விஷ்ணுவர்த்தனின் பிடரி மயிர்கள் குத்திற்று நின்றன. நாசிகள் விரிந்து சுவாசம் உஷ்ணமாய் வெளிப்பட்டது. நெஞ்சு பொருமியது. "இந்த சுண்டக்காய் பயல்களுக்கு என்ன துணிச்சல்? நன்றி கெட்ட ஜாதி", என்று பற்களை கடித்துக் கொண்டார். மாடி ஜன்னல் வழியாக கீழே மௌண்ட் ரோட்டில் கார்கள் எறும்புபோல் ஊர்வது தெரிந்தது. கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு தான் மூழ்கியிருந்த எண்ணங்களிலிருந்து விடுபட்டார்.

"உள்ளே வரலமா?" என்று ஒரு பெண் குரல் மென்மையாக‌ ஒலித்தது. பதிலுக்குக் காத்திராமல் கதவைப் பாதி திறந்து கொண்டு ஒரு பெண் முகம் எட்டிப்பார்தது.

"நமஸ்காரம், வரணும், வரணும்!". ஒரு நீண்ட ஒரு புன்சிரிப்பை வரவழைத்துக் கொண்டு வரவேற்றார்.

"என்ன, திடீரென்று இன்றைக்கு உங்க நாவில் தமிழ் தண்டவமாடுகிறது?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் வைஷ்ணவி.

"நீங்க நம்ம பொண்ணு, உங்களக் கண்டதும் தானா தமிழ் வந்துட்டுது"

பத்திரிகை உலகில் மிகப் பெரிய புள்ளியாக கருதப்பட்ட அவரை உன்னிப்பாக கவனித்தார் வைஷ்ணவி. அவர் திரும்பியபோது தொளதொளவென்ற ஊளைச் சதை வயிற்றிலும் நெஞ்சிலும் சுயாதீனமாக மேலும் கீழும் ஆடி அசைந்தது. தொந்தி மேலே நெஞ்சிக்குழிவரை எட்டியும், கீழே கால்சட்டைப் பட்டிக்கு மேல் மடிந்தும் தொங்கிக் கொண்டிருந்தது. கழுத்திலும் மூன்று மடிப்புகள். பார்க்க வினோதமாய் இருந்தது. தலை 'டை' போடப்பட்டு முடி கருமையாய் இருந்தது. ஆனால் கைகளில் மொசமொசவென்றிருந்த ரோமம் நரைத்து, வெண்மையாய், விகாரமாகக் காட்சியளித்தது. இந்த முரண்பாட்டை அவர் கவனித்தாகத் தெரியவில்லை.

"எடிட்டர் உங்கள வந்து பாக்கச் சொன்னார். புரொஜெக்ட இன்னும் தொடங்ல. உங்களோட அத டிஸ்கஸ் பண்ணலாம்னு வந்தேன்"

"யாரு, நம்ம ராவண்னா கினாவா? நா வெறும் செய்தி பத்திகை நடத்துறவன், அவனைப்போல இலக்கியப் பத்திரிகை ஆசிரியர் இல்ல."

"சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றீங்க. உங்களுக்கு பத்திரிகை உலகத்துல இருக்கிற செல்வாக்கு யாருக்கு இருக்கு? சும்மாவா உங்களுக்கு மவுண்ட் ரோடு பிரம்மான்னு பேர் வைச்சியிருக்கிறாங்க".

விஷ்ணுவர்த்தன் அப்புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டதுபோல புன்முறுவல் செய்தார். அவர் ஒரு செய்திப் பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தாலும், திரைக்குப் பின்னால் அரசியல் பேரம் நடத்ததுவதும், அரசியல்வாதிகளோடும் அதிகாரிகளோடும் ஒட்டி உறவாடுவதும், சமயாசமயங்களில் உளவுத்துறையோடு உயர்மட்டத்தில் 'செய்திகள்' பரிமாறிக் கொள்வதும் பத்திரிகை உலகில் விஷயம் தெரிந்தவர்கள் மத்தியில் பிரபல்யமாகியிருந்தது. அவர் அதைப் பொருட்படுத்தியாகத் தெரியவில்லை.

