India Trainஅடுத்தப் பெட்டியில் இருக்கும் போதே
காட்டிக் கொடுத்துவிட்டது
அவனை
கட்டைக்குரலில் அந்த சோகப்பாட்டு!

முந்தைய நிமிடம் வரை சும்மா இருந்தவர்கள்
அவசர அவசரமாய் செய்திதாளில்
மூழ்கிப் போனார்கள்!

கண் தெரியாதவனுக்கு
சில்லறை இல்லேப்பா
சைகை மொழி சொன்னார்கள் சிலர்!

ஒரு சிலர்,
முன்னங்காலில் முகம் புதைத்து
தற்காலிகமாய்
செத்தும் போனார்கள்!

இவன் நகர்ந்தால் போதுமென
அவசரமாய் அம்பது நூறு காசுகள்
இட்டனர் இன்னும் சிலர்!

தகரத்தில் காசு விழுந்த ஒலியில்
மனம் நிறுத்தி
கொஞ்சம் சந்தோசமாகவே
அடுத்தப் பெட்டிக்கு நகர்ந்தான் அவன்!

யாரும் கண்டுக் கொள்ளாத கவலையில்
அந்தப் பாட்டு
அழுதபடியே போனது
அது பாட்டிற்கு!


ப்ரியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It