அழைப்பு மணி அடித்தது; நாங்கள் அப்பொழுதுதான் புதிதாக வீடுகட்டி நகர்க்குப் புறத்தில் குடி வந்திருந்தோம்; ஜன்னல் வழியாக யாரென்று பார்க்காமல் கதவைத் திறப்பதில்லை என்று பழக்கப்படுத்தப்பட்டிருந்தோம். நான்தான் ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தேன்; என் பழைய மாணவர் நின்று கொண்டிருந்தார்; ஆசையோடு வரவேற்று உள்ளே அழைத்து ‘உட்காருங்கள்’ என்றேன்; ‘பிளாஸ்டிக் நாற்காலி’ புதிதாக வந்த காலம்; ‘நாற்காலியிலும் பிளாஸ்டிக்கா’ என்று ஒரு பார்வையை வீசிவிட்டு அவர் அமர்வது போல எனக்குப்பட்டது;

man 340வாங்க! நரேந்திரன்; என்ன இவ்வளவு தூரம்?

ஒன்னுமில்ல சார்; சும்மாதான்;

எப்படி இருக்கீங்க?

செஞ்சி மலையில இருந்து வர்றேன் சார்; ஒங்களப் பாக்கணும்னு தோணுச்சி.

என்ன மலைக்குத் திடீர்ன்னு?

தற்கொல பண்ணிக்கிடத்தான்.

இதுவரைக்கும் ஹால்ல குழந்தைகள் சிதறிப்போட்ட அதையும் இதையும் எடுத்து ஒழுங்கு பண்ணிக்கொண்டே பேசியவன், அப்படியே நின்று அவரைப் பார்த்தேன்; அவர் சிரித்துக் கொண்டே சொன்னார்; சில பேர் சிரிப்பது அழுவது மாதிரி முகத்தில் படரும்; சுரேந்திரன் சிரிப்பு படிக்கிற அந்தக் காலத்திலேயே அப்படிப்பட்டது.

ஆமா! சார்! தற்கொல பண்ணிக்கிடணும்னுதான் உச்சிமலைக்குப் போய்விட்டேன்; விழுவதற்கு முன்னாடி, நாம எப்படி கீழ உருண்டு போவோம் பாக்கலாமேன்னு ஒரு பெரிய கல்லத் தூக்கி உருட்டி உட்டேன்; அது உருண்டு உடைஞ்சு போவதப் பாத்தவுடன், “இப்படி, இந்தக் கல்லு மாதிரி சிதறிப் போகவா இந்த உயிரும் உடம்பும்; உயிரும் உடம்பும் வெறுங்கல்லர் இல்ல! இல்ல!”-இப்படி சொல்லிக்கிட்டே கீழ இறங்கி வந்திட்டேன். கீழ வந்தவுடன் உங்க நினப்ப வந்தது; ஒங்களப் பாக்கணும்னு தோணுச்சி. நீங்க வகுப்பில அடிக்கடிச் சொல்லுவீங்களே அந்த வசனத்தையும் வாய் சொல்லிச்சு; “இந்த நாசகார வாழ்க்கையில தற்கொல பண்ணிக்கிடாம ஒவ்வொரு நாளும் மூச்சப் பிடிச்சுக்கிட்டு வாழ்ந்து தீர்ப்பதே பெரிய தியாகம்தான். அந்தத் தியாகத்தைத் தொடர்வோமேன்னு திரும்பிட்டேன்”

