அதிசயத்தை கண்டு தயாளன் மிரண்டு போனார்.!

என்ன செய்வது என்று புரியாமல் திரும்பும்பொழுது… ஒரு நடைபாதை வியாபாரி அந்த ‘பளபளா மஞ்சள் மகிமை’ மர்மத்தினை தயாளனுக்குப் புரிய வைத்தார்.

"மாங்காய கல்லு போட்டு பழுக்க வெக்கிற மாதிரி செஞ்சா, இந்த மாதிரி மஞ்சள் கலர் வரும்…" என்றார்..

மாங்காய்களை செங்காயாக பறிக்காமல், அதற்கு முன்பே பறித்து கார்பைடு கல் வைத்து பழுக்க வைப்பதால் பளபள‌ப்பான மஞ்சள் மாம்பழம் கிடைக்கும். ஆனால் இப்படி செய்வது மனிதர்களுக்கு பல உடல்நலக் கோளாறுகளை வரவழைக்கும் என்பது தயாளன் உட்பட எல்லாருக்கும் தெரிந்த இரகசியம்தான்.

"பப்பாளிய காய் வாட்டம் பறித்து கல்லு மூட்டம் போடுங்க பளபளன்னு மஞ்சள் வந்துடும்.." என்று இலவச அறிவுரையையும் சேர்த்து வழங்கினார்.

பலரும் இந்த மஞ்சள் மகிமையை தான் தயாளனுக்கு விரிவாக விளக்கிச் சொன்னார்கள். வேறுசிலர் எத்தீலின் கரைசலை நிறைய தெளித்தால் கலர் கிடைக்கும் என்றனர். கார்பைடு கல் மாதிரி இதில் பெரும் தீங்கு இல்லை என்று இன்னொரு ஆலோசனையை அள்ளி விட்டனர்.

தயாளனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவருக்கு இராசயனங்களைக் கொண்டு பளப்பள மஞ்சள் கலர் உருவாக்க மனம் ஒப்பவில்லை.. செங்காயாக இல்லாமல் பறிக்கப்படும் பப்பாளி பழுத்தால் கூட இனிப்பாக இல்லாமல் சல்லென்று சுவை அற்று இருப்பதை அனுபவத்தில் கண்டவர்.

மறுநாள் கூடை நிறைய இலேசான பசும்மஞ்சளான செங்காய்களை கூடை நிறைய பறித்துக் கொண்டு போய் மீண்டும் வியாபாரிகளை அணுகினார்.

வியாபாரிகள் மீண்டும் மீண்டும் வாங்க மறுத்தனர். பளபள மஞ்சள் கலர் பழங்களைத்தான் மக்கள் வாங்குகிறார்கள் என்று தயாளனை அவமானப்படுத்தி விட்டனர்.
இங்கேயும் அங்கேயும் அலைந்து நொந்து விட்டு கடைசியில் அவர் கிராமத்தில் இருந்து வந்து கீரை விற்கும் ஒர் அம்மாளிடம் ஸ்கூட்டரில் இருந்த கூடையை இறக்கி வைத்தார்.
அவரும்கூட வாங்க மறுத்தார்.

"வேண்டாத வேலை.." என்று தயாளனை அந்த அம்மாள் மேலும் கீழும் அலட்சியமாகப் பார்த்தது. தலையை தாழ்த்தியவாறே... "ஏதோ கொடுக்கிறத… கொடுங்க…ம்ம்மா.." என்று தாழ்ந்த குரலில் கூறிவிட்டு கூடையைக் கூட வாங்காமல் வருத்தத்துடன் திரும்பினார்.

சோர்வு தயாளனை அழுத்தியது. ஒர் ஆண்டாக அவரும் அவர் மனைவியும் பட்ட பலன் வீணாகி விடுமே என்ற மனக்குழப்பம் வாட்டியது.

இயற்கையில் வரும் பசும் மஞ்சளை விட இரசாயனக் கல் வைத்த பளபள மஞ்சள் கலர்தான் விற்கும் என்றால் என்னதான் செய்வது..?

