(2009 மே மாதம் ஈழத்தில் சிங்கள இனவெறி அரசால் தில்லி, சென்னை உதவியுடன் நடத்தப்பட்ட இனப் படுகொலையின்போது எழுதப்பட்டு, 2012 யூலையில் மெருகூட்டப்பட்டது) 

காட்சி 1

[கோசலை நாட்டின் தலைநகராம் அயோத்தியின் மத்தியப் பகுதியிலுள்ள கோசலாபுர மாளிகை. தசரத சக்கரவர்த்தி முதுகுவலியால் பாதிக்கப்பட்டு கட்டிலில் படுத்திருக்கிறார். அவரது மனைவியர், மக்கள், பேரக்குழந்தைகள், கொள்ளுப்பேரர்கள் எல்லோரும் கவலைதோய்ந்த முகத்துடன், மருத்துவ முகமூடி அணிந்து கட்டிலைச் சுற்றி நிற்கின்றனர்.]

கைகேயி:

(தொண்டையைக் கனைத்தவாறே, சன்னமான குரலில்) உடம்புக்கு முடியவில்லை என்றால், ஆட்சிக் கட்டிலில் கிடந்து அவதிப் படுவானேன்? என் வயிற்றிலுதித்த வாரிசுவிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டியதுதானே?

கௌசல்யா:

என்ன? உன் வயிற்றிலுதித்த வாரிசுவிடமா? பட்டத்து ராணியாம் என் வயிற்றுப் பிள்ளை கௌசல்யாராமன், தசரத மகாராஜாவின் தங்கத் தலைமகன் தசரதராமன், வனாந்திரம் சென்று எத்தனையோ இடர்களையும், இன்னல்களையும் எதிர்கொண்டு மீண்டிருக்கும் சீதாராமன், அயோத்தி மக்களெல்லாம் ஆசையோடு வரவேற்கும் ராஜாராமன் இருக்கும்போது, கேவலம் ஆசை நாயகியின் மகவு எங்கிருந்து வந்தது?

கைகேயி:

ஆசைநாயகி என்றா சொன்னாய் என்னை? அறிவு கெட்டவளே! அன்பிருக்கும் இடத்தில்தானே ஆசையிருக்கும்?

தசரதன்:

(கையைத் தூக்கி இருவரையும் அமைதியாய் இருக்கச் சொல்லியவாறே)

தசரதன் மனைவியரே

தறுதலையாய் சண்டையிட்டால்

தாரணியில் மாந்தரெல்லாம்

தரமிழந்து துன்புறுவர்!

ஆதலினால் பேதையரே

அன்புடனே கேட்டிடுவீர்!

ஆளப்போவது எவராயினும்

அவனெனது மகனாயிருப்பான்.

பெண்களுக்கும், பேரர்களுக்கெல்லாம்

பெரிது, பெரிதாய் பதவிகளிருக்கும்!

கையில் அகப்பட்டதையெல்லாம்

பையில் குவித்து வைத்திருக்கும்

என் ஆசை உறவுகளெல்லாம்,

அன்பு நிறைத் தம்பியரெல்லாம்

ஆனந்தமாய் வாழ்ந்திருப்பீர்!

கௌசல்யா, கைகேயி:

(இருவரும் ஒரே குரலில்) தவறு செய்துவிட்டோம், அரசே! எங்களை மன்னியுங்கள்! நமது குலம் வாழ இத்தனை ஆழமானத் திட்டத்தை தீட்டியிருக்கும் தங்களைப் புரிந்துகொள்ளாமல் சண்டை செய்துவிட்டோம்!

தசரதன்:

(புன்முறுவல் செய்தவாறே) –

தொடர்வண்டி ஏறிப் பெருநகரம் வருவதற்கு

ஈரைந்து ரூபாய்கூட இல்லாது நானிருந்தேன்!

