Landஎப்போதும் நீர்கசிந்து கொண்டிருக்கும்
என் வண்டல்நிலம்
பகற்சுழலில் பறக்கும் புழுதியாய்
பக்கவாட்டில் உழப்படுகிறது
உருண்டையென உப்பிப்பருத்த விதைகள்
சீரான இடைவெளியில் ஊன்றப்படுகின்றன
ஈரம் பிழிந்தெடுத்த துகள்கள் குவிய
என்னிலிருந்து வெடிக்கின்றன முளைகள்
உள்நீளும் வேர்களின் கைகளுக்குள்
கெட்டிமைப்படும் எனதுமண்
மூச்சடைப்பும் உயிர்ப்புமாய் திரள்கிறது
செழித்தோங்கிய விருட்சங்களின் கனிகள்
நீண்ட காம்புடைய வலைப்பைகளால்
பறிக்கப்படுகின்றன
பருவங்கள் சுழலச் சுழல
காய்ந்து உதிர்ந்த மரங்கள்
கவனமாய் தோண்டப்படுகின்றன
குன்றும் சரிவுமாய் உருமாறிவரும்
என் நிலத்தின்
அகழ்ந்தெடுத்த இடத்திலெல்லாம்
பிரசவத் தழும்புகள் 

சுகிர்தராணி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.