வேகமாக பறந்து வரும் அந்த பொருளைப் பார்த்து திகிலடைவது என்பது எனக்கு சற்று அவமானமாக இருந்தது. எனது வாழ்வில் தான் இதுபோன்ற எத்தனை அனுபவங்களை கடந்து வந்திருக்கிறேன். ஒரு பனங்காட்டு நரி சலசலப்பை கண்டு அஞ்சலாம், ஆனால் ஒரு அரசியல்வாதி தன்னை நோக்கி பறந்து வரும் செருப்பைக் கண்டு அஞ்சக் கூடாது என்பது அரசியலில் அடிப்படைக் கல்வி. ஆர்டிக் பிரதேசத்தில் வாழ்ந்த எஸ்கிமோ இனத்தைச்சேர்ந்த ஒருவன் ஊட்டி குளிரில் வேர்க்கிறது என்று கூறினால் அதைக் கேட்டு சிரிக்கக் கூடாது. அது உண்மையாகக் கூட இருக்கலாம். எனக்குக் கூட அப்படித்தான் தோன்றியது. இந்தக் கூட்டத்தில் அவ்வளவாக செருப்புகள் வீசப்படவில்லை. மக்கள் அவ்வளவாக சலனமடையவில்லை. ஆம் அரசியலில் இது மிக முக்கியம்.

சலனப்படுத்துவது குறித்த ஆராய்ச்சியில் நான் பி.​‎ஹச்.டி. பட்டம் வாங்கும் தகுதியுடையவன் என்றால் அது மிகையில்லை. ஆரம்ப காலங்களில் ஒரு அடிப்படைத் தொண்டனாக இருந்தபோது, என் மனம் எப்பொழுதும் கொந்தளித்தப்படியே இருக்கும். கொந்தளிக்கச் செய்பவரின் திறமை குறித்து நான் ஒன்றும் அறியாதவனாக இருந்தேன். உண்மையில் இரு வித்தியாசங்கள் மட்டுமே இருந்தன. கொந்தளிப்பவன் தொண்டன். கொந்தளிக்கச் செய்பவன் தலைவன். சலனப்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். சலனம் பற்றி அதிகமாக கற்க வேண்டும் என்று துடித்த காலங்கள் அவை. பல வருடங்களுக்குப் பிறகே கற்றுக்கொண்டேன்.

உண்மையில் ஒரு செருப்பு வீசுபவன் எனது வெற்றியின் அடையாளம். அவன் எனது சோதனைக் களம், நான் அவனை பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்று அவனுக்குத் தெரிவதில்லை. அவனுடைய பதிலீடு நிச்சயம் எனக்கு அவசியம். அவன் சரியாக, கச்சிதமாக எனக்கு பதிலிறுக்கிறான். எனக்கு அவனுடைய உணர்வுகள் தேவை. அதை எனக்காக அவன் கொடுக்கிறான். இதுபோன்ற எதிர்ப்புகள் இல்லாமல் நான் என்ன செவ்வாய் கிரகத்திலா போய் அரசியல் செய்ய முடியும்.

எனக்கு அதிகமாக உதவி செய்யும் இன்னும் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் பத்திரிகை நண்பர்கள். அவர்கள் தீக்குச்சியை போன்றவர்கள். அவர்கள் எரிவதற்கு நான் பெட்ரோலைத் தேட வேண்டியதில்லை. அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எரிவதற்கு. ஒரு நோஞ்சான் குழந்தைக்கு உணவில்லையெனில், ஒருவேளை அது 2 நாள் தாக்குபிடிக்கலாம். ஆனால், ஒரு அரசியல்வாதி இல்லையெனில் பத்திரிகைகள் ஒருநாள் கூட தாக்கு பிடிக்காது. ஒரு செய்தித்தாளை எடுத்து அதில் உள்ள அரசியல் செய்திகளை மட்டும் நீக்கிப் பாருங்கள். வெள்ளைப் பக்கங்கள் நிறைய கிடைக்கும். அன்று ஒரு பத்திரிகைக்காரன் மிகக் கேவலமாக என்னைப் பற்றி எழுத்தியிருந்தான். அவனைப் பற்றி ஒருவரியில் சொல்வதென்றால் 'அவன் என் கட்சியில் இல்லாத தொண்டன்' என்று கூறலாம். அடே நண்பா எனது புகழ் பரப்பும் செயல் செய்த உனக்கு பதிலுதவி ஒன்றும்செய்ய முடியவில்லை என்பதை நினைத்துப் பார்க்கும் பொழுது மனம் வெதும்புகிறது என்று என் மனம் புலம்புவது குறிப்பிடத்தக்கது. அதனால் அவ்வப்பொழுது 500 ரூபாய் கொடுத்து விடுவது வழக்கம்.