அறுபது ஆண்டுகளாய் பொது வாழ்வில் ஈடுபட்டு

ஆசிய கண்டத்தில் அபரிமித செல்வந்தன் என்றானேன்!

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்பார்;

கலைஞன் என் வீட்டுக் குட்டிநாய் கூட

கோடீஸ்வரனாய் உலாவருகிறதே!

பணம், பதவி, பட்டங்கள், பட்டயங்கள்,

பட்டிதொட்டியெல்லாம் கல்வெட்டுக்கள்,

கொடிமரங்கள், கோபுரங்கள்,

கண்காட்சிகள், கவின்மிகு சிலைகள் – என

அவனியிலே பெறவேண்டிய அனைத்துமிருந்தும்

என்னாசை புதல்வனிடம் என்னரசை ஒப்படைக்க

பொன்னான குடும்பத்தார் பொருந்தி வருவீரோ?

இராமன்:

(தந்தையின் படுக்கை அருகே சென்று வலது முழங்காலில் நின்றவாறே)

கலங்காதீர்கள் அப்பா! தங்கள் வார்த்தையைக் காப்பாற்றுவதற்காக பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்று இப்போதுதான் திரும்பி வந்திருக்கிறேன். அதற்குள் என்ன அவசரம்? தாங்கள் உயிரோடிருக்கும்போது, அந்த அரியணையில் ஏறுவதற்கு அடியேனுக்கு என்ன தகுதி?

பரதன்:

(சற்று தள்ளி நின்றுகொண்டே) அவசரப்படாதீர்கள் தந்தையே! இன்னும் பதினான்கு வருடங்கள் அண்ணன் இராமன் பரிதவித்துத் திரிந்தாலும் அவன் காலணிகளையே என் காதணிகளாய்க் கொண்டு, நல்லாட்சி புரிகின்றேன். அஞ்சாநெஞ்சன் எனக்கு ஆணையிடுவீர்!

தசரதன்:

(ஆலோசித்தவாறே)

தம்பியரே கேளுங்கள்,

தந்தை நான் சொல்கின்றேன்!

கண்கள் இரண்டுக்குள்

காணச் சிறந்தது எதுவென்றால்,

காதுகள் இரண்டுக்குள்

கானம் ரசிக்க எதுவென்றால்,

இரண்டுமே வேண்டுமென்று

இவ்வுலகம் ஆர்ப்பரிக்கும்!

அது போன்றே

இந்நாட்டை இட்டுச் செல்ல ஏற்றவர்

இராமனா, பரதனா எனக் கேட்டால்

‘இருவரும்தான்’ என்றே இயம்பிடுவேன்.

வடநாட்டை இராமனும்,

தென் மண்டலத்தை பரதனும்

திண்ணமாய் ஆண்டிடுவீர் – நம் குடும்ப

எண்ணமெல்லாம் ஈடேறும்!

 ***

காட்சி 2

[அரண்மனையின்  ஊடக அறையின் ஒரு மூலை. தசரத மகாராஜாவின் பேரன்கள் லவனும், குசனும் கிசுகிசுவெனப் பேசிக்கொள்கிறார்கள்.]

லவன்:

கேட்டாயா தம்பி, கிழவன் சொல்வதை?

குசன்:

கேட்டுக் கொண்டுதான் இருந்தேன், அண்ணா!

லவன்:

நமது ஊடகங்களின் பலமனைத்தையும் பிரயோகித்து, இந்தத் திட்டத்தை நாம் முறியடித்தே ஆகவேண்டும்.

குசன்:

என்ன சொல்கிறாய் அண்ணா?

லவன்:

தம்பி, ஊடகங்களையும், கலாசாரத் தளத்தையும் நாம் கையிலெடுத்து விட்டோம். முகவரியே தெரியாதிருந்த நாம் இன்று நாட்டின் முதல் பேர் என்றாகிவிட்டோம். நமது வானொலி, காணொளி, பத்திரிகைகள், திரைப்படங்கள் மூலம் நமது கருத்துக்களை மக்கள் குரலாய் மாற்றி விட்டோம். நமது வியாபாரங்களை பெருக்கிக் கொண்டோம்.