"பேஷா பேசுவோம், பேசிட்டா போச்சு" என்றவர் முகத்தைக் கடுமையாக்கிக்கொண்டு, "நீங்க சமீபத்துல சீக்கியர்களோட கலவரத்த வைச்சு எழுதின நாவல் பத்தி நன்னா பேசிக்கிறாங்க. விமர்சனமும் பாத்தேன். இங்கிலிஷ்லயும் வந்திருக்கு. அதைப் பார்ததும் ஒரு ஐடியா தோணிட்டுது. நீங்க ஏன் சிலோன் பிரச்சினைய வைத்து ஒரு கதை எழுதக்கூடாதுன்னு. ரானா கினா அதை 'வால்மீகி'ல தொடர் கதையா வெளியிடலாம்ன்னு சொன்னார்".

இதைக் கேட்டதும் அது வரை இருட்டில் இருந்த சிலை மீது திடீரென்று மின்னல் பளிச்சிட்டு அதன் நிழலுருவத்தைக் கோடிட்டுக் காட்டியதைப்போல வைஷ்ணவி மனதில், "எனக்கு ஏன் இந்த ஐடியா வரவில்லை?" என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் தமிழ்நாட்டுப் பின்னணியை மட்டுமே வைத்து எழுதத் தெரிந்தவர்கள். தன்னைப்போல வெளி உலக அனுபவம் பெற்று சர்வதேச அரங்கில் காலடி எடுத்து வைக்காதவர்கள். இலங்கைப் தமிழர் பிரச்சினையை பின்புலமாக வைத்து நாவலொன்றைப் படைத்தால் தனக்கு கிடைக்கும் பெயரையும் புகழையும் எண்ணிப் பார்த்தார். ஏன், இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பாவித்துக்கொண்டால் இதுவரை தனக்கு கை நழுவிப்போன அகில இந்திய பரிசு கூட கிடைக்கலாம்.

ஆனாலும் தன் உள் உணர்வுகளை வெளியில் காட்டிக்கொள்ளாமல், "ஏன் என்னைத் தேர்ந்து எடுத்தீங்க? வை மீ?" என்று ஒன்றும் தெரியாதவர் போலக் கேட்டார்.

"இந்த சப்ஜெக்ட் பத்தி எழுத உங்கள விட யாருக்கு பாத்தியதை இருக்கு? பிரபல்யமான நாவலசிரியர், அரசியல் தெரிஞ்சவர், ஒரு காலத்துல பத்திகை ஆசிரியராக்கூட இருந்திருக்கீங்க. பஞ்சாப் படுகொலைகள் பத்தி நாவல் எழுதி பாராட்டு பெற்றிருக்கீங்க, வேற யாருக்கு இந்த க்குவோலிஃபிகேஷன் இருக்கு?"

வைஷ்ணவியின் முகத்தை அவர் இப்போது உன்னிப்போடு அவதானித்தார். பத்திரிகைகளில் வெளிவரும் படங்களில் இளமையாகவும் வசீகரமகவும் தோன்றினாலும், இப்போது நடு வயதைத் தாண்டி இருந்தமை கழுத்திலிருந்த சுருக்கங்களிருந்தும், நெற்றி ஓரங்களில் பளபளத்துக் கொண்டிருந்த நரைகளிலும் இருந்து தெரிந்தது. அவள் முகத்திலும் பேச்சிலும் இழையாடிய தன்னம்பிக்கை அவரை சற்று தடுமாறச் செய்தது. தான் சொல்லப் போவதை ஏற்றுக் கொள்வாரா என்ற சந்தேகமும் கூடவே எழுந்தது.

சென்ற வாரம் நடுநிசியில் அவரது பிரத்தியேகப் பாவனைக்காக வைத்திருந்த தொலைபேசி ஒலித்தபோது அவருக்கு 'திக்' என்றது. அவர் ஒரளவு எதிர்பார்த்ததுதான். ஆனாலும் நெஞ்சு படபடத்தது.

"ஆர் யு தெயார்?" என்றது அந்த பழக்கமான குரல்.

"வட் கென் ஐ டூ ஃபார் யூ?" என்றார் அடக்கத்துடன்.