நரேந்திரன் என் முதல் மாணவர்; காரையில் கல்லூரி ஆசிரியராகச் சேர்ந்தவுடன், தமிழ் இலக்கிய இளங்கலை (பி.ஏ) மாணவர்களுக்கு வகுப்பெடுக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது; திருக்குறள் நடத்தினேன்; மூன்று பெண்கள்; 8 ஆண்களென்று அந்த வகுப்பில் 11-பேர் படித்தனர்; நரேந்திரன் எனக்குப் பிடித்த மாணவர்; நெற்றி நிறைய திருநீர் பூசிக் கொண்டு, சுருட்ட முடி அழகு காட்ட விரிந்த மார்போடு அமைதியாய் அவர் வகுப்பிற்கு வந்து போவதை நான் இரசித்திருக்கிறேன்; அதைவிட ஆசிரியரின் ஒற்றைக் குரல் மட்டும் ஓங்கவிடாமல் தொடர்ந்து வினாக்கள் கேட்பதன் மூலம் ஒருவிதமான கலந்துரையாடலாக வகுப்பறையை மாற்றிவிடுவதில் சுரேந்திரன் கெட்டிக்காரராக இருந்தார். சில ஆசிரியர்களுக்கு மாணவர்கள் வினா கேட்டாலே பிடிக்காது; இப்படித்தான் ஒருவர்; மூத்த பேராசிரியர்; இந்த மாணவரது வினாவில் சிக்கிக் கொண்டார்; “எனக்குத் தெரியாது” என்று சொன்னால் “மாணவர்கள் மத்தியில் அவமானம்” என்று கருதுகிற முட்டாள்கள்தான் அதிகம்; எனவே அவருக்குக் கோபம் வந்துவிட்டது; ‘தனக்குப் பிடிக்காத ஆசிரியர் சொல்லிக் கொடுத்துதான் கேட்கிறான்’ என்ற கோணப்புத்தியும் மூளைக்குள் ஏறி உட்கார்ந்து கொண்டது; சொல்லவா வேண்டும்? ஓடிப்போய் சுரேந்திரன் முடியை இரண்டு கையாலும் பிடித்துத் தலையை அங்கும் இங்கும் ஆட்டி, “தொலைச்சுப் புடுவேண்டா தொலைச்சி!” என்று கத்திவிட்டார்; இவ்வளவுக்கும் அவர் எல்லாவற்றையும் கேள்வி கேட்கச் சொல்லும் பெரியாரின் தொண்டன் என்று கருப்புச்சட்டை வேறு போட்டுக் கொள்வார்; எப்பொழுதுமே எதிரானவர்களைவிட, இப்படித் தொண்டர் என்று சொல்லிக் கொள்பவர்களால்தான் தலைவர்களின் கொள்கைகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகின்றன்

அவர் கத்தின கத்தில் பிறதுறை மாணவர்கள் எல்லோரும் ஓடிவந்துவிட்டனர்; பிரச்சனை ஆகிவிட்டது; மாணவர் தலைவர் வந்துவிட்டார்; “கம்பிளையண்ட்” கொடு! இந்த ஆள உண்டா இல்லையான்னு பாத்திடலாம்ன்”னு நிக்கிறார்; ஆனால் சுரேந்திரன் மறுத்துவி;ட்டார்; அங்கேதான் சுரேந்திரன், மாணவர் என்பதையும் தாண்டி ‘சிறந்த மனிதாபிமானி’யாக உயர்ந்து நின்றதைக் கண்டு கொண்டேன்; “என்ன இருந்தாலும் எனக்கு அவர் ஆசிரியர்; ஒன்னும் வேண்டாம்; ஸ்ட்ரைக்கும் வேண்டாம்; மன்னிப்பும் வேண்டாம்; அவருக்கு என்மேல் உரிமை இருக்கிறது” தி.மு.க மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னிறுத்தி ஆட்சியைப் பிடித்த காலம்; எனவே மாணவர்களின் அதிகாரம் கொடிகட்டிப் பறந்த காலம் என்பதையும் இந்த இடத்தில் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். மூன்று ஆண்டுகள் இளங்கலைப் பட்டம் முடித்துப் போகும் போது சுரேந்திரன் நெற்றியில் திருநீறு இல்லை; என்ன காரணம் என்று கேட்டதற்குத் கேள்விப்பட்டேன்.