நமது கலாச்சாரத்தின் காவல் அரண்களாய் நாம் மாறி விட்டோம். ஆட்டம், பாட்டம், கூத்து, குலவை என்றிருந்த கலாசாரத்தை கோபம், வெறுப்பு, சுயஇரக்கம், பரிதாபம், வாக்குவாதம், வன்முறை என்று வேறு வழிக்கு மாற்றி விட்டுவிட்டோம். நம்நாட்டுப் பெண்களெல்லாம் நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்து, கண்ணீரும், கம்பலையுமாய் கட்டுண்டு கிடக்கின்றார். சதித்திட்டம் தீட்டுவது, சண்டை போடுவது, தீக்குளித்துச் சாவது, தூக்குப்போடுவது, கத்தியால் குத்துவது, கழுத்தை அறுப்பது – என அனைத்தையும் அழகாகச் சொல்லித்தந்து ஓரிரு தலைமுறைகளையே தறுதலைகளாய் ஆக்கிவிட்டோம். நம் நாட்டில் வேறு எவரும் எந்த உருப்படியான நிகழ்ச்சியும் நடத்த முடியாதபடி நசுக்கி வைத்துவிட்டோம். பொருள் வளமும், கலாச்சாரத் தளமும் கையில் சிக்கியபிறகு அடுத்து என்ன தம்பி?

குசன்:

அரசியல் அதிகாரம்தானே அண்ணா?

லவன்:

சரியாகச் சொன்னாய், தம்பி, சரியாகச் சொன்னாய்! அதனால்தானே உன்னை முன்னால் தள்ளி விட்டுவிட்டு, பின்னால் இருந்து இயங்குகிறேன். புரிகிறதா இப்போது?

குகன்:

செயல் வீரனென்றும், சாதனையாளனென்றும் என்னை ஏற்றிவிடுவது ஏனென்று புரிகிறது அண்ணா. இராமனுக்குப் பிறகு இந்நாட்டை ஆள நானே தகுதிப் படைத்தவன் என்று தாங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு பிரமாதம் அண்ணா!

லவன்:

உண்மைதான் தம்பி. ஆனால் நாம் சற்றுப் பொறுமையாக, கவனமாக இயங்க வேண்டும். இராமன் நாடாள உதவி செய்து, பரதனையும், பிறரையும் அரச சபையைவிட்டே அகற்றவேண்டும். இராமன் தளரும்போது, லாவகமாக ஆட்சிக் கட்டிலை அபகரித்துவிடலாம்.

குசன்:

என்னை இராஜாவாக்கத் துடிக்கிறாயே அண்ணா, உனக்கென்று ஆசைகளே இல்லையா? 

லவன்:

ஏன் இல்லை? ஆளும் குடும்பத்தில் லவனும், குசனும்தான் நவீன கல்வி, நல்லறிவு, மேலாண்மை, திறமை, உறுதி என அனைத்தும் பெற்றோர் என்பது அனைவருக்கும் தெரியும். உலகின் ஊடகங்களையெல்லாம் நாம் ஒருசேரக் கைப்பற்ற வேண்டும். கலாச்சாரத்தளங்கள் முற்றிலும் நம் கைவசமாகவேண்டும். எனதருமை உடன்பிறப்புக்கு இந்த வையத் தலைமை வந்தருளவேண்டும். குசன் கோமானாகும்போது, லவன் லட்சங்களிலும், கோடிகளிலும் குளிக்கவேண்டும்.

குசன்:

ஆனால் இதை எப்படி சாதிப்பது அண்ணா?