"மஞ்சள் பெயிண்டைத்தான் அடித்து கொடுக்கனும்.."

வீட்டிலேயே படுத்து கிடந்த தயாளன் மறுநாள் மாலைதான் எழுந்து காலாற பப்பாளி தோட்டம் பக்கம் போனார்.

மாலை மங்கிக் கொண்டிருந்தது. தோட்டத்தில் நுழைந்தான். சடசடவென பலவிதமான தேன்சிட்டுகள், கருங்குயில்கள், வால்காக்கைகள், கதிர்குருவிகள், மரங்கொத்திகள், தவிட்டு குருவிகள்… என்று பல பறவைகள் குரல்கள் எழுப்பி மரத்திற்கு மரம் பறந்து கொண்டிருந்தன. அணில்கள் கீறீச்சிட்டன. அந்த இடம் முழுவதும் ஆனந்தம் பொங்கி வழிந்ததை அவரால் உணர முடிந்தது. இவைகள் தின்று மீதியாய் தொங்கிக் கிடந்த பழங்களின் இரம்மியமானதொரு மணம் புதியதொரு உயிர்ப்பைப் பரப்பிக் கொண்டிருந்தன. இந்த உயிர்ச்சூழலில் தயாளன் கரைந்து போனார்.

அன்று வேலு பரபரப்பாக தயாளனை தேடிக் கொண்டிருந்தார். வீட்டிலும், வயலிலும் என்று எங்கு தேடியும் தயாளனைக் காணவில்லை. பக்கத்து டவுனுக்கு கணவன் மனைவியும் போய் உள்ளனர் என்று யாரோ சொல்ல விரைந்தார்.

கடைத்தெருவில் இருந்த ஒரு சந்தில் தயாளன் மனைவி தரையில் கோணி சாக்கை விரிந்து அதில் அவர்கள் தோட்டத்தில் விளைந்த பசுமையும் இளம் மஞ்சளும் கலந்த பப்பாளி பழங்கள் வைத்து விற்றுக் கொண்டு இருந்தாள். பாதியாய் கத்தியால் அறியப்பட்ட இரண்டு பப்பாளி பழங்கள் உலகின் இருக்கின்ற எல்லா சிவப்பு நிறங்களையும் தோற்கடித்து சிரித்து கொண்டிருந்தன.

"எங்கம்மா தயாள‌ன்.." என்றார் வேலு.

"இரண்டு கூடைங்க வித்துடுச்சிண்ணா… தோட்டத்தில நேத்து செங்காய அறுத்து வேப்பதழைய போட்டு மூடி வைச்ச இன்னொரு கூடை செங்காய எடுத்துவர போய் இருக்கிறார்ன்னா….: என்றார். சில நிமிடங்கள் கழிந்தன. பலரும் தேடி வந்து கேட்டு அந்த பப்பாளி பழங்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

தயாளன் பழக்கூடையை தனது டிவிஎஸ் வண்டியின் பின்புற சீட்டில் இருந்து இறக்கி வைத்து விட்டு வந்தார். இயற்கை வேளாண்மையில் விளைந்த பப்பாளி பழங்கள் புன்னகைத்து கொண்டிருந்தன.

"மூணு நாளுக்கு ஒரு தரம் கடை விரித்தால்கூட போதும்.. உடனே எல்லாம் வித்து விடுதுப்பா.. நிறைய பேரு தேடி வந்து நம்மாழ்வார் பழங்களை வாங்கிட்டு போறாங்க.. வா வா போய் சுக்கு மல்லி டீ சாப்பிடலாம் .." என்று நண்பனை மகிழ்ச்சி பொங்க தயாளன் அழைத்தார்.

நண்பனுக்கு எப்படி அந்த செய்தியை சொல்வது என்று அவருக்குப் புரியவில்லை. வேலு கண்களில் கண்ணீர் துளிர்த்தன.

என்னவென்று புரியாமல் தயாளன் விழிந்தார்.

"நம்ம அய்யா ..நம்மாழ்வார் காலமாகி விட்டாருடா.."

- கி.நடராசன்.(9840855078)

Pin It