அந்த மூன்றாண்டில் மற்றொரு விபத்தும் அவர் வாழ்க்கையில் நடந்தது; அதுதான் காதல்; அந்தப் பொண்ணு ‘வரலாறு’ படித்தது; அழகாக இருக்கும்; எனவே ஓர் அழகான சுரேந்திரனை வலைவீசிப் பிடித்து விட்டது; உண்மையில் இவர் பயந்தார்; போன தலைமுறையில் கேரளாவிலிருந்து இங்கே பிழைப்பதற்காகக் குடிவந்த ஒற்றைக்குடும்பம்; எனவே, காதல், அடிதடி என்று வந்தால் பாதிக்கப்படுவோம் என்கிற யதார்த்தம் இவருக்குத் தெரிந்திருந்தது. அந்தப் பொண்ணு விடவில்லை; வேறு வழியில்லை; எத்துணையோ எதிர்ப்புக்கள், கொலை மிரட்டல் தாண்டிப் பதிவுத் திருமணம் நடந்தேறியது; ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால் அதன் பெயர் என்ன? காதல் என்று கண்ணதாசன் கட்டிய சொல் உன்னதம். ஒருவன் ஒருத்தியை நினைத்து விட்டால் அது காதல் அல்ல் கைக்கிளை என்கிறது தொல்காப்பிய மரபு. அதற்குப் பிறகு நான் புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்துவிட்டேன்.

ஆனால் பெரிதும் மனித உறவுகளைப் பொத்திப் பேணத் தெரியாத என்னோடும் அவர் தொடர்ந்து உறவு கொண்டிருந்தார்; குடும்ப வாழ்க்கை குறித்துப் பெரிதும் பேச மாட்டார்; வறுமை, பட்டினிச்சாவு இன்னும் இந்த வளமான பூமியில் இருப்பதற்கான ஞாயம் என்ன சார்? எனத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். அதுதானே மனிதர்களைப் பிடித்தாட்டும் எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர் என்பது அவரது தீர்க்கமான முடிவாக இருந்தது. உலக அரசியல், வாழ்வெனும் அபத்தம், அது நிகழ்த்திக் காட்டும் துன்ப நாடகம் என்பதுதான் அவரோடு கூடிய உரையாடலாக இருக்கும்; மார்க்சியத்தை ஆழமாக அறிந்து கொள்ள வேண்டுமென்று கோவை ஞானியைத் தேடிக் கோயம்புத்தூருக்கே இடம்பெயர்ந்தார் என்றால் மனிதர் எப்படிப்பட்ட ஆளாக இருப்பார் என்பதை நீங்கள் ய+கித்துக் கொள்ளலாம்; எதனாலும் நிறைவு அடையாது அதிருப்தியின் வேட்டைப்பொருளாகத் திரிந்தார்.

காதலித்துக் கைப்பிடித்த மனைவியோ அப்படியே நேர்மாறு; சாதாரணப் பெண்களுக்கே உரிய நகை நட்டு, சேலை துணிமணி, குடும்பம் உறவு என்று வாழ்வை வழக்கமான பாதையிலேயே கொண்டு செல்ல விரும்புகிற பெண்; ‘பணத்தைக் கொண்டுவா’ அப்பொழுதுதான் கணவன், காதலன் என்பதெல்லாம்; இப்படிப் புத்தகம் படிப்பு, கொள்கை தத்துவம் என்பதெல்லதாம் சோறு போடுமா? ஊர்ல எல்லாரையும் போலப் பிழைப்பதற்கு வழியைப்பார் என்பதுதான் அந்தப் பெண்ணின் அன்றாட அறிக்கையாக இருந்தது; சொல்ல வேண்டுமா? ‘வீடு’ என்பது இருவருக்கும் பாம்போடு உறையும் குடம்பர்’ ஆயிற்று! இதற்கிடையில் பச்சைக்கிளி போல இரண்டு அழகான பெண் குழந்தைகள்.