லவன்:

மிக எளிது தம்பி. நீ தவறாது கிழவனின் கட்டிலருகேயே இருக்க வேண்டும். எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கவேண்டும். இந்தக் காட்சியை அனைத்து ஊடகங்களின் வழியாக மக்களுக்கு அடிக்கடி காட்டி நீதான் தசரதனின் வாரிசு என்ற எண்ணத்தை உருவாக்கி விடுகிறேன். கருத்துக் கணிப்புக்களையும், கணக்கீடுகளையும் காட்டி, கையகப்படுத்தி விடுகிறேன் கருவூலத்தை! கவலைப்படாதே!

குசன்:

அற்புதமான திட்டம் அண்ணா! நான் உன் திட்டப்படியே செயல்படுகிறேன். 

லவன்:

வெறும் பேரனாய் இருக்கும்போதே நாம் குபேரன் என்றால், கோலோச்சும் அரசரானால் குவலயமே நம் குலச் சொத்தாகிவிடும் தம்பி. நாம் சூரியன் போன்றே ஜொலித்திடுவோம். 

***

காட்சி 3

[தசரதனும். இராமனும் அரசவை மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.]

இராமன்:

தந்தையே! இலங்கைத் தீவிலே இருக்கின்ற நமது தொப்புள்கொடி உறவுகள் எல்லாம் ராக்க்ஷசபக்க்ஷே எனும் அரக்க குடும்பத்தால் கொன்றழிக்கப்படுவதாக தகவல்கள் வந்தவண்ணமிருக்கின்றன. கோசலை நாடு முழுவதும் கொந்தளித்து நிற்கிறது. என் செய்வதென்று எடுத்தியம்புங்கள் மகாராஜா!

தசரதன்:

(சற்று யோசித்தவாறே)

இளமையாய் இருந்தபோது

இலட்சிய வீரனாய் திரிந்தபோது

இன்னலுறும் மக்கள் என் முன்னே நின்றால்

இடியாய் முழங்கி, மின்னலாய் எரிந்து,

துடியாய்த் துடித்திடுவேன்.

அய்யகோ! பதவி ஆசை வந்த பிறகு

பணத்தாசை பிறந்த பிறகு

குடும்பம், கூத்தி, பிள்ளைக் குட்டிகளென்றான பிறகு

கொள்கையிலே குறுகிவிட்டேன், குடும்பப் பாரத்தால் இறுகிவிட்டேன்.

இஃதன்னியில் ஊமைநாயகியோடு உறவென்றான பிறகு,

அந்த பாசிச நாட்டுக்காரியின் பசப்புக்கு ஆளான பிறகு,

கொஞ்ச நஞ்சமிருந்த வீரமும் விழுந்துவிட்டதடா,

விவேகம் கெட்டேனடா!

ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலில் வாய்க்கால் வெட்டி,

அளப்பரிய வான்வெளியில் அலைவரிசை கட்டி,

அன்பு உடன்பிறப்புக்களெல்லாம்

ஆகாவெனத் திருடியதை அவளறிவாள்!

அவளை வெட்டிவிட்டு வெளியே வந்தால்,

கட்டிய தேன்கூடு கலைந்து போகுமடா!

என்செய்வோம் மகனே, ஏது செய்வோம்?

இராமன்:

ராக்க்ஷசபக்க்ஷே அரக்கர்கள் கொன்று குவிக்கிறார்களே? நம்மின மக்கள் அழிந்து வருகின்றாரே, நலிந்து வாடுகின்றாரே? நம்மோடிருக்கும் ஊமைநாயகியும் உதவுகிறாளாமே? ஏதாவது செய்தாக வேண்டும், தந்தையே!

தசரதன்:

அரசியல் என்றனுக்குக் கற்றுத்தந்த

அறச்சீமான் அன்றைக்கே சொல்லிவிட்டார்!

‘ஏழையின் இறப்பில் நிறைவினைக் காண்போம்,’

‘ஆதிக்கமுற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!’

இராமன்:

மன்னிக்க வேண்டும், தந்தையார் அவர்களே!

