எனக்கொன்றும் பிடிக்கவில்லை
Womanஆமாம் ஆமாம் எனக்கொன்றும்
பிடிக்கவில்லை
தொட்டதெலாம் தட்டிவிடும்
அறிவின் இந்தத் தொல்லையொன்றும்
பிடிக்கவில்லை

தடுப்பதெல்லாம் தப்புமில்லை
அறிவு நிதம் சொல்பவற்றுள்
உப்புமில்லை
எனக்கொன்றும் பிடிக்கவில்லை
ஐயகோ இது எனக்கொன்றும்
பிடிக்கவில்லை

அறிவுமனம் மயங்கிடாமல்
ஈர நாவில் காவியங்கள்
விளைவதுண்டோ
படிப்பறிவை மறந்திடாமல்
புதுமை பொங்கும் ஊற்றுகளும்
எழுவதுண்டோ

பட்டறிவை உணர்வென்போம்
அதனுள் உண்மை மட்டும்தான்
பிறக்கிறது
குட்டிவைக்கும் பிள்ளைகளின்
புத்தி நாளும் கோணலாகிச்
சிறுக்கிறது

அறிவு வெயில் கொளுத்தாத
சொந்த நிமிடம் ஐந்தெனக்குக்
கிடைத்தாலும்
வாழ்வென்னும் இயற்கைக்குள்
கவலை தாண்டி பொய்யற்று
வாழ்ந்திருப்பேன்

யாராரோ வீழ்ந்த காயம்
கூட்டி வைத்து எனக்குள்ளே
திணிக்கும் இந்த
அறிவெனக்குப் பிடிக்கவில்லை
அடிமை போல மண்டியிட
விருப்பமில்லை

வேண்டாத சிந்தனைகள்
வாழ்வில் எல்லாம் தவறென்றே
கூத்தாட
பிறந்தபோது எழுந்து நின்ற
இதயம் இன்று புண்ணாவது
பிடிக்கவில்லை

தினந்தோறும் நெய்யூற்றி
பாழும் இந்த மூளைமரம்
வளர்த்துவிட்ட
மனம்செத்த அறிஞர்களே
நாளும் உம்மை மனதார
சபிக்கின்றேன்

புகாரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It