ஒருநாள் காரையிலிருந்து நண்பர்கள் ‘போன்’ பண்ணினார்கள்; “நீங்கள் உடனே புறப்பட்டு வரவேண்டும்; இங்கே உங்கள் மாணவர் சுரேந்திரன் மனைவி ‘தற்கொலை’ செய்து கொண்டார்கள்! உடனே வாருங்கள்! போனை வைத்து விட்டார்கள்; போய்ப் பார்த்தால் கொடூரம்! ஆண்-பெண் இருவருக்குமான சண்டை, எத்தகைய உச்சத்தை எல்லாம் எட்டும் என்பதற்கான சாட்சியாய் அந்தக் காட்சி! அந்தப் பெண் அந்த இரண்டு பெண் குழந்தைகளையும் கட்டிப் பிடித்துக் கொண்டு மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டுள்ளது; பெரிய பொண்ணு வெப்பம் பரவியவுடன் தாங்கமுடியாமல் திமிறிக் கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டாள்.

எப்படி ஆறுதல் கூறுவது? சுரேந்திரன் நான் போய்ச் சேர்ந்தவுடன் கட்டிப் பிடித்துக் கொண்டு சார்! சார்! என்று ஏங்கி ஏங்கி அழுதார்; நான் வார்த்தை வராமல் அழுதபடி நின்றேன்; இந்த மாதிரியான சூழ்நிலைகளில் நான் பெரும்பாலும் ‘மௌனத்தையே’ பிடித்துக் கொள்வேன். வாழ்வின் மைதானத்தில் பந்து போல வதைபடும் மாணவர்களை எதிர்கொள்ள நேரும்போது உள்ளம் பெரிதும் ஒடிந்துதான் போகிறது; இளமை ததும்பும் குறும்புகளோடு அறிமுகமான மாணவர்கள், வாழ்வின் துக்க வெள்ளத்தில் சிக்கித் துரும்பாய்த் துடிக்க நேர்வதைப் பார்க்கும் போது ஆசிரியன் என்கிற முறையில் நமக்குள் புறப்பட்டு வருகிற துயரம் எதிலும் சேராத ஒன்றாகத் தனித்து நிற்கிறது. சுரேந்திரன் இந்தக் காலகட்டத்தில்தான் செஞ்சிமலை ஏறியது; என்னை வந்து பார்த்தது.

இரண்டாண்டு கூட ஆகி இருக்கிறது; சுரேந்திரனிடமிருந்து ஒரு மடல்; இரண்டாவது திருமணம் செய்ய விரும்புவதாகவும் எழுதியிருந்தார்; இரவு முழுவதும் தூக்கமில்லை; துன்பமுற்றேன்; நெருப்புக்குளியலில் இருந்து தப்பித்த அந்தச் சிறுமி, சித்திக் கொடுமை என்கிற மற்றொரு நெருப்பில் உயிரோடு குளிக்கத்தானா? என்ன பதில் எழுதுவதென்றே தெரியவில்லை; எப்பொழுது இரண்டாவது திருமணம் குறித்த எண்ணம் வந்துவிட்டதோ அதைத் தவிர்க்க முடியாது; மேலும் தான் திருமணம் முடிக்கப் போகும் அந்தப் பெண்ணே விரும்பி வருவதாகவும், கூட இருக்கும் அம்மாவிற்கும் இதில் விருப்பம் என்றும் எழுதியிருந்தார்; எனவே நான் “யோசித்துச் செய்யுங்கள்” என்று மட்டும் எழுதியிருந்தேன். நான் நினைத்தபடியே திருமணம் முடிந்தது; ஆனால் சித்திக் கொடுமை இல்லை என்கிற செய்தி எனக்கு ஆறுதலாக இருந்தது.