தசரதன்:

கொள்கையை எண்ணித்தானே

கோட்பாடுகளை சொல்லித்தானே

செய்வன சொல்ல வேண்டும்,

சொல்வன செய்ய வேண்டும்!

நம்மோர் உள்கிடப்பைத் உணர்ந்துவிட்டேன்.

நாம் அடிப்பது போல் அடிப்போம்,

அவள் அழுவது போல் அழுவாள் –

நாளொரு கவிதை, பொழுதொரு கடிதம்,

ஒரு கிழமை மனிதச் சங்கிலி,

மறு கிழமை மாபெரும் கூட்டம்,

அடுத்தடுத்து கடையடைப்பு கபட நாடகம்!

இப்படி உண்மையற்ற போராட்டங்கள்

உணர்வற்ற எதிர்ப்புக் குரல்கள் –

இப்படியே காலத்தை ஓட்டி

காரியத்தை முடித்துக் கொள்வோம்!

வீரமுள்ள இளைஞர்கள், விவேகமுள்ள பொதுமக்கள்

இலங்கையிலே இருந்தாரென்றால்

இங்கேயும் வந்திடுவர்!

என்றாவது ஒரு நாளில்

நம்மவரின் சாம்ராஜ்யம் நாசமுற வேண்டோம் நாம்!

உருப்படாத அரக்கர்களும், ஊமைநாயகியும்

இலங்கையிலே உயிரைக் குடிக்கட்டும்,

எல்லோர்க்கும் உத்தமம் என்றிருப்போம்!

ஊரறியா, பெயரறியா உயிர்களைப் பலியிட்டால்,

நீடிக்கும் பதவிகள், நிலைத்து நிற்கும் செல்வமென்றால்,

பிடித்திருக்கும் இனப் பாசமதை விட்டுவிட்டு

கூடிக் களித்திடுவோம், கோமானே வாளாவிரு!

இராமன்:

நன்றி தந்தையே! தந்தைசொல் மிக்க மந்திரமில்லை எனும் தசரதன் மகன் எனக்கு, அப்பா சொல்லிவிட்டால் அப்பால் ஒன்றுமில்லை.

[அறையைவிட்டுச் செல்கிறான்.] 

***

காட்சி 4

[அரண்மனையின் அந்தப்புர‌த்தில் தசரத மகாராஜாவின் பத்தாயிரம் மனைவிகளுள் ஒரு சிலரும், அவர்தம் குழந்தைகளும் கூடியிருக்கின்றனர். இரண்டு பெண்கள் மட்டும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர்.]

அம்மா:

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள வேண்டுமடி மகளே! உனது தந்தை ஆட்சி பீடத்திலிருக்கும்போதே உனக்கு ஏதாவது வாங்கிவிட வேண்டும். அவர் காலம் கடந்துவிட்டால், இந்த ஆளும் வர்க்கம் நம்மை அடித்து விரட்டிவிடும்.

மகள்:

புரிகிறது அம்மா. தாயும் பிள்ளையும்தான் என்றாலும், வாயும் வயிறும் வேறாயிற்றே? நாம் சுதாரிப்பாகத்தான் இருக்க வேண்டும்.

அம்மா:

சரியாக சிந்திக்கிறாய். அண்ணனும், தம்பியுமே கீரியும், பாம்புமாய் அலையும்போது, அடுத்த வீட்டுக்காரிக்கு ஆக்கியாப்போடுவார்கள்? நம்மை நசுக்கி அழித்து நட்டாற்றில் எறிந்துவிடுவார்களே?

மகள்:

நெஞ்சிலுரமற்றோர், நேர்மைத் திறனற்றோர், வஞ்சனை சொல்புரிந்தோர், வாய்ச்சொல்வீரர், ஏய்ப்போர்க்கு ஏவல்செய்வோர் ஏகமாய் குவிந்திருக்கும் இந்த அரசவையில் நமக்கென ஒரு கோட்டையும், கொத்தளமும், கொத்தடிமைகள் ஒரு சிலரும் உறுதியாய் வேண்டும்.