"ஏ லோட் ….." என்று ஆரம்பித்தது அந்த நீண்ட உரையாடல். அவர் சொன்னதன் சாராம்சம் இந்தியா ராணுவதை இலங்கைக்கு அனுப்பி இப்போது ஒரு இக்கட்டான நிலமையில் மாட்டிக் கொண்டு விழிக்கிறது. உலகத்தின் நான்காவது பெரிய ராணுவத்துக்கு பெரும் தலைகுனிவு ஏற்படலாம். தமிழ்நாட்டில் மக்கள் மனதில் அனுதாபததை ஏற்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தர‌வு. இது குறித்து ஒரு நடவடிக்கைத் திட்டம் சமர்ப்பிக்கச் சொல்லி ஆணை விதிக்கப்பட்டுள்ளது. "உங்கள் 'கண்டக்ட்'களைப் பாவித்து முடிந்ததைச் செய்யுங்கள். என் 'ரிப்போர்டி'ல் சேர்த்துக்கொள்கிறேன்".

அவர் பதில் சொல்லு முன் தொலைபேசி துண்டிக்கப்பட்டது. அன்றிரவு அவருக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. எண்ணி எண்ணிப் பார்த்தபோது 'வால்மீகி' ஆசிரியர் நினைவுக்கு வந்தார். தகவலை செய்தியாக்குவது தனக்கு கைவந்த கலை. ஆனால் அதை இலக்கியமாக்க வேறு ஆள் வேண்டும்.

இப்போது இந்த பெண்மணியிடம் அது பற்றி கவனமாகப் பேசவேண்டும். முதலில் மனம் விட்டுப்பேசுவது போலப் பேசினால் வழிக்குக் கொண்டு வரலாம் என்ற எண்ணத்துடன், "நம்ம ராணுவம் இப்போ சிலொன்ல நிலை கொண்டிருக்கு. உயிரைத் தியாகம் பண்ணிக் கொண்டு இலங்கை-இந்திய ஒப்பந்தத்ததை அமுல்படுத்த முயல்கிறது. ஆனால் இந்த போராளிக் குழு உதவப்போன எங்களையே எதிர்க்கிறார்கள். நிலைமை படு மோசமாக இருக்கிறது. இங்கே இருக்கிற பிரதேசக் கட்சிகளும் அவங்களுக்காக பிரச்சாரம் பண்கிறார்கள். எங்கள் பக்க கருத்து தமிழ் மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை" என்று ஆங்கிலத்தில் சொன்னார். சாதாரணமாக, கனமான விஷயங்களைப் பேசும்போது அவருக்கு ஆங்கிலம் தானாக வந்துவிடும்.

"ஆனா இது சண்டைக்காரங்கள் ஒப்பந்தம் இல்லை, மத்தியஸ்தம் செய்ய வந்தவனோட செய்துகொண்ட ஒப்பந்தம்தானே, அது எப்படி எடுபடும்?"

விஷ்ணுவர்த்தனின் பிடரி மயிர்கள் மீண்டும் குத்திற்று நின்றன. இந்த வாதத்தை அவர் எதிர்பார்க்கவில்லை. இவள் புத்திசாலிப் பெண், இவளிடம் தன் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டக் கூடாது என்று முடிவு கொண்டவராக, "அது அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் அடிப்படை உண்மை என்னன்னா, இலங்கையில தனி ஈழம்னு ஒன்னு ஏற்படுவதை இந்திய அரசு எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாய் இருக்கும். இது மாறப்போவது இல்லை. இதுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். இந்த உண்மைய முதல்ல தெரிஞ்சிக்கணும். உங்களுக்குச் சொல்லல, தமிழ்நாட்டுல உள்ள அரசியல்வாதிகளைச் சொல்றேன். இதை இந்த போராளிக் குழுக்களும் அவங்களோட‌ ஆதரவாளர்களும் தெரிஞ்சிக்கணும்"

"இலங்கைல ஏன் ஒரு பங்களாதேஷ் பண்ணக் கூடாதுன்னு கேட்கறாங்களே?"