“அவர் நடத்திக் கொண்டிருந்த டீக்கடை எரிந்து விட்டது; நண்பர்கள் நாங்கள் அவருக்காகப் பணம் திரட்டுகிறோம்; நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்” என்று ஒரு மடல்; நானும் பணம் அனுப்பி வைத்தேன். இதற்கிடையில் எனக்கு மீண்டும் மாற்றலாகி காரைக்கே போய்ச் சேர்ந்தேன்; அந்த இரண்டு ஆண்டும் ‘என் சுரேந்திரனுடன்’ மீண்டும் அறிவார்ந்த உரையாடல்கள் தொடர்ந்தன. இப்பொழுது ஓஸோவினுடைய அத்தனை புத்தகங்களையும் வாங்கி வைத்திருந்தார். ஓஸோவின் சீடராகி இருந்தார்; படித்தோம்; பேசினோம்; சில யோகப் பயிற்சிகளையும் கற்றுத் தந்தார். கடல் அலை கேட்கும் அளவிற்குக் கடலை ஒட்டிய வாடகை வீடு; பெரும்பாலும் மாலை நேரம் வந்து விடுவார்; அலைகள் போன்றே பேச்சு; பேச்சு! இப்பொழுது என் மாணவர் என்னைத் தாண்டி எங்கோ போய்விட்டார் என்பதை உணர்ந்தேன்; கேரளா, திருவண்ணாமலை என்று ஒவ்வொரு ஆசிரமமாகப் போய்ச் சுற்றியுள்ளார்; ‘ஒரு நாலு ஏக்கர் போதும் சார்’ ஓர் ஆசிரமம் அமைத்து, உலக அமைதிக்குத் தியானம் செய்யலாம்; வழிகாட்டலாம்; பணம் சம்பாதிக்காம விட்டது எவ்வளவு முட்டாள்தனம் என்பது இப்பத்தான் எனக்குத் தெரியுது சார்; நாலு ஏக்கர் வாங்க முடியாதே!” என்பதாக அவருடைய உரையால் தொடர்ந்தது.

மீண்டும் நான் புதுச்சேரிக்கு வந்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் ஒரு புத்தகம்; “மகான் துறவி ஜீவ பிரமோத்’ என்ற பெயரில் காரையிலிருந்து எனக்கு வந்தது; அது ஆன்மீகப் புத்தகம்; பெயரைப் பார்த்து, யார் இதை எனக்கு நமக்கு அனுப்பி இருப்பது” என்ற யோசனையோடு புத்தகத்தைப் புரட்டினேன்; தெரியவில்லை; பின் அட்டையைப் பார்த்தேன்; அடர்த்தியான தாடி வளர்த்த ஒரு துறவி! உற்றுப் பார்த்தபிறகுதான் தெரிந்தது அது என் மாணவர்தான் என்று. நான் பதில் போடவில்லை; அவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்றே நம்பினேன்.

ஒருநாள் அங்கே ஒரு கூட்டத்தில் “இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே” என்று பேசிவிட்டுப் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்; “சுரேந்திரன் கூட்டத்திற்கு வரவில்லையே; எப்படி இருக்கிறார்? என்று நண்பர்களிடம் கேட்டேன்; அவர் “பக்க வாதத்தில் படுத்துக் கிடக்கிறார்; பொண்ணுதான் அப்பாவைப் பார்த்துக் கொள்ளுகிறது” என்றார்கள்.

‘ஐயோ! முன்னமே தெரிந்திருந்தால் பார்த்திட்டுப் போயிருக்கலாமே’

என்று கூறிக்கொண்டே பஸ் ஏறிவிட்டேன்; ஒரு இரண்டு மாதம் கூட ஆகி இருக்கிறது. சாவுச் செய்தி வந்து என்னைப் பெரிதாக மோதியது.

‘அடடா! அன்னைக்குப் பாத்திட்டே பஸ் ஏறியிருக்கலாமே? குற்றஉணர்வு கூர்மையாகக் குத்திக் கொண்டே இருக்கிறது. ஆனாலும் ஓஸோ குறித்துத் தேடலோடு கூடிய கூர்மையான கண்களோடு பேசிய அந்த உருவத்தை பக்கவாதத்தால் எலும்பும் தோலுமாகக் கிடந்த அந்த உருவம் அழித்திருக்குமே; பார்க்காமல் பஸ் ஏறியது ஒருவகையில் நல்லதுதான் என்றும் மனம் ஆறுதல் கொள்ளுகிறது.

- க.பஞ்சாங்கம், புதுச்சேரி-8 (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It