(தசரதமகராஜா உள்ளே நுழைகிறார்.)

தசரதன்:

தசரதன் தனக்கு நான்கு மகன்கள் என்றனர் மகிழ்ச்சி!

வால்மீகி, துளசி, வான்புகழ் கம்பன்

சாதகக் கதையுரைத்தோர் செய்தார் புகழ்ச்சி.

ஆனால் இப்படியும் நடக்குமோ இங்கொரு நிகழ்ச்சி?

மகள்களும் உண்டென்றால் அது பெரும் வீழ்ச்சி!

அய்யகோ, எத்துணைக் கேவலம், எத்துணை இகழ்ச்சி!

அம்மா:

மகாப்பிரபு, கோசலா நாட்டைத் தாங்கள் பாகப்பிரிவினை செய்வதாகக் கேள்விப்பட்டு ஓடோடி வந்தேன். என் வயிற்று மகவுக்கும் ஏதாவது கொடுத்தருளுங்கள். 

தசரதன்:

என்ன வேண்டுமென நினைக்கிறாய், ஏந்திழையே,

எடுத்து நீ இயம்பிடுக இப்போதே!

அம்மா:

எங்கள் வாழ்வு சிறக்க, செழித்தோங்க என் மகளுக்கு ஒரு பதவி வேண்டும். அந்தப் பதவியை தக்கவைக்க, அடுத்த நிலைக்குத் தாவிக்குதிக்க சில கோடிகளை வெளிநாட்டு வங்கிகளில் குவிக்க வேண்டும். தொடர்ந்து குவித்துக் கொண்டேயிருக்க அவளுக்கென்று தனி மந்திரி ராஜா வேண்டும். 

தசரதன்:

(அவர்களை அனுப்புவதில் அவசரம் கான்பித்தவாறே)

அப்படியே ஆகட்டும், ஆரணங்கே!

அவளிடமும் கேட்டிடுவோம், வா இங்கே!

(மகள் அருகே வருகிறார்)

என்ன வேண்டும் மகளே உனக்கு

இப்போதே இயம்பிடுவாய் எனக்கு!

மகள்:

கோசலை நாட்டின் கலாச்சாரத்தைக் காப்பாற்றி வளர்க்கும் பொறுப்பும், மொழிவளத்தை செழுமையாக்கித் துலங்கவைக்கும் திறனும் தரவேண்டும். மத்தியிலே அமைச்சராக வேண்டும். மாநிலத்தில் கட்சிப்பொறுப்பு வேண்டும். எந்த அண்ணன் பட்டத்து ராஜாவானாலும், எனக்குள்ள இடம் பத்திரமாக இருந்திட வேண்டும்.

தசரதன்:

நன்று, நன்று! அப்படியே ஆகட்டும்! போய் வாருங்கள்!

 ***

காட்சி 5

[தசரதன் அந்தப்புர‌த்தில் இருக்கிறார். பரதன் தன் தோழர்களுடன் கோபத்தோடு, வேகமாக வருகிறார், தடுத்து நின்ற சேவகனைத் தள்ளி விட்டவாறே]

பரதன்:

எங்கே அந்த மகாராஜா? இன்றோடு அவர் கதை முடித்திடுவேன். கட்டியாளப் பிறந்த என்னை, காபந்து சர்க்கார் நடத்த வைத்தார். ‘கட்டுண்டோம், பொறுத்திருப்போம்’ என்றிருந்தால், காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டார். இன்றெனக்கு ஏதாவது பதவி வேண்டும், இல்லையென்றால் இங்கேயே, இப்போதே முடியுமிந்த இராமாயணம்!

தசரதன்:

(தனக்குள்ளே பேசுகிறார்) அய்யய்யோ வருகிறானே அடாவடி நெஞ்சத்தான். மிஞ்சத்தான் போகிறானோ? நாம் கெஞ்சத்தான் நேரிடுமோ?

