நெடுஞ்சாலையில் எதிரேகிய
சாவடிகள் யாவையுமே
பொறுமையும் சிரம்பணிதலுமாய்
கடந்தாயிற்று
பாரப்பொதியாய் கண்ணுக்குள் கனத்த
உடமைகளை
உரிய முகவரிகளுக்குள்
ஒப்படைத்தாயிற்று
பணிகளுக்குள்ளும் இயலுமளவு
சுற்றுநிரூபம் பேணியாயிற்று
ஆக,
சக்கரங்களின் தடம்புரளல் இன்றியே
வண்டி நகர்ந்திட
இழைகளுக்குள் மிக அடர்வாய்
இறுகக்கோர்த்த உருமணிகள்
வெண்மையை மட்டுமே
மீதமாய் இருத்திவிட்டுத்
தெறித்துருளும் இவ்வெல்லைப்புற நாட்களின் முடிவினிலே
அவன் வாக்களித்த வாசமொன்றே
நிதர்சனமானால்…..
செவிட்டுப்பூமி புரிந்திடத் தவறிய
அல்லது மறுத்த
உன்னத அன்பின் ரகசியங்களை
பரிமாறியபடி
சதா ஓடிக்கொண்டேயிருக்கும் அருவியோரம்
துளிர்களால் நெய்த பச்சை வானம்
கூரையாய் கவிழ்ந்திருக்கும் குளிர் வனத்தில்
நீள்கூந்தல் தோள்தூங்க
மேலுமையிரு பொன்விரலை
விரலிடுக்கும் புதிதாய் பிரசவிக்க
இலைநுனியூடே இடறிவீழும்
பனித்துளியின் ரீங்காரமொன்றே
பின்னிசையாய் ஒலிக்கும்
அம்முடிவிலி யுகங்களுக்குள்
சுற்றிச்சூழும் பத்திப்புகையாய்
கனிவு மணப்பதும்
நான் எப்போதுமே விரும்புகிறதுமான
உன் தாலாட்டொன்றே கேட்டிருப்பேன்
மறுபடியுமோர்
தொட்டில்குழந்தையாகியே.

- கிண்ணியா எஸ்.பாயிஸா அலி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.