தமிழ்நாட்டில் அதிகமாக தவறு செய்த ஒரு அரசியல்வாதியை உயிருடன் எமதூதர்கள் மேலுலகுக்கு அழைத்து செல்கின்றனர். விசாரணை நாள் வந்தது. எமன் தனது அரியனையில் கம்பீரத்தடன் அமர்கிறார்.
"ம் இன்று என்ன வழக்கு"
சித்ரகுப்தன் தலைதாழ்ந்து பவ்யமாக கூறுகிறார்.
"எமதர்மரே, இதோ இந்த மனிதன், தமிழ் மொழியை காக்கிறேன் என்ற பெயரில் பல தவறுகளை செய்துவிட்டான்"
"என்னென்ன தவறுகளை செய்திருக்கிறான்"
"98 சினிமா பேனர்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன, 120 கட்அவுட்கள் சாய்க்கப்பட்டுள்ளன, 14 சினிமா திரைகள் பிளேடு போடப்பட்டுள்ளன"
"பிளேடு என்றால் என்ன சித்ரகுப்தா"
"அது ஒரு கூரிய ஆயுதம் அரசே"
"சரி மேலும் கூறு"
"22 சினிமா தயாரிப்பாளர்கள் கடத்தப்பட்டனர், சினிமா எதிர்ப்புp பேரணிகள் என்ற பெயரில் டிராபிக் செய்ததில் 2 கர்ப்பிணிப் வெண்கள் உயிரை விட்டுள்ளனர் மற்றும் கலவர நேரங்களில் 8 ஆண்கள் உயிரை விட்டுள்ளனர்
"நிறுத்து சித்ரகுப்தா, என்ன எல்லாம் சினிமா சினிமா என்றே வருகிறது. தமிழ் மொழிக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது சித்ரகுப்தா"
“அரசே அதை நான் இவரிடம் பலமுறை கேட்டுவிட்டேன். ஒவ்வொரு முறையும் என்னை குழப்புகிறார். என்னை குழப்பிய வகையில் எழுத்து வேலை பெண்டிங் நிறைய உள்ளது. ஆகவே தாங்கள் இந்த வழக்கில் நேரடியாக ஆஜராகி உடனடி முடிவெடுத்து தண்டனை வழங்க வேண்டும்.”
"சரி இன்றிலிருந்து இந்த மனிதன் சுத்தமான தமிழ் மொழியிலேயே பேச வேண்டும். மாற்று மொழியை உபயோகித்துப் பேசினால், எண்ணெய் சட்டியில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் வறுத்தெடு"
"உங்கள் கட்டளை அரசே"
அரசியல்வாதியை எமதூதர்கள் பூமிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர்.
அரசியல்வாதி நேராக தன் வீட்டுக்குச் சென்றார். ஒரு கத்தியை எடுத்து தனது நாக்கை வெட்டிக் கொண்டார்.
- சூர்யா