பரதன்:

என்ன செய்து கொண்டிருக்கிறீர், மகாராஜா?

தசரதன்:

இலங்கைத் தீவிலே ஏதோ கலகமாம். இராமன் ஏதாவது செய்யுங்கள் என்கிறான். கடிதம் எழுதவா, கவிதை வடிக்கவா என கலங்கி நிற்கிறேன் பரதா!

பரதன்:

(எரிச்சலோடு) உருப்படாத உங்கள் இராமனும், உதவாத இலங்கையும்! அங்கேயே போகச் சொல்லுங்கள் அவனை. இன்றெனக்கு ஒரு விஷயம் தெரிந்தாக வேண்டும்!

(கையிலிருந்த “அயோத்தி நகரன்” செய்தித் தாளை அவர் முன்னால் தூக்கி எறிந்தவாறே)

பாருங்கள், உங்கள் பேரக்குழந்தைகளை! பார் போற்றும் பரதன் என பேர் பெற்றிட நான் விரும்பும்போது, என்னையும் இராமனையும் எடுத்தெறிந்துவிட்டு குசனை அரசனாக்க குசும்பு செய்கின்றார்.

தசரதன்:

அப்படியா செய்தார்கள்? யாரங்கே! லவனையும், குசனையும் பிடித்து நாட்டைவிட்டு வெளியே அனுப்புங்கள்!

பரதன்:

எனக்கு இன்னொரு உண்மை இப்போதே தெரிந்தாகவேண்டும்! இராமனின் பட்டாபிஷேக ஏற்பாடுகள் இரகசியமாக நடக்கின்றனவாமே?

தசரதன்:

யார் சொன்னது? உன்னைக் கலந்தாலோசிக்காமல் ஒரு விடயம் நடக்காது, பரதா!

பரதன்:

உன்மைதானா? உங்களை நம்பலாமா? யார் யாருக்கோ என்னென்னவோ கொடுக்கிறீர்களாமே?

தசரதன்:

நிச்சயமாக நீ என்னை நம்பலாம்! வாக்குறுதிதான் கொடுக்கிறேன். இதோ உனக்கும் வாக்குறுதி தருகிறேன்.

[அணைக்கச் சென்ற தசரதனைத் தள்ளிவிட்டு வெளியேறுகிறான் பரதன்.] 

***

காட்சி 6

[தசரத மகாராஜா தன்னந்தனியாக அரசவையிலுள்ள சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். தலையில் அரச கிரீடத்தை எடுத்து வைத்துக்கொண்டு, இடது கையில் செங்கோலைப் பிடித்திருக்கிறார். வலது கையால் சிம்மாசனத்தை கட்டித்தழுவிக் கொண்டே, சத்தமாக தன்னோடு பேசிக்கொண்டிருக்கிறார்.] 

தசரதன்:

கோசலை நாட்டின் கோமானே! வரலாற்று நாயகனே!

தானைத் தலைவனே! தன்னிகரில்லாப் பேரரசே!

அரசியல், வரலாற்று முரண்நகையைப் பார்த்தாயா?

இராமனுக்கு பட்டாபிஷேகமாம், பரதனுக்கு பதவி வேண்டுமாம்,

பேரர்களும் பேராசையால் பேதலிக்கிறாராம்,

பெற்றவளுக்கும் பெருவாழ்வு வேண்டுமாம்,

இலங்கை மக்கள் எல்லாம் அரக்கர்களால் அழிகின்றாராம்,

இங்குள்ளோர் புதுவாழ்வு பெற முனைந்து நிற்கிறாராம்!

எல்லோருக்கும் ஒரே பிரச்சினை: பதவியும், பணமும்!

என்னையே நோக்கி எப்பொழுதும் வினவுகின்றார்:

தீர்வு வராதா? தேவைகள் நிறைவடையாதா?

வேடிக்கை, வேடிக்கை!

