தமிழர்களுள் தமிழ்மொழியில் பேசுவதே
தரமல்லவெனக் கருதும் தமிழர்களே!
அமுதத்தாய்த் தமிழை நீங்கள் ஆங்கிலத்தால்
இரண்டாம் மூன்றாம் தரமாய்த் தாழ்த்துவதோ?
நமது தமிழ்ப் புவியளவில் பரவுகின்ற
நல் நிகழ்வைத் தடுக்கும் சக்தி வேறுண்டோ?
இமயமெனத் தமிழ் வளர்ந்து பரிணமித்தே
உலகப்புகழாய் உயர்ந்தால் ஆகாதோ?

மாண்பு தமிழ் நாட்டினுள்ளும் வீட்டினுள்ளும்
மூச்சுக்கு முந்நூறு முறை பேச்சினிலே
ஆங்கிலத்தைக் கலந்தால்தான் மரியாதை
என்று நினைக்கும்மேனா மினுக்கிகளே!
வீண் பெருமைக்காய் மெத்தப் படித்த நீங்கள்
வெறும் பகட்டில் சிக்கித் தமிழ் மறப்பதுவோ?
பூந்தமிழை மழலையர்க்கும் புகட்டிடாமல்
பிறமொழி ஆங்கிலமதையே போதிப்பதோ?

அன்னை தந்தை முன்னோர்களின் பாரம்பரிய
உடைமையொத்த மரபுகளை வழக்கங்களைப்
பின்பற்ற நீங்கள் என்றும் மறந்ததுண்டோ?
பரம்பரையின் உரிமைகளைத் துறந்ததுண்டோ?
உங்கள் உற்ற குடும்பத்தினை எந்நபரும்
இழிவு செய்து தூற்றுகின்ற செயலதனைச்
சிந்தை மகிழ்வுடன் நீங்கள் ஏற்பதுண்டோ?
சீறாமல் உங்கள் மனம் ஓய்வதுண்டோ?

அன்னை மொழி தமிழை மட்டும் புறக்கணித்தே
அவமரியாதை இழைக்கத் துணிவதுவோ?
வண்டமிழுக்கான முதல் மரியாதை
வெள்ளையரின் ஆங்கிலத்தைச் சேர்வதுவோ?
செம்மொழியாய்ச் செந்தேனாய்த் தமிழிருக்கச்
சீமைமொழி மாயைதனில் மூழ்கலாமோ?
எம் தமிழர்காள் என்று மடியுமிந்த
ஆங்கிலத்தின் மீதுள்ள உங்கள் மோகம்?

More articles by சோலை கண்ணன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.