சமூக பிதற்றலுக்குப் பயந்து
சாவு வீட்டுக்கு
சம்பிரதாயத்திற்காய் சென்றேன்.

பூமியில் வாழுகின்ற
ஒப்பந்தத்தை முடித்துவிட்டு
சொர்க்கமோ? நரகமோ?
புலம் பெயர்கிறது அது

எத்துணை மதிப்புகள்
இருந்தாலுமென்ன..?
இருக்கும்வரை அவர்
இறந்துவிட்டால் அது

தெளிக்கப்படும்
வாசனைத்திரவியங்களில்
நாற்றத்தை உணர்கின்றேன்.

திருமணத்தில் தெளிக்கப்படுகின்ற
பன்னீர்தான் என்றாலும்
தெளிக்கப்படும் இடம்தான்
வாசனையை தீர்மானிக்கிறது!

தெருவில் தள்ளிவிட்டு
அவமானப்படுத்திய
கடைசிமகன்
காலைப்பிடித்து அழுதுகொண்டிருக்க

தனிக்குடித்தனம் சென்றுவிட்ட
தலைப்பிள்ளையோ
பாடைகட்டும்
பரபரப்பில் சுற்றிக்கொண்டிருக்க..

அதிகம்
துக்கப்படுவதாய் காட்டிக்கொள்ள
மார்பில் அடித்துக்கொண்டு
அலறும் சொந்தங்கள்..

என்னைப்போல்
சம்பிரதாயத்திற்காய்
வந்தவர்கள் யார்யாரோ
திணறி திணறி
முகத்தை சோகமாய்
மாற்றிக்கொள்ள முயல...

சடங்குகள் முடிந்து
பாடை தூக்கப்படும் நேரத்தில்
மனச்சுமையை குறைக்க மறந்த
மகன்கள்..
பிணச்சுமையை முதல்வரிசையில்
தாங்கிக்கொண்டிருக்க

வேடிக்கைகளையெல்லாம்
வெறித்துப்பார்த்துவிட்டு
கண்ணீரோடு நானும்
கலைந்து சென்றேன்.

என்னிடம்
பிணம் வாங்கிய கடனை
பிறர் தருவாருண்டோ..? என்ற
அதிகப்படியான வேதனையோடு.. 

ரசிகவ் ஞானியார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.