நான் போட்ட விடுகதையை நானே அவிழ்க்க வேண்டுமாம்!

நான் வைத்த எலிப் பொறியை நானே உடைக்க வேண்டுமாம்!

என்னவென்று நினைத்தீர்கள் என்னை?

செய்வேனா என்கிறார் சிலர், செய்யமுடியுமா என இயம்புகிறார் பலர்.

செய்ய வேண்டுமா என்பதுதான் என் கேள்வி.

செய்ய முடியும், ஆனால் செய்ய மாட்டேன்!

ஏன் செய்ய மாட்டேன்? செய்ய முடியும் என்பதால் தான்!

செய்யலாம், ஆனால் செய்யமாட்டேன்!

செய்யமாட்டேன், ஆனால் செய்யலாம்!

செய்யலாமா?

[சிம்மாசனத்தைப் பார்த்து] நான் போகலாமா?

எல்லோரும் உனக்காகப் போட்டியிடுகிறார்களே, ஏன்?

என்னிடமே கேட்கிறாயா?

உனக்குக் கீழே இருக்கும் புதையல் பெட்டகத்திற்காகத்தான்!

நீயும், புதையலும் கொடுக்கும் அதிகாரத்திற்காகத்தான்!

எனக்கே போதும் என்று தோன்றவில்லையே?

நான் ஏன் அடுத்தவருக்குக் கொடுக்கவேண்டும்?

(சிம்மாசனத்தைக் கட்டித்தழுவி புரண்டுகொண்டிருக்கிறார். சிம்மாசனத்தில் இருந்த சிங்க உருவத்தை திடீரெனப் பார்த்துவிட்டு, திடுக்கிட்டு எழுந்து, அந்த பெரிய நாற்காலியின் பின்னே ஒளிகிறார்.)

தசரதன்:

[மீண்டும் தனக்குத்தானே பேசிக்கொள்கிறார்.]

அய்யகோ! புலி...புலி! புலி வருகிறது, புலி வருகிறது!

பழிவாங்கும் எண்ணத்தோடு

இம்மாம் பெரிய புலி ஒன்று என் மீது பாய்கிறது!

என்ன செய்வேன், ஏது செய்வேன்?

ஒன்றும் புரியலையே, ஓடிடவும் முடியலையே?

அய்யோ...அய்யய்யோ!

தானைத் தலைவனென்றும், தன்வீட்டு மூத்தோன் என்றும்

சொல்லித் திரிந்தாரும் சொர்க்கத்துக்கேப் போயினரோ?

ஊமைநாயகியும் ஓடிப் போனாளே!

உறவுகளாயிருந்த நாராயணனும், சங்கரனும் கூட நட்டாற்றில் விட்டனரே!

உடனிருந்த பேரன்களும் ஓடி மறைந்தனரே!

வீட்டாரைக் காணோமே?

மனைவியரும் தெரியலையே? மக்களும் போயினரோ?

அதோ போகிறார் எல்லோரும்

பெட்டி பெட்டியாய் தூக்கிக்கொண்டு!

அய்யோ...அய்யய்யோ...

புலி அறைகிறதே, தள்ளுகிறதே, கடிக்கிறதே, தின்னுகிறதே!

வேண்டாம் புலியே, விட்டுவிடு நீயென்னை!

வேண்டாம், வேண்டாம்!

எனக்குப் பதவி வேண்டாம், பணம் வேண்டாம், பட்டம் வேண்டாம்,

கட்சி வேண்டாம், ஆட்சி வேண்டாம்,

அரசியல் சூழ்ச்சி வேண்டாம், ராஜ தந்திரம் வேண்டாம்,,

அடுத்தவரை வீழ்த்த வேண்டாம்,

அவனியிலே எதுவும் வேண்டாம்!

விட்டுவிடு என்னை,

விட்டுவிடு, விட்டுவிடு!

அய்யோ...அய்யோ...அம்மா...ஆ!

 [திரை]

Pin It