மனித சலனங்கள் எப்பொழுதுமே முக்கியத்துவப்படுத்துகின்றன முன்னிலைப் பொருளை. அது நிறையா, குறையா என்பது ஆரம்பத்தில் அவ்வளவு முக்கியமில்லை. கலங்கிய நீர் வெகு சீக்கிரத்தில் தெளிவடைந்து விடுவது போல சலனடைந்த மக்களின் மனமும் வெகு சீக்கிரத்தில் தெளிவடைந்துவிடும். குறைந்த பட்சம் ஒரு புதிய தமிழ் சினிமா வெளிவந்தால் போதுமானது. குட்டை தெளிவடைந்து விடும், ஆனால் சலனம் ஏற்படுத்திக் கொடுத்த புகழ் நிலைத்து நின்று விடும். விஷயம் இவ்வளவே

ஒன்றும் முடியவில்லையென்றால் என்னால் ஒரு நடிகனையாவது திட்டமுடியும். குறைந்தபட்சம் தன் வாழ்நாளில் ஒரு சிகரெட்டை புகைத்திருந்தால் அது எனக்குப் போதுமானது. பின் அவன் சொர்க்கம் சென்றபின் கூட புகைப்பதைப்பற்றி யோசிக்கமாட்டான். அவ்வளவு சலனங்களை ஏற்படுத்திவிட முடியும் என்னால். பின் சமுதாயம் என்ற ஒன்று எதற்கு இருக்கிறது. மக்கள் என்று சிலர் எதற்கு இருக்கிறார்கள். இதற்குக் கூட சமுதாயத்தை பயன்படுத்திக் கொள்ள உரிமையில்லை என்றால் வாழத் தகுதியில்லாத இடம் நிச்சயமாக ச‎£ரா அல்ல. ஆனால் இந்த விஷயத்தில் என்னை முந்திக் கொண்டவர் இன்னொருவர்.

ஒரு அரசனானவன் புதிய போர் யுக்திகளை தனது படைவீரர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அவ்வாறில்லையெனில் அவன் தோல்வியுற்றவனாகப் போய்விடுவான். எனது அரசியல் நேர்மையோடு ஒரு வார்த்தையை வன்மையாக சுட்டிக் காட்ட விரும்புகிறேன். புதிய போர் முறைகளை "கலவரம்" என்ற பெயரால் மேற்கோள் காட்டுவது கண்டிக்கத்தக்கது. யார் போரில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்குத்தான் மகுடம் என்கிற வழக்கம் எந்த காலத்தில் தான் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளாக இதைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்பதில் மட்டும் நான் உறுதியாக இருக்கிறேன் என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த புதிய வார்த்தையின் அர்த்தம் எனது பள்ளிப்பருவத்திலிருந்தே எனக்கு குழப்பத்தை அளித்துக் கொண்டிருக்கிறது. எவ்வாறிருப்பினும் "ஜனநாயகம்" காக்கப்பட வேண்டும் என்பதில் மட்டும் நான் உறுதியாக இருக்கிறேன். கழுதை பிழைத்துவிட்டுப் போகிறது. அது என்னவாக இருந்தால்தான் என்ன. அதற்கென்று மூலையில் ஒரு இடத்தை கொடுத்து வைப்போம் என்பது எனது கொள்கைகளில் ஒன்று.

கலவரம் என்பது ஒரு அழகான போர்முறை. உண்மையில் அதிக உயிர்ச்சேதம் ஏற்படாத, சிறிய அளவிலான காயங்களை மட்டுமே ஏற்படுத்துகிற சிறிய அளவிலான உடைமைச் சேதங்களை மட்டுமே ஏற்படுத்துகிற ஒரு அழகான போர்முறை. உண்மையில் எனது நோக்கம் மக்களின் உயிரை வாங்குவது அல்ல. பல முக்கியஸ்தர்களின் மனதில் பயத்தை ஏற்படுத்துவது மட்டுமே. என்னைப் பொறுத்தவரை இது ஒரு அதிகபட்ச சலனம். இவைதான் எனது போரின் குறைந்தபட்ச நோக்கம். மேலும், எனது பத்திரிகை நண்பர்கள் வேறு இருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னை விட்டால் வேறு வழி ஏது. பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள். அவர்கள் எனது ஜீவகாருண்யத்தைப் பற்றி அதாவது நான் அதிக உயிர்சேதங்களை ஏற்படுத்தாமல் போர் செய்து தலைவனாகி இருக்கும் புத்திசாலித்தனம் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். என்னைப் போல் கருணையுள்ள ஒரு அரசன் வரலாற்றில் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டான். இது உண்மைதான் சற்று யோசித்துப் பாருங்கள் புரியும்.