விஷ்ணுவர்த்தன் புலிபோல சீறிப் பாய்ந்தார். "அவங்க சொன்னபடி கேட்டாங்க. இவங்க அப்படி இல்லையே. தங்களுக்கு வேண்டிய மாதிரி நடந்துகிறாங்க, எங்களுக்கே சவால் விடுறாங்க. எங்க உதவி வேணும், ஆனா நாங்க சொன்னபடி நடந்துக்க மாட்டேன்கிறாங்க".

விஷ்ணுவர்த்தன் ஆவேசப்பட்டதை வைஷ்ணவி கவனித்தார். அவரும் அதை உணர்ந்தவராக, அறையை வியாபித்திருந்த உஷ்ணத்தை தணிக்கும் எண்ணத்துடன், "அதை விடுங்க, நாங்க எங்க 'புரொஜெக்ட' பத்தி பேசுவோம். நீங்க களத்துக்குப் போய் உங்கட ஆராய்ச்சிய செய்யலாம். உங்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்து தரப்படும். நீங்க எங்க வேணும்னலும் போகலாம். உங்கட பாதுகாப்பை எங்க தூதராலயம் பார்த்துக்கும். இலங்கையில எங்க 'கன்டக்ட்டு'களை சந்திப்பீங்க. ராஜதந்திரிகள், தமிழ், சிங்களப் பத்திரிகைகாரங்க, ராணுவ அதிகாரிங்களையும் சந்திக்கலாம்."

பதில் என்னவாக இருக்கும் என்று தெரிந்திருந்தும் கடைசியாக அந்தக் கேள்வியை வேண்டும் என்று கேட்டார் வைஷ்ணவி, "போராளிக் குழுக்களை சந்திக்க சந்தர்ப்பம் இருக்குமா?"

"இது நாட்டு பாதுகாப்பு சம்பந்தமான விஷயம். உங்கட பாதுகாப்பும் அடங்கி இருக்கு. அதனால அவங்கள சந்திக்க முயற்சி பண்ணாதிங்க".

சந்திப்பு சுமூகமாக முடிந்தது.

2

வைஷ்ணவி அவர் கூறிய வாசகங்களை எண்ணிப் பார்த்தார். விஷ்ணுவர்த்தன் தன்னோடு பேசும்போது வார்த்தைகளை எவ்வளவு கவனமாகப் பாவித்தார்? 'பாதுகாப்பு', 'அரசின் கொள்கை', 'கன்டக்ட்' என்ற வார்த்தைகளுக்கு வேறொரு அர்த்தம் உண்டு என்பதை அவர் அறிவார். இதில் இந்திய உளவுத்துறை அடி முதல் நுனி வரை ஊடுருவி இருப்பதையும் அவரால் உணர முடிந்தது. தான் சந்திக்கப் போகும் அதிகாரிகளில் அநேகமானோர் உளவுத்துறையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். இலங்கையில் தன் நடவடிக்கைகள் யாவும் இவர்கள் கண்காணிப்பின் கீழ்தான் நடக்கும். இதற்குத் தான் தயாராய் இருக்கவேண்டும். பணம் கொடுத்தவன் சொல்கிறபடி தானே மேளக்காரன் வாசிக்க வேண்டும்? இதில் தப்பு ஏதும் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அப்படிப் பார்த்தால் சில பத்திரிக்கையாளர்களுக்கு எப்போதுமே உளவுத்துறையோடு நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருக்கிறது. ஆனானப்பட்ட எழுத்தாளர்களான சொமர்செட் மாம், கிராம் கிரீன் போன்றவர்கள் உளவாளிகளாக இருந்தவர்களே என்பதும் அவர் அறிவார்.

