கரம்பாய்ப் போன கழனியில்
குறுக்கே விழும் பாதையாய்
என் நிகழ்வுகளின் மேல்
வெற்றுச் சுமைகள்

மேய்ந்து போனதால்
கதிரற்றுப்
பச்சையோடிக்கிடக்கும்
வரப்போரப் பயிராய்
ஒதுங்கிக் கிடப்பதில்
சுகமாய் இருக்கிறது.

குருவி மறந்த கூட்டின் ஓரம்
சேற்றில் ஒட்டிச் செத்துக் கிடக்கும்
மின்மினியாய்க்
கிழிந்த என் சட்டைப்பையில்
நீ எழுதிய கடிதம்

நொறுங்கிக் கிடக்கும்
கட்டை வண்டிமேல்
தலைசாய்த்துக் கழிகிறது
பொழுது

கிளையின் உச்சியில்
காய்ந்துபோய்
ஈக்களற்ற தேன்கூடாய்
நான்

நீ உடைத்துப் போன
என் வாழ்க்கையை
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்
என்னை
எப்படிப் புரியவைப்பது உனக்கு.

பச்சியப்பன்
Pin It