பின் அந்த உறுதிமொழிகளை நினைத்தால்தான் என் காதுகள் இரண்டிலும் புகை கிளம்புகிறது. மக்கள் அவற்றை மறக்கத் தயாராக இருந்தாலும், சில வேலையில்லாத வெட்டி வீரர்கள் அதை ஞாபகப்படுத்தி விடுகிறார்கள் மக்களுக்கு. நான் வெளிப்படையாகவே குறை கூறுகிறேன். நமது அரசியல் முன்னோர்களைப் பற்றி. அவர்கள் அவ்வளவாக திறமையுடன் செயல்படவில்லை. அவர்கள் மக்களை இந்நேரம் ஒரு வழிக்கு கொண்டு வந்திருக்க வேண்டாமா? உறுதிமொழிகளை கொடுப்பதும், அதை நிறைவேற்றாமல் விடுவதையும் ஒரு பண்பாட்டு முறையாக வளர்த்தெடுத்திருக்க வேண்டாமா? மக்களது ஆழ்மனதில் இதை புகுத்தியிருக்க வேண்டாமா? அதைச் செய்யாமல் விட்டுவிட்டு இப்படியா மக்களை கேள்வி கேட்க விடுமளவிற்கு சூழ்நிலையைக் கெடுத்து வைப்பது. கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட சூழ்நிலைக் கைதியாக, இன்றைய அரசியல் சூழ்நிலை இருப்பது மிகுந்த வெட்கத்துக்குரியது.

அன்று ஒருவன் இவ்வாறு கூறுகிறான்.

"நீங்கள் வழங்கும் குறைந்த விலை அரிசியை எங்கள் வீட்டு சேவலுக்கு போட்டால் அது கொத்தித் திங்காமல் என்னை முறைத்துப் பார்க்கிறது" என்கிறான். மேலும் "அது முறைத்துப் பார்ப்பதைப் பார்த்தால் மனதுக்குள் ஏதோ கெட்டவார்த்தையில் அசிங்கமாக திட்டுவது போல் தோன்றுகிறது" என்கிறான்.

நான் என்ன செய்வது அந்த சேவலுக்கு அஜீரணம் என்றால். அது நிச்சயமாக மதுரையைச் சேர்ந்த சேவலாக மட்டும் இருக்காது. மதுரையில் இருக்கும் எந்த ஒரு சேவலுக்கும் அப்படி ஒரு தைரியம் இருக்காது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும், அது வேறு எதோ ஒரு மாவட்டத்தை சேர்ந்த சேவலாகத்தான் இருக்க வேண்டும். வேறு என்ன செய்வது அந்த சேவலின் வைத்தியச் செலவை ஏற்க வேண்டியதாகப் போய்விட்டது.

நான் அவர்களுக்கு சொல்ல விரும்பியது இதுதான். அது நிச்சயமாக அரிசிதான்..... சற்று உற்றுப் பாருங்கள்........... அது வேறு விதமாக உங்கள் கண்களுக்குத் தெரியுமெனில், உங்கள் கண்களுக்குரிய வைத்திய செலவையும் ஏற்கத்தயாராக இருக்கிறேன். மேலும் அதில் ஏதேனும் துர்நாற்றம் வீசுமெனில் இருக்கவே இருக்கின்றன வாசனைத் திரவியங்கள், நமதுமக்கள் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட நான் கடமைபட்டுள்ளேன்.