தன் மனதுக்குள் நடந்து கொண்டிருந்த தர்க்கங்களிலிருந்து விடுபட்டு தான் எழுதப்போகும் நாவலைப் பற்றி கற்பனை பண்ணுவதில் மனதைச் செலுத்தினார். "உங்களுக்கு சப்ஜெக்ட் ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். ஆனாலும் இலங்கத் தமிழர் பிரச்சினை பத்தி வாசிக்க நிறைய விஷயம் தரேன், என்கிட்ட நிறைய ரெஃபரென்ஸ் இருக்கு. பிரயோஜனமாயிருக்கும்" என்று கூறி பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் கொடுத்திருந்தார். நிறையவே வாசித்தாயிற்று. இலங்கப் பிரச்சினை ஓரளவு விளங்கியது போல் தெரிந்தது. கதையின் களம் - கரு - கதை மாந்தர்-உத்தி என்று எண்ணு முன், வாசகனின் மனதில் அது என்ன தாக்கத்தை உண்டுபண்ண வேண்டும் என்பதை முதலில் தீர்மானம் பண்ணிக் கொள்வது அவர் வழக்கம். மனித மனதில் உணர்வுகளை வீச்சோடும், யதார்த்தத்தோடும் ஏற்படுத்தினால் மட்டுமே ஒரு படைப்பு இலக்கியமாகக் கருதப்படும், கணிக்கப்படும் என்பதை அவர் அறிவார். விஷ்ணுவர்த்தன் கூறியதை பல நாட்களாக மனதில் அசை போட்டார். போராளிக் குழுக்களிடையே நிலவும் உட்பூசல்களையும் வன்முறையும் கதைக் கருவாக்கினால் அவர்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, இந்தியாவின் தலையீட்டை நியாயப்படுத்தலாம். தெரியாமல் கூட அவர்கள் அர்ப்பணிப்பையும் தியாகங்களையும் கதையில் புகுத்தக்கூடாது. இதைத்தானே விஷ்ணுவர்த்தன் எதிர்பார்க்கிறார்? கூடவே, இலங்கை நிலைமை எவ்வளவு குழப்பமானது என்று இந்திய வாசகனுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மலை முகட்டில் கவிந்திருந்த பனி விலகி மலை உச்சி மெதுவாகத் தென்படுவது போல கதைக் கரு ஒன்று அவர் மனதில் தோன்றி மெல்ல உருவம் பெறத்தொடங்கியது. ஒர் இந்திய பத்திரிகை நிருபர் எப்போதோ தான் சந்தித்த இலங்கை நண்பர் ஒருவரை, அதாவது கதை நாயகனை, தேடிக்கொண்டு யாழ்ப்பாணம் போகிறார். பலரைச் சந்திகிறார். அவர்கள் மூலமாக வாசகர்கள் இலங்கையின் தற்போதைய நிலவரம் பற்றி அறிந்து கொள்கிறார்கள். கதாநாயகன் போராளியாக இருந்து பின் விரக்தியடைகிறான். அவன் படும் அவஸ்தைகளை விவரித்து போராளிகளின் போலித்தனத்தையும் விபரீதப் போக்குகளையும் தோலுரித்துக் காட்டுகிறார் கதாசிரியர். இடையில் அவனுக்கொரு காதலியையும் படைத்து, அவள் போராளிகளால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதாகக் கதையில் திருப்பங்களை ஏற்படுத்தினால் விறுவிறுப்பாக இருக்கும். தான் வாசித்தறிந்த இலங்கை வரலாற்றுச் சம்பவங்களையும், அண்மைச் சம்பவங்களையும் இடையிடையே சேர்த்துக் கொண்டால் நாவலுக்கு சமகால அரசியல் பின்னணியும் கிடைத்துவிடும். படித்தவர்கள் மத்தியில் ஒரு மதிப்பும் ஏற்படும்.

கதையின் வடிவமத்தின் வெளிக் கோடுகள் அவர் மனதில் தெள்ளெனத் தெரிய ஆரம்பித்தன.

அடுத்து, கள விவரங்களைத் தானாக தெரிந்துகொள்ள, முதலில் ராமேஸ்வரம், பின் கொழும்பு, அடுத்து யாழ்ப்பாணம் என்று பட்டியலிட்டு, வைஷ்ணவி அசுர வேகத்தில் செயல்படத் தொடங்கினார்.

3

வைஷ்ணவி ஆயாசத்தோடு தன் முன் படர்த்தி வைத்திருந்த 'நோட்' புத்தகங்களைப் பார்த்தார். ஒரு மாதமாக தன் பயணத்தின்போது எழுதிய குறிப்புகள், எடுத்த படங்கள், நடத்திய நேர்காணல்களின் பதிவுகள், பத்திகைச் செய்திகள், புத்தகங்கள், கட்டுரைகள்........ மலை போல் குவிந்து கிடந்தன. தான் திரும்பி வந்ததும் கதையை எழுத விஷ்ணுவர்த்தன் ஏற்பாடுகளைச் செய்திருந்தார். இந்த குளிர் பிரதேசத்தில், ஏகாந்தமான விடுமுறைக்கால பங்களாவை அவருக்காகவே எற்பாடு செய்திருந்தார். சாளர‌ம் வழியாக தூரத்தே தெரிந்த முகில் மூடிய மலைகளிலிருந்து குளிர் காற்று சில் என வீசியது. கீழே மரங்களின் பசுமையும், உயரே வானத்து நீலமும், அதில் மெதுவாக மிதந்த மேகங்களையும் பார்த்தபோது இது வேறொரு உலகம் என்று அவருக்குத் தோன்றியது. யாழ்ப்பாணத்தின் வறண்ட பூமியும், நெடிந்த பனைகளும், அவற்றிக்கூடாக சுழன்ற உஷ்ணக் காற்றும் அவர் நினைவுக்கு வந்தன. ஆண்டாண்டு காலமாக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு வரும் பாவப்பட்ட ஜனங்கள். அவர்கள் செய்த பாவம் என்ன?

அவர் இலங்கையில் இருந்தபோதுதான் இந்திய ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே போர் மூண்டது. அவசர அவசர அவசரமாக அவர் வெளியேற‌ வேண்டியிருந்தது. முதல் முறை விஷ்ணுவர்த்தனை சந்தித்தபோது அவரிடம் தென்பட்ட பதற்றத்துக்குக் காரணம் இப்போதுதான் விளங்கியது. அமைதி காக்கப் போன படை தமிழ் மக்களை வேட்டையாடும் படையாக மாறியதையும், தன் கண் முன்னால் ஏற்பட்ட அவலங்களுக்குத் தான் சாட்சியாகியதையும் எண்ணியபோது எதை எழுதுவது, எதை விடுவது என்ற குழப்பம் உண்டாகியது.

விஷ்ணுவர்த்தன் தொலைபேசியில் பேசினார். "சௌகரியம் எல்லாம் எப்படி?" என்று விசாரித்தார். பின், "ஹைகமிஷன் வசதிகள் செய்து கொடுத்ததா?" என்று கேட்டார். விஷ்ணுவர்த்தன் பேச்சில் எப்போதும் உள் அர்த்தங்கள் இருக்கும் என்பதை தன் இலங்கை விஜயத்தின் போது வைஷ்ணவி உணரத் தொடங்கியிருந்தார் . அவர் 'வசதிகள்' என்று எதை பூடக‌மாகச் சொல்கிறார் என்பது புரிந்தது.

"நான் நெனச்சத விட!" என்று தானும் அதே பாஷையில் பதிலளித்தார்.

அவர் இலங்கையில் இருந்த நாட்களில் இந்திய ஹைகமிஷன் அவருக்கு உதவி செய்யவென்று இரண்டு பேரை நியமித்திருந்தது. ஆரம்பத்தில் அவர்கள் எவ்வளவோ உதவியாய் இருந்தார்கள். கொழும்பில் பலபேரை அறிமுகம் செய்து வைத்தார்கள், பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார்கள். கூடவே யாழ்ப்பாணத்துக்கும் வந்தார்கள், தங்க வசதி செய்து கொடுத்திருந்தார்கள். ஆனால், அவரால் தனியாக எங்கேயும் போகவோ தனக்கு வேண்டிய எவரையும் சந்திக்கவோ முடியவில்லை. எல்லாம் அவர் பாதுகாப்புக்காகத்தான் என்று சொன்னார்கள். அவர்களிருவரும் இந்திய உளவுத் துறையான 'ரா'வைச் சேர்ந்தவர்கள் என்பதைப் புரிந்து கொண்டார். ஆனால் அதைப் பற்றி கேள்வி கேட்கவில்லை. சில விஷயங்கள் பேசப்படாமலே இருப்பது நல்லது என்பதை அறியாத கத்துக்குட்டியல்ல அவர்.