வெகுநாட்களாகப் புரியாமல் தான் இருந்தது மக்கள் பணமில்லாமல் வாழ்க்கையில் எவ்வளவு ஏக்கத்துடன் சுற்றி வருகிறார்கள் என்று. கடவுளே இவ்வளவு நாட்களாக இந்த விஷயத்தை ஏன் என் புத்தியில் உரைக்காமல் செய்து விட்டாய் என்று நான் வடிக்கும் கண்ணீரை இது வரை எந்தஒரு உயிரினமும் பார்த்ததில்லை. அப்படி வறுமையில் வாடும் பல்லாயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் துடைக்கும் ஒரே நோக்கத்தில்.......... (சத்தியமாக) அந்த ஒரே நோக்கத்தில் மட்டுமே நான் ஏதோ என்னால் முடிந்த தொகையை அவர்களுக்குக் கொடுக்கிறேன். அவர்களும் அதை மனமுவந்து வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் இதை இரட்டடிப்பு செய்யும் சில சமூக விரோதிகளைக் கண்டால் தான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் பணம் கொடுக்கும் சமயம் பார்த்து தேர்தல் நடக்கிறதாம். ஏழை மக்கள் பணம் பெறும் நிலை எந்த காலமாகத்தான் இருந்தால் என்ன. என்னைப் பொருத்தவரை உதவி என்பது உதவி மட்டுமே. இதற்கு மேல் எதையும் பேச வேண்டாம் என்பதை மதுரை மாவட்டத்தின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். எனக்கும் ஏழை மக்களுக்கும் இடையே உள்ள எந்தவொரு விசயத்தையும் ஊடறுக்கும் எந்தவொரு விஷயத்தையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

மேலும் எனக்கும் ஒரு இதயம் தான் இருக்கிறதென்றும் அதற்கும் வலிக்கும் என்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இந்த அரைவேக்காடு அரசியல்வாதிகளுடன் என்னால் போராட முடியவில்லை. என்னால் ஒரு வண்ண கைக்குட்டையை கூட வைத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மஞ்சள் வண்ணக் கைக்குட்டை எனக்கு கொள்கை விரோதி என்ற தீராத பழிச்சொல்லை வாங்கிக் கொடுக்கும் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. எனக்கு இப்பொழுது எல்லாமே வௌ¢ளை நிறமாகத்தான் தெரிகிறது. என்னை நிறக்குருடாக்கி விட்டார்கள்.

ஆனால் யாருக்கும் தெரியாது, நான் அவன் ஒருவனுக்குத்தான் மானசீகமாக பயப்படுகிறேன் என்று. அவன் ஒரு மோசமான கனவு. அவன் கனவில் வந்து பயமுறுத்தும் பேய். அவன் ஒரு அரசியல் கட்சி வைத்திருக்கிறான் என்பதை எனது ரகசிய உளவுப்படை மிகச்சிரமப்பட்டு கண்டுபிடித்திருக்கிறார்கள். அதை நம்பாமல் உளவுத்துறையை சேர்ந்த ஒருவனின் கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அடுக்குமொழி என்னும் அழகான தமிழ்வழக்கை கொலை செய்ய, இன்னொருவன் பிறந்துதான் வரவேண்டும். ஒரு சைக்கோ கொலைகாரனைப்போல ரசித்து ரசித்து கொலை செய்வான். உண்மையில் யாருக்கேனும் திராணி இருந்தால், அவனால் தாடி என்று சொல்லப்படும் முடிக்கற்றைகளுக்கு நடுவே அவனது முகத்தை கண்டுபிடித்துவிட முடியலாம். ஐயோ, அவனைப் பற்றி நினைத்தாலே பயமாய் இருக்கிறது. எனது நெஞ்சுவலிக்கு இவனும் ஒரு காரணம் என்றால் அது மிகையல்ல. நான் சிரித்தபடி செத்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. அவன் ஒரு வலி நிறைந்த நகைச்சுவை. ஆனால் இது போன்ற கூத்துகளை எல்லாம் ஓய்ந்து போகாமல் இருக்க, இவனைப் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

நிச்சயமாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எனது கண்களில் வடியும் கண்ணீரைப் பாருங்கள், அது உங்களுக்கு சிவப்பு நிறமாகத் தெரியும். என் நெஞ்சத்தைப் பாருங்கள் அதில் ஈரம் தெரியும். என் மனதைப் பாருங்கள் அதில் மேகத்தின் மென்மை தெரியும். எனது நேர்மையைக் காண உங்களுக்கு மாறுபட்ட கண்ணோட்டம் வேண்டும். அப்படிப்பட்டதொரு கண்ணோட்டத்தை உங்களுக்கு வழங்க எனது தமிழுக்கு சக்தியுண்டு என்கிற நம்பிக்கையுடனேயே தான் இவ்வளவு காலமும் நான் பேனாவை கையில் பிடித்துக் கொண்டிருக்கிறேன்.

- சூர்யா

Pin It