"நாவல் என்ன மாதிரி வருது?"

"நிறைய விஷயங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன். போராளிகளை சந்திக்கலை. என்ன மாதிரி எழுறதுன்னு யோசிக்கிட்டுருக்கேன்".

"நல்லது , கூடிய சீக்கிரம் கதை 'வால்மீகி'ல வரணும்" என்றார். அவர் பேச்சில் முன்னைவிட ஓர் அதிகாரத் தோரணை இருந்தது. உத்தரவிடுவது போலத் தோன்றியது.

"கதைல முக்கியமான சம்பவங்களை முடிந்தவரை சேர்த்து இருக்கேன்."

"ஆக சமீபத்துல நடந்ததையுமா?"

மீண்டும் விஷ்ணுவர்த்தனின் பரிபாஷை! அக்டோபர் 22-ம் திகதி நடந்த படுகொலையைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்று விளங்கியது. அன்றுதான் இந்திய ராணுவம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் நுழைந்து எழுபதுக்கும் மேற்பட்ட நோயாளிகளையும், தங்களோடு பேச வந்த மூன்று டாக்டர்களையும் சுட்டு படுகொலை செய்தது. அந்த அகோரச் சம்பவம் நடைபெற்றபோது வைஷ்ணவி யாழ்ப்பாணத்தில்தான் இருந்தார். கூட இருந்த ஹைகமிஷன் 'அதிகாரிகளை'யும் மீறி தான் நேரடியாகக் காண எண்ணி சம்பவ இடத்துக்கு விரைந்தபோது இந்திய ராணுவம் அவரைத் தடுத்து திருப்பி அனுப்பியது.

"அங்கே உள்ள நிலைமைதான் உங்களுக்குத் தெரியுமே. பெரிய அவமானம். இப்ப இதால வரப்போற கெடுதலைக் குறைக்கணும், உடனடியாக", என்றார். அவர் இதைச் சொன்னபோது ஒர் ஆழ்ந்த சோகம் தொண்டையை அடைத்துக்கொண்டது போல குரல் தளதளத்தது . இலங்கையில் இந்திய ராணுவம் அகப்பட்டுக்கொண்டு விழி பிதுங்கி நின்றது. யாருக்கு உதவப் போனார்களோ அவர்களும், அரைகுறை மனதோடு ஒப்பந்தம் செய்துகொண்ட சிங்கள அரசாங்கமும் கைகோர்த்துக் கோண்டு 'இந்தியாவே வெளியேறு' என்று கோஷமிடுகிறார்கள். உலக வல்லரசாக தன்னைக் கருதிக் கொண்டிருக்கும் இந்தியாவை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்தவ‌ர்களை வைஷ்ணவி எண்ணிப் பார்த்தார். 'ராஜ குடும்பதி'ல் பிறந்ததென்பதைத் தவிர‌ வேறெந்த தகுதியும் இல்லாத அரசியல் வெகுளிகள் பதவிக்கு வந்தால் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? இவன் பாட்டனோடு அரசியல் செய்தவன் அவன். அவன் விரித்த வலையில் மாட்டிக் கொண்டு இப்போது விழிக்கிறான்! நாட்டின் மானத்தைக் காப்பாற்ற இப்போது நாவல் எழுத வேண்டியுள்ளது!

தன் எழுத்துலக வாழ்வில் வைஷ்ணவி தனக்கென எந்தக் கொள்கையும் வகுத்துக் கொண்டதில்லை. உண்மையில் எழுத்தாளர்களுக்கு கொள்கைகள் கூடாது என்பதே அவரது கொள்கையாக இருந்தது. யதார்த்தம், முற்போக்கு, தலித், பின்நவீனம் என்பதிலெல்லாம் நம்பிக்கையற்றவர் அவர். எழுத்தாளர் தர்மங்களைப் பற்றி எல்லாம் அவர் அலட்டிக் கொண்டதில்லை. எழுத்துலகில் எதையும் விற்க முடியும், வாங்கவும் முடியும் என்பதே அவர் கணிப்பு.

"லைன்ல இருக்கீங்களா?" பொறுமை இழந்த குரலில் விஷ்ணுவர்த்தன் கேட்டார்.

"ஆமா, சொல்லுங்க"

"எழுத்தாளர் சுதந்திரத்துல நான் தலையிட விரும்பல்ல. உங்களுக்கு வேண்டிய மாதிரி எழுதுங்க. நீங்க இந்திய அரசியல் தெரிஞ்சவங்க. உங்க எழுத்து நாட்டுக்கு பாதகமா இருக்கக்கூடாது, அவ்வளவுதான்."

"கதையை எப்படி முடிக்கிறதுங்கிதுலதான் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கு, அதுவும் அந்த ஆஸ்பத்திரி சம்பவத்துக்குப் பிறகு".

"கதையை இந்த சம்ப‌வங்க நடக்க முந்தியே முடிச்சிட்டா என்ன?" எந்த விதத் தயக்கமும் இல்லாமல் விஷ்ணுவர்த்தன் சொன்னார்.

வைஷ்ணவி விக்கித்துப் போனார். என்ன அருமையான யோசனை! ஏன் இந்த எண்ணம் தனக்குத் தோன்றவில்லை என்று இரண்டாம் தடவையாக தன்னைக் கடிந்து கொண்டார். அதே நேரத்தில் விஷ்ணுவர்த்தனின் மதிநுட்பத்தை எண்ணி வியந்தார். இந்த மனிதனுக்குத் தெரியாத விஷயங்களும் உண்டா?

"எனக்கு அந்த ஐடியாவே வரல்ல. உங்களுக்கு உடம்பெல்லாம் மூளை. உண்மையில, நீங்க ஒர் எழுத்தாளரா இருக்க வேண்டியவர். நாங்களெல்லாம் உங்க கிட்ட பிச்சை எடுக்கணும் சார்."

அந்த புகழ்ச்சியை ஏற்றுக் கொண்டவர் போல விஷ்ணுவர்த்தன் மெல்லச் சிரித்தார். "சும்மா புகழாதீங்க. நான் ஒரு எளிய பத்திரிக்கையாளன். அவ்வளவுதான். ஒரே ஒரு விஷயம். அங்க உள்ள குழுக்களைப் பத்தி பேசும்போது போராளிகள்னு சொன்னீங்க. இவன்களுக்கு அந்த மாதிரி ஒரு அந்தஸ்தளிக்கிறது தப்புங்க. இதுல நாங்க பாவிக்கிற வார்த்தைகள் முக்கியம். லெங்வெஜ் இஸ் இம்போர்டண்ட். இவன்க வெறும் கும்பல்கள், 'குரூப்ஸ்', அவ்வளவுதான். அதனால 'கும்பல்'ங்கிற பதத்தையே பாவிங்க."

"அதுக்கென்ன?"

"அதோடு, எழுதுன உடன பிரதியை அனுப்பி வைங்க. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். அவங்க கிட்ட 'கிளியரன்ஸ்' எடுக்கணும்."

"அதுக்கென்ன?"

"இட் இஸ் கிரேட் வொர்கிங் வித் யு. அடுத்த புரொஜெக்ட் என்ன?"

"இன்னும் இதே முடியல்ல. அதுக்குள்ள......."

"இண்டர்நேஷனல் லெவல்ல ஏதாவுது எழுதப் பாருங்க. ஆப்கனிஸ்தான் நல்ல சப்ஜெக்ட்..."

"நீங்க விளையாட்டுக்குச் சொல்றீங்க"

"நோ, ஐ ஏம் சீரியஸ். அங்க எக்கச்சக்கமா எங்க ஆளுங்க இருக்காங்க. வெரி ஆக்டிவ்வா வேலை நடக்குது. ஏற்பாடுகளை எங்கிட்ட விடுங்க".

"யோசிக்கிறேன்"

"'மறைக்க முகம் வேண்டும்'னு நாவலுக்கு பெயர் வைக்கலாம்"

"அது எழுத்தாளனுடைய ஏகபோக உரிமை. 'இட் இஸ் த ப்ரிரொகவடிவ் ஒஃ த ரைட்டர்!'"

இருவரும் சிரித்தனர்!

- தம்பிராஜா

Pin It